ஆய்வுக்கட்டுரை : புத்தமதமும் இந்திய சமுதாயமும் (2)

ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020

ந.ஆனந்தம்

கி.பி.ஏழாம் நூற்றாண்டு முதல் புத்தமதம் மெதுவாக சீர்கேடடையத் தொடங்கியது. இதற்கு, மக்கள் சுய சிந்தனையை உதாசீனப்படுத்தியது தான் முக்கிய காரணம் இக்காலகட்டத்தில் ஒரு சாரார் புத்தமதக் கோட்பாடுகளைக் கடைப்பிடிப்பதையே கஷ்டமாகக் கருதினர். அறிவு பூர்வமாகச் சிந்தித்து, அதன் முடிவிற்கேற்ப செயல்படுவது மனிதனது கடமை என்பதையே மறந்தனர். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். அதுபோல, பிரார்த்தனைகளுக்கும், சடங்குகளுக்கும் ஆர்வம் காட்டினர்.  ஏனெனில் அவற்றைச் செய்வது எளிதாக இருந்தது. இதன் விளைவாக, புத்தமதம் பிரார்த்தனைகளும், சடங்குகளும் நிறைந்த மதமாக மாறியது. புத்தரின் போதனைகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாக மாறியது.

புத்தமதம் இந்தியாவில் மாறுபட்ட பிரச்சினையை எதிர் கொண்டது. கி.பி.இரண்டாம்  நூற்றாண்டு, இந்தோ ஆரியர்களும், புரோகிதர்களும் புத்தமதத்தின் தாக்கத்தால் தங்களுடைய செல்வாக்கு பாதிக்கப்படுதைக் கண்டனர். புத்தமதம் மனித சமத்துவத்தை வலியுறுத்தியது. பிறப்பால் எவரும் உயர்ந்தவரும்  அல்ல; தாழ்ந்தவரும் அல்ல என்றது. இச்சமத்துவக் கருத்து தங்களுடைய செல்வாக்கை அழிக்கும் என்று உணர்ந்தனர். ஆகவே, இந்தோ ஆரியர்களும், புரோகிதர்களும் தங்களது ஆதிக்கத்தையும், உயர்ஜாதித் தன்மையையும் நிலை நாட்ட புத்தமதத்தை அழிக்கத் திட்டமிட்டனர். மிகத்தந்திரமாக செயல்பட்டனர். தாங்கள் அனைவரும் புத்தமத தத்துவத்தையும், கோட்பாடுகளையும் ஏற்பதுபோல் நடித்தனர். அதை நிரூபிப்பதற்கு புத்தரை இந்து மதத்தின் ஒரு கடவுளாக ஏற்றுக்கொண்டனர். புத்தர் விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரம் என்றனர். புத்தமதத்தின் அஹிம்சை, புலால் புறக்கணிப்பு போன்ற சில கோட்பாடுகளை ஏற்றனர். புத்தமதத்திற்கும் தங்களது வேத மதத்திற்குமுள்ள வித்தியாசத்தை தெளிவற்றதாக்கிவிட்டனர்.

புத்தமதத்தைப் பின்பற்றுபவர்களை வேத, பார்ப்பன மதத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பார்ப்பனர்கள் தங்கள் கோவில்களில் ஆடம்பரமாக விழாக்கள் நடத்தினார்கள். நிறைய பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். இவைகள் இந்திய மக்களை ஈர்த்தன. வேத, பார்ப்பன மதத்தில் சேர ஆரம்பித்தார்கள். எனினும் இந்தோ ஆரியர்களும், புரோகிதர்களும் தங்களுடைய தலைமைப் பொறுப்பையும், சிறப்புரிமைகள் காப்பாற்றுவதில் முனைப்பாக இருந்தனர். அதற்காக தந்திரமாக பிரித்தாளும் கொள்கையை செயல்படுத்தினர்.

பிறப்பின், தொழிலின் அடிப்படையில் உயர்வு, தாழ்வு கற்பித்து, மக்களை வருணங்களாகப் பிரித்தனர். இந்தோ ஆரியர்களும், புரோகிதர்களும் தாங்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்றும், தங்களை பிராமண வருணம் என்று சொல்லிக் கொண்டார்கள் படைப் பணி செய்வோர்கள் சத்திரிய வருணம் என்றனர். விவசாயம், தொழில், வியாபாரம் செய்தோர் வைசியர் வருணம் என்றனர். பிற வேலைகள் செய்தோரை சூத்திர வருணம் என்றனர். உரிமைகளை இறங்கு வரிசையில் அளித்தனர். சூத்திரர்களுக்கு மிக குறைந்த உரிமைகளே அளித்தனர். இந்த அநீநிதியை வைசியர்களும், சூத்திரர்களும் ஏற்கச் செய்வதற்காக, ஜாதீய சமூக அமைப்பு கடவுளின் ஏற்பாடு என்றனர். பிறப்பில் பேதம் கற்பிப்பதே தவறு என்று அறிந்திருந்தும், பகட்டுக்கும், பசப்பு வார்த்தைகளுக்கும் மதிமயங்கி வேத பார்ப்பன மதத்தில் ஏராளமான மக்கள் சேர்ந்தனர். இதனால், புத்தமதம் வலுவிழந்தது. பார்ப்பனர்கள் மனித சமத்துவத்தைப் போதித்த சமண, புத்த மதங்களை எதிரிகளாகக் கருதினர். அம்மதங்களை அழிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டனர். தங்களது அரசியல் அதிகாரத்தாலும், வஞ்சகத்தாலும், வன்முறைகளாலும் அம்மதங்களுக்கு பொதுமக்களிடம் இருந்த மதிப்பைக் குறைத்தனர். இறுதியாக, முஸ்லீம்களின் வெற்றி புத்தமதத்திற்கு மரண அடி கொடுத்தது. இவ்வாறு புத்தமதம் இந்தியாவில் மறைந்தது.

இந்திய மக்கள் புத்தரின் போதனைகளைப் புறக்கணித்தது ஒரு மாபெரும் தவறாகும். வரலாற்றுப் பிழையாகும். ஏனெனில், அதிலிருந்து படிப்படியாக இந்திய சமூகத்தில் அதிகமான சதவீத மக்கள் தொகை கொண்ட வைசிய, சூத்திர வருணத்தார் தங்களுடைய சுதந்திரத்தை இழந்தனர். தங்களின் அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளை இழந்தனர். அனைத்து அதிகாரங்களும் மிகக் குறைந்த மக்கள் தொகையுடைய ஆரியப்பார்ப்பனர்களிடமும், க்ஷத்திரியர்களிடமும் சேர்ந்தது. அவர்கள் பொது நலம் பாராது, சுய நலத்துடன் செயல்பட்டனர். அரசின், மதத்தின் செயல்பாடுகளை தங்களுடைய உயர்ந்த அந்தஸ்தையும், நலனையும் பாதுகாப்பதற்காகவே பயன்படுத்தினர். பார்ப்பனர்கள் பூஜை, சடங்குகள், புரோகிதம் செய்யும் வேலையைத் தங்களது பிரத்தியேக உரிமையாக்கிக் கொண்டார்கள். இவ்வுரிமையைப் பயன்படுத்தி பார்ப்பனர் அல்லாதரை பல்வேறு சடங்குகளையும், பூஜைகளையும் செய்யுமாறு செய்து அவர்களது செல்வத்தை அபகரித்துக் கொண்டார்கள். பார்ப்பனர்கள் பயனுள்ள காரியம் எதுவும் செய்யாமல் செல்வாக்கோடும் வளமோடும் வாழ்ந்தார்கள். பெரும்பான்மை மக்கள் (வைசிய, சூத்திர வருணத்தார்) அறியாமையிலும், வறுமையிலும் உழன்றனர். இவ்வாறு நாட்டின் பூர்வகுடி மக்கள் அடிப்படை உரிமைகள் அற்றவர்களாக ஆக்கப்பட்டனர். இதுதான் புத்தரின் போதனைகளைப் புறக்கணித்ததன் பலனாகும்.

ஜாதியின் தாக்கத்தால், பிறப்பின் அடிப்படையில் சகமனிதர்களை உயர்வென்றும், தாழ்வென்றும் நினைக்கும் மனநிலை பரவியது. கி.பி.பத்தாம் நூற்றாண்டில் ஜாதியம் வேரூன்றியது. நூற்றுக்கணக்கான உப ஜாதிகள் உருவாகின. ஜாதிக் கொடுமைகள் எங்கும் பரவின. இதன் உளவியல் தாக்கம் மிக மோசமானது. மனிதநேய சிந்தனை எழாமல் செய்தது. மக்களை விதியை நம்பச் செய்தது. தன்னம்பிக்கையை இழக்கச் செய்தது.  முயற்சியின்மையைப் புகுத்தியது. மக்களை மனிதநேயமற்றவர்களாக, இரக்கமற்றவர்களாக ஆக்கியது. பொதுநலச் சிந்தனை எழாமல் செய்தது. சமூக ஒற்றுமையை அழித்தது. இக்காரணங்களால், இந்திய சமுதாயம் செயலற்றதாக மலட்டுத்தன்மையானதாக மாறியது. இதுதான், இந்திய மக்கள் ஆரிய, வேத மதத்தில் சேர்ந்ததற்கான பரிசாகும்!

இத்தேக்க நிலை கி.பி. பத்தொன்பதாம், இருபதாம் நூற்றாண்டுகளில் தான் மாற்றம் கண்டது. அந்த இருநூறு ஆண்டுகளில் இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார் ஜாதிக் கொடுமைகளைக் கண்டனர். பார்ப்பனர்கள் முன் நிறுத்திய மனு நீதிச்சட்டம் ஜாதியின் அடிப்படையில் உரிமைகளையும், தண்டனையையும் வழங்கிக் கொண்டிருப்பதைக் கண்டனர். அநீதியான அச்சட்டத்தைத் தூக்கி எறிந்தார்கள். மனித சமத்துவக் கோட்பாட்டை செயல்படுத்தினார்கள். சமத்துவத்தின் அடிப்படையில் பொதுச்சட்டங்களை நிறைவேற்றி செயல்படுத்தினார்கள். அனைத்து ஜாதியினர்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி அளித்தார்கள். மதம், ஜாதியின் பெயரால் நடைமுறையில் இருந்த பல மூடப் பழக்க வழக்கங்களையும், சம்பிரதாயங்களையும் சட்டத்தின் மூலம் ஒழித்தார்கள். இச் செயல்பாடுகளால் இந்திய சமுதாயத்தில் நல்ல மாற்றம் ஏற்பட்டது. மக்கள் சுதந்திர உணர்வு பெற்றனர். கல்வி பரவலாக்கப்பட்டதால் சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்பட்டது.

எனினும், இன்றும் ஜாதியத்தின் தாக்கமும், பார்ப்பன இந்து மதத்தின் தாக்கமும் தொடர்கிறது. இன்றும், இந்திய சமுதாயத்தில் பெரும்பான்மையான மக்கள் சிலை வழிபாடு, ஜாதியம், பார்ப்பனீய சடங்குகள் போன்றவைகளில் அதீத நம்பிக்கை வைத்துள்ளனர். இந்து மதத்தின் பெயரால் பசு வழிபாடு, ஜோதிடம், வாஸ்து போன்ற பல மூடநம்பிக்கைகளுக்கு மக்கள் அடிமைகளாக இருக்கின்றனர். இவர்களின் மனநிலையை எப்படி மாற்றுவது என்பதே இந்திய சமுதாயத்தின் இன்றைய முக்கிய பிரச்சினையாகும்.

மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட மக்களை அறிவு பூர்வமாகவும், தர்க்க ரீதியாகவும் சிந்திக்கத் தூண்டுவது தான் சரியான தீர்வாகும். முதலாவதாக, மக்கள் தங்களது அனைத்து நம்பிக்கைகளையும், மத நம்பிக்கைகள் உள்பட யாவற்றையும் கேள்விக்குட்படுத்தும்படி ஊக்குவிக்க வேண்டும்.  எதையும் ஆய்வு செய்யத் தூண்ட வேண்டும். ஆய்வின் மூலம் மக்கள் ‘மெய்மை’ உணர்வார்கள். அவர்களுடைய மனநிலையில் நல்ல மாறுதல்கள் ஏற்படும். இக்கருத்தைத் தான் சிந்தனையாளர்களும், தத்துவவாதிகளும் கூறுகிறார்கள். மொத்தத்தில் மக்கள் மனதில் அறிவியல் மனப்பான்மையை உண்டாக்க வேண்டும் என்கிறார்கள். இதைத்தான் புத்தரும் சொன்னார். அவரின் போதனைகளும், புத்தமதக் கோட்பாடுகளும் எச்சமுதாயமும் விழிப்புணர்வு பெறவும், உயிர்ப்போடு செயல்படவும் நல் வழிகாட்டிகளாகும். இதுவே, புத்தரின், புத்த மதத்தின் சிறப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *