சிந்தனை: குழந்தைகளும் மதமும்

ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020

முனைவர் வா.நேரு

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே “என்றார் ஒரு கவிஞர்.’’ எந்தக் குழந்தையும் மதமற்ற குழந்தைதான்  மண்ணில் பிறக்கையிலே, அவர் இந்து ஆவதும், கிறித்துவர் ஆவதும், இஸ்லாமியர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே’’ என்று நாம் இந்தப்பாடல் மெட்டில் பாடலாம். குழந்தை குழந்தைதான், ஆனால் அது இந்துக் குழந்தை என்றும் இஸ்லாமியக் குழந்தை என்றும் பாகுபடுத்தப்பட்டு, சில மதக் கலவரங்களில் பச்சிளம் குழந்தைகள் கொல்லப்படுவதை நாம் செய்தித்தாள்களில் படித்திருக்கிறோம். பச்சிளம் குழந்தைகளை இந்தப்பாழும் மதவெறி கொல்கிறதே எனப் பதறியிருக்கிறோம்.. குழந்தைகள் குழந்தைகளாக வளர்ந்து, அவர்கள் 18 வயது ஆனபின்பு, தனது பெற்றோர் பின்பற்றும் மதத்தையோ அல்லது தனக்கு மதம் தேவையா இல்லையா என்பதனை முடிவு செய்துகொள்ளலாம் என்னும் வாய்ப்பு அளிக்கப்படுமானால் அப்படிப்பட்ட உலகம் அல்லது நாடு என்பது எப்படி இருக்கும்?..

இந்தக் கரோனா காலத்தில் ஒப்பற்ற தலைமை என்னும் தலைப்பிலே தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடர் சொற்பொழிவு நடத்திவருகின்றார்கள். அப்படி நடந்த நிகழ்வில், ஒரு தோழர் கேட்ட கேள்விக்கு தமிழர் தலைவர் அவர்கள் கோவில்பட்டியில் 2005-ல் நடந்த திராவிடர் கழக மாநாட்டில் மழலைகள் மேடையில் ஏறி ,எங்களுக்கு மதம் வேண்டாம், 18 வயது ஆன பின்பு ஓட்டுரிமை வருவது போல, மதம் வேண்டுமா? வேண்டாமா? மதம் வேண்டும் என்றால் எந்த மதம் என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதை குறிப்பிட்டார்கள். எத்தனையோ மாறுதல்கள் உலகில் நிகழ்ந்திருக்கின்றன. இப்படிப்பட்ட மாறுதலும் எதிர்காலத்தில் நிகழலாம் என அந்த உரையின் கேள்வி பதில் நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்கள்.

கோவில்பட்டியில்  2005 நடந்த  மாநாட்டில் அந்தத் தீர்மானத்தை எனது மகன் சொ.நே.அன்புமணி தனது ஒன்பது வயதில் முன் மொழிந்தது நினைவில் வந்தது. அதனைப் பற்றிய தொடர் நிகழ்வுகளும் நினைவில் வந்தன.. இந்தத் தீர்மானத்தை பற்றி அலுவலகத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் கேட்டார், “நீங்கள் 18 வயதுக்குப் பின் மதம் வேண்டுமா? வேண்டாமா?’’ என்று முடிவு செய்து கொள்ளலாம் என்றால், இப்போது எதற்கு அவனுக்கு கடவுள் இல்லை என்று சொல்லித்தருகிறீர்கள், கடவுள் இருக்கிறது என்று சொல்லித்தருவது வேண்டாம் என்றால் கடவுள் இல்லை என்று சொல்வதும் வேண்டாம்தானே’’ என்றார்.

அவருடைய கேள்வி ஒரு நிமிடம் என்னைத் திகைக்க வைத்தது. பின்பு சுதாரித்து “கடவுள் இருக்கிறது, இருக்கிறது என்று பல பெற்றோர்கள் சொல்லித்தருவதால், நாங்கள் இல்லை என்று சொல்லித்தருகிறோம், கடவுள் இருக்கிறது என்று சொல்லித் தரப்படவில்லையெனில், கடவுள் இல்லை என்று சொல்லித்தரவும் தேவையில்லை, 18 வயதிற்குப்பின் இருக்கிறதா? இல்லையா என்பதனை அவரவர் முடிவு செய்து கொள்ளட்டும்  என்று விட்டுவிடலாம்’’ என்றேன். “நடக்கிற காரியமாக ஏதாவது பேசுங்கள் தோழர்’’ என்றார் அவர். அதனைத் தொடர்ந்து இருவருக்கும் ஒரு நீண்ட விவாதம் அன்று நடைபெற்றது. அதில் அவர் “குழந்தைகளுக்கு பக்தி இல்லையெனில் நல்லவர்களாக வளரமாட்டார்கள்’’ என்றார். “பக்திக்கும், ஒழுக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை. குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுத்து வளர்க்கவேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. கட்டுப்பாடுகளை கற்றுக்கொடுத்து வளர்க்கவேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் பக்தி என்பது ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுப்பதில்லை, கட்டுப்பாடுகளையும் கற்றுக்கொடுப்பதில்லை… மாறாக ஒரு போலியான, செயற்கையான நம்பிக்கையையும், ஒழுக்கமாக இருப்பதுபோல நடிக்கின்ற ஒரு பழக்கத்தையும் கொடுத்து விடுகிறது’’ என்று விவாதித்து எல்லாம் நினைவிற்கு வந்தது.

பெரும்பாலானவர்களுக்கு, அப்பா அம்மா கும்பிடும் கடவுளை குழந்தைகளாக இருக்கும் பிள்ளைகளும் கும்பிடுவதும் பின்பற்றுவதும் சரிதானே என்று தோன்றலாம். இன்றைய காலம் கரோனா காலம். அனைத்து நம்பிக்கைகுரிய வழிபாட்டுத்தலங்களும் சில மாதங்கள் பூட்டிக்கிடந்த காலம். வழிபாட்டுத்தலங்கள் எல்லாம் மூடப்பட்டதால் உலகம் ஒன்றும் உடனே அழிந்து விடவில்லை. மாறாக பலரின் மனதில் கடவுள் இருக்கிறாரா? என்ற கேள்வியை மிக ஆழமாக எழுப்பிய காலமாக இந்தக் கரோனா காலம் இருக்கிறது. நடக்கிற காரியமா? என்று சிந்திப்பதை விட நடக்க வேண்டிய காரியமா என்று சிந்திக்கலாம் என்று தோன்றியது. ஆம், இது நடக்க வேண்டிய காரியம்தான்.

அதீத மத நம்பிக்கை உடைய பெற்றோர்களால் வளர்க்கப்படும் குழந்தைகளுக்கு இயல்பாகவே கேள்வி கேட்கும் மனப்பான்மை அமைவது இல்லை. அது மட்டும் அல்லாது தீவிர மதக்கட்டுப்பாடுகளோடு வளர்க்கப்படும் அந்தக்குழந்தைகள் பிற்காலத்தில் தன்னம்பிக்கை இல்லாமல் தடுமாறுவதை பல நிலைகளில் பார்க்கின்றோம். தீவிர ஆத்திகவாதிகள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வியை விட மதக்கல்வியைப் போதிப்பதில்தான் மிக அதிக அக்கறை காட்டுகிறார்கள். “அறிவு வேறு; மதம் வேறு என்று பிரித்துவிட வேண்டும். அறிவை உண்டாக்கிவிட்டு, பிறகு அந்த அறிவின் மூலம் மதத்தைக்கொள்ளும்படி செய்யவேண்டும். அப்படிக்கில்லாமல், மதத்தைப் புகுத்தி அதன்மூலம் அறிவை வளரவிடாமல் செய்துவிட்டால் சுதந்திர ஞானம் எப்படி ஏற்படும்?’’ என்று கேட்டார் தந்தை பெரியார். (குடி அரசு 27-9-1931)

“உங்களை வளர்த்தெடுத்த சூழலில் இருந்த மதத்தின் பிடியில் நீங்கள் மாட்டிக்கொண்டதாக நீங்கள் உணர்ந்தால், அவ்வாறு நிகழ்ந்தது  எவ்வாறு என நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். குழந்தைப் பருவத்தில் ஏதோ ஒரு வடிவில் நிகழ்ந்த கொள்கைத்திணிப்புதான் அதற்குக்காரணம். நீங்கள் மதப்பற்று உள்ளவராயின், பெரும்பாலும் அநேகமாக அஃது உங்கள் பெற்றோரின் மதமாக இருக்கும்… கத்தோலிக்கக் குழந்தை என்றோ, முஸ்லீம் குழந்தை என்றோ சொல்வதைக் கேட்கும்பொழுது, ஒவ்வொருவரும் முகம் சுளிக்கவேண்டும் என விரும்புகிறேன். கத்தோலிக்கப் பெற்றோர்களின் குழந்தை எனக்குறிப்பிடலாம். ஆனால், கத்தோலிக்கக் குழந்தை என யாரேனும் சொன்னால், அவ்வாறு குறிப்பிடக்கூடாது என மரியாதையுடன் கூறுங்கள். பொருளாதாரம், அரசியல் ஆகிய விசயங்களில் சிறுவயதில் எவ்வாறு அறியாதவர்களாக இருப்பார்களோ, அதைப்போன்றே மதத்தைப் பற்றியும் அவர்கள் முடிவு எடுக்கும் நிலையில் இருக்கமாட்டார்கள். ஆகையால் நான் திரும்பத் திரும்ப சொல்வது, முஸ்லீம் குழந்தை என ஒன்று இல்லை, முஸ்லீம் பெற்றோரின் குழந்தை என்பதுதான் சரி, அதைப்போன்றே கிறிஸ்தவக் குழந்தை இல்லை, கிறிஸ்துவப் பெற்றோரின் குழந்தை எனச் சொல்லலாம்’’ (கடவுள் ஒரு பொய் நம்பிக்கை-ரிச்சர்டு டாகின்ஸ்–தமிழாக்கம் பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசான், பக்கம் 5). மனிதர்கள் மதத்தின் பிடியில் மாட்டிக் கொள்வதற்கு குழந்தைப்பருவத்தில் நிகழ்ந்த மதக் கொள்கை திணிப்புதான் காரணம் என்று ரிச்சர்டு டாகின்ஸ் சொல்வது கவனிக்கத்தக்கது.

“மதமானது இன்று உலகில் மனித சமுதாயத்தின் வாழ்வைத் துக்கமயமாக்கி, ஜீவராசிகளின் மனிதனுக்கென்றுள்ள பகுத்தறிவை அடிமையாக்கி,ஒற்றுமையைக் குலைத்து, மனிதனுக்கு மனிதன் வெவ்வேறு இனம் என்று எண்ணும்படி செய்துவருகின்றது’’ என்றார் தந்தை பெரியார். மனித நேயமிக்க உலகத்தைச் சிந்திக்கும் அனைவருக்கும் தோன்றுவது குழந்தைப் பருவத்தில் திணிக்கப்படும் மதக்கருத்து ஆகும். குழந்தைகளுக்கு வீட்டில், கல்விக் கூடங்களில் என அனைத்து இடத்திலும் மதக்கருத்தை திணித்துவிடுவது, அவர்களைக் கேள்வி கேட்கும் தன்மையிலிருந்து தடுத்துவிடுவது என்னும் போக்குத்தான் இன்றைய உலகின் பெரும்பாலான நாடுகளில் இருக்கிறது.

புதியதோர் உலகம் செய்வோம் என்றார் புரட்சிக்கவிஞர். குழந்தை இந்து மதக்குழந்தை என்றோ, கிறித்துவக் குழந்தை என்றோ, முஸ்லிம் குழந்தை என்றோ அழைக்கப்படாமல், குழந்தையாக மட்டுமே வளர்க்கப்படும் சூழல் புதியதோர் உலகில் அமையும் என்று நாம் எண்ணுவதும், அதற்காக உழைப்பதும் இன்றைய தேவையாகும். மதவெறியர்கள், தங்களின் மாற்று மதவெறுப்பை எப்படியாவது தங்கள் குழந்தைகளின் மனதில் பதியவைத்துவிட வேண்டும் எனத் துடி துடித்து செயல்படும் இந்த நேரத்தில், மதமற்ற, மனித நேயமிக்க குழந்தைகளாக குழந்தைகள் வளர்வதை நாம் எண்ணுவோம், அதற்காக நாம் உழைத்திடுவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *