Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கவிதை: வாழ்க ந்ம் பெரியார் தொண்டு

பேராசிரியர் சுப.வீர்பாண்டியன்

கல்வியும் வேலை வாய்ப்பும்

கனித்தமிழ் நாட்டில் வாழும்

எல்லோருக்கும் உரிய தென்னும்

இலட்சிய முழக்கத் தோடு

வல்லமை மிகவும் கொண்டு

வரலாற்றின் விடிய லாக

தெள்ளென உதித்த தெங்கள்

திராவிட இயக்கம் கண்டீர்!

சாதியின் ஏற்றத் தாழ்வுச்

சதிகளை எதிர்த்து நின்று

மேதினி அறிவில் ஓங்க

மூடநம் பிக்கை தன்னை

மோதியே உடைத்துத் தள்ளி

முழுப்பெண் சமத்து வத்தின்

நீதியை எடுத்துக் காட்டி

நீண்டது இயக்கப் பார்வை.

கடவுளின் மொழியாம் என்று

கபடமாய்ச் சொல்லிச் சொல்லி

வடமொழி ஆதிக் கத்தை

வஞ்சகர் ஆக்கி வைத்தார்

மடமட வென்றே அந்த

மாயையை ஒழித்துக் கட்டி

நடமிட வைத்தார் எங்கும்

நம்தமிழ் மொழிமேல் பற்றை!

திராவிட இயக்க மின்றேல்

தீந்தமிழ் உணர்ச்சி இல்லை

திராவிட இயக்க மின்றேல்

திரள்கல்வி தமிழர்க் கில்லை

திராவிட இயக்க மின்றேல்

தெளிபகுத் தறிதல் இல்லை

திராவிட இயக்க மின்றேல்

தீண்டாமை எதிர்ப்பு மில்லை!

வாழ்கவே வாழ்க வாழ்க

வளர்கநம் பேரி யக்கம்

ஆழ்கவே ஆழ்க ஆழ்க

அறிவெனும் கடலில் நெஞ்சம்

மாள்கவே மாள்க மாள்க

மடமையின் எண்ணம் யாவும்

வாழ்கவே வாழ்க வாழ்க

வாழ்கநம் பெரியார் தொண்டு