கரோனா இந்தியா உட்பட உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், குடகு மாவட்டம் கரோனா பரவலை அற்புதமாகக் கட்டுப்படுத்தியிருப்பதில் வெற்றிப் பெற்றிருப்பது அகில இந்திய அளவில் பேசப்படுகிறது. அதற்குக் காரணம் குடகு மாவட்டத்தின் துணை ஆட்சியராக இருக்கும் அய்.ஏ.எஸ் அதிகாரியான ஆனிஸ் கண்மணி ஜோய், மத்திய, மாநில அரசுகளும் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கண்மணியின் பங்களிப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளது.
அடிப்படையில் கண்மணி ஒரு செவிலியர். கேரளாவில் மிகவும் ஏழ்மையான விவசாயிக்கு மகளாகப் பிறந்தவர். வறுமையில் வாடி வளர்ந்த அவரால் பள்ளி சென்ற போது புத்தகம் வாங்கக்கூடப் பணமில்லாமல் தவித்தார். ஆனால் இன்றோ அவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் துணைக் கலெக்டர் ஆக சிறப்பாகச் செயல்பட்டு, மக்களின் வரவேற்பைப் பெற் றுள்ளார்.
டாக்டர்கள், பொறியாளர்கள், அதிகம் படித்தவர்கள்தான் தேர்வுகள் எழுதி அய்.ஏ.எஸ் அதிகாரிகள் ஆவதுண்டு. ஆனால் ஒரு செவிலியராக இருந்து அய்.ஏ.எஸ் தேர்வு எழுதி அய்.ஏ.எஸ் அதிகாரி ஆனது இந்தியாவில் கண்மணி மட்டுமே. கடந்து வந்த பாதைப் பற்றி ஆனிஸ் கண்மணி ஜோய் கூறுகையில்.
“கரோனா காலத்தில் போர்க்கால நடவடிக்கைகளை எடுத்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அடிப்படையில் நான் செவிலியராக இருந்ததால் கரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறித்து எனக்கு நன்றாகவே தெரியும். அதனால் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானிப்பது எளிதாக இருந்தது.
உண்மையில், செவிலியராகப் பெற்ற பயிற்சி, பொது மக்களிடம் எப்படிப் பேச பழக வேண்டும் என்கிற அணுகுமுறையினைச் சொல்லிக் கொடுத்தது. அவசர சூழ்நிலைகளில் எப்படி முடிவு எடுக்க வேண்டும் என்ற சமயோஜித அறிவையும் தந்துள்ளது. மருத்துவமனையில் நோயாளிகள் இருக்கும் வார்டுகளை எப்படி நிர்வகிக்க வேண்டும் என்பதையும் அனுபவப்பூர்வமாகக் கற்றுக் கொடுத்தது.
‘பள்ளிக் காலத்தில் நான் சராசரி மாணவி தான். வருமானம் சரியாக இருக்கும் சராசரி விவசாயி குடும்பத்தில் பிறந்தவள். டாக்டராக வேண்டும் என்று நுழைவுத் தேர்வு எழுதினேன். ஆனால் போதிய மதிப்பெண்கள் கிடைக்காததால் செவிலியர் படிப்பிற்கு இடம் கிடைத்தது. படித்து முடித்துப் பயிற்சி செவிலியராக இருந்த போதுதான் அய்.ஏ.எஸ் கனவு வந்தது. ‘செவிலியர் பணி புனிதமான சேவை’ என்று பெருமைப்படுத்திச் சொல்லப்பட்டாலும், சமூகத்தில் அதை ஒரு சாதாரண வேலையாகத்தான் பார்க்கிறார்கள்.
அய்.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகத் தேவையான புத்தகங்கள் வாங்க கையில் பணம் இல்லை. தனியாகப் பயிற்சி வகுப்பிலும் சேரமுடியாத பொருளாதாரநிலை. செய்தித்தாள்களின் செய்திகள், தலையங்கங்கள், விமர்சனங்கள், அலசல்களை வாசித்துப் பொது அறிவைப் பெருக்கிக் கொண்டேன். சிறப்புப் பாடங்களாக சைக்காலஜி, மலையாள இலக்கியத்தைத் தெரிவு செய்தேன். முதல் முயற்சியில் அய்.ஏ.எஸ் தேர்வில் 580-ஆவது இடத்தில் தேர்வானேன். மத்திய அரசின் நிதித்துறையில் அதிகாரியாக அரசு பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன். ஆனாலும் அய்.ஏ.எஸ் கனவு என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது. இரண்டாவது முயற்சியில் 2012 இல் 65-ஆவது நபராகத் தேர்வு பெற்று அய்.ஏ.எஸ் அதிகாரியானேன்.
வியர்வை சிந்தி உழைத்து என்னைப் படிக்க வைத்த எனது பெற்றோர்கள்தான் எனக்கு ரோல்மாடல்கள்’’ என்றார். கரோனா தொற்றுக்கு எதிராக மட்டுமல்ல…, காடுகளில் மரங்களை வெட்டிக் கடத்தும் கொள்ளைக்காரர்களுக்கு எதிராகச் செயல்பட்டுச் சட்டத்தை நிலைநாட்டும் பணியிலும் சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார்.
தகவல் : சந்தோஷ்
Leave a Reply