மஞ்சை வசந்தன்
தமிழகத்தில் தினந்தோறும் கரோனா தொற்று 6000 என்னும் நிலையில் பரவி வரும் இந்தக் காலக்கட்டத்தில் உயிரிழப்புகள் தினந்தோறும் நூற்றுக்கு மேல் செல்லும் நிலையிலும் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர், முதலமைச்சரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து விநாயகர் ஊர்வலத்திற்கும், தெருவில் சிலை வைத்து வழிபடவும் அனுமதி கேட்டுச் செல்வது அவருடைய முதலாளிகள் சொல்லுவதைச் செய்யும் வேலை – நன்றிக் கடன். உண்மையில் பா.ஜ.க தலைவருக்கு மக்கள் மீது கவலையில்லை. நாட்டில் உள்ள பல பிரச்சினைகள் இடஒதுக்கீடு, வேலையிழப்பு, தொற்றுப் பரவல் என எந்தக் காரணத்திற்காகவும் அவர் முதல்வரிடம் கோரிக்கை வைக்கவில்லை. அவர்களுடைய முக்கியப் பணி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள கட்சிகளில் உட்பூசலை உருவாக்கி அதன் மூலம் தமிழகத்தில் காலூன்ற முயல்வது, இது பழைய தந்திரங்களில் ஒன்று. அதற்கு தமிழக மக்கள் என்றும் விலை போக மாட்டார்கள் என்பதைத் தமிழகம் அவர்களுக்கு உணர்த்தும்.
ஒவ்வோராண்டும் தமிழகத்தில் நடைபெறக்கூடிய மதுரை சித்திரை திருவிழா, ஆடிப்பூரம், கள்ளழகர் விழா, நெல்லையப்பர் திருவிழா, ஆடித் திருவிழா, அறுபத்தி மூவர் திருவிழா என எதுவும் நடைபெறவில்லை. அப்போதெல்லாம் பேசாத பா.ஜ.க தலைவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இப்போது மட்டும் பிள்ளையாரைத் தூக்கிக் கொண்டு வந்திருப்பதேன்? தடையை மீறியாவது விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவோம் என்று அறிவித்ததில் அவர்களுடைய ஆரிய மதப்பற்றும், மாநிலத்தில் பதட்டத்தை உருவாக்கி அதன் மூலம் மக்களிடையே தங்களைப் பிரபலப்படுத்தி கொள்ளவும் செய்யும் நாடகமும் தான் முன்னிற்கின்றன. காரணம் அவர்களுக்கு பிள்ளையார் வழிபாடு என்பது ஆன்மீகமல்ல, அரசியல், மதவெறிக்கான கருவி.
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்றதாக பரப்பப்படும், பாலகங்காதரதிலகர். 1893 ஆம் ஆண்டு ‘சர்வஜன கணேஷ் உத்சவ்’ என்னும் பெயரில் ஆரம்பித்தார். இந்து மதத்தில் மிகப் பற்றுக் கொண்ட திலகர் இதை நாடுமுழுவதும் பரப்பி கொண்டாட வழிச் செய்தார். முதலில் மராட்டியத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட இவ்விழா தமிழகத்தில் 1980களில் மெல்ல நுழைந்தது.
தமிழ்நாட்டில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் பிள்ளையார் வழிபாடு தொடங்கிவிட்டது. தமிழ்நாட்டிலுள்ள மிக பழமையான பிள்ளையார் கோவிலாகப் பிள்ளையார் பட்டியிலுள்ள பிள்ளையார் கோவிலை தொ.பரமசிவம் கருதுகிறார்.
வணிகர்களின் வாயிலாகத் தமிழ்நாட்டில் பிள்ளையார் பரவியதாகக் கூறுகிறார் தொ.ப. பிள்ளையாரின் தொடக்க கால உருவம் இரண்டு கை உடையதாகவும், பூணூல், அணிகலன், ஆயுதங்கள் இல்லாமலும் காட்சியளித்தது. காலப்போக்கில் பிள்ளையாருக்குப் பூணூலும் அணிகலனும் ஆயுதங்களும் வழங்கப்பட்டன. பிள்ளையார்பட்டி கோவிலிலுள்ள பிள்ளையார் உருவம் இரண்டு கைகளை மட்டும் உடையதாயும் பூணூல், அணிகலன்கள் மற்றும் ஆயுதங்கள் இன்றிக் காட்சியளிப்பதாலும் இதுவே தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான பிள்ளையார் உருவம் என்று நிறுவுகிறார். தொ.பரமசிவன். இதன் பின்னரே தாமரை மலரில் வீற்றிருப்பவராகவும் நான்கு கரங்களையுடையவராகவும் யானைக் கொம்பு, பாசம், அங்குசம், மாம்பழம் போன்றவற்றை ஏந்தியவராகவும் உருப்பெற்றார்.
தென்மாவட்டங்களில் வீடுகளில் பிள்ளையார் உருவத்தின் முன் மோதகம், சுண்டல் கொழுக்கட்டை, எள்ளுருண்டை போன்றவற்றைப் படைத்து வழிபாடு செய்வதுடன் பிள்ளையார் சதுர்த்தி நிறைவடைகிறது. பிள்ளையாரின் உருவத்தை நீர் நிலையில் கொண்டு போடும் வழக்கம் தென்மாவட்டங்களில் பரவலாகக் கிடையாது. வட மாவட்டங்களில் கோவில் அல்லது ஊர்ப் பொது நீர் நிலையில் பிள்ளையாரைப் போடும் வழக்கம் உண்டு. ஆயினும் ஊர்வலமாகச் சென்று நீர்நிலையில் பிள்ளையார் உருவத்தைப் போடும் வழக்கம் தமிழ்நாட்டில் பரவலாக இல்லாத ஒன்று.
1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 19 இல் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மீனாட்சிபுரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த 180 குடும்பங்கள் இசுலாத்தைத் தழுவின. அதே ஆண்டு மே 23 இல் மேலும் 27 குடும்பங்கள் இசுலாத்தைத் தழுவின. இதன் தொடர்ச்சியாக மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் சிறுசிறு குழுக்களாக தாழ்த்தப்பட்டோர் இசுலாமியச் சமயத்தைத் தழுவினர். இதனை யொட்டி ‘மறு மதமாற்றம்’, மதமாற்றத்திற்கு எதிரான ‘தாய்மதம் திரும்பச் செய்தல்’ என்ற குரல் இந்துத்துவ்வாதிகளால் எழுப்பப்பட்டது. வடபுலத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் துறவியர்கள் மீனாட்சிபுரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். இதனையொட்டி ‘இந்து முன்னணி’ என்ற பெயரில் இந்து மத அடிப்படைவாத இயக்கம் ஒன்று தமிழ்நாட்டில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.
இதன் பின்னர் 01.03.1982 முதல் 15.03.1982 வரை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மண்டைக்காடு என்ற கடற்கரைக் கிராமத்திலும் வேறு பகுதிகளிலும் மதக்கலவரங்கள் உருவாயின.
இக்கலவரத்தை உருவாக்குவதில் பிள்ளையாரைத் துணைக்கு அழைத்தனர். 1982 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திங்கள் சந்தை என்ற ஊரில் உள்ள போக்குவரத்துத் தீவில், பிள்ளையார் சிலை ஒன்றைத் திடீரென்று நிறுவினர். இது போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தமையால் காவல் துறையினரால் அப்புறப்படுத்தப்பட்டது என்ற வதந்தியைத் திட்டமிட்டு உருவாக்கினர். இதனால் பதட்ட நிலை உருவானது. இவ்வாறு குமரி மாவட்ட மதக் கலவரத்திற்குப் பிள்ளையார் சுழி போடப்பட்டது.
அடுத்தடுத்த இந்துத்துவ இயக்கங்களின் வளர்ச்சிக்காக 1990 ஆம் ஆண்டு பிள்ளையார் ஊர்வலத்தை இந்து முன்னணியினர் உருவாக்கி இன்று வரை தொடர்கின்றனர். பலருக்கும் பணம் கொடுத்து பிள்ளையார் சிலைகளை வைத்துப் பிரச்சாரம் செய்ய இந்து முன்னணி இதை ஒரு உத்தியாக்கியது. இதற்குப் பெரிதும் வடநாட்டுப் பணமும் பயன்பட்டது. இதைக் கடலில் கரைக்கும் சாக்கில் ஊர்வலம் என்ற பெயரில் சென்று, மசூதிகள் இருக்கும் இடங்களில் கலவரம் செய்வது முன்பு பல ஆண்டுகளாக நடைபெற்றும் உள்ளன!
அந்த வரிசையில் இன்று அனுமன் ஜெயந்தி, நாரதர் ஜெயந்தி, புஷ்கரணி, விநாயகர் சதுர்த்தி என்று பலவற்றை புதிய வடிவில், முறையில் உருவாக்கி வீட்டிற்குள் இருந்த பக்தியை வீதிக்குக் கொண்டுவந்து விபரீதங்களை அன்றாடம் நிகழ்த்தி வருகின்றனர்.
சாஸ்திர விரோதமாய் பண்டிகைகள்
எதற்கெடுத்தாலும் சாஸ்திரம், சம்பிரதாயம், ஆகமம், ஆச்சாரம், தெய்வீகம், புனிதம் என்று கூப்பாடு போடும் ஆரிய பார்ப்பனர்கள், எந்த சாஸ்திர சம்பிரதாய அடிப்படையும் இல்லாமல் விழாக்களை இவர்கள் விருப்பம் போல் அரசியல் ஆதாயத்திற்கும், மதவெறியைத் தூண்டவும், வருவாய் ஈட்டவும், சுரண்டவும் கொண்டாடுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி
அவர்கள் சொல்லிக் கொள்கின்ற சாஸ்திர சம்பிரதாயப்படி விநாயகர் சதுர்த்தி என்பது, ஆவணி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்தசியில் விரதம் இருப்பதே ஆகும். விரதம் என்பது வீட்டிற்குள் இருப்பது. விநாயகர் உருவத்தை களிமண்ணால் செய்து விரதம் இருந்து, முடிந்தபின் நீரில் கரைப்பது. ஆனால், இன்று இந்த விநாயகர் சதுர்த்தி விழாவின் நிலை என்ன? அவலம், அடாவடிச் செயல், அவர்கள் வணங்கும் கடவுளுக்கே அடுக்காத அக்கிரமங்கள்! ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு பத்து அடி, இருபது அடி உயரத்திற்கு சிலைகளை வைத்து, ஆர்ப்பாட்டம் செய்து, இறுதியில் அதை கரைக்கிறேன் என்று சொல்லி ஊர்வலமாக எடுத்துச் சென்று, செல்லும் வழியில் கலவரம், அடிதடி, குத்துவெட்டு, ஆயிரக்கணக்கான காவலர்கள் பாதுகாப்பு என்று சட்டம், ஒழுங்கிற்கு சவால் விட்டு, பின் கடலில் கரைப்பதாகச் சொல்லி, அதுவரை வணங்கிய விநாயகர் சிலையை கட்டையால் அடித்து நொறுக்கி கை வேறு, கால் வேறு, வயிறு வேறு, தலை வேறு என்று சிதைத்து கடலை மாசுபடுத்தி, கடல்வாழ் உயிரினங்களுக்குக் கேடு உருவாக்கிவிட்டு வீடு திரும்புகின்றனர்.
இப்படி விழாக் கொண்டாட அவர்கள் சொல்லும் சாஸ்திரம் அனுமதிக்கிறதா? வணங்கிய கடவுளை கட்டையால் அடித்து நொறுக்குவதுதான் பக்தியா?
ஆக, விசுவ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. போன்ற மதவெறி அமைப்புகளுக்கு பக்தி நோக்கமல்ல, ஆர்ப்பாட்டமும், பிரச்சாரமுமே. தங்கள் அரசியல் செல்வாக்கை இதன்வழி நிலைநிறுத்தவும், வளர்க்கவும், இப்பண்டிகையை இவர்கள் விருப்பத்திற்கு மாற்றி அமைத்து கொண்டாடுகின்றனர்.
விநாயகரிலே கம்யூட்டர் விநாயகர், ராக்கட் விநாயகர் வரை எல்லாம் உண்டு. இதுவெல்லாம் சாஸ்திரத்தில் உண்டா? புராணத்தில் உண்டா?
ஆக, பண்டிகையானாலும், இந்து மதம் இந்துக்கள் என்ற பற்றானாலும் எல்லாம் அரசியல் ஆதாயத்துக்காகவே அவர்கள் கையாளுகிறார்கள். மற்றபடி அவர்களுக்கு பக்தியோ, மதப் பற்றோ இருப்பதாகக் கொள்ள முடியாது. எல்லாம் ஆரிய சனாதனத்தை நிலைநிறுத்தி, ஆதிக்கம் செலுத்துவதற்கான யுக்திகளே!.
கோவில் திருவிழாக்கள் – ஊர்வலங்களுக்கும் தடை
இன்று கரோனா தொற்று பெருகி உயிர்கள் பறிக்கப்பட்டு அதிகரித்து வரும் சூழ்நிலையில், கோவில்கள் – திருவிழாக்கள் போன்று மக்கள் கூடும் இடங்களில் கரோனா தொற்று மேலும் வன்மையாகப் பரவக் கூடும் என்பதால், மற்ற பொது நிகழ்ச்சிகள் – மண்டபங்களில் திருமணங்கள் போன்றவற்றிற்குத் தடை விதித்துள்ளது போலவே, கோவில் திருவிழாக்கள் – ஊர்வலங்களுக்கும் தடை விதித்துள்ளது தமிழக அரசு.
கரோனா (கோவிட் 19) இருக்கும் நிலையில், பிள்ளையார் ஊர்வலங்களுக்கும், பொது இடத்தில் வைத்து வழிபாடு செய்ய அனுமதியில்லை; சிறு பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் வணங்கலாம்; வீடுகளுக்குள் வைத்து வழிபடலாம் என்று அரசு, அனைத்து இந்து அமைப்பாளர்களையும் அழைத்துக் கூட்டம் நடத்தி, பிறகு அறிவித்தது. இதன் பின்னரும் ‘‘இப்போது நாங்கள் 5 ஆயிரம் பிள்ளையார் பொம்மைகளை வைப்போம்; ஊர்வலமாக எடுத்துச் செல்வோம்’’ என்று அறிக்கை விடுகிறார்கள் இந்து முன்னணியினர்! பா.ஜ.க.வின் தலைவர் மற்ற முக்கியப் பொறுப்பாளர்களும் சட்டத்தை மீறுவோம் என்று கூறுவது, எதற்காக?
இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள்?
இதன் உள்நோக்கம் அரசியல் என்பதைத் தவிர வேறு என்ன?
கோவில்களைத் திறக்கப் போராடுகிறோம் என்றார்கள்; தமிழக ஆட்சியாளர்களும் திறந்தார்கள். விளைவு – மதுரை மீனாட்சியம்மன் கோவில் அர்ச்சகரின் தாயார் கரோனாவினால் மரணமடைந்தாரே – பல அர்ச்சகர்கள், கோவிலுக்கு வந்தவர்களுக்குத் தொற்று ஏற்படவில்லையா?
கடமையும், பொறுப்பும்
தமிழக அரசுக்கு உண்டல்லவா?
திருப்பதி கோவிலில் நடந்ததென்ன? மத ஊர்வலங்களில் மக்கள் கட்டுப்பாடின்றி வருகிறபோது, தொற்று பரவ அதிக வாய்ப்பு உண்டு என்பதால், அதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டல்லவா?
சட்டத்தை மீறி நாங்கள், பிள்ளையார் உருவப் பொம்மைகளை வைப்போம்; பிறகு ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்போம் என்று சவால் விடுகிறார்கள் என்றால், இதனைத் தமிழக அரசு ஏற்கப் போகிறதா? அனுமதி வழங்கப் போகிறதா?
வருமுன்னர் காக்கும் சட்டம்- ஒழுங்கு நடவடிக்கையை முடுக்கி விட்டு, போதிய சட்ட நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்கவேண்டாமா?
பெரியார் மண்ணான தமிழகத்தில்
ஒருபோதும் எடுபடாது!
இப்படி ஓர் அறிவிப்பின்மூலம், வரும் தேர்தலை முன்னிட்டு மக்களின் பக்தி போதையைப் பயன்படுத்தலாம் என்ற குறுக்குவழிதான் இது என்பதைத் தவிர, வேறு என்ன?
இந்த வித்தையெல்லாம் பெரியார் மண்ணான தமிழகத்தில் ஒருபோதும் எடுபடாது!
பா.ஜ.க. ஏதோ வளர்ந்துவிட்ட கட்சி போல வேடம் போட்டு, அரசியலில் சவால் விடுவது வேண்டுமானால் நடக்கட்டும்.
பொய்க்கால் குதிரைகள் ரேஸ் குதிரைகளோடு ஓட முயற்சிக்கலாமா? அது கேலிக் கூத்தாகவே முடியும்!
அரசியல் களத்தில் துணிவிருந்தால் தனியே போட்டியிட்டு டெபாசிட் வாங்கிக் காட்டட்டும்.
ஆனால், இதுமாதிரி, கரோனா பரவும் கொடுமைக்கு, உயிர்காப்புக்கு எதிரான முயற்சிகளில் ஈடுபடலாமா?
இது மக்கள் விரோதச் செயல் அல்லவா!
பி.ஜே.பி.யின் புதிய தலைவர், ஒருவர் எழுதிக் கொடுத்த அறிக்கையில், ‘‘தடை நீக்கும் விநாயகருக்குத் தடையோ’’ என்று கேட்கிறார்!
பக்தி மூடநம்பிக்கையின் மூலம் கரோனாவைப் பரவாமல் தடுக்க முடியாது
எல்லா கடவுள்களும் ‘விக்னம்’ போக்கும் என்றால், தமிழ்நாட்டில் கோவில் அர்ச்சகர்களுக்கும் கூட, ஜீயருக்கும்கூட கரோனா தாக்குதலும், மரணமும் ஏற்படலாமா?
இராமன் கோவில் கட்டும் டிரஸ்டி தலைவருக்குக் கரோனா என்ற செய்தி உணர்த்துவது என்ன?
பக்திக்கும், நோய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை; கரோனாவைப் பக்தி மூடநம்பிக்கையின் மூலம் பரவாமல் – தடுக்க முடியாது; மாறாக, விஞ்ஞானம், மருத்துவம் மூலம்தான் குணப்படுத்த, தடுக்க முடியும் என்பது உலகறிந்த விஞ்ஞான உண்மையாகத் தெரிந்துவிட்டதே!
எனவே, அமைதிப் பூங்காவான தமிழ் நாட்டை, மதக் கலவர பூமியாக ஆக்க முயற்சிப்பதை இந்த அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. சட்டம் வளையாது அதன் கடமையைச் செய்யவேண்டும். காவிக் கூட்டத்திற்கு என்று ஒரு தனிச் சட்டம் கிடையாது.
குண்டர் சட்டங்கள்
ஒருசாராருக்கு மட்டும்தானா?
தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது? என்பதே முக்கிய கேள்வி.
சண்டித்தனத்தின் முன் மண்டியிடும் நிலையைச் சட்டத்திற்கு ஏற்படுத்தி விடலாமா என்பதே அறிவார்ந்த மக்களின் கேள்வி. குண்டர் சட்டங்கள் ஒருசாராருக்கு மட்டும்தானா என்ற கேள்வியும் – பதில் சொல்ல முடியாத கேள்வியாக தமிழக அரசுக்கு இருக்கும். தொடர்ந்து ராமன், கிருஷ்ணன், முருகன், ஆண்டாள் என்று வரிசையாக கடவுள்களை முன்னிருத்தி அரசியல் செய்யப் பார்க்கும் காவிக் கும்பலிடமிருந்து தமிழகத்தைக் காக்க அனைவரும் இணைய வேண்டும். காவிகளின் மேற்கண்ட முயற்சிகளை தடை செய்யலாம். தமிழக மக்கள் புறந்தள்ளி இருப்பதை நாம் கண்கூடாய் காண்கிறோம். இந்நிலையில் மதவாத அரசியலுக்கு முகம்தராமல் உறுதியாக நின்று அவர்களை விரட்டியடிக்க வேண்டியது அனைத்து இயக்கங்கள், அரசியல் கட்சிகள் கடமையாகும்.