திரு.காமராசு
கே: ஒரே நாடு, ஒரே கார்டு திட்டத்தைத் தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் அமல்படுத்தும் உணவுத் துறை அமைச்சர் திரு.காமராசு, ஒரே ஜாதி, ஒரே சுடுகாடு என்ற திட்டத்தையும் திட்ட வட்டமாக கூற வேண்டுமல்லவா? இது இரட்டை வேடம் மற்றும் மத்திய அரசின் கையாள் நிலையல்லவா?
– பெ.கூத்தன், சிங்கிபுரம்
ப: தனிப்பட்ட அமைச்சர்கள் என்ன? ஒட்டுமொத்த அ.தி.மு.கவே! டெல்லி என்ன சொல்கிறதோ அதற்கேற்ப தாளம் போடும் பரிதாப நிலை. காரணம் உலகறிந்தது. நமது திராவிட இயக்கம் இருப்பதால் பெயரளவிலாவது சிற்சில விஷயங்களில் எதிர்ப்பவையாவது காட்டுகிறார்கள், கட்டுண்டவர்கள் காலம் வரும் வரை பொறுத்திருப்பதைத்தவிர இப்போதைக்கு வேறு வழி இல்லையே! – கைப்புண்ணுக்கு கண்ணாடியா தேவை?
கே: உடுமலை சங்கர் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான கௌசல்யாவின் தந்தையை விடுவிப்பது எப்படி சரியாகும்?
– மகிழ், சைதை
கௌசல்யா
ப: நமது நீதிமன்றங்கள் தந்தை பெரியார் கூறியபடி சட்டக் கோர்ட்டுகளே சிஷீuக்ஷீts ஷீயீ லிணீஷ் ணீஸீபீ நீதிக் கோர்ட்டுகள் அல்ல சாட்சியங்கள், வழக்கை நடத்தும் அரசும் காவல் துறையும் தரும் தடயங்கள் ஆவணங்கள் தானே மேல் முறையீட்டில் முக்கியமாக கருதப்படுகின்றன. அதனால் தான் என்றாலும், இறுதியில் நீதி முறையாக உச்ச நீதிமன்றத்தில் நடத்த அழுத்தம் கொடுத்தால் நீதி கிட்டும் என்று நம்புவோமாக!
கே: நாட்டின் இரயில் சேவையில் சில வழித்தடங்களை தனியாருக்கு அரசு கொடுப்பது பெரும் முதலாளிக்குத் தானே நன்மை பயக்கும், இது குறித்து தங்களின் கருத்து என்ன?
– இரா.பிரபாகரன், ஆவடி
ப: இது மிகப் பெரிய கண்டனத்துக்குரியது, கார்ப்பரேட் முதலாளிகளைக் கொழுக்க வைத்து ஏழை, எளிய பயணிகளைத் தண்டிக்கும் கொடுமை; ஊழியர்களைத் தனியார் முதலாளிகள் எப்போதும் வெளியே அனுப்புவார்கள், இடஒதுக்கீடு ‘மூச்’… கிடையவே கிடையாது. தனியார் துறையல்லவா? ஆர்.எஸ்.எஸ். திட்டங்கள் வெகுவேகமாக நிறைவேறி சமதர்மம் சவக்குழிக்குச் செல்கிறது!
கே: நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாளில் அவருடனான உங்கள் நட்பைப் பற்றி கூறுங்கள்?
– ராமதாஸ், மதுரை
ப: திராவிட மாணவர் கழகத்தவராக 1944 ஆண்டிலிருந்தே, அவர் மறையும் வரை கட்சி அரசியலைத் தாண்டிய கொள்கை நட்புறவின் மலர்ந்த பூக்கள்! வாடாதவை பகுத்தறிவுப் பூக்கள்!
நாவலர்
இரா.நெடுஞ்செழியன்
கே: சாத்தான்குளத்தில் தந்தை மகனைக் கொலை செய்த காவல்துறையினர் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் என்பதால், உண்மையை மறைக்க மத்திய மாநில அரசுகள் முயல்கின்றனவா?
– வசந்த், மேல்மருவத்தூர்
ஜெயராஜ் பென்னிக்ஸ்
ப: எப்படியோ நீதி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இது வரை சரியாகவே செல்கிறது!
கே: காவல் துறையினரின் மன அழுத்தம் என்று கூறப்படும் காரணம் சரியாகுமா? மன அழுத்த நிலையாலும் உணர்வுவயப்படாது கடமையாற்ற வேண்டும் என்பது தானே காவல் துறையின் முதல் தகுதி? அது இல்லையெனில் அவர்கள் காவல் துறையில் பணியாற்றத் தகுதியற்றவர்கள் அல்லவா?
– வெற்றிச்செல்வி, கூடுவாஞ்சேரி
ப: சிக்கலான கேள்வி. அவர்களில் மனிதம் பொங்க கடமை ஆற்றிட வேண்டும் என்பதை மறந்த சிலரின் மமதைதான் இப்படி உயிர்க் கொல்லியாகி, கடைசியில் அவர்களும் உயிருக்குப் போராடவேண்டிய ஒரு விரும்பத்¢தகாத நிலை ஏற்படுவதற்கு ஏதோ ஒரு வியாக்கியானம் மனஅழுத்தம். அப்படி என்ன மனஅழுத்தம் – மூத்த அதிகாரிகளுக்கு இல்லாத, நீதிபதிகளுக்கு இல்லாத, உழைக்கும் டாக்டர்களுக்கும், செவிலியருக்கும் இல்லாத மன அழுத்தம் அங்கே மட்டும் எப்படி? போக்குவரத்துத்துறை காவலரை விட இவர்களுக்கு அதிக மன அழுத்தம் எப்படி? அவர்களுக்குச் சொன்னாலாவது சற்று நியாயமுள்ளது!
கே: கூட்டுறவுத் துறையைக் கூட தனது கட்டுக்குள் வைக்க மத்திய அரசு முயற்சிப்பதன் நோக்கம் என்ன?
– ராசா, வேதாரண்யம்
ப: ‘மாகாணம் சுவாக’ என்ற ஆர்.எஸ்.எஸ் கொள்கையின் செயலாக்கத்தின் ஒரு பகுதி!
கே: நீதிபதியையே உதாசீனப்படுத்தி, அவமரியாதையாய் நடந்து கொள்ளும் அளவிற்கு காவல்துறையினருக்குத் துணிவு வர என்ன காரணம்?
– திலகவதி, அரக்கோணம்
ப: ஆட்சியாளர் நம் பக்கம்; உடல் நலக்குறைவால் இருவரும் செத்துப்போனார்கள் என்று முதல்வரே கூறிவிட்டார். இனி நமக்கு என்ன பயம் என்று தவறாக எண்ணினார்களோ என்னவோ? சாயம் வெளுத்துவிட்டது!
கே: கரோனா காலத்திலும் சில பள்ளிகளில் ஆன்லைன் கல்வி என்ற பெயரில் பெற்றோருக்கு அழுத்தம் தந்து கட்டணம் கேட்பது முறையா, இதில் அரசு தலையிட முடியாதா?
– மு.பவானி, சாந்தோம்
ப: அரசு தலையிட்டு இருபுறமும் போதிய நியாயமான தீர்வை உருவாக்கிட முயலவேண்டும். கொரோனா காலத்தில் ஆசிரியர்களுக்கும் அலுவலர்களுக்கும் அப் பள்ளிகள் சம்பளம் தரவேண்டுமே என்ன செய்ய? எனவேதான் கடிதோச்சி மெல்ல எறிதல் வேண்டும்.