1939ஆம் ஆண்டு ராஜாஜியின் ஆலோசனையின் பேரில் மதுரை வைத்தியநாத அய்யர் அய்ந்து தாழ்த்தப்பட்டவர்களையும், ஒரு நாடார் ஜாதியைச் சார்ந்தவரையும் அழைத்துக் கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் நுழைய முற்பட்டார். இதுவே தமிழகத்தின் முதல் கோயில் நுழைவுப்போராட்டம்!’’ என்று பார்ப்பனப் பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன.
தாழ்த்தப்பட்டவர்களுக்கான கோயில் நுழைவுப் போராட்டம் என்பது சிறுசிறு கிளர்ச்சிகளாக 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே தொடங்கி விட்டது. 1854இல் குமரி மாவட்டம் குமார கோயிலில் நாடார்கள் சிலர் கோயிலுக்குள் நுழைய முற்பட்டு கடும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். 1874, 1897 களில் இதே மீனாட்சி அம்மன் கோயிலிலேயே தீண்டப்படாதவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள் நுழைய முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது வழக்குகளும் போடப்பட்டிருக்கிறது. 1917 நவம்பர் மாதம் நெல்லையில் நடைபெற்ற நீதிக்கட்சி தென்மண்டல மாநாட்டில், கோயிலுக்குள் நாடார்களை அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்ககிறது.
1927ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத் தோழர்கள், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோயில் நுழைவுப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஜே.என்.இராமநாதன், டி.வி.சுப்ரமணியம், ஜே.எஸ்.கண்ணப்பன் ஆகியோர் பார்ப்பனரல்லாதாரை அழைத்துக் கொண்டு மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழைய முயன்றபோது பெரும் கல்லடிக்கு ஆளாகியதோடு அவர்கள் மீது பல்வேறு வழக்குகளும் போடப்பட்டுள்ளது.
திருச்சி தாயுமானவர் மலைக்கோயிலுக்கு ஜே.என்.இராமநாதன் தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துக் கொண்டு சென்றபோது, ரவுடிகளால் தாக்கப்பட்டு மலையிலிருந்து அவர்கள் உருட்டிவிடப்பட்ட செய்தி ‘கேசரி’ இதழில் பதிவாகியிருக்கிறது.
திருவண்ணாமலை கோயிலில் நுழைந்த ஜே.எஸ்.கண்ணப்பரை கோயிலுக்குள்ளேயே பூட்டிவைத்தனர். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பு சுவாரஸ்யமானது. கோயிலுக்குள் அவர்கள் சென்றதில் எந்தத் தவறும் இல்லை. அவர்களை தடுத்ததுதான் சட்டப்படி குற்றம் என்று சொல்லி அந்தச் செயலில் ஈடுபட்ட பார்ப்பனர்கள் இராமநாத சாஸ்திரி, குப்புசாமி குருக்கள் இருவருக்கும் தலா நூறு ரூபாய் அபராதம் விதித்து, அதை போராட்டத்திற்குத் தலைமை வகித்த ஜே.எஸ்.கண்ணப்பரிடம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்கள். இந்தச் செய்தி 6.5.1928 ‘குடிஅரசில்’ வெளியாகி இருந்தது.
மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயிலில் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆயிரம் பேருடன் கோயில் நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்டார். கோயில் கதவுகளும், கருவறையும் முன் எச்சரிக்கையாக கோயில் நிர்வாகத்தால் பூட்டப்பட்ட நிலையில் பக்கவாட்டில் இருந்த சிறிய நுழைவாயில்கள் வழியாக உள்ளே நுழைந்து திருநாவுக்கரசரின் ‘மணிக்கதவம் தாழ்திறவாய்’ என்ற பாடலை உரக்கப் பாடியிருக்கிறார்கள்.
1928இல் திருவாணைக்காவல் கோயிலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே ஆண்டு ஈரோடு ஈஸ்வரன் கோயிலுக்குள் குத்தூசி சா.குருசாமி தாழ்த்தப்பட்டவர்களை அழைத்துச்செல்ல முற்பட்டார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக கோயில் நுழைவுப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தது நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் தான்.
கோயில் நுழைவுக்கான நீண்ட நெடிய போராட்ட வரலாறு இருக்க 1939இல் வைத்தியநாதஅய்யர் தான் முதன்முதலாக கோயில் நுழைவுப் போராட்டத்தையே நடத்தியதாக தொடர்ந்து உண்மைக்கு மாறான ஒரு செய்தி பார்ப்பன ஊடகங்களால் பரப்பப்பட்டு வருகிறது.
யார் இந்த வைத்தியநாத அய்யர்? கோயில் நுழைவுப் போராட்டத்தை அவர் நடத்த வேண்டிய அவசியம் என்ன? தாழ்த்தப்பட்டவர்கள் மீது அவருக்கு திடீரென்று அக்கறை எப்படி வந்தது?
பெரியார்
1930இல் காந்தி மேற்கொண்ட தண்டி யாத்திரையை அப்படியே தமிழ்நாட்டிலும் நடத்த முயன்றார் ராஜாஜி. காந்தியின் உப்பு சத்தியாகிரகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று சொன்ன பெரியார், அதில் கலந்து கொள்பவர்களில் சிலர், தங்கள் மதத்தின் ஆதிக்கத்தையும் வகுப்பின் ஆதிக்கத்தையும் பிரதானமாய் கருதியிருப்பவர்களாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
வெள்ளைக்கார சுயநல ஆட்சி ஒழிய வேண்டுமானால், முதலில் மத ஆதிக்கமும், அதன் குருட்டு நம்பிக்கைகளும் ஒழிய வேண்டும்! தீண்டாமை ஒழிய வேண்டும்! பார்ப்பனர் ஆதிக்கம் ஒழிய வேண்டும்! முதலாளித் தன்மை ஒழிய வேண்டும்! என்றார். இந்தச் சூழலில்தான் இராஜாஜி, வேதமந்திரங்கள் ஓத, பார்ப்பனப் பண்டாரங்களின் ஆசியுடன் வேதாரண்யத்திற்கு திருச்சியிலிருந்து சத்தியாகிரகப் பயணத்தைத் தொடங்கினார். பெரியார், காந்தியின் தண்டி யாத்திரையை குற்றம் சாட்டியதற்கும் மேலாக, இராஜாஜியின் உப்பு சத்தியாகிரகப் பயணத்தில் அதற்குத் தலைமையேற்க வழி நெடுக பார்ப்பனர்களையே ஏற்பாடு செய்தார் இராஜாஜி. டி.எஸ்.எஸ்.ராஜன், கே.சந்தானம், என முழுக்க முழுக்க பார்ப்பனர்களையே கொண்டிருந்த அந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்தான் மதுரை வைத்தியநாத அய்யர். .இராஜாஜியின் இந்த ஏற்பாட்டைக் கண்டு, “இன்றைய போராட்டத்தில் தமிழ்நாட்டில் தலைமை வகித்து நடத்துபவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள் அல்லவா? இந்தப் போராட்டம் ஜாதிக் கொடுமையை ஒழிக்கக் கூடியதாக இருந்தால் இவர்கள் இதில் கலந்து கொண்டிருப்பார்களா? அறிவுள்ள மக்களுக்கு இது விளங்க வேண்டாமா?’’ என்று கேட்டார் பெரியார்.
வைக்கம் போராட்டத்தில் பங்கேற்கச் சென்ற பெரியார், தான் வகித்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை இராஜாஜியை கவனித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து வைக்கம் சென்றார். ஆனால் ராஜாஜியோ உப்பு சத்தியாகிரகத்தில் கைதாக நேர்ந்த போது, தலைவர் பதவியை ஏற்க திரு.வி.க தயாராக இருந்த நிலையிலும், அதை சந்தான அய்யங்காரிடம் ஒப்படைத்து விட்டுப் போனார். ஒத்துழையாமைப் போராட்டம் நடைபெற்ற போது கூட தனது தலைமைப் பதவியை சீனிவாச அய்யங்காரிடமோ, ராஜனிடமோ ஒப்படைப்பதிலேயே குறியாக இருந்தார் என்று பெரியார் குறிப்பிட்டிருக்கிறார்.
1922ஆம் ஆண்டு திருப்பூரில் வாசுதேவ அய்யர் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூடியது. பெரியார் அப்போது, பார்ப்பனரல்லாதார் கோயில் நுழைவு தொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டு வர அது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. திரு.வி.க அந்தத் தீர்மானத்தை ஆதரித்தார். மதுரை வைத்தியநாத அய்யரும், கிருஷ்ணய்யங்காரும் அதைக் கடுமையாக எதிர்த்தனர்.
ஆர்.எஸ்.நாயுடு
1923இல் மதுரை மார்க்கெட் சதுக்கத்தில் ஒரு காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. உள்ளூர் பிரமுகரான வைத்தியநாத அய்யர், கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். சிறப்புரையாற்றிய பெரியார், தாழ்த்தப்பட்டோர் கோயில் நுழைவு பற்றி விரிவாகப் பேசினார்.
நாடார் சகோதரர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் உண்மையான காரணமின்றி ஆலயத்திற்குள் பிரவேசிக்கத் தடுப்பதானது முட்டாள் தனமான காரியம். அவர்கள் பாதம் பட்டதும் சுவாமி மறைந்து விடுமென்றால், சக்தியற்ற அக் கல்லைக் கட்டித் தொழுவதால் என்ன பிரயோஜனம் அடைவீர்கள்? அவர்கள் கொடுக்கும் காணிக்கையை, கட்டளையை வாங்கிக் கொள்கிறோம். அவர்கள் பணம் அக் கடவுளுக்கு ஆகும். அவர்கள் மட்டும் ஆகாதென்றால் என்ன நியாயம்? உங்களுக்கு சுயராஜ்ய தாகம் உண்டு என்றால், நாடு நல்ல நிலைமையை அடைய பிரியம் உண்டு என்றால், எல்லோரும் சமத்துவம் அடைய சம்பந்தம் உண்டு என்றால் இன்றே நாடார் சகோதரர்களை ஆலயத்திற்குள் அழைத்துச்செல்ல தயாராயிருக்க வேண்டும். எந்தத் தடை வரினும் நாம் எதிராடத் தயாராயிருக்க வேண்டும். இல்லாது போனால் நாடார் சகோதரர்கள் ஆலயத்தில் நுழையாதிருக்கும் வரை நாமும் செல்வதில்லை என்று கட்டுப்பாடாய் இருக்க வேண்டும் என்றார்.
இந்த செய்தியை வெளியிட்ட `நாடார் குல மித்திரன்’ பத்திரிகை, ”மாநாட்டில் இறுதியாக உரையாற்றிய வைத்தியநாத அய்யர் இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்காததோடு, நாடார் என்ற சொல்லையே உச்சரிக்காதது, நாடார் சமூகத்தினரிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது!” என்று எழுதியது. இந்த செய்தி திரு.வி.க வின் வாழ்க்கைக் குறிப்புகள் நூலில் இடம்பெற்றுள்ளது.
ராஜாஜி
1939ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழகமெங்கும் வலுப்பெற்று இருந்த நிலையில், காங்கிரசின் செல்வாக்கு தமிழக மக்களிடம் வெகுவாக சரிந்திருந்தது. எம்.சி.ராஜா கொண்டு வந்த கோயில் நுழைவு மசோதாவை ராஜாஜியின் அமைச்சரவை ஏற்கனவே குழிதோண்டிப் புதைத்திருந்தது. அந்தக் காலச் சூழலில் நடைபெற்ற மதுரை, இராமநாதபுரம் ஜில்லா போர்டு தேர்தல் வெற்றியைக் கருத்தில் கொண்டுதான் இராஜாஜி, பெரியாரால் குள்ளநரி என்று விமர்சிக்கப்பட்ட வைத்தியநாத அய்யரை, மதுரை மீனாட்சி அம்மன் ஆலய நுழைவுப் போராட்டத்தில் இறக்கினார் என்கிறார் திராவிட இயக்க ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை.
வைத்தியநாத அய்யர்
இதில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. வைத்தியநாத அய்யர் கோயில் நுழைவுப் போராட்டம் நடத்த முயன்ற போது, ஆலய நிர்வாகம் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஆர்.எஸ்.நாயுடு வசம் இருந்திருக்கிறது. மதுரையில் பிரபலமாக இருந்த நீதிக்கட்சித் தலைவர் பி.டி.ராஜனால் நியமிக்கப்பட்டவர் ஆர்.சேஷாச்சலம் (நாயுடு). அவர் ஆர்.எஸ்.நாயுடு என்று பெரிதும் அழைக்கப்பட்டிருக்கிறார்.காங்கிரஸ்காரர்களால் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தப்படும் பட்சத்தில் நிர்வாகம் நிச்சயம் எதிர் நடவடிக்கை எடுக்கும். அதையே தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற தேர்தல் யுக்தியாகக் கூட இந்தப் போராட்டம் இராஜாஜியால் திட்டமிடப்பட்டிருக்குமோ என்று கூட நினைக்கத் தோன்றுகிறது.
ஆனால் அவர்கள் நினைத்தது போல் மீனாட்சி அம்மன் கோயிலில் நுழைந்த தாழ்த்தப்பட்டவர்கள் மீது, எந்த எதிர்ப்பு நடவடிக்கையும் எடுக்கப் படாதது அவர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையே தந்திருக்க கூடும். நீதிக்கட்சித் தோழர்களும், சுயமரியாதை இயக்கத் தோழர்களும் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்திய போது கடுமையான தாக்குதலுக்கும் கல்லடிக்கும் ஆளாகி, மலையிலிருந்தெல்லாம் கீழே உருட்டிவிடப்பட்டது போன்று இவர்கள் நடத்தப்படவில்லை. மாறாக ஆர்.எஸ்.நாயுடுவால் அவர்கள் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்காக பூஜையும் செய்யப்பட்டிருக்கிறது.
இங்கிலாந்தில் ‘பார் அட் லா’ முடித்த ஆர்.சேஷாச்சலநாயுடு மதுரை திரும்பியதும் நீதிக்கட்சியில் சேர்ந்து பணியாற்ற துவங்குகிறார். தன் பெயரை ஆர்.எஸ்.நாயுடு என மாற்றிக் கொண்டவர், மதுரை நகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 12 ஆண்டுகள் நகரசபைத் தலைவராக பணியாற்றுகிறார். பின் நீதிக்கட்சித் தலைவர் பி.டி.ராஜனால் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நிர்வாக அதிகாரியாக 1937இல் நியமிக்கப்படுகிறார். அப்போது பார்ப்பனர்களின் ஏகபோக ஆதிக்கத்திலிருந்த நிர்வாகத்தைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முயற்சிகளைச் செய்கிறார்.
அர்ச்சகர்கள் கொடுத்து வந்த அர்ச்சனை அனுமதி டிக்கட்டுகளை அலுவலகம் மூலம் வினியோகிக்கச் செய்தார். கோயிலில் இரண்டு இடங்களில் மட்டுமே உண்டியல் வைக்கப்பட்டிருந்த நிலையில் பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை அர்ச்சகர்களிடம் கொடுப்பதும், சந்நிதியில் போடுவதுமாக இருந்தனர். கோயில் வளாகத்தில் உண்டியல்களை அதிகப்படுத்தி, காணிக்கை முழுதும் நிர்வாகத்திற்கு கிடைக்குமாறு செய்தார்.
கோயிலுக்கு வரும் முக்கியப் பிரமுகர்களை வரவேற்பதைப் பட்டர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதன் மூலம் தங்கள் செல்வாக்கை உயர்த்திக் கொண்டனர். அந்த வழிமுறை மாற்றி பிரமுகர்கள் வருகை தந்த போது கோயில் நிர்வாகத்தினரை வரவேற்கச் செய்தார்.
மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் நடக்கும் பட்டாபிஷேக விழாவின் போது செங்கோல்களை முதன்மைப் பட்டர் எடுத்துச் செல்வதுதான் பழக்கமாக இருந்தது. அதனை மாற்றி அறங்காவலர் அல்லது நிர்வாக அதிகாரி எடுத்துச் செல்லும் முறையைக் கொண்டுவந்தார். கோயில் பேஷ்காராக பார்ப்பனர்களே நியமிக்கப்பட்டு வந்ததற்கு மாறாக பார்ப்பனரல்லாத ஒருவரை பேஷ்காராக நியமித்தார். புதிய பட்டர்கள் தீட்சை பெறும் அதிகாரத்தைப் பட்டர்கள் கையிலிருந்து கோயில் நிர்வாகத்திற்கு மாற்றினார்.
இப்படி பல்வேறு சீர்திருத்தங்களை அவர் செய்து கொண்டிருந்த பொழுதுதான் 1939 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி சனிக்கிழமையன்று காலை 8.50 மணிக்கு தமிழ்நாடு ஹரிஜன சேவா சங்கத்தைச் சேர்ந்த வைத்தியநாத அய்யரும் அந்த அமைப்பின் செயலர் எல்.என். கோபாலசாமியும் அய்ந்து தாழ்த்தப்பட்டவர்களையும் ஒரு நாடார் இனத்தைச் சேர்ந்தவரையும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர்.
மீனாட்சி அம்மன் கோயில் நுழைவுப் போராட்டத்தின் போது கோயிலில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள லண்டன் பேராசிரியர் ஃபுல்லர் எழுதிய ‘தெய்வத்தின் ஊழியர்கள்’ (‘SERVANT OF THE GODDESS by C.J.FULLER) என்ற ஆங்கில நூல் நமக்குப் பேருதவியாக இருக்கிறது.
வரலாற்றில் ஆலயப் பிரவேச நிகழ்வு என்று குறிக்கப்படும் இந்த நிகழ்வில், பி. கக்கன், உசிலம்பட்டி வி. முத்து, மேலூர் பி.ஆர்.பூவலிங்கம், வி.எஸ்.சின்னய்யா, முருகானந்தம் ஆகிய அய்ந்து தாழ்த்தப்பட்டவர்களும் எஸ்.எஸ்.சண்முகம் நாடாரும் மீனாட்சியம்மன் கோயிலுக்குள் நுழைந்தனர். கோயில் நுழைவுக்காக வந்தவர்களை, கோயிலின் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர்.சேஷாச்சலம் நாயுடு என்ற ஆர்.எஸ். நாயுடு வரவேற்றுக் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார்.
அம்மன் சன்னதியில் இருந்த பொன்னுசாமிப் பட்டர், அவர்களுக்கு மாலை அணிவித்துப் பிரசாதம் அளித்தார். அரை மணி நேரத்திற்குப் பிறகு அவர்கள் மீனாட்சி அம்மன் கோயிலை விட்டு வெளியேறினர்.
கோயிலுக்குள் அவர்கள் நுழைந்த அன்று அங்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. அடுத்த நாள் ஜூலை 9ஆம் தேதி பிரச்சினை பெரிதாக வெடித்தது. முத்து சுப்பர் என்ற பட்டர் அன்று காலை நேரத்திற்கான பூஜைகளை முடித்துவிட்டு, கோயில் கதவுகளை மூடியவர் பிறகு மாலையில் கோவிலைத் திறக்க வேண்டிய நேரத்தில் திறக்க வில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழைந்ததால் கோவில் தீட்டுப்பட்டுவிட்டதாகவும் அதற்கான சடங்குகளைச் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினார். நிர்வாக அதிகாரியான ஆர்.எஸ். நாயுடு எவ்வளவோ வலியுறுத்தியும் அந்தப் பட்டர் கோயிலைத் திறக்க அடம் பிடித்தார்.
அன்று முறைப்படி வழிபாட்டில் கலந்துகொள்ள வேண்டிய மற்றொரு பட்டரான சாமிநாதப் பட்டரும் வெளியூர் சென்றிருந்தார். இரவு மதுரை திரும்பிய சாமிநாதப் பட்டரிடம் ஆர்.எஸ்.நாயுடு பேசி அவரை தன்வயப்படுத்தி கோயிலில் வழக்கம் போல பணிகளைத் தொடர அறிவுறுத்தினார். சாமிநாதப் பட்டரும் மற்ற பட்டர்களின் எதிர்ப்பைக் கண்டு கொள்ளாமல் ஆர்.எஸ். நாயுடுவுக்கு ஆதரவாகச் செயல்பட முடிவெடுத்தார்.
ஜூலை பத்தாம் தேதியன்று கோவில் கதவுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, நடை திறக்கப்பட்டது. முதல் நாள் பூஜைகளும் அன்றைக்கான பூஜைகளும் சாமிநாதப் பட்டரால் வழக்கம் போல் செய்யப்பட்டன. சக பார்ப்பனர்களை அவர் பகைத்துக் கொண்டதால் அவர்கள் தங்களிடமிருந்து சாந்துப் பட்டரை விலக்கி வைத்தனர்.
சாமிநாதப் பட்டர்
கோயில் வளாகத்தைப் பூட்டி, திறக்க மறுத்த முத்து சுப்பர் உள்ளிட்ட மூன்று பட்டர்கள் நிர்வாக அதிகாரியால் இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதற்குப் பிறகு, கோயிலுக்கு வர மறுத்த பட்டர்கள் படிப்படியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். கோயில் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப் பட்டவர்களுக்கு ‘வர்ணாசிரம ஸ்வராஜ்ய சங்கம்` என்ற இந்து அமைப்பு ஆதரவு அளித்தது. இந்த சங்கத்தின் தலைவராக இருந்த என். நடேச அய்யர், ஆர்.எஸ். நாயுடுவின் செயலைக் கடுமையாகக் கண்டித்தார்.
மீனாட்சி அம்மன் கோயில் தீட்டுப் பட்டுவிட்டதாகவும், அதனால் தெய்வங்கள் ஆலயத்தை விட்டே சென்று விட்டது என்றும் கோயிலைச் சுத்தம் செய்து அதற்கான பரிகாரங்களைச் செய்தால் தான் தெய்வங்கள் திரும்ப எழுந்தருள்வார்கள் என்றும் நடேச அய்யர் வலியுறுத்தினார். அதற்காக வழக்கும் தொடரப்பட்டது.
ஜூலை 29ஆம் தேதியன்று காலை நடேச அய்யர் தலைமையில் மீனாட்சி அம்மன் கோவில் முன்பு கூடிய சனாதனிகள், கோயிலில் சுத்தீகரணச் சடங்கைச் செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால், கோயில் கதவுகள் சாத்தப்பட்டதோடு, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பட்டர்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழைந்ததற்காக எந்தச் சுத்தீகரணச் சடங்கும் செய்யப்பட மாட்டாது என கோயிலின் நிர்வாக அதிகாரியான ஆர்.எஸ். நாயுடு உறுதியாக மறுத்தார். இதுதான் சாக்கென்று நடேசய்யர் வீட்டிலேயே மீனாட்சி கோயிலை அமைந்துள்ளதாகச் சொல்லிப் பட்டார்கள் சிலர் பூஜை செய்து வந்தனர். வசூலை தாங்கள் கைப்பற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணமாகயிருக்கும். இதற்குப் பிறகு, மீனாட்சி அம்மன் கோயிலில் சுத்தீகரணச் சடங்குகளைச் செய்ய வேண்டுமெனக் கோரி பல வழக்குகள் தொடரப்பட்டன. அவை அனைத்துமே நீதிமன்றத்தால் தள்ளுபடிசெய்யப்பட்டன. 1942இல் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 19 பட்டர்கள் சேர்ந்து மதுரை முன்சீப் நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தனர். “கோயிலில் சுத்தீகரணச் சடங்குகளைச் செய்யும் வரை தாங்கள் கோயிலுக்கு வராமல் இருந்தது சரிதான் என்றும் அதற்காக தங்களைப் பணி நீக்கம் செய்தது தவறு என்றும் அவர்கள் வாதிட்டனர்.
1943இல் பட்டர்களுக்குச் சாதகமாக முன்சீப் நீதிமன்றம் ஒரு தீர்ப்பை அளித்தது. ஆனால், மேல் முறையீட்டில் நிர்வாக அதிகாரிக்குச் சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன் பிறகு 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிர்வாக அதிகாரியும் பட்டர்களும் ஒரு சமரச உடன்பாட்டிற்கு வந்தனர்.
அதன்படி, கோயிலில் எந்த சுத்தீகரணச் சடங்கும் செய்யாமல் வேலைக்கு வரவும் நிர்வாக அதிகாரியின் சட்டப்படியான உத்தரவுகளைப் பின்பற்றவும் பட்டர்கள் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நுழைவுப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்ததாக அந்தப் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வரலாற்றை அறியும் போது, மதுரை மீனாட்சி அம்மன் ஆலய நுழைவுப் போராட்ட வெற்றியில் வைத்தியநாத அய்யரின் பங்கு என்னவாக இருந்தது? இந்தி எதிர்ப்புப் போராட்டம், ஆலய நுழைவு மசோதா என்று சூடு பிடித்திருந்த சூழலில் அதனைத் தணிப்பதற்காக அரங்கேற்றப்பட்ட நாடகத்தின் ஒரு பாத்திரம் தான் வைத்திய நாதய்யர் ஆர்.எஸ்.நாயுடுவின் பங்கு என்னவாக இருந்தது என்பதை நம்மால் நன்றாகவே உணர முடிகிறது.
ஆலய நுழைவுத் தடை செய்யப்பட்டால் போராட்டம் நடத்தி காரசாரமாக காட்சியைக் கொண்டு சென்று புகழ்பெற விரும்பிய ராஜாஜி கும்பலுக்கு, ஏமாற்றத்தைக் கொடுத்து கோயில் நுழைவைச் சாத்தியபடுத்தி, அதற்கெதிரானவர்களை நிர்வாக ரீதியாக ஒடுக்கி வெற்றி கண்டவர் என்ற வகையில் மதுரை கோயில் நுழைவு வெற்றியின் ஆதார சுருதியாக நீதிக்கட்சிப் பிரமுகர் ஆர்.எஸ்.நாயுடுவே இருந்திருக்கிறார் என்பதை இதன் மூலம் தெள்ளத் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.