சமஸ்கிருத்தை உயர்த்தி தமிழை அழிக்கும் ஆசிய பார்ப்பனர்கள்
நேயன்
இந்தியாவில் உள்ள 79 பல்கலைக் கழகங்களில் 63இல் சமசுக்கிருதம் பயில வாய்ப்பிருக்கின்றது. தமிழ் மொழியைச் சொல்லித் தர 12 பல்கலைக் கழகங்களே உள்ளன. தமிழைவிடச் சமசுக்கிருதம் பேசுபவர்கள் மிகுதியாக உள்ளனரா? இந்தியாவில் உள்ள நாலரைக் கோடி மக்கள் தமிழ் பேசுகின்றனர். சரியாகக் கணக்கிட்டால் ஏழு கோடிக்குக் குறையாது. (கணக்கெடுப்பவரிலும்? கணக்குப் பார்க்கும் அதிகாரிகளிலும் பெரும்பாலோர் தமிழர்க்கு மாறானவர்களாக இருப்பதால் இத்தகைய புள்ளி விளக்கங்கள் சரியாகவே இருப்பதில்லை). சமசுக்கிருதம் பேசுபவர் ஏறத்தாழ அய்நூறு பேர்களே ! இந்த அய்நூறு பேர்களின் மொழியைக் கற்றுக்கொடுக்க 63 பல்கலைக் கழகங்கள்! நாலரைக் கோடி மக்கள் பேசும் மொழியைக் கற்றுக் கொடுக்க 63 பல்கலைக் கழகங்கள்! நாலரைக் கோடி மக்கள் பேசும் மொழியைக் கற்பிக்க 12 பல்கலைக் கழகங்கள் இதுதான் தேசிய மொழித் திருட்டு) விளையாடலா?
மேலும், தமிழ்மொழிப் புலமையிலும் வேறுபாடு காட்டப் பெறுகின்றது. வடமொழி பயின்றவனுக்கு ஒரு மதிப்பு. தமிழ்மொழி பயின்றவனுக்கு ஒரு மதிப்பு. தமிழே தெரியாத சமசுக்கிருதப் பார்ப்பனப் புலவராகிய சுனிதி குமார் சட்டர்சி போன்றவர்கள் தமிழுக்கதிகாரிகள்! தமிழையும் பிற திராவிட மொழிகளையும் சமசுக்கிருதம், இலத்தீன், கிரேக்கம், சாக்சானியம் போன்ற மொழியிலக்கணங்களையும் பழுதறக் கற்ற பாவாணர் போன்றவர்கள் வெறும் தமிழ்ப்புலவர்கள். இந்த வேறுபாட்டு நிலை உள்ள வரை பார்ப்பனர்களைத் தமிழர்களோடு மொழி, இன நிலையில் இணைத்துக் கருதமுடியுமா?
மொழித் தூய்மையைப் பார்ப்பனர்களும் அவர் அடிவருடிகளும் ஒப்புக்கொள்வதே இல்லை. வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாட்டுக்கு மொழி கற்க வரும் மாணவ அறிஞர்களிடம் தங்களுக்குள்ள மேனிலை வாய்ப்புகளால் பிறரினும் முந்திக் கொண்டு போய்த் தாங்கள் பேசுவதே மொழியென்றும் எழுதுவதே எழுத்து என்றும் அவர்களிடம் இட்டுக்கட்டி உரைப்பதும், ‘ஆனந்தவிகடன்’, ‘குமுதம்’, ‘கல்கி’, ‘தீபம்’ முதலிய தமிழ்க்கொலை செய்யும் ஏடுகளையே இலக்கிய ஏடுகள் என்று அவர்களிடம் காட்டி விதந்துரைப்பதும், அம் மாணவ அறிஞர்களின் பரிவால் மொழி ஆய்வுக்கென்றும் இலக்கிய வளர்ச்சிக் கென்றும், அமெரிக்கா, செருமனி முதலிய மேலை நாடுகளினின்று அனுப்பப் பெறும் அளவிறந்த பொருளுதவிகளைத் தாங்களே அமுக்கிக் கொள்வதும் அன்றாட நடைமுறைகளாகவிருக்கின்றன. இத்துறையில் பார்ப்பனர்கள் செய்யும் கள்ளத்தனங்களுக்கும், முல்லை மாறித்தனங்களுக்கும் ஒரு வரம்பே கிடையாது. சாகித்திய அகாடமி என்றும் சங்கீத நாடக அகாடமி என்றும் நேரு பரிசு, கலிங்கா பரிசு, ஞானபீடப் பரிசு என்றும், பல வகையிலும் தரப்பெறுகின்ற அறிவியல், கல்வி, கலைப் பரிசுகள் யாவும் அவர்கள் இனத்தவர்க்கே தேடிப் பிடித்துத் தரப்பெறுகின்றன. ஓரிரண்டு பரிசுகள் தமிழர்களுக்குத் தரப் பெறுவதானாலும் அவர்களின் அடிமைகளுக்கே தரப்பெறுகின்றன.
இலைகளிடைக் காய்போல் எங்கோ ஒரு பரிசு இவர்களின் கொள்கைக்கு மாறானவர்களுக்குத் தரப்பெற நேர்ந்தால், பிறர் நகைக்குமளவிற்கு நூல்களைத் தேர்வு செய்து கொடுக்கின்றனர். பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு, தமிழியக்கம் போன்ற வாழ்வியல், இயற்கை, சீர்திருத்தம் ஆகிய கூறுபாடுகளைக் கொண்டனவும், நோபல் பரிசுக்கும் தகுதி பெற்றனவும், அவர் புலமைக்கே கொடுமுடி போன்றனவுமான நூல்கள் இருக்க, அவர் நூல்களில் மிக எளியதும், அவர்தம் பாவியல் புலமைக்கு வேறுபட்ட நாடக வடிவில் உள்ளதுமான பிசிராந்தையார் என்னும் நூலுக்கு – அதில் அவரின் தலையாய கொள்கையான ஆரிய மறுப்புக் கருத்துகள் ஒன்றுமில்லை என்பதற்காகவே சாகித்திய அகாடமி பரிசு கொடுக்கப் பெற்றுள்ளது. இது தமிழர்களையும் அவர்தம் ஆற்றல்களையும் இருட்டடிப்புச் செய்கின்ற வஞ்சகமான செயலாகும் என்பதை எல்லாரும் எண்ணிப் பார்க்க வேண்டும். பாரதியாரைவிடப் பாரதிதாசன் இலக்கியத் திறனிலும், பா வன்மையிலும் எவ்வளவோ சிறப்புற்று விளங்கியும் அவர் ஒரு தமிழர் என்பதாலும், பாரதியார் ஒரு பார்ப்பனர் என்பதாலும் காட்டப்பெறும் வேறுபாடுகளும் போற்றப்பெறும் வகையில் உள்ள மாறுபாடுகளும் கொஞ்ச நஞ்சமல்ல.
மேலும், தேசிய விருதுகளாகிய ‘பாரத ரத்னா’, ‘பத்மவிபூசண்’ ‘பத்மபூசண்’ போலும் உயர்ந்த பாராட்டுகளும் பெரும்பாலும் அவர் இனத்தவர்களுக்கும் வடநாட்டவர்களுக்குமே கொடுக்கப் பெறுகின்றன. எங்கேனும் தகுதி வாய்ந்த தமிழர்கள் இருந்தால் அவர்களுக்கு அவ்வரிசையில் கடைநிலையதான ‘பத்மஸ்ரீயே’ தரப் பெறுகின்றது. இதுவரை மிக உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’வை பெற்ற பதினைவரில் ஒருவரும் தமிழரல்லர். தமிழ் பேசுபவராகக் கருதிக் கொடுக்கப் பெற்ற திரு. இராசாசியும் பிராமணரே. மற்றுத் தமிழர் தொடர்புள்ள திரு. இராதாகிருட்டிணன் அவர்களும் சி.வி. இராமனும் கூடப் பிராமணர்களே. இந்தியா விடுதலை பெற்ற 25 ஆண்டுகளில் தமிழர்கள் அனைவரிலும் பாரத மணியாகத் திகழத் தக்கவர் ஒருவரும் இலர் என்று அவர்கள் கருதுவார்களானால், இந்தத் தமிழர்களும், தமிழ்நாடும் வடநாட்டுத் தலைமையின்கீழ் இருந்துதான் ஆகவேண்டும் என்பதில் என்ன கட்டாயம் இருக்கின்றது?
இவர்கள் விளக்கணி (தீபாவளி) விழாவைக் கொண்டாடுவது போல் பொங்கலைக் கொண்டாடுவது இல்லை. மேலும் சிலை (மார்கழி) மாதங்களில் தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை ஒலிபெருக்கிகளைப் போட்டுக்கொண்டு பாவைப் பாடல்களை இப் பார்ப்பனப் பூசாரிகள் முழக்குவதும் கொட்டுமுழக்கோடு கூடிப் பாடிக்கொண்டு தெருவலம் வருவதும் ஊரை இவர்களுக்காகவே ஆக்கிக் கொள்வதும் போல இல்லையா? அக்கால் தேர்வுக்காக மாணவர்கள் படிக்கவும் இடையூறு நேர்வதை அரசும் கவனிப்பதில்லை. இந்தப் பாவைப் பாடல் வழக்கம் தேவைதானா? இந்தப் பாடலைப் பாடாத நாட்களில் விடிவதே இல்லையா? இவர்களின் இதழ்களும் விளக்கணி (தீபாவளி) விழாவுக்காக மலர்கள் வெளியிடுகின்றனவே தவிர, பொங்கலுக்கு வெளியிடுவதில்லை .
தனிப்பட்ட ஒருவர் செய்யும் தீங்கைவிடக் கொடியது. குறிப்பிட்ட ஓரினம், பொதுவான ஒருவகை மொழி, இன வெறுப்புடன், பல நூற்றாண்டுகள் இத் தமிழகத்தில் இயங்கி வருவது பார்ப்பனப் பதடிகள் தமிழையும் தமிழகத்தையும் பாழ் செய்வதை மனமார உணர்ந்த ஒருவன் அவர்களைத் தமிழர்கள் என்று ஒருபோதும் ஒப்புக் கொள்ளவே மாட்டான். பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் அவர்கள் திராவிட இனத்தவராக வேண்டும். அப்படி அவர்களைத் திராவிடர்கள்தாம் என்றால் ஆரியர் என்பவர் யார் என்று வரையறுக்க வேண்டும். ஆரியரே இந்நாட்டுக்கு வரவில்லை என்றால் பார்ப்பனர் திறத்தாலும், மொழியாலும், பழக்கவழக்கத்தாலும், குலத்தாலும் வேறுபடுவது ஏன் என்று விளக்க வேண்டும்! இவை யெல்லாவற்றையும் விடுத்து, மாந்தர் குலம் எல்லாமும் ஒன்றுதான் என்றால் மத, இன, குல வேறுபாடுகளும் மாந்தரின் உயர்வு தாழ்வு முறைகளும் அடியோடு தொலைக்கப்பட வேண்டும். பார்ப்பனர் தமிழர் என்பதால் பார்ப்பனர்க்கு ஊதியமென்றால், தமிழர்களுக்கு இழப்பன்றோ ஏற்படுகின்றது. மொழியாலும், இனத்தாலும், நாட்டாலும் ஏற்படும் அவ்விழப்பை எப்படித் தாங்கிக் கொள்வது? மேலும் பார்ப்பான் தமிழனென்றால் அவன் வீட்டுப் பெண்ணையும் நம் வீட்டுப் பையன் கட்ட அவனிசைய வேண்டும்; நம் வீட்டுப் பெண்ணை அவன் வீட்டுப் பையன் கட்டிக்கொள்ள மறுப்புச் சொல்லுதல் கூடாது. அவன் தன்னை உயர்வு என்பதையும், தன் தாய்மொழி சமசுக்கிருதம் என்பதையும் அவற்றிலுள்ள ஈடுபாட்டையும் அறவே விட்டுவிடுதல் வேண்டும். வாழ்க்கைப் பொதுநிலையில் அவன் எல்லாரையும் போலவே வாழ்தல் வேண்டும். இப்படி ஒரு நிலை ஏற்படும்வரை அவனுந் தமிழன்தான் என்னும் பேச்சை அடியோடு விட்டொழிக்க வேண்டும்
(தொடரும்)