ஆய்வுக் கட்டுரை: புத்தமதமும் இந்திய சமுதாயமும்(1)

ஜூலை 16 - ஆகஸ்ட் 15, 2020

ந.ஆனந்தம்

புத்தமதம் பிற மதங்களிலிருந்து முற்றிலும் மாறுபடுகிறது. அம்மதம், தம் உபதேசங்களை ‘கடவுள் இட்ட கட்டளை’ என்று சொல்வதில்லை. எந்தச் சடங்குகளையும் செய்யும்படி கூறவில்லை. புத்தமதம் ஒழுக்கத்தை மட்டுமே வலியுறுத்துகிறது. ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடித்தால் மக்கள் அமைதியாகவும், விவேகமாகவும் வாழ முடியும் என்கிறது. ஆழ்ந்த சிந்தனையாலும், தொலைநோக்குப் பார்வையாலும், ஞானத்தினாலும், செயல்பாடுகளின் மூலமாகவும் நாம் மனக்கவலைகளையும், துன்பத்தையும் வெற்றி கொள்ளலாம் என்று போதிக்கிறது.

புத்தமதத்தின் பிரதான அறிவுரை என்னவென்றால், ஒவ்வொரு மனிதனும் மெய் காண்பதில் மிகுந்த ஆர்வமுடையவராக இருக்க வேண்டும். மூன்று விதமான ஆசைகளை வெற்றி கொள்ள வேண்டும். உடல் உணர்வுகளுக்கு இன்பம் அளிக்க விரும்புவது முதலாவது ஆசை. தான் இறந்த பின்னரும் இவ்வுலகில் வாழ விரும்புவது  இரண்டாவது ஆசை. சொத்து சேர்க்க விரும்புவது மூன்றாவது ஆசை. இம் மூன்று ஆசைகளையும். கட்டுப்படுத்துவதில் வெற்றி கொண்டால் இவ்வுலகில் மகிழ்வாக வாழலாம். ஏனெனில், அதன் மூலம் மனிதன் மேலான ஞானம் பெறுகிறான்; மன அமைதி பெறுகிறான்;

சித்தார்த்த கவுதம புத்தர் (கி.மு 560-480) மனிதன் இவ்வுலகில் நல்வாழ்வு வாழ எண்வழிப் பாதையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார். அவர் வலியுறுத்திய எண் வழிப்பாதை எம்மாதிரியான வாழ்க்கை வழிமுறையைப் போதிக்கிறது என்பதனை பார்ப்போம்.

சிறப்பான எண் வழிப்பாதை

1. சரியான பார்வை – மரபுவழி நம்பிக்கைகளையும், மூடநம்பிக்கைகளையும் புறந்தள்ளிவிட்டு மெய் காணுதல்

2. சரியான நோக்கம்- – சுயநலத்தைத் தவிர்த்து பிறருக்கு உதவுதல், நியாயத்தை நிலை நாட்டல் போன்றவைகளை நோக்கமாகக் கொள்ளல்.

3. சரியான பேச்சு.

4. சரியான நடத்தை.

5. சரியான வாழ்க்கை – பிற மனிதர்களுடன் சுமூகமான வாழ்வு நடத்துதல்.

6. சரியான முயற்சி – பல கஷ்டங்களுக்கிடையே தன்னலமற்ற வாழ்வு வாழ தொடர்ந்து முயற்சித்தல்.

7. சரியான மனப்பான்மை – தன்னுடைய சிந்தனைகளில் தன்னலச் சிந்தனைகள் எழாவண்ணம் கவனமாக இருத்தல்.

8. சரியான மகிழ்ச்சி – மக்களுக்குத் தீமை பயக்காமல் மகிழ்ச்சியை உண்டாக்கும் யாவற்றிலும் மகிழ்ச்சி காணுதல்.

எண்வழிப்பாதை கடவுள் பற்றி எதையும் கூறவில்லை. கடவுளைத் திருப்திப்படுத்த பிரார்த்தனை செய்யவோ, சடங்குகளைச் செய்யவோ, மிருகங்களைப் பலியிடச் சொல்லவோ புனிதப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றோ சொல்லவில்லை. சுய சிந்தனைக்கும் ஒழுக்கத்திற்கும், நடத்தைக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. அவற்றையே வலியுறுத்துகிறது.

புத்தர் மறு உலகம், கடவுள், மறுபிறவி பற்றி எதுவும் சொல்ல மறுத்துவிட்டார். அவைகள் பற்றிச் சொல்லப்படுபவை யாவும் மனிதனின் கற்பனைதான் அவைகளில் கவனம் செலுத்துவது மனிதனுக்கு நன்மையைத் தராது. தீமையே பயக்கும் என்றார். ஏனெனில் அவை பற்றிய கற்பனைக் கருத்துகள் ‘இவ்வுலக வாழ்வைச் செம்மையாக வாழ வேண்டும்’ என்ற அடிப்படை இலக்கையே புறக்கணிக்கச் செய்துவிடும் என்றார்.

தம்மபதம் புத்தமதக் கோட்பாடுகளை விளக்கும் புத்தகம். இது 26 அத்தியாயத்தையும், 423 செய்யுள்வரிகளையும் கொண்டது. தம்மபதம் ஒழுக்கம் பற்றி நேரடியாகப் பேசுகிறது. எச்செயல் சரியானது, எது தவறானது என்று பிரித்து உணரச் செய்கிறது. எது உயர்வான வாழ்வு என்று போதிக்கிறது.

தம்மபதம் அன்பையும், அறிவையும், ஒழுக்கமான வாழ்வையும் வலியுறுத்துகிறது சுயநலத்தைக் கட்டுப்படுத்தும்படி கூறுகிறது. ஒரு சில அத்தியாயங்களின் கருத்துகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எடுத்துக்காட்டாக, முதல் அத்தியாயம் வெறுப்பு பற்றியும், அன்பு பற்றியும் விவாதிக்கிறது. வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது. வெறுப்பை அன்பால் மட்டுமே வெற்றி கொள்ள முடியும். அதுவே, என்றும் நிலையான சாசுவதமான விதி என்கிறது. மேலும், நாம் சக மனிதர்களுடன் இணக்கமாக வாழப் பிறந்தோம். இணக்கமாக வாழ மனிதனுக்கு அன்பு, சகிப்புத் தன்மை போன்ற பண்புகள் அவசியம் என்கிறது.

மூன்றாவது அத்தியாயம் மனம் பற்றி விமர்சனம் செய்கிறது. மனம் எப்பொழுதும்  ஊசலாடிக் கொண்டே இருக்கும். அதைக் கட்டுப்படுத்துவது கஷ்டமானது. ஞானமுள்ள மனிதன் மனதைக் கட்டுப்படுத்திக் கொள்கிறான். கட்டுப்படுத்தாதவன் உண்மையை உணரமாட்டான். ஞானத்தைப் பெறமாட்டான். தவறாக வழிகாட்டப்பட்ட மனம் அவனுக்கே பெறும் தீமை பயக்கும்.

எட்டாவது அத்தியாயம் பண்பான வாழ்வு பற்றி விவாதிக்கிறது. நேர்மையான மனிதனின் மதிப்பு, வணங்குபவனை விடவும், அன்பளிப்பு கொடுப்பவனைவிட மிக உயர்ந்தது. மேலும் அறியாமையைக் கண்டிக்கிறது. ஆழ்ந்த சிந்தனை செய்யாது அறியாமையில் உழன்று நூறு ஆண்டுகள் வாழ்வதைவிட, ஒரு நாளேனும் ஆழ்ந்த சிந்தனை செய்து ஞானத்துடன் வாழ்வது மேலானது என்கிறது.

பத்தாவது அத்தியாயத்தில் நம்பிக்கை, நற்பண்பு, ஊக்கம், ஆழ்ந்த சிந்தனை தொலைநோக்குப் பார்வை, ஞானம், செயல்பாடுகள் முதலியவைகளால் துன்பங்களை வெற்றி கொள்ளலாம் என்கிறது.

தம்மபதம் சோம்பேறியாக வாழ்வதிலிருந்தும், கவனமின்றியும், முன்யோசனை இன்றியும் வாழ்வதிலிருந்து விடுபடுமாறு வேண்டுகோள் விடுகிறது. சிற்றின்ப ஆசை பெருவெறுப்பு, கோபம் போன்ற தீய உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்கிறது. சுயநலத்தைக் கட்டுப்படுத்துவது மேலான வெற்றி என்கிறது.

இவ்வாறு, தம்மபதம் எச்செயல்கள் சரியானவை, எவை தவறானவை, தீயவை என்பதைப் பிரித்துணர உதவுகிறது. இவ்வுலகில் பண்பான, அறிவான வாழ்வை வாழக் கடை ப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளைக் கூறுகிறது.

மேலும், புத்தர் காசியில் ஆற்றிய நெறிமுறை விளக்கப் பேருரை, சிறப்பான உரையாகும். இறைச்சி, மீன் உண்பதை விலக்குவதும், நிர்வாணமாகத் திரிவதும், தலைமுடியால் சடைபோட்டுக் கொள்வதும், தலையை மொட்டை போடுவதும், முரட்டுத் துணிகளை அணிவதும், தீயில் உயிர்பலி கொடுப்பதும் மனிதனைத் தூய்மையாக்காது.

வேதங்களைப் படிப்பதும், புரோகிதர்களுக்கு பணம் அளிப்பதும், உயிர்ப்பலி கொடுப்பதும், பல்வேறு வகையில் உடலை வருத்திக் கொள்வதும் மனிதனைத் தூய்மையாக்காது.

கோபம், மது அருந்துவது, முரட்டுப் பிடிவாதம் மதவெறி, இனவெறி, வஞ்சகம், பொறாமை, தற்புகழ்ச்சி, பிறரை இகழ்வது, கர்வம், தீயநோக்கம் முதலியவை தூய்மையற்றவை.

புத்தர் தன்னுடைய சீடர்களுக்கு அறிவுரை கூறும் போது, இன்பம் காணும் விசயத்திலும், தன்னைத் தானே வருத்திக் கொள்ளும் விசயத்திலும் உச்ச எல்லைக்கும் செல்லாமல், மத்திய பாதையைக் கடைப் பிடிக்குமாறு சொன்னார்.

புத்தருடைய போதனைகள் இந்தியத்துணைக் கண்டத்தில் கி.மு.அய்ந்தாம் நூற்றாண்டு முதல் மெதுவாகப் பரவியது. கி.மு.மூன்றாம் நூற்றாண்டு அசோகச் சக்ரவர்த்தி புத்தருடைய போதனைகளைப் பெரிய அளவில் பரப்பினார். அசோகருடைய ஈடுபாடான முயற்சியால் புத்தருடைய போதனைகள் இந்தியாவெங்கும் பரவின. அண்டைய நாடுகள் பரவின. புத்தருடைய போதனைகள் எல்லோராலும் விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்டன.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டு சில புத்தமதத் தொண்டர்கள் எடுத்த தவறான நடவடிக்கைகள் புத்தமதத்திற்கு கேடானதாக அமைந்துவிட்டன. அக்காலகட்டத்தில் சில புத்தமதத் துறவிகள் புத்தமதக் கோட்பாடுகளை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்ல விரும்பினார்கள். அந்த இலக்கை எட்ட, புத்தர் சிலைகளை பல இடங்களில் நிறுவினார்கள். புத்தரைக் கடவுளின் அவதாரம் என்று சொன்னார்கள். இத்தவறான தகவல் மக்கள் புத்தரைக் கடவுளாகவும், மீட்பாளராகவும் பார்க்கும்படி செய்து விட்டது. இவ்வாறு, சில தவறான செயல்பாடுகள் புத்தருடைய அடிப்படைக் கோட்பாடுகளை சிதைத்துவிட்டன. படிப்படியாக, புத்தரின் சிலை வழிபாடும், பிரார்த்தனைகளும் சடங்குகளும் புத்த மதத்தின் அங்கமாக ஆகிவிட்டன. இவை யாவும் புத்தரின் போதனைகளுக்கு முற்றிலும் எதிரானவை.

புத்தர் தன்னை தெய்வீக சக்தி கொண்டவர் என்றோ, தெய்வீக அருள் பெற்றவன் என்றோ சொல்லவேயில்லை. தான் ஒரு சாதாரணமான மனிதன் என்று அடிக்கடி சொன்னார். ஆனால், அறிவான மனிதன் என்றார். உண்மை இவ்வாறு இருக்க புத்தரை கடவுளின் அவதாரம் என்று சொல்வதை அவரின் போதனைகளைப் பின்பற்றுவோர்களில் பலர் எதிர்த்தார்கள். அவ்வாறு சொல்வதே தவறு என்றார்கள். புத்த மதம் மஹாயானா, ஹீனயானா என்று இரண்டாகப் பிரிவுற்றதற்கு இக்கருத்து வேறுபாடும் ஒரு காரணமாகும். மஹாயானா பிரிவு புத்தருக்கு தெய்வாம்சம் கற்பிக்கிறது. ஹீனயானா பிரிவு அவ்வாறு கற்பிப்பதில்லை. அவரை அறிவான, ஞானமான மனிதர் என்று மட்டுமே கூறுகிறது.

                                                                (தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *