இதழாளர் கோவி.லெனின்
அவர் தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்தவர். தமிழ்நாட்டை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த முதல்வர் என்ற பெருமையும் அவருக்கே உரியது. இந்தியாவில் ஒரு மாநிலத்தின் முதல்வருக்கான அதிகாரம் என்பது ஒன்றிய (மத்திய) அரசிடம் எல்லாவற்றையும் எதிர்பார்த்திருக்க வேண்டிய நிலையில்தான் உள்ளது என்பது அவருக்கும் தெரியும். முதல்வராகப் பொறுப்பேற்றால் மரியாதை நிமித்தமாக ஒன்றிய அரசின் தலைமையமைச்சரான பிரதமரை சந்திக்க வேண்டியதும் மரபு மட்டுமல்ல, நிர்வாகம் சார்ந்த நிர்பந்தமும் கூட..
17-3-1969இல் முதலமைச்சராக டெல்லிக்கு முதல் பயணம் மேற்கொண்ட அவர், பிரதமருடனான உரையாடலுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். வழக்கமான கேள்வி- பதில்களுக்குப் பிறகு, அதுவரை டெல்லி வந்த எந்த முதல்வரும் வெளியிடாத ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
“தி.மு. கழக அரசு தகுதி மிக்கவர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கும். அந்தக் குழு மத்திய -மாநில உறவுகள் பற்றியும், மத்திய அரசாங்கத்திலிருந்து மாநில அரசுகளுக்கு எந்தெந்த அதிகாரங்கள் மாற்றப்பட வேண்டும் என்கிற பரிந்துரையையும் அளிக்கும்’’ என்று அறிவித்தார்.
முதல்முறை முதல்வராக டெல்லி சென்றபோதே, மாநிலத்தின் அதிகாரங்களைக் கூடுதலாக்க வேண்டும், மத்திய -ஒன்றிய அரசு கூட்டாட்சித் தத்துவத்தின்கீழ் இயங்க வேண்டும் என்கிற மாநில சுயாட்சிக்கான குரலை உயர்த்திய அந்த முதல்வர்தான் கலைஞர்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில், சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.வி.இராஜமன்னார் தலைமையில் சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஏ.லட்சுமணசாமி முதலியார், உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சந்திராரெட்டி ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்டக் குழு அமைக்கப்பட்டது.
இந்தியாவிலுள்ள அனைத்து மாநில முதல்வர்கள், அனைத்து மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள், எல்லா மாநில சட்டமன்ற (பேரவை-மேலவை) கட்சித் தலைவர்கள், நிதிக்குழுக்களின் தலைவர்கள், திட்டக்குழுத் தலைவர், திட்டக்குழு உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில உயர்நீதி மன்றங்களின் தலைமை நீதிபதிகள் எல்லா மாநிலங்களின் அட்வகேட் ஜெனரல்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், மத்திய-மாநில சர்வீஸ் கமிஷன் தலைவர்கள், தலைமைத் தேர்தல் கமிஷனர், விடுதலைப் போராட்டத்தில் முக்கியத் தலைவர்கள், தொழிலதிபர்கள், பொருளாதார வல்லுநர்கள், புகழ்பெற்ற வழக்கறிஞர்கள், இந்தியாவின் முக்கிய நாளிதழ்கள்—வார இதழ்களின் ஆசிரியர்கள் ஆகிய அனைத்துத் தரப்பிடமிருந்தும் ராஜமன்னார் குழு விவரம் கோரி கருத்துரை கேட்டது.
நீதிபதி பி.வி.ராஜமன்னார் குழு 1971இல் அளித்த அறிக்கையையும், அதனை ஆராய்ந்து அந்த அறிக்கையின் பேரில் அரசின் கருத்தையும் இணைத்து 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானத்தை முன்மொழிந்து, விவாதத்திற்கு வைத்து நிறைவேற்றினார் கலைஞர். அதன்பிறகே, இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் உரிமைக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது.
ஒன்றிய அரசு எப்போதெல்லாம் பெரும்பான்மை பலத்துடன் அமைக்கிறதோ அப்போதெல்லாம் மாநில உரிமைகள் ஒடுக்கப்படுவது வழக்கம். தற்போது ஆளுகின்ற மோடி தலைமையிலான ஒன்றிய அரசோ, மாநிலங்களே இல்லாத இந்தியாவை உருவாக்கவும், ராணுவ ஆட்சி போல ஜனநாயகத்தை மாற்றவும் முயற்சிப்பதால் இந்தப் பேரிடர் காலத்தைப் பயன்படுத்தி மாநில உரிமைகளைப் பறிப்பதற்கானத் திட்டங்களை செயல்படுத்துகிறது.
மாநில உரிமைகளுக்காக முதன்முதலில் குரல் கொடுத்த தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து வருகிறது. நுழைவுத் தேர்வு இல்லாமல், +2 பொதுத்தேர்வு அடிப்படையில் கிராமப்புற–ஒடுக்கப்பட்ட மாணவர்கள் வரை எளிதாக மருத்துவர்களாகும் வகையிலான கட்டமைப்பை ‘நீட்’ தகுதித் தேர்வு மூலம் தகர்த்தது. இப்போது, கல்வித்துறை மீதான மாநில அதிகாரத்தைப் பறிக்கும் புதிய கல்விக் கொள்கையை வரும் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தத் தீவிரமாக இருக்கிறது. தன்னாட்சி அமைப்பான காவிரி நதிநீர் ஆணையத்தை மத்திய அரசின் நீர்ஆற்றல் துறையான ‘ஜல்சக்தி’ துறைக்குள் மூழ்கடித்துள்ளது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பின் மூலம் மாநிலங்களின் வருவாயை அபகரித்த ஒன்றிய அரசு, இப்போது மாநிலங்களின் கடன் பெறும் அளவை உயர்த்துவதற்காக இலவச மின்சாரத் திட்டத்தை கைவிட வலியுறுத்துகிறது. மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் நிர்வாகத்தைத் தன் வசப்படுத்தும் புதிய மின்சார சட்ட வரைவினை வெளியிட்டிருக்கிறது.
மோடி அரசின் தயவினால் ஆட்சியை நகர்த்தி வரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசால் இவற்றைத் துணிந்து வலியுறுத்த முடியவில்லை. அமைச்சர் வீடுகள் முதல் தலைமைச் செயலகம் வரை நடத்தப்பட்ட சோதனைகளில் சிக்கியவை தூசு தட்டப்படுமோ என்ற தயக்கம் உள்ளது. ஆனாலும் அதனையும் மீறி, மக்களின் செல்வாக்கை இழக்க நேரிடும் என்ற அச்சத்தால், மென்மையான எதிர்ப்பினைப் பதிவு செய்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பம்மிய உரிமைக் குரலே மக்களுக்கு வியப்பை ஏற்படுத்துகிறது.
வலிமையான தலைவர் தமிழ்நாட்டை ஆட்சி செய்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா என்ற கேள்வி எல்லார் மனதிலும் இயல்பாகவே எழுந்தது. வலிமையான தலைவர் என்பது, உரிமைப் போராட்டத்தில் சளைக்காமல் ஈடுபடும் தன்மையின் அடிப்படையிலேயே மதிக்கப்படுகிறது. இந்திராகாந்தி அம்மையார் இந்திய ஒன்றிய அரசின் தலைமையமைச்சராக இருந்தபோது, சேலம் இரும்பாலையை உருவாக்குவதிலும், பிற தொழில்வளங்களைப் பெருக்குவதிலும் மாநில உரிமைகளை நிலைநாட்டி வெற்றிபெற வைத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர். அதே இந்திரா அரசு, 1975இல் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் வகையில் நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்தி, மிசா சட்டத்தின் கீழ் எதிர்க்கட்சியினரைச் சிறையில் அடைத்தபோது, நெருக்கடி நிலைக்கு எதிராகத் தி.மு.க. சார்பில் தீர்மானம் நிறைவேற்றி, அதனைப் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் முன் உறுதிமொழியாக ஏற்றிடச் செய்தவரும் கலைஞர் தான். அதனால் தனது ஆட்சியைப் பறிகொடுத்து, சொந்த மகனும் கழக உடன்பிறப்புகளும் சிறைப்படுத்தப்பட்டபோதும் கலங்காமல் ஜனநாயக உரிமைப் போராட்டத்தைத் தொடர்ந்தவர்.
எதிர்க்கட்சியாக இருந்தபோதும் இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமான ‘டெசோ’ அமைப்பைத் தொடங்கி அதன் மாநாட்டில் அகில இந்தியத் தலைவர்களான வாஜ்பாய், பகுகுணா உள்ளிட்ட பலரையும் பங்கேற்கச் செய்து, இந்திய ஒன்றிய அரசின் பார்வையை ஈழத்தமிழர் பக்கம் திருப்பியவர் கலைஞர். இந்தி மொழியை பிற மாநிலங்களின் மீது திணிக்க முயன்றபோதெல்லாம் அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்திலிருந்து கலைஞரின் குரலாகவே இருக்கும். சட்ட நகல் எரிப்புப் போராட்டத்தில் கைதி உடையுடன் சிறையில் அடைக்கப்பட்ட போதும், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நின்றார்.
மத்தியில் அறுதிப் பெரும்பான்மையுடன் ராஜீவ்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி செய்தது. அதற்கு எதிராக மாநிலக் கட்சிகளின் பங்கேற்புடன் தேசிய முன்னணியைத் தொடங்குவதிலும் அதன் மகத்தான பேரணியை சென்னையில் நடத்திக் காட்டி இந்தியாவைத் திரும்பிப் பார்க்கச் செய்தவர் கலைஞர். 13 ஆண்டுகள் கழித்து 1989 ஆம் ஆண்டு ஜனவரியில் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. அதே ஆண்டு நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய முன்னணியின் ஆட்சி அமைந்தது. ஆனால், தமிழ்நாட்டில் 40 தொகுதிகளில் தி.மு.க கூட்டணிக்கு ஒரேயொரு இடம்தான். அதுவும்கூட தி.மு.க.வுக்கு கிடைக்கவில்லை.
மக்களவையில் ஓர் உறுப்பினர்கூட இல்லாத நிலையிலும், தமிழ்நாட்டின் நெடுங்காலக் கோரிக்கையை ஏற்று பிரதமர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி ஆட்சியில் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. தமிழகத்திற்கும் கர்நாடகாவுக்குமான காவிரிச் சிக்கலில் அப்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்தது. அதன் எதிர்ப்புக் குரலையும்–அந்த மாநிலத்தில் காங்கிரசுக்கு எதிரான வலிமையான எதிர்க்கட்சியாக இருந்த வி.பி.சிங்கின் ஜனதாதளத் தலைவர்கள் (எஸ்.ஆர்.பொம்மை, ராமகிருஷ்ண ஹெக்டே, தேவகவுடா உள்ளிட்டோரின்) குரலையும் மீறி நடுவர் மன்றம் அமைத்திட வைத்தவர் கலைஞர்.
ஈழத்திலிருந்து இந்திய அமைதிப் படையைத் திரும்பப் பெறச் செய்தது, ஒன்றிய அரசின் வேலை வாய்ப்புகளில் மண்டல் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டிக்கு அடித்தளமிட்டது என ஒன்றிய அரசில் கலைஞரின் பங்களிப்பு தொடர்ந்தது. தமிழகத்தின் சமூகநீதிக் கொள்கையை இந்தியாவின் தேசிய அரசியல் கொள்கையாக மாற்றிக் காட்டினார்.
1996இல் ஐக்கிய முன்னணி அரசு அமைந்தது. தேவகவுடா பிரதமர் ஆனார். அந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்தது முதல்வர் கலைஞர் தலைமையிலான தி.மு.க. அப்போது தனது தோழமைக் கட்சிகளான ஆந்திர முதல்வர் சந்திரபாபுநாயுடுவின் தெலுங்குதேசம், அசாம் முதல்வர் பிரபுல்லகுமார் மகந்தா தலைமையிலான அசாம் கண பரிஷத் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய ‘ஃபெடரல் ஃப்ரெண்ட்’ (திமீபீமீக்ஷீணீறீ திக்ஷீஷீஸீt) என்ற அமைப்பை உருவாக்கினார். அதன் காரணமாக, மாநிலங்களுக்கானத் திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்பட்டன.
1999இல் பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசை ஆதரித்தபோது, பா.ஜ.க.வின் மதவெறிக் கொள்கைகளை செயல்படுத்தவிடாமல் தடுக்கும் வகையில், குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை உருவாக்கி அதனடிப்படையில் மாநிலங்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுக்கச் செய்தவர் கலைஞர். 2004இல் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலும் சென்னைக்கான கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம், மாநிலங்களுக்கான கூடுதல் நிதி ஆகியவை நிறைவேற கலைஞர் வகுத்த வியூகங்களே காரணமாக அமைந்தன. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சி தடுக்கப்பட்டது.
2014இல் தி.மு.க.வுக்கு நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் கூட கிடைக்கவிலலை. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான அரசு இந்தியாவை சமஸ்கிருதமயமாக்கவும் மாநிலங்களில் இந்தியைத் திணிக்கவும் முயன்றபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியாவிலேயே வலிமையான முதல் குரல் ஒலித்தது கலைஞரிடமிருந்து தான். அந்தக் குரல் இந்தியா முழுவதும் ஒலிக்கும் என்பதை உணர்ந்த மோடி அரசு உடனே அந்த உத்தரவுகளைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
முதலமைச்சராக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினர் இல்லாத நிலையிலும் தன் நிலையில் உறுதியாக இருந்து மாநிலங்களின் உரிமைக்காக ஓயாமல் குரல் கொடுத்தவர் கலைஞர். அதனால்தான், அவரது குரல் ஒன்றிய அரசுகளை அசைத்தது. மாநிலத்தின் உரிமைகளைக் காத்தது. புதிய உரிமைகளைப் பெற்றுத் தந்தது.
இந்தியா என்பது மாநில அரசுகளின் ஒன்றியம் என்கிறது அரசமைப்புச் சட்டம். அந்த மாநிலங்கள் வலிமையாகவும் உரிமையுடனும் இருந்தால்தான் இந்திய ஒன்றியம் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயலாற்ற முடியும். மாநில உரிமைகளைப் பறிப்பது என்பது, இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும் செயல். கலைஞரின் உரிமைக்குரல், அனைத்து மாநில உரிமைகளையும் காத்தது. அதற்கேற்ப அவர், பல மாநிலத் தலைவர்களையும் ஒருங்கிணைப்பதில் முன்னின்றார். அந்த உணர்வும் துணிவும் இன்றைய ஆட்சியாளர்களுக்குத் தேவை.
உரிமைகளை வென்றெடுத்தவர்…
இந்தியாவின் சுதந்திர நாளுக்கு இந்தியத் தலைநகர் புது டெல்லியில் பிரதமர் கொடியேற்றுவதைப் போல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாநில முதலமைச்சர்கலும் அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் நடைபெறும் சுதந்திர நாள் விழாக்களில் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தார். அதற்கு முன்பு, சுதந்திர நாள், குடியரசு நாள் இரண்டுக்குமே ஆளுநர்கள் தான் கொடியேற்றும் நிலை இருந்தது.
இந்தியாவின் தேசியப் பாடலாக ஜனகணமன இருப்பதைப் போல, தமிழ்நாட்டுக்கான பாடலாக, தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை (மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய நீராருங் கடலுடுத்த) ஏற்று, அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் தேசிய கீதம் பாடப்படுவதைப் போல, நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை ஒலிக்கச் செய்தார்.
தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை தருவது தொடர்பான கேள்வி எழுந்தபோது, அதனால், தன் ஆட்சிக்கு ஆபத்து வரும் என்றாலும், எதிர்கொள்ளத் தயார் என்று சொன்னதோடு, அரசில் எப்பதவியும் வகிக்காத காந்தியாருக்கு தேசப்பிதா என்பதால் அரசு மரியாதை தந்தது போல், தமிழ்நாட்டுக்குத் தந்தை பெரியார் என்பதால், அதற்கு அரசு மரியாதை தருவதற்கு அரசுக்கு உரிமை உண்டு என்பதைச் செயல் மூலம் உறுதிப்படுத்தினார்.
மாநில அரசு மக்களுக்கு உணவுப் பொருள்களை விநியோகிக்க, ‘மாநில நுகர்பொருள் வாணிபக் கழகத்தை’ உருவாக்கியது. நிலச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தி ஏழை எளிய உழைக்கும் மக்களுக்குப் பயன்படும் வகையில் செய்த இத்தகைய செயல்களின் மூலம் பட்டினிச் சாவுகளை ஒழித்துக் கட்டினார்.
இந்திய அரசு, வருங்காலத் திட்டமிடலுக்காக, திட்டக்குழு வைத்திருப்பதைப் போல, தமிழ்நாட்டுக்கென்று மாநில திட்டக்குழுவை உருவாக்கி, தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கான திட்டங்களைத் தீட்டினார்.
தமிழ்நாடு அரசுக்கென ‘பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தை’ உருவாக்கினார். அதற்கென கப்பல்கள் வாங்கினார். எம்.வி.தமிழ் அண்ணா, எம்.வி.தமிழ் பெரியார் என்று கப்பல்களுக்குப் பெயரிட்டார்.
சிட்கோ, சிப்காட் என தொழில் வளர்ச்சிக்கான அமைப்புகளை உருவாக்கினார். குடிசை மாற்று வாரியம் கண்டார்.
ஈழத்தில் படுகொலைகளை நடத்திய இந்திய அமைதிப்படையை திரும்பப் பெற வலியுறுத்தி, அவ்வாறே திரும்பி அழைக்க வைத்தார். அப்படி வரும் ராணுவத்தினை முதலமைச்சராக நின்று வரவேற்க வேண்டும் என்று சொல்லப்பட்டபோது, அதை ஏற்காது, என் தொப்புள் கொடி உறவை சுட்டுக்கொன்றுவிட்டு வரும் படையை நான் போய் வரவேற்கமாட்டேன். இதனால் திமுக ஆட்சி கலைக்கப்பட்டாலும் கவலையில்லை என்று உறுதியாக நின்றார்.