அய்யாவின் அடிச்சுவட்டில் … : இயக்க வரலாறான தன் வரலாறு (250) 69% இடஒதுக்கீட்டிற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

ஜுன் 16 - ஜூலை 15, 2020

கி.வீரமணி

30.9.1993 பொன்னேரியில் காலை 10 மணியளவில் பொன்னேரி ச.சந்திரராசு – மானனீகை ஆகியோரின் மகன் ச.அசோக்குமாருக்கும், வந்தவாசி கே.எஸ்.தாஸ் – பானுமதி ஆகியோரின் மகள் பத்மஜோதிக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழி ஏற்கச் செய்து மண விழாவை நடத்தி வைத்தேன்.

தோழர் ஆசிரியர் சந்திரராசு சீரிய கொள்கையாளர். ஆபத்தான மூளை அறுவைசிகிச்சையின் போது கூட மருத்துவமனையில் டாக்டரிடம் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று துணிவுடன் அறுவை சிகிச்சைக்கு முன்னர், கூறிய கொள்கையாளர். திருமண மண்டபத்தில் பெண்கள் அதிக அளவில் குழுமியிருந்தனர். மண்டபம் நிரம்பி வழியும் அளவுக்கு ஏராளமானோர் வந்திருந்து சிறப்பித்தனர்.

மணமக்கள் ச.அ«சோக்குமார் – பத்மஜோதி இருவருக்கும் வாழ்க்கை ஒப்பந்த உறுதி மொழி ஏற்கச் செய்து
வாழ்த்தும் ஆசிரியர் மற்றும் கழகத்தினர்

1.10.1993 சென்னையில் மக்கள் நெருக்கம் மிகுந்த அண்ணா சாலையில் உள்ள எல்.அய்.சி. 14 மாடி கட்டடம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் “சமூக நீதிக் கொடியை ஏற்றும் வரை எங்கள் போராட்டம் ஓயாது’’ என்று முழக்கமிட்டப்படி போராட்டத்தில் கலந்து கொண்டேன்.

“வேலை வாய்ப்பு விளம்பரங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு என்று அறிவிக்கப்படவில்லை. எல்.அய்.சி. நிறுவனமே அந்த தேதிக்கு பின் முன் தேதியிட்டு புதிய வேலைவாய்ப்புக்கான இடங்களைப் பூர்த்தி செய்துள்ளது. எல்.அய்.சி.யில் மண்டல் ஆணை பிறப்பிக்கப்பட்ட அதே தேதியில் ‘ஓர் இரவு வேலை’’ செய்து இருக்கிறார்கள்.’ இரவோடு இரவாக முன் தேதியிட்டு பார்ப்பன வீட்டுப் பிள்ளைகளுக்கு உத்தியோகங்களை வாரிக் கொடுத்து இருக்கிறார்கள்.’’ இவற்றை கண்டித்து எனது தலைமையில் சென்னை எல்.அய்.சி. அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. பல்வேறு மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கழகம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

2.10.1993 அறிக்கையில் மராட்டிய மாநிலத்தில் 30.9.1993 அன்று பொழுது விடிவதற்கு முன்பு ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கம் ஏற்பட்டு அதனால் 60 கிராமங்களே பூண்டோடு அழிந்த வேதனையை செய்தியாளர்கள் வெளியிட, மரண எண்ணிக்கை 50 ஆயிரத்தையும் தாண்டி விட்டது என கூறப்பட்டது. அந்த மக்களுக்கு உதவும் வகையில் நமது தமிழக அரசு தற்போது அளித்துள்ள தொகையை முதல் தவணையாக்கி, மேலும் பெரும் தொகைகளையும் அளிப்பது அவசர அவசியமாகும். முதல்வர் இதுபற்றி உடனடியாக முடிவு செய்து அறிவிப்பது அவசியமாகும் என அறிக்கையில் சுட்டிக் காட்டினேன். மேலும், அரசை நாம் தமிழக அரசை கேட்டுக் கொண்டதோடு, கழகத்தின் சார்பாக ஒரு லட்சம் ரூபாய் மராத்திய மாநிலத்திற்கு நிவாரண நிதியாக வழங்கப்பட்டது.

6.10.1993 “வடக்கு ஆந்திரா தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மைனாரிட்டி கழகம்’’ மண்டல் அறிக்கையை முழுமையாக அமல்படுத்தக் கோரி மாநாட்டுக்கு ஏற்பாடுச் செய்திருந்தனர். அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் “அதிகார வர்க்கம் மண்டல் பரிந்துரையை அமல்படுத்தத் தயாராக இல்லை! அவர்களால் இதை சீரணிக்க முடியவில்லை! 8ஆம் தேதி 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கான அரசாணை வந்த பிறகும் கூட இதுவரை ‘யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனோ’ அல்லது மத்திய அரசுத் துறைகளிலோ, ஒரு பதவிக்குக் கூட இடஒதுக்கீட்டு அறிவிப்பை வெளியிடவில்லை. அது மட்டுமல்லாது எல்.அய்.சி. மற்றும் ரயில்வே வாரியம், 27 சதவீத இடஒதுக்கீடு இல்லாமலே இடங்களைப் பூர்த்தி செய்ய ஆரம்பித்திருக்கிறது. இதை எதிர்த்து திராவிடர் கழகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் நடந்த பிற்படுத்தப்பட்டோர் கழக மாநாட்டில் உரையாற்றும் ஆசிரியர்

வழக்கை விசாரணைக்கு ஏற்று – 14 அரசுத் துறைகளுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது’’ என்று விளக்கினேன்.

மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் அப்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ரெட்டி சத்யநாராயணா பேசும் போது, “தெலுங்கு தேச ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட இடஒதுக்கீடு பிறகு அதில் பொருளாதார வரம்பு புகுத்தப்பட்ட பிறகு, இடஒதுக்கீட்டின் நோக்கமே முறியடிக்கப்பட்டு விட்டது. ஆண்டுக்கு ரூ.12,000த்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை கிடையாது என்று மாற்றி விட்டார்கள். ‘கிரீமிலேயர்’ என்ற அளவு கோல் பின்தங்கிய சமூகத்தின் முன்னேற்றத்துக்கு மிகப்பெரும் தடை’’ என்று கூறினார்.

முன்னாள் தெலுங்கு தேச சட்டமன்ற உறுப்பினர் திருமதி. ராஜனா ரமணி கூறுகையில், “கிரீமிலேயரை வைத்து இடஒதுக்கீடு உரிமை இல்லை என்று கூறிவிட்ட பிறகு பிற்படுத்தப்பட்டவர் என்று ஒருவருக்கு ஜாதிச் சான்றிதழ் கொடுப்பதிலும் என்ன அர்த்தம் இருக்கிறது” என்று கேட்டார்.

பிறகு, சர்தார் கோது லச்சண்ணா அவர்கள் பேசுகையில், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பிற்படுத்தப்பட்டோரை மட்டுமல்ல, தாழ்த்தப்பட்டோரையும் பாதிக்கக்கூடியதாகும் என்றார். பதவி உயர்வில் இடஒதுக்கீடு கிடையா என்று அறிவித்துள்ள உச்சநீதிமன்றம், நிரப்பப்படாத இடங்களை உரிய தகுதி உடைய விண்ணப்பத்தாரர் கிடைக்கும் வரை காலியாகவே வைத்திருக்க வேண்டும் என்ற நடைமுறையையும் நீக்கி விட்டது.

இது தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகும், ‘கிரீமிலேயரை’ ஏற்றுக் கொள்ளும் உயர்நீதிமன்றம் அதே நேரத்தில் பொருளாதார அடிப்படையில் செய்யப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீட்டை செல்லாது என்று அறிவித்து விட்டது, இது முரண்பாடு அல்லவா? என்று கேட்டார். எனவே மக்கள் இயக்கத்தை நடத்த வேண்டும்’’ என்று வற்புறுத்தினார். 90 வயதுள்ள அவர் மூத்த சுதந்திரப் போராட்ட வீரர்.

சென்னை பெரியார் திடலில் இலவச அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து உரையாற்றும் ஜஸ்டிஸ் பி.எஸ்.மிஸ்ரா, மேடையில் அமர்ந்திருக்கும் ஆசிரியர், ஜஸ்டிஸ் பி.வேணுகோபால்

மாநாடு துவங்க ஆரம்பித்ததும், மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது. அதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் லட்சக்கணக்கான மக்கள் மாநாட்டு உரைகளை உணர்ச்சியுடன் கேட்டனர்.

எம்.எப்.கான்

8.10.1993 சென்னை பெரியார் திடலில் முதல் முறையாக இலவச அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட்டது. இவ்விழாவிற்கு மூதறிஞர் குழு தலைவர் ஜஸ்டிஸ் பி.வேணுகோபால் தலைமை தாங்கினார். நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் பி.எஸ்.மிஸ்ரா துவக்க விழா உரை நிகழ்த்தினார்.

நான் இலவச அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். பயிற்சியின் நோக்கத்தை எடுத்துரைத்தேன். பேராசிரியர் எம்.எப்.கான் இலவச பயிற்சி வகுப்பின் மய்யத்தின் முதல் கவுரவ இயக்குநராக இருந்து அனைவரையும் வரவேற்றார். நிகழ்வின் முடிவில் பேராசிரியர் அய்யாசாமி நன்றியுரை கூறினார்.

தோழர் வ.சுப்பையா அவர்களின் படத்திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் ஆசிரியர் மற்றும் கழகத்தினர்

13.10.1993 புதுவை மாநிலத்தின் மூத்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான வ.சு,(ஸ்.s) என்று அழைக்கப்படும் தோழர் வ.சுப்பய்யா அவர்கள் தனது 83ஆவது வயதில் காலமானார் என்பதை அறிந்து மிகவும் வருந்தினேன். “முன்னாள் புதுவை அமைச்சராக இருந்த வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், புதுவை விடுதலைக்காக குரல் கொடுத்தவரும், தொழிற்சங்கம் அமைத்து ஆசியாவிலேயே 8 மணி நேரம் வேலை உரிமையைப் பெற்றுத் தந்தவரும், புதுவையின் வளர்ச்சிக்காக திட்டங்களை உருவாக்க போராடியவரும், தாழ்த்தப்பட்டோர் சேவா சங்கத்தை நிறுவி, தாழ்த்தப்பட்ட மக்களின் மனதில் இடம் பிடித்தவர்.

சுப்பையா

அந்த பொதுவுடைமைக் கட்சித் தலைவர், துவக்கத்தில் சுயமரியாதை இயக்கத்தின் ஆதரவாளர், தந்தை பெரியார் அவர்கள்பால், புரட்சிக் கவிஞர்பால் மிகுந்த மரியாதை உள்ளவர். வாழ்நாள் முழுவதும் தியாகங்கள் பலவற்றைச் செய்து, சிறப்பான பொது வாழ்க்கையின் புரட்சி மலராகத் திகழ்ந்தவர்.

அவர்களை சில ஆண்டுகளுக்கு முன் நான் நேரில் சந்தித்து நமது அன்பைத் தெரிவித்து உரையாடியது இன்றும் எனது நினைவில் பசுமையாக உள்ளது.

அவரது இழப்பால் வருந்தும் அவரது குடும்பத்தினருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அந்த புரட்சி வீரருக்கு கழகத்தின் சார்பாக வீரவணக்கம் செலுத்துகிறோம்’’ என அறிக்கையில் குறிப்பிட்டேன்.

17.10.1993 முன்னாள் அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த பெரும் தலைவர்களில் ஒருவரும் சுயமரியாதை வீரருமான மன்னை நாராயணசாமி மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி கரூர் நிகழ்ச்சிக்கு சென்றிருந்த எனக்கு தெரிவிக்கப்பட்டது. உடனே அனைத்து நிகழ்ச்சியையும் ரத்துச் செய்துவிட்டு, மன்னார்குடிக்கு விரைந்தேன். மாலை இருநூறுக்கும் அதிகமான தோழர்களுடன் சென்று மன்னை நாராயணசாமி உடலுக்கு கருப்புத் துணியை போர்த்தி மலர் மாலை வைத்து கண்ணீர் வடித்தேன். மன்னை குடும்பத்தார்க்கு ஆறுதல் கூறினேன். அங்கிருந்த முன்னாள் அமைச்சர் பொன்.முத்து ராமலிங்கம், சென்னை மாவட்ட முன்னாள் செயலாளர் பாலு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எல்.கணேசன் ஆகியோருக்கு ஆறுதல் கூறி பேசினேன்.

சுயமரியாதை வீரர் மன்னை நாராயணசாமி அவர்களின் உடலுக்கு
இறுதி மரியாதை செலுத்தும் ஆசிரியர் மற்றும் கழகத்தினர்

மன்னார்குடி நகரமே சோகத்தில் மூழ்கியிருந்தது. ஏராளமான திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும் பொதுமக்களும் இறுதி மரியாதை செலுத்திய வண்ணம் இருந்தனர்.


மன்னை நாராயணசாமி

மறுநாள் 18.10.1993 ‘விடுதலை’யில் இரங்கல் செய்தி வெளிவந்தது. அதில்,

“நம்மால் என்றும் அண்ணன் என்று பாசத்தோடும், வாஞ்சையோடும் அழைக்கப்படும் சுயமரியாதை வீரர் மன்னை அவர்கள் மறைவுற்றார் என்ற செய்தி நேற்று கரூரில் கிடைத்த பேரிடி போன்ற துயரச் செய்தி ஆகும்.

அய்யாவிடம் சேர்ந்த அந்த, அடிநாள் தொட்டு வைரம் பாய்ந்த நெஞ்சுரம் கொண்ட கொள்கை மாவீரர் அவர். அண்ணாவின் அருமை தம்பிகளில் முன்னவர், எந்த மேடையானாலும் சுயமரியாதை முழக்கம் செய்ய அந்த கொள்கை சிங்கம் தவறியதே கிடையாது, அந்த சுயமரியாதை கர்ச்சனையை இனி நாம் எப்போது கேட்கப் போறோம். அய்யகோ, கொண்ட கொள்கை, இணைந்த இயக்கம் இவைகளை கண் இமை போல் பாதுகாத்த கட்டுப்பாடு மிக்க, பகுத்தறிவு ராணுவ வீரர் அவர். குள்ளநரி செயல் செய்யும் கூட்டத்தின் கூற்றம் அந்த கொள்கை மாவீரன்!

திருச்சியில் அன்று அன்பிலை இழந்தோம்; தஞ்சையில் இன்று மன்னையை இழந்தோம்; சுயமரியாதை இயக்கத்தின் இருபெரும் தூண்கள் இப்படியா சாய்வது! கொடுமை! கொடுமையிலும் கொடுமை.

அமைச்சர் பதவியில் இருந்த போதும் அதை ஒரு சுமையாக கருதுபவரே தவிர அதை ஓர்?

அணிமணியாக கருதி மகிழ்ந்தவர் அல்ல. சென்ற முறை அவர் மருத்துவமனைக்குப் புறப்பட முனைந்த தருணத்தில் அவர் என்னிடம் தந்த ஒரு கடிதம் அவரது கொள்கை உள்ளத்திற்கோர் கருவூலம்.

வாழ்நாள் எல்லாம் தொண்டு வாழ்வு அவரது வாழ்வு! அந்த மாவீரனுக்கு நமது வீர வணக்கம்! அவருக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் 3 நாள் துக்கம் அனுசரிக்கும். கழக கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கும்.

அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், கொள்கைக் குடும்பமாம் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் நமது ஆழ்ந்த இரங்கலை’’ தெரிவித்துச் செய்தி வெளியிட்டேன்.

21.10.1993 புதுவைப் பல்கலைக் கழகத்தில் பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை சார்பாக நடந்த சொற்பொழிவில் பேச பல்கலைக் கழக துணைவேந்தர் அழைத்ததன் பேரில் சென்றேன். அங்கு பேசுகையில் “நான் சிறுவனாக இருந்த போது இதே புதுவை மண்ணிலே தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களெல்லாம் இந்த சமூக நீதி கருத்துகளை, – பகுத்தறிவு கருத்துகளை எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும். எல்லோரும் படிக்க வேண்டும், எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய கருத்துகளை எடுத்துச் சொல்லுகின்ற சுயமரியாதை இயக்க விதையை இங்கே தூவுகிறபோது எப்படிப்பட்ட எதிர்ப்பெல்லாம் இருந்தது, இன்றைக்கு தந்தை பெரியார் உருவத்தால் இல்லை, பேரறிஞர் அண்ணா உருவத்தால் இல்லை, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் உருவத்தால் இல்லை. ஆனால், அவர்களெல்லாம் உருவத்தால் இல்லையென்றாலும் கூட அவர்கள் ஊட்டிய உணர்வு என்பது இருக்கிறதே, அது ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி நிலைத்து நிற்கிறது’’ என்பனப் போன்ற பல கருத்துகளை மாணவர்களுக்கு எடுத்து கூறினேன்.

பெருந்தொண்டர் மானமிகு மயிலை திரு.சாமிநாதன் அவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தும் ஆசிரியர்

31.10.1993 தந்தை பெரியார் பெருந்தொண்டரான மானமிகு மயிலை திரு.சாமிநாதன் அவர்கள் தமது 90ஆவது வயதில், மயிலை காரணீஸ்வரர் கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் என்பதை அறிந்து வருந்தினேன்.

அவரது இல்லம் சென்று, அவர் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினேன். தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் எம்.கே.காளத்தி, மாவட்டப் பொருளாளர் டி.ஆர்.சேதுராமன் மற்றும் பல கருஞ்சட்டை தோழர்களும் உடன் வந்து மரியாதை செலுத்தினர்.

மறைந்த பெரியவர் சாமிநாதன் சுயமரியாதை வீரர். தான் மறைந்தால் கருப்புச் சட்டை போட்டு, எவ்வித சடங்கும் செய்யாமல் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியதை, என்னிடம் அவரது துணைவியார், பிள்ளைகள், பேரன்கள் கூறி அழுதனர். அனைவருக்கும் நான் ஆறுதல் கூறினேன். மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களுக்கு நெருங்கிய நண்பர்.

அவரது கடையில் ‘விடுதலை’ இதழ் விற்பனை செய்வதில் தீவிர ஆர்வம் காட்டுபவர் சுயமரியாதை திருமணங்களை தனது இல்லத்தில் நடத்தி வைத்தவர். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், நம்மிடம் மிகுந்த பாசம் கொண்டவர்.

மணமக்கள் தி.பார்த்திபன் – மகாலட்சுமி
வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவை
தலைமையேற்று நடத்தும் ஆசிரியர்

3.11.1993 திண்டுக்கல் அறிவுப்பண்ணை புத்தக மய்ய பொறுப்பாளர் க.வே.தில்லிஇராசன் – சரஸ்வதி ஆகியோரின் மகன் தி.பார்த்திபனுக்கும், விருதுநகர் ச.குமாரசாமி – பிரேமா ஆகியோரின் மகள் மகாலட்சுமிக்கும் வாழ்க்கை இணை நல ஒப்பந்த உறுதி மொழி கூறச் செய்து திருமணத்தை நடத்தி வைத்தேன்.

நிகழ்ச்சிக்கு விழுப்புரம் எண்ணெய் ஆலை அதிபர் எஸ்.ரெங்கசாமி முன்னிலை வகித்தார். மணமக்களை வாழ்த்தி மாவட்ட தலைவர் மூத்த வழக்கறிஞர் கொ.சுப்பிரமணியம் உரையாற்றினார். முடிவில் மணமகன் தி.பார்த்திபன் நன்றி கூறினார்.

 கி.தண்டபாணி

மாவட்ட பகுத்தறிவாளர் கழக ஆசிரியரணி தலைவர் புலவர் வீரகலாநிதி மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கழக பொறுப்பாளர்கள் வந்திருந்து மணவிழாவினை சிறப்பித்தனர்.

6.11.1993 எனது இளைய அண்ணனும் கடலூர் நகர தி.மு.க. அவைத் தலைவரும் ‘திருசக்தி டிரான்ஸ்போர்ட்’ உரிமையாளருமான கி.தண்டபாணி அவர்கள் 7.11.1993 காலை 11 மணியளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் தமது 69ஆவது வயதில் மறைவுற்றார். என்னை ஒரு தந்தை போல் காப்பாற்றியவர்.

கடலூர் முதுநகரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஏராளமானோர் மலர் வளையம் வைத்து மரியாதைச் செலுத்தினர். திராவிடர் கழகத் தோழர்கள், தி.மு.க. தோழர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

7.11.1993 ஞாயிறு காலை 9.30 மணிக்கு இறுதி ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்திலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தி.மு.க. தலைவர் கலைஞர், தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், வாழப்பாடி இராமமூர்த்தி, அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன், வி.வி.சாமிநாதன் உட்பட பல தலைவர்கள் இரங்கல் செய்தி அனுப்பியிருந்தனர்.

கிருபானந்த வாரியார்

8.11.1993 திருமுருக கிருபானந்த வாரியார் உடல் நலம் பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்று நலம்பெற்றுத் திரும்புகையில், விமானத்திலேயே எதிர்பாராதவிதமாக மறைவுற்ற செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன். “வாரியார் அவர்களது மதவாத, வைதீகக் கொள்கைகளில் நாமும் அவரும் இருவேறு துருவங்கள்தான் என்றாலும், மனித நேய அடிப்படையிலும், தமிழ் இனவுணர்வு கண்ணோட்டத்திலும் அவரை மதித்தவர்கள் நாம். என ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டேன்.’’ வாரியார் அவர்கள் சொல் திறத்தாலும், விரிவுரையாற்றுவதில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றவர்.

 

15.11.93 பேரறிஞர் அண்ணாவின் பேத்தியும், டாக்டர் சி.என்.ஏ. பரிமளம் அவர்களது புதல்வியுமான செல்வி அ.ப. இளவரசி எம்.பி.இ., திருப்பூர் எம்.ஏ. முத்து செண்பகனார் அவர்களின் பேரன், திரு. யுவராஜ், எம்.எம். பாலசுப்பிரமணியம் அவர்களின் மகன் செல்வன் எம்.எம். முத்துக்குமார் பி.பி.ஏ., ஆகியோரது வாழ்க்கை துணை நல ஒப்பந்த விழா சென்னை ராஜா முத்தையா மன்றத்தில் சிறப்புடன் நடைபெற்றது.

முதலாவதாக டாக்டர் சி.என்.ஏ. பரிமளம்      வரவேற்புரையாற்றினார். மணவிழாவிற்கு, ‘முத்தமிழ்க் காவலர்’ கி.ஆ.பெ. விசுவநாதம் தலைமை வகித்தார். மண மக்கள் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த உறுதி மொழியினை ஏற்கச் செய்து, மாலைகள் மாற்றிக் கொள்ள வைத்து, மணவிழாவினை ‘முத்தமிழ்க் காவலர்’ நடத்தி வைத்தார்.

மணமக்களுக்கு, தமிழக ஆளுநர் மாண்புமிகு டாக்டர் எம். சென்னா ரெட்டி, பரிசுப் பொருள் வழங்கி, மலர்ச் செண்டு கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது வெளியூர் சுற்று பயணத்தில் நான் இருந்தால், மணமக்களை வாழ்த்தி வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தேன். விழாவில் தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர். க.அன்பழகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

18.12.93 – கன்னியாகுமரி மாவட்டத்தை கேரள மாநிலத்துடன் இணைக்க ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டேன்.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கான உரிய முக்கியத்துவம் தமிழ்நாடு அரசால் போதிய அளவுக்குத் தரப்படவில்லை என்ற மனக்குறை குமரிமாவட்ட மக்களுக்கு நிறைய உள்ளது என்பதை மறைத்துப் பயனில்லை. அதற்கு உரிய வகையில் தகுந்த பரிகாரம் தேடவேண்டியது தமிழ்நாடு அரசின் கடமையாகும்.

குமரிமாவட்டம் கேரளத் தலைநகரமான திருவனந்தபுரத்திற்கு சுமார் 50 மைல் அருகில் உள்ள ஒரு பகுதி என்பதால் அது கேரளத்துடன் சேர்க்கப்பட வேண்டும் என்று ‘புதுக்கரடியை’ கேரளத்து ‘நாயர் சர்வீஸ் சொசைட்டி’ (NSS) யினர் (இது ஒரு மேல் சாதியினர் அமைப்பாகும்) தீர்மானம் போட்டு பொதுக் கருத்தினை அதற்கு ஆதரவாக உருவாக்க முனைந்திருப்பது குறித்து, தமிழ்நாட்டவர்கள் கைகட்டி, வாய்பொத்தி, வாளா இருப்பது கூடாது, கூடவே கூடாது. மத்திய அரசில் கேரள அதிகாரவர்க்கத்தின் செல்வாக்கு மிகவும் அதிகம். அதைப் பயன்படுத்தியும், அதிருப்தியுற்ற குமரி வாழ் மக்களில் ஒரு சிலரை தங்கள் கருத்துக்கு ஆதரவாகப் பேச வைக்கவும்கூட அவர்கள் முயற்சித்தும் தாங்கள் நினைப்பதைச் சாதிக்க முயலக்கூடும்.

இதுபற்றி தமிழர் தேசியக் கட்சியின் தலைவர் சகோதரர் பழ. நெடுமாறன் தலைமையில் கூடிய தமிழ் இன உணர்வாளர்களது ஒட்டுமொத்தக் கருத்தினை, ஏதோ ஒரு சிலரது கருத்து என்று அரசு அலட்சியப்படுத்திவிட முடியாது; கூடாது!

தமிழ்நாட்டின் பல முக்கிய அரசியல் கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளில் தங்கள் கவனங்களைச் செலுத்திக் கொண்டிருப்பதால், இந்த முயற்சி பற்றி அவர்கள் அறிய, உடன் தீர்மானம் போட, கண்டித்துக் குரல் எழுப்பப் போதிய அவகாசம் இல்லாமல் இதற்கு முன் இருந்திருக்கலாம் என்றாலும் இப்பிரச்சினையில் உடனடியாக கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசர அவசியமாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தேன்.

25.12.93 பெங்களூரில் இந்திய தொல்குடிகளின் முதல் அகில இந்திய மாநாட்டின் கருத்தரங்கைத் துவங்கி வைத்து தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழியிலும் உரையாற்றினேன். அதில், “தொல்குடிகள் என்றாலே – இந்த நாட்டில் திராவிடர்கள் தான். அய்.நா. இந்த ஆண்டை தொல்குடிகள் ஆண்டுகளாக அறிவித்திருக்கிறது. இந்திய நாட்டினுடைய தொல்குடிகள் என்ற நிலையில் யார் இருக்கிறார்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களை ஷெட்யூல்டு இனமக்களாக உள்ள ஆரியர்கள் அல்லாத மக்கள்தான் இந்த நாட்டின் மண்ணின் மைந்தர்கள். உழைக்கக் கூடியவர்கள். கிராமத்திற்குப் போனாலும் மண்ணில் உழைக்கக் கூடிய அத்தனை பணிகளையும் செய்யக்கூடியவர்களாக நாமாகவே இருக்கிறோம். ஆரியர்கள் பூர்வீகக் குடிகள் என்று இப்போது வரலாற்றையே திரிபுவாதம் செய்து, சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்திய தொல்குடிகளின் அகில இந்திய மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆசிரியர் மற்றும் பி.வேணுகோபாலை வரவேற்கும் விழாக்குழுவினர்

உத்திரபிரதேசத்திலே, மத்திய பிரதேசத்திலே, இராஜஸ்தானத்திலே தொல்குடி மக்கள் வரலாற்றை உணர்ந்திருக்கிற காரணத்தால்தான் மீண்டும்  ஆரியப் பார்ப்பனர்கள் ஆட்சிக்கு வரமுடியாது என்று தடுத்து, நமக்கெல்லாம் உணர்த்தியிருக்கிறார்கள்  தொல்குடி மக்கள் எழுந்து இருக்கிறார்கள் எழுந்து நிற்கிறார்கள். எழுச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம்தான் அந்த மூன்று மாநிலத்திலும் இப்பொழுது நடந்த தேர்தலில் வந்த முடிவுகள்  எனவே, பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் எந்த சமூகநீதிக்காக குரல் கொடுத்தார்களோ அந்த சமூகநீதி கட்சி கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டு அங்கே வந்திருக்கிறது என்றால் இப்பொழுதுதான் விழிப்புணர்ச்சி வந்திருக்கிறது. ஆனால், உலகத்தில் அய்.நா. மன்றத்திலே இந்த 1993-ஆம் ஆண்டு தொல்குடி மக்களின் ஆண்டு என்று அறிவித்தார்கள். ஆனால், அந்த ஆண்டை யார் சிறப்பாக கொண்டாடியிருக்க வேண்டும்? இந்த நாட்டில் உடல் ஊனமுற்றோர் ஆண்டு கொண்டாடுகிறார்கள்.

ஆனால், (Socially Handicappe) ஆக இருக்கிற சமூக நிலையில் ஊனமுற்று இருப்பவர்களைப் பற்றி கவலைப்பட்டதே இல்லை. வெகுப் பெரும்பான்மையோர் தமது உரிமைகளை உணர ஆரம்பித்தால் வெகுச் சிறுபான்மையோராக இருக்கிற பார்ப்பனர்கள் தமது மூட்டையை கட்டிவிடும் நிலை ஏற்படும் என்பதால்தான், ஆதிக்கவாதிகள் எல்லோருமே இதை அலட்சியப்படுத்துகிறார்கள்.

                இந்த மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் எல்லாம் இந்து மதக் கொடுமை காரணமாக மதம் மாற்றம் பெற்றார்கள். டில்லியிலிருந்து வருகிற ஆங்கிலப் பத்திரிகையில் 25,000 மக்கள் இந்து மதத்தைவிட்டு புத்த மதத்திற்கு போனார்கள். மற்றொரு பத்திரிகையில் 10,000 மக்கள் என்றும், இன்னும் சில பத்திரிகையில் 1000 மக்கள் என்றும், இன்னும் சில பத்திரிகையில் 500 என்றும் போடுகிறார்கள். ஏனென்றால், இவர்களுக்கு விழிப்புணர்வு வந்து மதம் மாறினார்கள் என்பது மற்றவர்களுக்கு தெரியக்கூடாது என்பதால்தான் அப்படி பத்திரிகை ஆதிக்கம் அவர்களிடத்தில் இருக்கிறது!

நம்முடைய கைகளிலே, கால்களிலே, மூளையிலே போடப்பட்ட விலங்குகள், பாபா சாகேப் அம்பேத்கர் என்ற கருவியாலும், தந்தை பெரியார் என்ற கருவியாலும் சுக்கு நூறாக உடைத்து விட்டது என்பதற்கு அடையாளம்தான் இந்த மாநாடு (பலத்த கைதட்டல்). எனவே, இந்த இரண்டு கருவிகளைக் கொண்டு நமக்கு ஏற்பட்ட தடைகளை உடைப்போம். அதற்கு நாம் எல்லோரும் இணைந்து தோளோடு தோள் நின்று கைகொடுக்க வேண்டும். பார்ப்பனர்கள் எந்த நிலையாலும் நம்மை பிரித்தாளவேண்டும் என்று நினைத்தாலும் பிரித்தாள முடியாது என்பதற்கு அடையாளமாகத் தான் இந்த மாநாடில் பிற்படுத்தப்பட்ட மக்கள், ஷெட்டியூல்டு இன மக்கள் எல்லோரும் தொல்குடி மக்களே என்ற உணர்வோடு திரண்டிருக்கிறார்கள். நம்முடைய உரிமைகளுக்காக நாங்கள் எதையும் இழக்கத் தயாராக இருக்கிறோம். தயாராவோம். அதே நேரத்தில் நாம் யாரிடத்திலும் சலுகை கேட்கவில்லை. பிச்சை கேட்கவில்லை. அதை மறந்துவிடாதீர்கள். நம்முடைய உரிமையை நாம் வலியுறுத்தத் தொடங்கி இருக்கிறோம். இதுவரை மறந்திருந்தோம்.

இப்பொழுது நினைவுப்படுத்துகிறோம். நாம் எழுந்து நின்றால் நிச்சயமாக நம்முடைய நிலை உயர்ந்து இருக்கும். புலி ஒரு காலத்தில் அமைதியாக இருக்கும். புலி பாய ஆரம்பித்தால் என்ன ஆகுமோ அப்படித்தான் தொல்குடி மக்கள் இன்று புலிபோல் எழுந்து நிற்க ஆரம்பித்துவிட்டார்கள். அதற்கு முன்னால் எத்தனை முயற்சிகள் செய்தாலும் தடுக்க முடியாது என்ற உணர்வை நாம் பெறுவோம்.’’ என்று பல கருத்துகளை கூறியிருந்தேன்.

தொல்குடிகள் மாநாட்டில் எழுப்பப்பட்ட முழக்கங்கள்!

பார்ப்பனர்கள் இந்தியர்கள் அல்ல.

உன்னை தொல்குடி என்று அழைப்பதில் பெருமை கொள்

தொல்குடி மக்கள் இந்துக்கள் அல்ல வரலாற்றை மறந்தவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது.

அனைத்து அரசியல் புரட்சிகளுக்கும் சமூகப் பண்பாட்டு புரட்சிகளே முன்னோடிகளாக இருந்திருக்கின்றன.

புத்த மதத்தவருக்கும், பார்ப்பனியத்திற்கும் இடையே உருவான மோதலே இந்திய வரலாறு.

இசுலாமியர், கிருத்துவர், சீக்கியார், புத்த மதத்தவர் ஆகியோர் மதம் மாறிய தொல்குடியினரே. தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்களே இந்தியாவின் ஆதி தொல்குடிகள்.

போன்ற முழக்கங்கள் உணர்வு பூர்வமாக எழுப்பப்பட்டன.

27.12.93 சென்னை, சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில், தந்தை பெரியார் முழு உருவச் சிலையை நான் வாழ்த்தொலியுடன் பலத்த கைதட்டலோடு பொத்தானை அழுத்தி திறந்துவைத்தேன். சிலை திறப்பு விழாவிற்கு சேத்துப்பட்டு திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் ச. தனசேகரன் தலைமை வகித்து உரையாற்றினார். சி. சிகாமணி வரவேற்புரை ஆற்றினார். தென் சென்னை மாவட்ட கழக தலைவர் எம்.பி. பாலு, மாவட்ட செயலாளர் எம்.கே. காளத்தி, மாவட்ட அமைப்பாளர்

எம்.ஏ. கிரிதரன் மாவட்ட இளைஞரணி தலைவர் மு.பாலகுரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்.

69% இடஒதுக்கீட்டை உறுதிச் செய்ய அரசியல் சட்டம் 31(சி) விதியைப் பயன்படுத்தி 9ஆவது செட்டியூலில் இடம் பெறச் செய்ய வேண்டும் அதற்கான ஒரு தனிச் சட்டத்தைச் சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்ற வேண்டும் இதை தமிழக முதல்வர் செய்து வரலாற்றச் சாதனையைப் படைத்து, சமூக நீதி வரலாற்றினுள் நிரந்தர இடத்தைப் பெற வேண்டும் என நாம் கேட்டுக் கொண்டோம்.

ந்நூ.ந்நூபுயூடுஷிட்

30.12.1993 தமிழக சட்ட மன்றத்தில்  தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான 69 சதவீத இடஒதுக்கீட்டைப் பாதுகாக்க – தமிழ்நாடு அரசே தனிச்சட்டம் இயற்ற முன்வந்துள்ளதைத் தொடர்ந்து அதற்கான மசோதாவை தமிழக முதல்வர் சட்டசபையில் அறிமுகம் செய்தார்.

 காலை 10 மணிக்கு சட்டப் பேரவை கூடியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் தனிச் சட்டத்துக்கான மசோதாவை சட்டப் பேரவையில் அறிமுகம் செய்தார்.(இது ஒரு தமிழக வரலாற்றுப் பொன்னாள்.)

மசோதா அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவு – ஆரவாரத்துக்கிடையே முதலமைச்சர் அறிமுகப்படுததினார். மசோதாவை அறிமுகப்படுத்துவதற்கு அவையில் ஓர் உறுப்பினர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை! இந்த மசோதா மீது நாளை விவாதம் நடைபெறும். சட்டப் பேரவையில் மசோதா நிறைவேறிய பிறகு – குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அவர் கையெழுத்திட்டவுடன் அது சட்டமாகும். நகல் மசோதாவின் முன்னுரையில் “இந்தச் சட்டமானது அரசமைப்பின் IV—ம் பகுதியில், அதிலும் குறிப்பாக 38ஆம் உறுப்பிலும், 34ஆம் உறுப்பின் (b) மற்றும் (c) எனும் கூறுகளிலும், மற்றம் 69ம் உறுப்பிலும் விதிக்கப்பட்டுள்ள கோட்பாடுகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்கிற வகையில், அரசின் கொள்கைகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காக இயற்றப்படுகிறது என்று இதன் மூலம் விளம்பப்படுகிறது’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மசோதாவை முன்மொழிந்து தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் பேசியதாவது:

1. “பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஷெட்யூல்டு ஜாதியினர் மற்றும் ஷெட்யூல்டு பழங்குடியினர் ஆகியோருக்குக் கல்வி நிலையங்களில் இடங்களை ஒதுக்குங்கள் மற்றும் அரசுப் பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளை ஒதுக்கீடு செய்தல் என்னும் கொள்கையானது. 1921ஆம் ஆண்டிலிருந்தே தமிழ்நாட்டில் நீண்டதொரு வரலாற்றினைப் பெற்று வந்துள்ளது. இந்த இடஒதுக்கீட்டின் அளவானது பெரும்பான்மை மக்களின் தேவைகளுக்கிணங்கிய வகையில், நிலையாக மேல் நோக்கி வளர்த்துவந்து, தற்போது அது 69 சதவீதம் என்னும் அளவினை எட்டியுள்ளது.

2. உச்சநீதிமன்றமானது, இந்திரா சஹானி-க்கும், இந்திய அரசுக்குமிடையேயான (AIR 1993 5C பக்கம் 477) வழக்கில், அரசமைப்புச் சட்த்தின் 14(4) எனும் உறுப்பினர் படியான மொத்த இடஒதுக்கீடுகள், 50 சதவிதத்திற்கு மேற்படுதல் ஆகாது என்று கூறி 24.11.1982 அன்று தன் தீர்ப்புரையினை வழங்கியது. நடப்புக் கல்வியாண்டிற்குக் கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவது குறித்து பிரச்சினை சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னர் வந்தபோது, இதுநாள் வரையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த தன் இடஒதுக்கீட்டுக் கொள்கையினை தமிழ்நாடு அரசு நடப்புக் கல்வி ஆண்டின்போது தொடர்ந்து கடைப்பிடித்து வரலாம் என்றும், அந்த இடஒதுக்கீட்டு அளவானது அடுத்த

1994-95ஆம் கல்வி ஆண்டின்போது, தற்போதுள்ளதைக் குறைத்து 50 சதவீதத்திற்குக் கொண்டு வரப்படுதல் வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தொடர்ந்து முன்னேற்றத்தை உறுதி செய்ய மாநில அரசின் தற்போதைய இடஒதுக்கீட்டுக் கொள்கையானது மீண்டும் உறுதிப்படுத்தப்படுதல் வேண்டும் என்பதற்காக வேண்டி, தமிழ்நாடு அரசானது, சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்சொன்ன தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தனி அனுமதி மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது. இந்திய உச்சநீதிமன்றமானது, கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதைப் பொறுத்த அளவில் இட ஒதுக்கீடானது 80 சதவிதத்திற்கு மேற்படுதல் கூடாது என்பதை மீண்டும் வலியுறுத்தி இடைக்கால ஆணையொன்றைப் பிறப்பித்துள்ளது.

69% இடஒதுக்கீட்டு தீர்மானம் நிறைவேற்றிய பின் முதல்வரை சந்தித்து நன்றி தெரிவிக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர்

3. இம்மாநிலத்திலுள்ள மொத்த மக்கள் தொகையில் ஏறத்தாழ 50 சதவீத அளவினர் குடிமக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் மற்றும் ஷெட்யூல்டு சாதியும், ஷெட்யூல்டு பழங்குடிகளையும் சேர்ந்தவர்களாக இருக்கின்ற நிலையில், அரசுப் பணிகளிலும், கல்வி நிலையங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவதிலும், 69 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கை ஒன்றுதான், தமிழ்நாட்டிலுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் தொடர்ந்த முன்னேற்றத்தை உறுதி செய்யும் என்பதோடு, மாறி வருகின்ற சூழ்நிலைகளுக்கும் அது வகை செய்யும் என்பதால், மேற்சொன்ன இடஒதுக்கீட்டுக் கொள்கையினைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வர இயலும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தக்க திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக மய்ய அரசு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டு, 1993ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 9ஆம் நாளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

4. தமிழ்நாட்டு மக்களில் மிகப் பெரும்பான்மையினர் உள்ளுணர்வுகளைப் பிரதிபலிக்கின்ற வகையில், 1993ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 24ஆம் நாளில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டமானது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் 69 சதவீத இடஒதுக்கீட்டினைத் தொடர்ந்து நிறைவேற்றுவதை உறுதி செய்வதில் எந்தவிதமான அய்யப்பாடோ, காலத் தாழ்வோ இருத்தல் கூடாது என்பதை வலியுறுத்தியது. அந்தக் கூட்டத்தில், அரசமைப்புச் சட்டத் திருத்தமொன்று கொண்டு வரப்பட வேண்டும், அல்லது இம்மாநில அரசு தனிச்சட்டமொன்றை இயற்றுதல் வேண்டுமென்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மற்றும் சமூக அமைப்புகளும் இம்மாநில அரசின் தற்போதைய இடஒதுக்கீட்டுக் கொள்கையினைத் தொடர்ந்து செயற்படுத்துவதற்காக உரிய நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளுமாறு மாநில அரசினைக் கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கிணங்கிய வகையில், சமூக நீதி என்னும் குறிக்கோளை எய்துவதற்காக வேண்டி, தமிழ்நாட்டு மக்களின் மிகப் பெரும்பான்மையினரின் பெருவிழைவிற்குச் செயல்வடிவம் கொடுப்பதற்காகத் தனிச் சட்டமொன்றை ஒரு முன் தேதியிலிருந்தே நடைமுறைக்கு வருகின்ற வகையிலும், ஏற்கெனவே இது குறித்துச் செய்யப்பட்ட செயல்களையும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் செல்லத் தக்கனவாக்குவதற்குத் தேவையான வகை முறைகளுடன் சேர்த்தும், கொண்டு வருவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

4. இச்சட்ட முன்வடிவு, மேற்சொன்ன முடிவிற்குச் செயல்வடிவம் கொடுக்க விழைகின்றது.’’

இவ்வாறு முதலமைச்சர் குறிப்பிட்டார். இந்த மசோதாவை அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் ஆரவாரத்துடன் கைத்தட்டி வரவேற்றனர்.

அன்று சட்டமன்ற கூட்டம் முடிந்த பின்பு, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தேன்.

நான் “தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து நீடிக்க வகை செய்யும் மசோதாவை தமிழக சட்டமன்றத்தில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்ததற்காக முதல்வரைப் பாராட்டி நன்றி’’ தெரிவித்தேன்.

தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள் நமது வேண்டுகோளை, வழிகாட்டுதலை ஏற்று சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினார். இந்த தீர்மான நிறைவேற்றம் இந்தியாவிற்கே வழிகாட்டுவதாய், ஆந்திர ஒடுக்கப்பட்டோர் அமைப்பின் தலைவர் 90 வயது நிரம்பிய சுதந்திரப்போராட்ட வீரர் சர்தார் கோது லட்சண்ணா எனக்குத் தந்தி அனுப்பி பாராட்டினார்.

கழகத்தின் இடைவிடாத போராட்டத்திற்கும், முயற்சிக்கும் இது ஒரு மாபெரும் வெற்றியாகும். சமூக நீதிக்குக் கிடைத்த அசைக்க முடியாத நிரந்தர பாதுகாப்புக்கு அடிப்படையாகவும் இது அமைந்தது. கழகம் தந்தை பெரியாருக்குப்பிறகு இப்படி ஒரு வரலாறு படைத்தது.

  (நினைவுகள் நீளும்…)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *