தலையங்கம்: மகாராட்டிரம் – கருநாடகத்தைப்போல தமிழகத்திலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படவேண்டும்!

ஆகஸ்ட் 16 - செப்டம்பர் 15,2020

மகாராட்டிரம், கருநாடகம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்ததைப்போல, தமிழகத்திலும் கொண்டுவரப்படவேண்டும்; ஆணவக் கொலைகள், மூடநம்பிக்கைக் குற்றங்கள் நிகழ்வதைத் தடுக்க காவல்துறையில் தனிப்பிரிவு அவசியம் தேவை என வரவேற்கிறேன்.

கரோனா தொற்று (கோவிட் 19) மக்களைப் பாதித்து மிகப்பெரிய அவலம் ஏற்பட்டுள்ள இந்த சோகச் சூழ்நிலையிலும், அதைவிடக் கொடுமையானது மூடநம்பிக்கையினாலும், ஜாதி வெறியினாலும் உயிர்ப்பலிகள் – அதுவும் பகுத்தறிவுப் பிரச்சாரம் நடைபெறும் மண்ணான இந்தத் தமிழ்நாட்டில் என்று செய்திகள் வருவது தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாடு அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்திடும் மிகப்பெரிய இழிவாக இருக்கும்.

மிகப்பெரிய தலைகுனிவு அல்லவா?

இந்தக் காலத்தில்கூட  நெல்லை மாவட்டம் களக்காட்டை அடுத்த சடையமான் குளம் கிராமத்தில் புதையல் கிடைப்பதற்காக நரபலி என்ற பெயரால் துயரச் சம்பவங்களும் – குற்றவழக்குகளும் வருவது மிகப் பெரிய தலைக்குனிவு அல்லவா?

தனது மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்று கருதி தந்தையே அதனை அடித்து, அது கொலையாக முடிந்த செய்தி ஒன்றும் இரண்டு நாட்களுக்கு முன் வந்துள்ளது.

ஆங்காங்கு ‘‘ஆண் மந்திரவாதிகளும், பெண் மந்திரவாதிகளும்’’ இம்மாதிரி இழிதொழிலில் ஈடுபட்டு ஈனப் பிழைப்பை பக்தியை முன்னிறுத்தி, பூஜை, புனஸ்காரம், யாகம் என்றெல்லாம் நடத்துவதும், அப்பாவி ஏழை, எளிய மக்களை பலவழிகளில் சுரண்டிக் கொழுப்பதும் மிகவும் வெட்கப்படவேண்டிய வேதனையான செய்தி அல்லவா?

நாகரிக மனித சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடியதா?

அதுபோலவே, ஜாதி மறுப்பு, காதல் திருமணங்கள் நடைபெறுவதைப்

பொறுத்துக் கொள்ள முடியாத ஜாதி வெறித்தனம் காரணமாக, தருமபுரி மாவட்டம் கும்மனூர் கிராமத்தில், சொந்த மகளின் வாழ்க்கை யைப்பற்றிக் கவலைப்படாமல், தந்தையே முன்னின்று, மகளின் கணவனைக் கொலை செய்த கொடுமை – ஆணவக் கொலை – ஏற்றுக் கொள்ளக் கூடியதா நாகரிக மனித சமுதாயத்தில்?

தான் பாராட்டி, சீராட்டி வளர்த்த பெண்ணின் வாழ்வை வசந்தமாக்குவதற்குப் பதில், வறண்ட பாலைவனமாக்கி, தாங்கள் குற்றவாளிகளாகி, சிறைக்குள்ளே கம்பி எண்ணும் பரிதாப நிலைக்கு ஆளாவது பற்றிக் கூட கவலை இல்லாமல், ஜாதி வெறி அவர்களது கண்களை மறைத்து விடுகிறது!

வந்தபின் நடவடிக்கை – அதுவும் ஏனோ தானோ என்பதும், பிறகு பலவித முயற்சிகள் செய்து, வழக்கினைக்கூட சரிவர நடத்தாமல், நீதிமன்றங்களின்மூலமே வெளியே விடுதலையாகி வருவது போன்ற செய்திகள் காவல்துறைக்குப் பெருமை சேர்ப்பதாகுமா?

பலமுறை தமிழக அரசுக்கு வேண்டுகோள் – கோரிக்கை

தமிழக அரசு இதில் உரிய கவனம் செலுத்தவேண்டும். பலமுறை வேண்டு கோள் – கோரிக்கை வைத்துள்ளோம்.

தமிழ்நாடு காவல்துறையில் ஒரு தனிப் பிரிவாக, இத்தகைய சமூக விரோத – மனிதநேயத்திற்கு எதிரான நடவடிக்கைத் தடுப்புக்கான பிரிவு ஒன்றை உடனே ஏற்படுத்தவேண்டும். சாமியார்கள், மந்திர வாதிகள், பில்லி, சூன்யம் எடுப்பவர்கள், இடைத்தரகர்கள் போன்றவர்களைப்பற்றி ஒரு பட்டியலைத் தயாரிக்கவேண்டும்.

திராவிடர் கழகத்தின் ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத் தாராளமாக அனுமதித்தால், காவல்துறையின் பளுவே  இதன்மூலம் குறையும்; மக்களுக்கு விழிப்புணர்வு, குறிப்பாக கிராமங்களில் ஏற்படுத்துவதன் மூலம் இத்தகைய குற்றங்கள் மறையும் அல்லது குறையும்.

பகுத்தறிவுப் பிரச்சாரத்தை தடை போடுவதால், இந்த அவலங்கள் நாளும் பெருகும் நிலை!

ஆனால், ‘ராஜாவை மிஞ்சும் ராஜ விசுவாசிகளாக’ பல ஊர்களில் காவல் துறை அதிகாரிகள் நடந்துகொண்டு – திராவிடர் கழகப் பிரச்சாரத்தை, ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பாலியல் கொடுமை ஒழிப்பு போன்ற முற்போக்கு பகுத்தறிவுப் பிரச்சாரத்துக்குத் தடை போடுவதால், இந்த அவலங்கள் நாளும் பெருகும் நிலை ஓங்குகிறது!

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப் படைக் கடமை (Fundamental Duties) பகுதியில்,

அறிவியல் மனப்பாங்கை வளர்த்து,

கேள்வி கேட்கும் உணர்வைப் பெருக்கி, மனிதநேயம் தழைக்கவும், சீர்திருத்தம் பரவவும் செய்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பது  (Article 51A) தமிழகக் காவல்துறையின் முக்கிய கவனத்திற்கும், செயற்பாட்டிற்கும் உரியதாகும்!

மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் தமிழகத்திலும் கொண்டுவரப்பட வேண்டும்!

குற்றங்கள் குறைவதை – நிகழும் முன்பே தடுப்பதை, தங்களது அணுகுமுறையாக்க வேண்டும்.

காவல்துறையில் ‘தனிப்பிரிவு அவசியம் தேவை!’

மகாராட்டிரம், கருநாடகம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வந்ததைப்போல, தமிழகத்திலும் கொண்டுவரப்படவேண்டும்.

              

கி.வீரமணி,

ஆசிரியர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *