காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாடு அக்டோபர் 28ஆம் தேதி முதல் 31 வரை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, இலங்கை உள்பட 54 நாடுகள் கலந்து கொண்ட மாநாட்டினை இங்கிலாந்து மகாராணி எலிசபெத் தொடங்கி வைத்தார்.
இதில், நாடு கடந்த தமிழ் ஈழப் பிரதிநிதிகளின் சார்பில் கலந்து கொண்ட அதன் வெளியுறவுத் துறைத் துணை அமைச்சர் மாணிக்கவாசகர் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை காமன்வெல்த் கூட்டமைப்பின் சார்பில் விசாரிக்க வேண்டும் என்று கூறியதாகவும், போர்க்குற்ற விசாரணைக்காக காமன்வெல்த் நாடுகளின் மனித உரிமை ஆணையத்தை நிறுவ வேண்டும் என்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், ஆணையம் அமைப்பதற்கு இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இலங்கை எதிர்ப்பது ஆச்சரியமல்ல, காந்தியடிகள் இந்தியாவிலும், தென்னாப்பிரிக்காவிலும் எந்த மனித உரிமைகளுக்காகப் போராடினாரோ அவர் சம்பந்தப்பட்ட நாடுகளே எதிர்த்தது எவரும் எதிர்பார்க்காத, வருந்தக்கூடிய ஒன்று என்றும் கூறியுள்ளார்.
ராஜபக்சேவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் கிரீன் கட்சி ஒரு போராட்டம் நடத்தியது.
போர்க்குற்ற வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவும் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் பல நாடுகளிலுள்ள நீதிமன்றங்கள் ராஜபக்சேவுக்கு சம்மன்கள் அனுப்பிவரும் நிலையில், அந்த நாடுகளுக்குச் சென்றால் கைதாவோம் என்ற பயத்தில்தான் பல நாடுகளுக்குச் செல்வதை ராஜபக்சே தவிர்த்து வருவதாக மாநாட்டில் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய மக்கள் தெரிவிக்கின்றர்.