திராவிடர் கழக வழக்குரைஞ ரணியினரிடையே 26.4.2020 அன்று மாலை காணொலி வாயிலாக கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றார்.
அதில் உரையாற்றிய ஆசிரியர் அவர்கள், காணொலி நிகழ்வை ஏற்படுத்தித் தந்த வழக்குரைஞர் வீரசேகரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்த, ஆசிரியர் மருத்துவர்களும் அரசும் அறிவுறுத்தக்கூடிய என்ற பதத்தை தமிழில் “சமூக இடைவெளி’’ என பகுத்தறிவாளர் – ஜாதி ஒழிப்புக்காரர்களாகிய நாம் கூறுவதை தவிர்த்து இனி “தனி நபர் இடைவெளி’’ என்றே கூறுவோம் என அறிவுறுத்தினார்.
அடுத்ததாக, இந்த நெருக்கடியான காலகட்டத்தை பயன்படுத்திக்கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள காலி நீதிபதி பணியிடங்களுக்கு பார்ப்பனர்களையே பரிந்துரைக்க மத்திய அரசிலிருந்து ஓர் உத்தரவு வந்திருப்பதாகவும், தற்பொழுதைய நிலவரப்படியே என்றைக்கும் இல்லாத எண்ணிக்கையில் 10 பார்ப்பனர்கள் நீதிபதிகளாக பதவி வகித்து வருவதாகவும் அவர்களில் பலர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு நடத்திய “ஷாகா’’ நிகழ்ச்சிகளில் அரைக்கால் சட்டையுடன் பங்கேற்றவர்களாவர் என்ற செய்தியையும் கூறினார். ஏபிவிபி அமைப்பை சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் போன்ற தகவல் வருவதாகவும் கூறுகிறீர்கள். எனவே, நீதிபதி, அரசு வழக்குரைஞர் பணியிடங்களில் பெருமளவில் பார்ப்பனர்களை உள்நுழைத்து அனைத்து தரப்பு மக்களுக்கும் உரித்தான அப்பணியிடங்களை குறிப்பிட்ட ஒரு கட்சி, அமைப்பு, பிரிவினருக்கு என தாரை வார்க்க மேற்கொள்ளப்படும் அரசமைப்புச் சட்டத்திற்கு – வெளிப்படைத் தன்மைக்கு எதிரான முயற்சியை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றிட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உறுதிசெய்யப்பட்டிருக்கும் உரிமையான சமூக நீதி என்பதற்கு எதிரான வகையில் பார்ப்பனர்கள் தங்கள் விகிதாசாரத்தைக்காட்டிலும் அதிகமாக நீதிபதி பணியிடங்களுக்கு நியமிக்கப்பட இருப்பது குறித்து ‘விடுதலை’யில் நாம் வெளியிட்டிருப்பதை சமூகநீதி பாதுகாக்கப்படுவதில் அக்கறையுள்ள அனைத்துக்கட்சி – பா.ஜ.க வைச் சேர்ந்தவர்களானாலும் சரி – வழக்கறிஞர்களிடம் சுட்டிக்காட்டி மேற்கொள்ளவிருக்கும் இச்செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து சமூகநீதி அடிப்படையிலேயே நீதிபதி பணியிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்ற தீர்மானத்தை அனைத்து ஊர் பார் அசோசியேஷன்களிலும் நிறைவேற்றி உச்சநீதிமன்றத்திற்கு அனுப்பவேண்டும் என்றார். அண்மைக்காலமாக நீதித்துறையானது சமூகநீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றை விடுத்து மனுதர்ம கோட்பாட்டை முன்மொழிவதாக அமைந்துள்ளதை உத்தரகாண்ட் மற்றும் முழுவதுமாக பழங்குடியின மக்கள் வசிக்கக்கூடிய கிராமத்தில் உள்ள பள்ளியில் வேறு யாரும் பணிசெய்ய வராத காரணத்தால் நூற்றுக்கு நூறு சதவிகித இட ஒதுக்கீட்டை (ஷி.ஜி) பிரிவினருக்கே அளித்திருந்த நிலை செல்லாது என்ற ஆந்திர உயர்நீதிமன்ற தீர்ப்புகள் வேதனையளிக்கக்கூடிய நிலையை சுட்டிக்காட்டி இந்திரா சகானி தீர்ப்பை படிக்க அறிவுறுத்தினார்.
சமூக நீதியை அடியோடு குழி பறித்து புதைக்கக்கூடிய செயலாக 9 நபர் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கக்கூடிய விஷயத்தை இரு நபர் நீதிபதிகளே அணுகக்கூடிய நிலை, 10 சதவிகித இட ஒதுக்கீட்டை செல்லாது என்றோ – விசாரணைக்கு விரைவாக உட்படுத்தாதது குறித்தெல்லாம் “சமூகநீதி நேற்று – இன்று – நாளை: நீதிப்போக்கு எப்படிப்பட்ட நீதிப்போக்கு?’’ என்ற தலைப்பில் கருத்தரங்குகளை ஆண்டு முழுவதும் மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையேனும் நடத்தவேண்டியதன் அவசியத்தை அறிவுறுத்தினார். அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படாத ‘கொலிஜியம்’ நடைமுறையை நீதிபதிகளே உருவாக்கியுள்ளதை நோக்குகையில், யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், அய்.எப்.எஸ் ஆகியவற்றில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு நடைமுறையை இந்தியன் ஜூடிசியல் சர்வீஸ் (IJS) என்பதாக ஒரு முறையை கொண்டுவந்தால் அதிலும் கட்டாயம் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இயக்கம் – கொள்கை தொடர்பான வழக்குத் தீர்ப்புகள் அடங்கிய புத்தகம் வெளிக்கொணர வேண்டும். எ.கா செண்பகம் துரைராஜன் வழக்கு, தெய்வானை ஆச்சி எதிர் சிதம்பரம் வழக்கு, சுயமரியாதை திருமணம் செல்லாது என்ற தீர்ப்பு – அய்ம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் கிஷன் கவுல் அடங்கிய அமர்வு செல்லும் என அளித்த தீர்ப்பு இட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் அடைந்த வெற்றி ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமைய வேண்டும் என தெரிவித்தார்.
கழக வழக்குரைஞர்கள் பெரியார் நூல்களை குறிப்பாக ‘நீதி கெட்டது யாரால்? – 2 பாகங்கள்’, நீதிமன்ற தீர்ப்புகளின்போது அய்யா அவர்கள் தீட்டிய அறிக்கைகள், கட்டுரைகள் ஆகியவற்றை படிக்கவும் – அதனடிப்படையில் கட்டுரைகள் எழுதுவதிலும் சு.குமாரதேவன் சாமி கைவல்யம் குறித்து அண்மையில் எழுதியது போன்று ஈடுபட கூறினார்.
‘மெக்காலே எழுதிய அய்.பி.சி (IPC) ஒன்றானாலும் அதை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதிய கருத்துகள் தோன்றும்‘ என தன் சீனியர் கூறுவதை கூறி அரசமைப்புச் சட்டத்தை மீண்டும் மீண்டும் படிக்கவும், பழைய தீர்ப்புகளுக்கு மாறான புதிய தீர்ப்புகளை படித்து அப்டேட் செய்துகொள்ளவும் அறிவுறுத்திய ஆசிரியர் அவர்கள், இன்றைய இக்கட்டான ஊரடங்கு காலகட்டத்தில் வசதி வாய்ப்புள்ளவர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள வசதியற்றவர்களுக்கு தேவையானவற்றை அறிந்து உதவிட வழக்குரைஞர் வீரசேகரன் ஒருங்கிணைப்பில் கழக ஒன்றிணைந்து தங்களால் இயன்ற அளவிற்கு 10 ஆயிரம், 5 ஆயிரம் என வழங்குமாறு கூறி தன் சார்பாக ரூ.10,000 வழங்கினார்.
கழக தொழிலாளர் அணியினருடன் கலந்துரையாடல்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ‘உலக தொழிலாளர்கள் தின’மான மே 1 அன்று கழகத் தொழிலாளர் அணியினருடன் காணொலி வாயிலாக சந்தித்தார்.
தந்தை பெரியார் அவர்கள் ரஷிய பயணம் மேற்கொள்வதற்கு முன்னரே சமதர்மம், பொதுவுடமைக் கொள்கைகள் குறித்த தனித்த பார்வை கொண்டிருந்ததாலேயே மார்க்ஸ் – ஏங்கல்ஸ் அறிக்கையை இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்து 1931 ஜனவரி 4 முதல் ‘குடிஅரசு’ இதழில் தொடர்ந்து வெளியிட்டார் என்பதனையும்; மே 1 ஆம் தேதியன்று மாவட்டந்தோறும் மே தினக் கூட்டங்களை நடத்துமாறு 1.5.1933 ஆம் ஆண்டிலேயே ‘குடிஅரசு’ இதழில் அறிக்கை வெளியிட்டதையும் நினைவுகூர்ந்த ஆசிரியர், பெண்களையும் “தோழர்” என முதலில் அழைத்தது சுயமரியாதை இயக்கம் தான் என்ற செய்தியையும் நினைவுகூர்ந்தார்.
இந்திய அளவில் மே 1 அன்று அரசு விடுமுறை தினமாக ‘சமூகநீதிக் காவலர்’ வி.பி சிங் தான் 1990 ஆம் ஆண்டு அறிவித்தார் என்றும், தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அதற்கு முன்னதாகவே அறிவித்ததோடு ‘மே தின பூங்கா’ என்பதையும் உருவாக்கினார் என்ற செய்தியையும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.
தொழிலாளர் பற்றிய தந்தை பெரியார் அவர்களின் சிந்தனைகளை எடுத்துக்கூறலானார். “எவன் ஒருவன் தன் வயிற்றுப் பிழைப்புக்காகத் தனது உழைப்பை மாற்றுப் பண்டமாகப் பிறருக்குக் கொடுக்கிறானோ அல்லது பிறர் இஷ்டப்படி நடக்கவேண்டியவனாகிறானோ அவன்தான் தொழிலாளி அல்லது வேலைக்காரன் ஆவான். எவனொருவன் உழைப்பை தன் இஷ்டமான விலைக்குப் பிரயோசனத்துக்கு மாற்றுப் பண்டமாக விலை பேசுகிறானோ அவன் முதலாளி அல்லது எஜமான் ஆவான். இவைதான் தொழிலாளி என்பதற்கும் முதலாளி என்பதற்கும் அடிப்படைக் கருத்துகளாகும். நம் கிளர்ச்சி வெறும் கூலிக்காக மட்டுமல்லாமல் உரிமைக்காக இருக்கவேண்டும். இதுதான் நம் சங்கத்தின் நோக்கம்’’
– ‘விடுதலை’ 20.9.1952
நம் நாட்டில் ஒரு காலத்தில் வர்ணம் – வர்க்கம் என்பவற்றிற்கிடையே முரண்பாடுகள் எழுந்திருக்கின்றன. அத்தகைய வர்ணத்தை வேதங்கள், ஸ்மிருதிகளில் உள்ளபடி இன்றைய நிலையில் காப்பாற்றி மேற்கொள்ள முடியாத நிலையில் ‘துக்ளக்‘ போன்ற கூட்டங்கள் வர்ணம் தொழில் அடிப்படையினாலானது அல்ல குணத்தின் அடிப்படையில் அமைவது என திரித்து கூற முற்படுகின்றனர். ஆனால், இவ்வாறான கூற்றுக்கு மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியே ‘எந்த வயதில் குணத்தை அறிந்து தொழிலை தொடங்குவது’ என்று அன்றே புரட்டுக்கு வேட்டு வைத்தார்.
திராவிடர் விவசாய சங்கத்தின் போராட்ட வரலாற்றுக் குறிப்பாக இலால்குடியில் நிகழ்ந்தவற்றை நினைவுகூர்ந்த ஆசிரியர், இலால்குடி பகுதியில் கூகூர் பரமசிவம் பிள்ளை, தாத்தாச்சாரியார் கொண்டையாம்பட்டி செட்டியார், மணக்கால் பாப்பம்மாள் ஆகியோரின் பண்ணைகளுக்குள்ளாகவே அனைத்து நிலங்களும் அடக்கம் என்ற நிலை – அவர்களின் செல்வாக்கால் இலால்குடிக்கு ஓர் இரயில் நிலையத்தையே கொண்டுவந்தனர். அத்தகைய பெரும் செல்வாக்கு பெற்ற அவர்கள் குறிப்பிட்ட ஒரு ஜாதிக்கார விவசாயிகளைக் கொண்டு தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை ஒடுக்கினர். அந்த சூழலில் தான் தந்தை பெரியார் அறிவுரைப்படி குடந்தை ஏ.எம் . ஜோசப் முன்னிலையில் திராவிடர் கழக விவசாய சங்கம் தொடங்கப்பட்டது.
“விளைச்சலில் பாதியை கொடுங்கள்’’ என்ற முழக்கத்தோடு தொடங்கிய போராட்டத்தின் வழியாக மக்களிடையே தந்தை பெரியார் கருத்துக்களை பிரச்சாரம் துண்டறிக்கை மூலமாக புகுத்தினர். ஒரு கட்டத்தில் ‘ஆண்டைகளிடம் இனி கெஞ்சுவதற்கில்லை பாதி விளைச்சலை வீட்டுக்கு கொண்டு செல்வோம்’ என்ற நிலையில் கொடிக்கால் விவசாயிகளைக் கொண்டு வன்முறையை கட்டவிழ்த்தனர். அதில் 20 விவசாயிகள் கொல்லப்பட்டனர் என்ற வரலாற்று செய்தியை கூறினார்.
திராவிடர் கழக மகளிரணி கலந்துரையாடல்
பெண்கள் என்றால் பிறவியிலேயே அடிமைகளாக, சம்பளம் வாங்காத வேலைக்காரியாக ஆண் எஜமானனுக்கு அடங்கி இருக்கவேண்டும் என போதிக்கும் மனுநீதி நிலையையும் அதைப்போல திராவிடர்கள் என்றாலே சூத்திரர்கள் – பிறவித் தொழிலாளர்கள் என்பதாக உள்ளதை கூறி,
மனுதர்மத்தில் பெண்கள் ஒருபோதும் சுயமாக வாழமுடியாது, கூடாது என்பதாக “பால்யத்தில் தகப்பன் ஆக்ஞையிலும்; யௌவனத்தில் கணவன் ஆக்ஞையிலும்; கணவன் இறந்த பின்பு பிள்ளைகள் ஆக்ஞையிலும்’’ இருக்க வலியுறுத்தும் (மனுதர்மம் அத்தியாயம் – 5, சுலோகம் – 148) என்பதையும் “கணவன் சொற்படி நடக்காதவள் உலகத்தாரால் நிந்திக்கப்பட்டு நரியாக பிறந்து பாவப் பிணியால் வருந்துவாள்’’ (மனுதர்மம் அத்தியாயம் – 9, சுலோகம் – 30) என்பதை விளக்கினார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தை உறுதிப்படுத்த வேண்டிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரெங்கநாத் மிஸ்ரா 8.11.2016 பிரம்மகுமாரிகள் மாநாட்டில், வீட்டு வேலைகளை நிர்வாகம் செய்வதில் திறமையான பெண்கள் அரசுப் பணிகளில் ஈடுபடுவதிலிருந்து விலகி ஆண்களோடு போட்டியிடுவதற்கு பதிலாக, வீட்டு நிர்வாகத்தை சிறப்பாக செய்வதில் ஈடுபடவேண்டும் என்று பேசியதை கண்டித்து காஞ்சி மடம் வரவிருந்தவருக்கு எதிராக திராவிடர் கழகம் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்ததும் தனது பயணத்தையே ரத்து செய்ததையும் நினைவுகூர்ந்தார்.
வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் குறைவானவர்கள் என்று பேசிய சிறைசென்ற மறைந்த காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதியும், ஆண்களைவிட பெண்கள் அதிகமாக சம்பாதிப்பதால் கணவன் பேச்சை மதிக்காமல் இருக்கின்றனர். அவர்களை விவாகரத்து செய்யவேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதையும் எடுத்துக்காட்டி அத்தகையவர்களை பேசவைப்பது மனுஸ்மிருதி தானே. அதனை நம் திராவிடர் கழக மகளிரே பல முறை எரித்திருக்கிறீர்களே என பேசினார்.
பின்னர், கரோனா ஊரடங்கால் நலிவுற்றிருக்கும் குடும்பங்களுக்கு இயக்க சார்பாக உதவிக்கரம் நீட்டவேண்டும் என்றும்; அனைவரும் இந்த காலத்தை பாதுகாப்பான முறையில் கடக்க வேண்டும் என அன்புடன் தெரிவித்துக்கொண்டார்.
திராவிடர் மாணவர் கழகம் உடனான கலந்துரையாடல்
தந்தை பெரியார் அவர்களும், திராவிடர் இயக்கமும் தனது மிக முக்கிய குறிக்கோளாக அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும் என்பதில் கல்வியைத் தான் முதன்மையாக கொண்டிருந்தனர். ஆரியப் பண்பாட்டு படையெடுப்பால் உலகில் வேறெங்கும் இல்லாத கொடுமையான வர்ணாசிரம தர்மம், ஜாதி – தீண்டாமை, பிறவி பேதம் ஆகியவற்றால் பலநூறு ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு அறியாமை இருளில் உழன்ற சமூகமாக இருந்துவந்தது. கல்வியை பார்ப்பனர்களுக்கு மட்டுமே உரித்தான உரிமையாக கூறும் மனுஸ்மிருதியை எதிர்த்து திராவிடர் இயக்க போராட்டக் களங்களை டாக்டர் டி.எம் நாயர், நடேசனார், சர். பிட்டி தியாகராயர், அதன் அடுத்தகட்டமாக தந்தை பெரியார் தலைமையில் பேரறிஞர் அண்ணா, எஸ்.முத்தையா (முதலியார்), பன்னீர் செல்வம், கலைஞர் மற்றும் பல்வேறு தோழர்கள், போராட்ட வீரர்கள் எதிர்த்தும் இன்றைக்கும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். அவ்வாறு கல்வி மறுக்கப்பட்டுவந்த சூழலை பலவாறு போராடி மீட்டுவந்துக்கொண்டிருந்த காலத்தில், சேலத்தில் 1944 ஆம் ஆண்டு திராவிடர் இயக்கம் தொடங்குவதற்கு முன்பாகவே 1943 ஆம் ஆண்டிலேயே குடந்தை அரசுக் கல்லூரியில் ஜாதி தீண்டாமையை கடைபிடிக்கும் விதமாக பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் என்பதாக தனித்தனி தண்ணீர் பானைகள் வைக்கப்பட்டதை எதிர்த்து உடைத்து தவமணிராசன், கருணானந்தம், செங்குட்டுவன் (பூண்டி கோபால்சாமி) ஆகிய மாணவர்களின் எதிர்ப்பால் – போராட்டத்தால் உருவாக்கப்பட்டது தான் திராவிட மாணவர் கழகம்.
அவ்வாறு பல்வேறு போராட்டக் களங்களை திராவிடர் இயக்க முன்னோடிகள் தந்தை பெரியார் – திராவிட ஆட்சிகள் வெற்றிகரமாக எதிர்கொண்டு பெற்ற வெற்றியை பறிக்கும் முயற்சிகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலை அறியமுடிகிறது. அவற்றை நாம் எதிர்கொள்ள என்றென்றும் ஆய்த்தமாக இருக்கவேண்டியது கட்டாயம் என அறிவுறுத்தினார்.
‘நீட்’ தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் – அதற்காக பயிற்சி பெறும் மாணவர்களில் பலருக்கு வேதியியல் தொடர்பான கேள்விகளுக்கு விடைகூற முடியாத நிலை குறித்து ‘ஜூனியர் விகடன்’ இதழ் வெளிக்கொணர்ந்திருக்கிறது. இவ்வாறு மாணவர்களுக்காக தொடர்ந்து தடை ஓட்டப் பந்தயத்தில் பல தடைகளை தாண்டி வரும் இயக்கமாக இருந்துவருகிறது.
இத்தகைய சமூகப் பார்வையை அன்றி அரசியல் பார்வையை தந்தை பெரியார் அவர்கள் என்றும் கொண்டிருக்கவில்லை. அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்வதிலே தான் முழுமூச்சாக செயல்பட்டார். அந்த பகுத்தறிவு பார்வை வழிதான் நாமும் சமூகப்பாதையில் என்றைக்கும் பயணிக்கிறோம் பயணிக்க வேண்டும். அதன் காரணமாகத்தான் இன்றுவரை தமிழ்நாட்டில் மட்டும் ‘கிரிமிலேயர்’ என்னும் கிருமி புகாத எதிர்ப்பு ஆற்றலுடன் இருந்துவருகிறது. இன்றும்கூட இந்தியா முழுவதும் 69 சதவிகித அளவிற்கு இட ஒதுக்கீடு நடைமுறையில் இல்லை. பல மாநிலங்களில் இட ஒதுக்கீடு முறையே இல்லாத நிலையும் உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் கடந்த 30 ஆண்டுகளாக 69 சதவிகித இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்துவருகிறது.
ஊரடங்கு காலத்தில் பள்ளிக் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் படிப்பில் சற்றும் தொய்வின்றி இன்றைய சூழலுக்கேற்ப இணையவழி மூலமாக தங்குதடையின்றி கல்வியை பெறும் வழிமுறைகளில் வளப்படுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு இயக்க கொள்கை – பகுத்தறிவு சார்ந்த நூல்கள் ஒரு கண்ணாகவும், படிப்பிற்குரிய பாட நூல்கள் ஒரு கண்ணாகவும் கொண்டு இந்த காலத்தை பயனுற பெறுவதோடு இணையத்தின் வழியாக சமூகநீதியில், கல்வித்துறையில் இயக்கம் – திராவிட ஆட்சி கண்ட களங்கள் – பெற்ற வெற்றிகள் குறித்து பள்ளிக் கல்லூரி நண்பர்களுக்கு உணர்த்தும் முயற்சியில் ஈடுபடலாம் எனக் கூறினார்.
எனவே மாணவச் செல்வங்கள் தாங்கள் கைகொள்ளவேண்டிய தலையாய முன்னுரிமையை கல்விக்கும் அடுத்ததாக ஒழுக்கத்திற்கும் அடுத்து சிக்கன வாழ்வு முறைக்கும் அளித்து இந்த கரோனா நோய் தொற்று காலக்கட்டத்தை பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் பயனுள்ள வகையில் வாழ்ந்து பாதுகாப்பான முறையில் வீட்டில் இருந்தவாறு ‘தனி நபர் இடைவெளி’ பின்பற்றி கடக்குமாறு மிகுந்த கனிவுடன் அறிவுறுத்தி நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து திராவிடர் கழக மாணவர்களுக்கும் நன்றி கூறி விடைபெற்றார்.
மும்பை திராவிடர் கழகத் தோழர்களுடனான காணொலி சந்திப்பு
ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் 3.5.2020 அன்று மும்பை திராவிடர் கழகத் தோழர்கள், பிற அமைப்புத் தோழர்களுடன் ஈடுபட்டார். அந்நிகழ்வில் பங்கேற்ற பழம்பெரும் திராவிடர் கழகத் தோழர்களின் வாரிசுகளை எண்ணி மகிழ்ந்த ஆசிரியர் அவர்கள் அனைவரிடத்திலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
குமணராசன் அவர்களின் லெமூரியா அறக்கட்டளை மூலம் 1 இலட்சத்து 600 கிலோ அரிசி மற்றும் தானியங்கள் நிவாரணமாக அளிக்கப்பட்டதை அறிந்து ஆசிரியர் அவர்கள் பேருவகை கொண்டு இல்லறம், துறவறம் என்ற வாழ்வியல் முறைகளை கடந்து தொண்டறம் என்ற வாழ்க்கை முறையை தன் வாழ்நாளெல்லாம் பின்பற்றியவர்; ‘மனிதன் தானாக பிறக்கவில்லை ஆகவே தனக்காக மட்டும் வாழக்கூடியவன் அல்லன்’ என்ற கருத்தை கூறியவர் தந்தை பெரியார். அவர் வழியொற்றி நடக்கும் நாமும் வாழ்நாள் முழுவதும் அந்த வாழ்முறையை பின்பற்றி வாழவேண்டும் என மனமார பாராட்டினார்.
‘நவி மும்பை’ என்ற பகுதியை உருவாக்கியதுபோல ‘தாராவி’ வாழ் மக்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு நகரை அம்மாநில அரசு நீண்ட காலத் திட்டம், அவசர காலத் திட்டம் என்பதாக பகுத்து செயலாற்றி உருவாக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறி பெட்டி போன்ற அமைப்புடைய ஒற்றை அறையில் அய்ந்தாறு நபர்கள் வாழக்கூடிய கடின வாழ்க்கையை வாழ்ந்து வருபவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் இக்காலம் நிச்சயம் மிகமிக கடுமையான காலம் என கவலையுடன் தெரிவித்தார்.
ஈரோட்டில் ‘பிளேக்’ நோய் கடுமையாக பரவிய காலத்தில் இளைஞரான பெரியார் அவர்கள் தன் நண்பர்களுடன் உதவிகளை மேற்கொண்டதுடன் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களை தன் தோளில் சுமந்தவர். அத்தகைய தீரரின் – வீரரின் கொள்கைச் சிந்தனை பற்றி வாழ்ந்துவரும் நாம் இந்த இக்கட்டான காலத்தையும் பயனுறு வகையில் கடந்திடுவோம் என கூறினார்.
மும்பை திராவிடர் கழகத்தில் அரும்பணியாற்றிய அய்யா தொல்காப்பியனார், ஜார்ஜ் ஜோசப், மந்திர மூர்த்தி, என்.ஏ சோமசுந்தரம், எஸ்.எஸ் அன்பழகன், ஏ.பி நெல்லையா, நெல்லையப்பா, தற்பொழுதைய நெல்லை மாவட்டக் கழகத் தலைவர் தோழர் காசி மற்றும் வேலாயுதம், இரத்தினசாமி,
ஆர்.ஏ சுப்பையா, மோசஸ், தருமராசன், திமுகவில் இருந்தாலும் பகுத்தறிவு வீரர்களாக வாழ்ந்த ஆரியசங்காரன், பொற்கோ, தியாகராசன், சீர்வரிசை சண்முகராசன், சாமிக்கண்ணு முதலிய தோழர்கள் – குடும்பத்தினர்களை நினைவூகூர்ந்தார்.
மலேசிய திராவிடர் கழக காணொலி கலந்துரையாடல்
10.5.2020 அன்று மாலை மலேசிய கழகத் தோழர்களுடன் நடைபெற்றது. கலந்துரையாடலில் மலேசியத் திராவிடர் கழகத்தின் தேசியத் தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.
மலேசிய திராவிடர் கழகத் தேசியத் தலைவர் அண்ணாமலை, 87 வயதிலும் ஆசிரியர் அவர்கள் டாஸ்மாக்கை எதிர்த்து கருப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டது அவர் வயதை வெளிப்படுத்தவில்லை உற்சாகத்தை வெளிப்படுத்தியதாக கூறி வியந்து பாராட்டினார். அவரைத் தொடர்ந்து மலேசிய மாந்தநேய திராவிடர் கழகத்தின் ஆலோசகர் ரெ.சு முத்தையா, தாய்க் கழகத்தின் ஆதரவு என்றைக்கும் தேவை என பேசினார்.
பேராக் மாநில பெரியார் பாசறையின் அமைப்பாளர் கெ.வாசு அவர்கள் உறையாற்றும்போது தந்தை பெரியார் அவர்கள் தலைமையில் ஆசிரியர் அவர்களுக்கு 1958 ஆம் ஆண்டு திருச்சி பெரியார் மாளிகையில் திருமணம் நடைபெற்றபோது ஆசிரியர் அவர்களால் தொகுக்கப்பெற்ற ‘வாழ்க்கைத் துணைநலம்‘ நூலை தாம்பூலத்திற்கு மாற்றாக அறிவூட்டும் நூலாக வழங்கப்பெற்றது குறித்து நினைவுகூர்ந்தார்.
மாநிலத்திற்கு அய்ந்து நபர்களாக 20 இளைஞர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுக்கும் திட்டத்தை செயல்படுத்த கரோனா ஊரடங்கு முடிவடைய காத்திருப்பதாக தன் ஆர்வத்தை பேராக் மாநில மலேசிய திராவிடர் கழகத் தலைவர் இரா.கெங்கையா தெரிவித்தார்.
பேராக் மாநில பெரியார் பாசறையின் செயலாளர் தோழர் த.சீ. அழகன், 1988 ஆம் ஆண்டு ஆசிரியர் அவர்கள் தலைமையில் தன் திருமணம் நடைபெற்றதாகவும், கூடிய விரைவில் தன் மகன் திருமணமும் சுயமரியாதை முறையில் நடக்க இருப்பதாக தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தன் வாழ்நாளெல்லாம் தந்தை பெரியார் நூல்களை மலேசிய தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலும், பள்ளி நூலகங்களுக்கு வழங்கிவரும் கோவிந்தராசன் அவர்கள் அடுத்ததாக 12 பள்ளிகளுக்கு 1000 நூல்களை வழங்கக்கூடிய திட்டம் இருப்பதாகவும், பெரியார் பன்னாட்டு மய்யத்தின் பணிகளிலும் ஆர்வம் கொண்டிருப்பதாக கூறி மகிழ்ந்தார்.
மலேசியத் திராவிடர் கழகத்தின் மேனாள் தலைவர் திருச்சுடர் கே.ஆர் இராமசாமி அவர்களின் மகன் அன்பழகன், இயக்க நூல்களை படித்து வருவதாகவும்; பெரியார் கருத்துகளை சமூக வலைதளங்கள் மூலம் பரப்புரை செய்யும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மலேசிய திராவிடர் கழகத்தின் கூட்டமைப்பின் மூத்த பொறுப்பாளர்கள் இன்றளவும் சுயமரியாதை, பகுத்தறிவு கொள்கைகளை சீர்மையுடன் பரப்புவதற்கு காரணமாக அமைந்தது 1975 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சி பட்டறை தான் என தெரிவித்தனர். அத்துடன் ஊரடங்கு முடிவடைந்ததும் புரட்சிக் கவிஞர் விழா நடத்தும் முனைப்பில் இருப்பதாகவும்; மலேசிய வாழ் கொள்கை உணர்வாளர்களை கொள்கை உறுதியாளர்களாக்கிட தமிழகத்தில் ‘பெரியாரியல் பயிற்சி பட்டறை’ நடத்திட வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தையும் வெளிப்படுத்தினர். பெரியார் பன்னாட்டு அமைப்பின் மலேசிய கிளைக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியும் நடைபெறுவதாக மலேசியத் தோழர்கள் கூறினர்.
இந்நிகழ்வில் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோரும் பங்கேற்றனர்.
மே-21 அன்று அமெரிக்கத் தமிழர்களுடன் காணொலிக் கலந்துரையாடல் நடைபெற்றது. இருந்த இடத்தில் இருந்தபடியே உலகம் முழுமையும் பெரியார் கொள்கை பரப்பும் பணியும், பெரியார் தொண்டர்களை இணைக்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது.
தொகுப்பு – அ.சி கிருபாகரராஜ்.