Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

ஆசிரியர் பதில்கள் : எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்!

கே:  ப.சிதம்பரம் அவர்கள் கூறும் ஆலோசனைகளை பா.ஜ.க. அரசு ஏற்க மறுப்பது ஏன்?

மருதமலை, சிதம்பரம்.

ப: அவர் ‘காங்கிரஸ்காரர்’ மேலும் சிறந்த அறிவாளி என்ற (கட்சிக்) கண்ணோட்டமும் இவர்களது தன் முனைப்புமே காரணங்கள்.

கே: பொதுமக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டிய அரசாங்கம் கொடிய தொற்று நோயான கொரோனா வைரசை அழிக்க மக்கள் அனைவரும் ஒன்றுகூடிநின்று கைதட்டச் சொல்லுவதும் மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல்விளக்கு ஏற்றச் சொல்லுவதும் எதைக் காட்டுகிறது?

– அறிவுவிழி குருயுவராஜ், திருவள்ளூர்

ப: முன்பு அகில உலக

விஞ்ஞானிகள் மாநாட்டில் விடை பெற்று சென்ற அறிவியலார்கள் திரும்பவில்லை. இப்போது அறிவியலும் மெல்ல விடைபெறும் காட்சிகள் அவை!

என்ன சொல்வது ஆட்சி இயந்திரம் சிக்கியுள்ளதே என்பதால் பலரும் மவுனம் சாதிக்கின்றனர்.

கே: ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படும் அய்.ஏ.எஸ், அய்.பி.எஸ், அய்.எப்.எஸ் அதிகாரிகளின் பணியிடை நீக்கத்தை  மறுபரிசீலினை செய்வதில்லை என்று ஊழலை ஒழிக்க புதிய திருத்தம் வர இருப்பதாக   ஒரு பக்கம் கூறிக் கொண்டு,மறுபக்கம் வங்கிகளில் பல கோடி ரூபாய் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி மோசடி செய்பவர்களின் வங்கிக் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்து ஊழலின் மறு உருவமான மோசடிக்குப் பச்சைக் கொடி காட்டியுள்ளதே மத்திய அரசு?

மன்னை சித்து, மன்னார்குடி

ப: இரட்டை நாக்கு, இரட்டை போக்கு, இரட்டை வேடத்திற்கா இப்போது பஞ்சம்?

கே: கடவுள் சாயத்தை கொரோனா வெளுத்துக்கட்டிவிட்ட நிலையிலும் வேள்வி நடத்தும் ஆரிய பார்ப்பன அடாவடித்தனம் சரியா?

சுரேஷ், சைதை.

ப: பார்ப்பனருக்கு வெட்கம் எப்போதும் கிடையாது என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு!

 கே: புயல், வெள்ளம், நோய்களால் கடுமையாக பாதிக்கப்படும்போது கூட மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு உதவ மறுப்பதன் காரணம் என்ன?

அருள், அம்பத்தூர்.

ப: தமிழ்நாடு பிடிவாதமாக பெரியார் மண்ணாக இருப்பது அவர்களுக்கு தீராத எரிச்சலைத் தருவதால் இந்த பாரபட்சம்.

கே:   கொரோனா பாதிப்பைக் கணக்கில் கொள்ளாமல் மக்கள் தொகை அடிப்படையில் மத்திய அரசு மாநிலங்களுக்கு உதவித் தொகை அளிப்பது சரியா?

பாரதி, வேலூர்.

ப: சரியல்ல. பாதித்தவர்களுக்கு உடனடி சிகிச்சை முக்கியமா? முதலில் வந்தவர்கள் என்ற அளவுகோல் முக்கியமா? அதுபோன்றதொரு குடும்பக் கட்டுப்பாடு என்ற அரசின் கொள்கைக் கடைப்பிடித்ததற்குத் தர வேண்டியது தானே? தண்டனையை!

கே: மக்களை, குறிப்பாக, இளைஞர்களை, மாணவர்களை, அறிவுலகச் சிற்பிகளாக ஆக்கவேண்டிய, நாட்டின் முதல்வரே.. கையில் பல வண்ணக் கயிறுகளைக் கட்டிக்கொண்டிருப்பது பற்றி?

– நெய்வேலி க.தியாகராசன்,

கொரநாட்டுக் கருப்பூர்.

ப: முதல்வர் மட்டுமா? எல்லோரும் வட கயிறுகளைக் கட்டியுமா கொரோனா தாக்காமலிருக்க அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமே என்ற கவலை நமக்கு!

கே: கரோனா காலத்தில் மத்திய அரசு மாநில உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக கூட கிடையாது மொத்தமாக அவசரகதியில் பறிக்கிறதே எடுத்துக்காட்டாக இப்போது காவிரி மேலாண்மை மத்திய ‘ஜலசக்தி’யின் கீழ் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு விடிவுகாலம் கிடையாதா?

– செல்வம், பஹ்ரைன்

ப: எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம். துக்க வீட்டிலும் துணிந்து பொருள் அபகரித்தல் போன்ற கொடுமை இது!——