Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வரலாற்றுச் சுவடுகள் : ‘நடமாடும் பல்கலைக் கழகம்’ டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் இறுதிச் சொற்பொழிவு (2)

(நாவலர் நூற்றாண்டு பிறந்தநாள் ஜூலை 11)

ஏசு வருவார், வருவார்?

கிறிஸ்து ஏழாம் நாள் உயிர் பெற்றுவிட்டார். ஏசு கிறிஸ்து வருவார், வருவார் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே தவிர வரத்தான் போகிறார் என்றும் சொல்வதில்லை (கைதட்டல்). அவர் இறந்ததாகவும் சொல்லவில்லை. ஆனால் எல்லா கிறிஸ்தவர்களும் ஏ.டி., ஏ.டி. என்பதை மட்டும் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அவர் இறந்ததாகவும் போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

உலகின் முதன்முதலில் கரிக்கோரி என்பவர்தான் காலண்டரைக் கண்டுபிடித்தார். ஆங்கிலக் காலண்டர் உலகெங்கும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

காலண்டருக்கும் ஒரு ஸ்டேண்டர்டு

இந்த வகையிலே இரண்டாயிரமாவது ஆண்டை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். உலகத்தில் சில ஸ்டேண்டர்டு என்பது இருக்கிறது. பிளேடு என்றால், இப்படித்தான் இருக்கும் என்று வைத்திருக்கின்றான். சைக்கிள் டயர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று வைத்திருக்கின்றான். காருக்கு டயர் என்றால் இந்த அளவுக்குத்தான் இருக்க வேண்டுமென்று உலகம் முழுக்க ஒரு ஸ்டேண்டர்டு வைத்திருக்கின்றான். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஸ்டேண்டர்டு இருக்கிற மாதிரி காலெண்டருக்கும் ஒரு ஸ்டேண்டர்டு வைத்திருக்கின்றார்கள். அந்த ஸ்டேண்டர்டை வைத்துத்தான் உலகம் முழுவதும் 2000மாவது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

2000 ஆண்டை கொண்டாடுகின்றோம்

இருபத்தி ஓராம் நூற்றாண்டு 2001இல் ஜனவரி 1ஆம் தேதி தான் ஆரம்பிக்கின்றது. இது 2000ஆம் ஆண்டின் துவக்க விழா நடைபெறுகிறது. இந்த நூற்றாண்டின் கடைசி விழா இதுதான். இந்த நுற்றாண்டின் கடைசி டான்ஸ் என்று அவனவன் போட்டுக் கொண்டிருக்கின்றான். ஆனால் 2000, 3000 என்பதெல்லாம் கொண்டாடுவதற்குரிய ஆண்டுகள் எப்படி 50ஆம் ஆண்டு பொன் விழா, 60ஆம் ஆண்டு மணி விழா, 75ஆம் ஆண்டு பவள விழா, நூற்றாண்டு விழா, இருநூறாவது ஆண்டு விழா, ஆயிரமாவது ஆண்டு விழா என்று கொண்டாடுகின்ற பழக்கத்தை ஒட்டி 2000 என்கின்ற அந்த எண்ணிக்கையின் அடிப்படையிலே, அதற்கு இருக்கின்ற சிறப்பின் அடிப்படையின் தன்மையிலே எங்குப் பார்த்தாலும் கொண்டாடுகின்றோம்.

2000ஆம் ஆண்டு கொண்டாடுகின்ற நிலையில் நண்பர் கி.வீரமணி அவர்கள் பெரியார் புத்தாயிரமாவது ஆண்டு விழா என்று கொண்டாடுகின்றார்.

மனித சமுதாயம் பயன்பெற வேண்டும்

தந்தை பெரியார் கருத்துகள் பரப்பப்பட வேண்டும். அதன் மூலம் மனித சமுதாயம் வாழ வேண்டும் மனித சமுதாயம் எதை, எதை ஏற்க வேண்டுமென்று சொல்லி தந்தை பெரியார் அவர்கள் எதை எல்லாம் வாழ்நாள் முழுக்க சொல்லி வந்தார்களோ அந்தக் கருத்துக்கு ஆக்கம் தரவேண்டும், ஊக்கம் தர வேண்டும். அதைப் பரவலாக்க வேண்டும். அதன் மூலம் மனித சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் பலன் பெற வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலே இப்படிப்பட்ட விழாக்களைக் கொண்டாடுவது மிக, மிக பாராட்டுதலுக்குரிய ஒன்று.

உள்ளபடியே பகுத்தறிவு இயக்கத்தைப் பரப்புவது என்பது எளிதானதல்ல. ஒவ்வொருத்தரும் நம்பி விட்டார்கள் என்றால் அதை முறியடிப்பது கஷ்டம் (சிரிப்பு) ஆறாவது அறிவு இருந்தால்தான் ஆராய்ச்சி போய்க் கொண்டிருக்குமே தவிர, நம்புகிறேன் என்று சொல்லிவிட்டான் என்றால் அதன் பிறகு என்ன செய்ய முடியும்?

ஆராய்பவர்களால்தான் ஏற்க முடியும்

பகுத்தறிவு இயக்கம் பரவவில்லையே, பரவவில்லையே என்று சொன்னால் பரவாது. அதை ஏற்க திட உள்ளம் வேண்டும். உறுதியான உள்ளம் வேண்டும். ஆக எது மூடநம்பிக்கை? எது குருட்டுப் பழக்க வழக்கம்? அதனால் ஏற்படுகின்ற விளைவுகள் என்ன என்பதை கூர்ந்து ஆராய்ந்து பார்த்து, பகுத்து  உணர்கின்ற தன்மை யாருக்கு ஏற்படுகிறதோ அவர்கள் தான் ஏற்றுக் கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் பொறுக்கி எடுத்துக் கொள்வார்களே தவிர, நீங்கள் ஒரே அடியாக ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆக நம்புகிறேன் என்று சொல்கிறவனிடம் போய் காரண காரியம் சொல்லி திருத்த முடியாது.

வரும் காலத்திற்கு பெரியார் கருத்துகளே!

ஆனால், பகுத்தறிவு கருத்துகள் மெல்ல மெல்லத் தான் பரவும். ஆனால் இந்த கருத்துகளுக்கு ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும் என்பது உறுதி. கி.வீரமணி அவர்கள் சொல்லியது மாதிரி, பெரியார் கொள்கைகள் உலகம் முழுவதும் தழுவப்படுகின்ற அளவுக்கு, உலகத்தில் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்கின்ற அளவிற்கு அமையும் என்றார்கள்.

எல்லா நாடுகளிலும், பகுத்தறிவாளர்கள் இருக்கின்றார்கள். எல்லா நாடுகளிலும் பகுத்தறிவு அமைப்புகள் இருக்கின்றன. எல்லாம் ஒன்றுபடுத்தி அவர்களுடைய உறுதுணை நமக்கிருக்க, நமக்கிருக்கின்ற உறுதுணை அவர்களுக்கு இருக்க, எல்லோரும் ஒன்றுபட ஒரு சூழ்நிலை இருக்கிறது என்பதை அருமை நண்பர் கி.வீரமணி அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். எதிர்காலத்தில் அதற்கான நல்ல சூழ்நிலைகள் வளர வேண்டும்.

பெரியார் வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டார்

ஆனால், பெரியார் அவர்கள் அறிவுக்கு மதிப்புத் தர வேண்டும் ஆற்றலுக்கு மதிப்புத் தரவேண்டும். உழைப்புக்கு மதிப்புத் தர வேண்டும். உண்மைக்கு மதிப்புத் தரவேண்டும். ஒழுக்கத்திற்கு மதிப்புத் தர வேண்டும், பண்புக்கு மதிப்புத் தர வேண்டும். மனிதனுக்கு மதிப்புத் தரவேண்டும். மனித முயற்சிக்கு ஊக்கம் தர வேண்டும், மனித முயற்சியினால் நடைபெறுகின்ற செயல்களுக்குப் பாராட்டுத் தர வேண்டும் என்கின்ற அடிப்படையிலேதான் தந்தை பெரியார் அவர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுக்கப் பாடுபட்டார்.

மனிதன் ஏ.கே.47, பீரங்கி, அணுகுண்டுகளை கண்டுபிடித்து விட்டான். கடவுள்கள் கைகளில் சூலாயுதமும், சக்ரா யுதமும் இருக்கின்றதே. கடவுள்களால் என்ன பயன் என பகுத்தறிய வேண்டியுள்ளது

மாடு சிந்தித்துக் கொண்டு நிற்குமா?

மனிதன்தான் சிந்திக்கின்ற அறிவைப் படைத்தவன். மற்ற விலங்கினங்கள், பறவையினங்கள், ஊர்வன, பறப்பன, நீந்துவன போன்றவைகள் சிந்திக்காது. சூழ்நிலைகள் பொறுத்து, இயற்கைத் தன்மை அடிப்படையிலே தங்களுடைய குணங்களையும், தங்களுடைய தன்மைகளையும் அவைகள் பெற்றுள்ளன.

மாடு உட்கார்ந்து சிந்திக்கும் என்று சொல்லவே முடியாது. ஆடு சிந்திக்கும் என்று சொல்லவே முடியாது. ஒரு மாடு வீட்டுக்குப் பக்கத்திலே ஒரு மணி நேரமாக நின்று கொண்டிருக்கின்றதே அது என்ன சிந்தித்துக் கொண்டிருக்கின்றதா என்று எவனும் கேட்கமாட்டான். அது நாத்திகன் வீட்டு மாடாயிற்றே அதனால் சிந்தித்துக் கொண்டிருக்கின்றதா என்று எவனும் கேட்கமாட்டான். நாத்திகன் தான் சிந்திப்பானே தவிர மாடு சிந்திக்காது.

இரு வகையான தன்மைகள்

எது சரி? எது தப்பு என்று சிந்திக்கின்ற அறிவு மனிதனுக்குத்தான் உண்டு. உலகில் இயற்கையின் தன்மையில் இருவகையான தன்மைகள் உண்டு. வெப்பமும் உண்டு. குளிர்ச்சியும் உண்டு. நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. கொடுமையும் உண்டு. நலம் பயக்கின்ற தன்மையும் உண்டு. ஆக, பொய்யும் உண்டு உண்மையும் உண்டு. அந்த இரு வேறு தன்மைகளில் எது தப்பு? எது சரி என்று மனிதனால் மட்டும்தான் சிந்திக்க முடியும்.

செய்ய வேண்டியவைகள் எவை எவை? செய்யக் கூடாதவைகள் எவை எவை? செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பதும் தவறு. செய்யக்கூடாததை செய்வதும் தவறு.

அறிவுடையாருக்கு எல்லாம் உண்டு

அறிவுடையார் எல்லாம் உடையார் என்றார் வள்ளுவர். அறிவுடையவர்கள் தான் எல்லாவற்றிற்கும் உரிமை உடையவர்கள் ஆவார்கள். அறிவற்றவர்கள் எதுவும் இல்லாதவர்களாகத்தான் – ஆவார்கள் என்று சொன்னார்கள். ஒருவருக்கு நூற்றுக்கு நூறு அறிவு இருப்பதில்லை . எழுபது பங்கு, எண்பது பங்கு இருந்தால் பேரறிவாளி.

மூளையின் பயன்பாடு பத்து இலட்சம்

நம்முடைய மூளையை நீங்கள் பார்த்தால்கூட நரம்பியல் மருத்துவர்கள் சொன்னார்கள் பெரிய அறிவாளிகள் என்று சொல்லப்படுபவர்களில் அவர்களுடைய மூளையில் உள்ள நரம்புகள் எவ்வளவு பயன்படுகிறது என்று சொன்னால் பத்து இலட்சத்தில் ஒரு பகுதிதான் பயன்படுகிறது என்று சொன்னார்கள். மற்ற செல்கள் எல்லாம் பயன்படாமல் அப்படியே இருக்கிறது. மூளையைப் பயன்படுத்தாமல் ரொம்ப பேர் இருக்கின்றான். ஏன் அநாவசியமாக பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றான்.

எருமை – காபி கொண்டுவா!

மூளையைப் பயன்படுத்தாதவனை எருமை என்று தான் சொல்லுகிறான், கழுதை என்றுதான் சொல்லுகிறான். நான் ஒரு வீட்டிற்குப் போயிருந்தேன். வீட்டுக்காரர் கேட்டார் – காபி சாப்பிடுகிறீர்களா என்று. கொடுங்கள் என்று சொன்னேன். எருமைண்ணு கூப்பிட்டார். (சிரிப்பு) எருமை இங்கு எப்படி வரும் என்று நினைத்தேன். ஓர் ஆள் வந்து நின்றார். போய் காபி எடுத்துக்கொண்டுவா என்று சொன்னார். ஏங்க அப்படிச் சொன்னீர்கள் – என்று கேட்டேன். எருமைக்கு எவ்வளவு அறிவு இருக்கிறதோ அவ்வளவு

அறிவுதான் இவனுக்கும் இருக்கிறது என்று அவர் சொன்னார். அதனால் இவனை எருமை என்றுதான் கூப்பிடுவது வழக்கம் என்று சொன்னார்.

கி.வீரமணி அவர்கள் சொன்னார்கள்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வள்ளுவர் சொன்னார். ‘ஆவதறிவார் அறிவுடையார்’ என்று. அதைத்தான் நண்பர் கி.வீரமணி அவர்கள் சொன்னார்கள். பின்னால் என்னென்ன ஆகும் என்பதை அறிந்து அறிவியல் துறையிலே, தொழில் நுட்பத்துறையிலே, வாழ்வியல் துறையிலே பகுத்தறிவு தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள் என்பதை விளக்கமாகக் கூறினார்.

(தொடரும்)