மஞ்சை வசந்தன்
ஊரின் கவனம் வேறு நிகழ்வில் இருக்கும்போது கொள்ளைக்காரனும், திருடனும் தன் வேலையை முனைந்து செய்வான். அப்படித்தான், ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டலில் மத்திய பா.ஜ.க. அரசு மக்களின் கவனம் கரோனா பற்றியதாக இருக்கும் போது, தங்களின் திட்டங்களை நிறைவேற்றுவதில் முனைப்புக் காட்டுகிறது.
ஆர்.எஸ்.எஸ். தன்னை வளர்த்துக் கொள்ளவும், தன் செயல்திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் எப்போதும் நேர்மையான, சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை சூழ்ச்சி, மோசடி, கபடநாடகம் என்று இப்படிப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுவதே அவர்களின் வழக்கம்.
ஆர்.எஸ்.எஸ்-அய் வளர்க்கக் கலவரங்களை அவர்கள் துண்டுவர். வதந்திகளைப் பரப்புவர். இந்துக் கோயில்களைச் சேதப்படுத்தி விட்டு இஸ்லாமியர்கள் மீது பழி போட்டு அவர்களைத் தாக்கிக் கலவரம் உண்டாக்கும். ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சிக்கான அடியுரம் கலவரமேயாகும்.
அதேபோல் அவர்களின் செயல்திட்டங்களை (அஜண்டாக்களை) நாடே சிக்கலில் இருக்கும்போது, இக்கட்டில் தவிக்கும் போது மக்கள் கவனம் தங்களைக் காத்து கொள்ளுவதில் திரும்பும் போது, ஒவ்வொன்றாய் நிறைவேற்றிக் கொள்வது அவர்களின் வழக்கம்.
இப்போது, கொரோனா தொற்றில் ஊரடங்கு, மக்கள் எல்லாவற்றையும் மறந்து உயர் அச்சத்தில், உயிர் அச்சத்தில் இருக்கும்போது, ஆர்.எஸ்.எஸ். வகுத்து கொடுக்கும் மக்கள் விரோத செயல் திட்டங்களை ஒவ்வொன்றாய் மத்திய பி.ஜே.பி. அரசு செய்து வருகிறது.
ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. ஆட்களுக்கு எப்போதும், மனித நேயம், தர்மம், கருணை இவற்றைப் பற்றி எல்லாம் கவலை கொள்வதில்லை. எப்போது வாய்ப்புக் கிடைக்குமோ அதைப் பயன்படுத்தி தங்கள் இலக்கை அடைவர். தங்கள் ஆதிக்கத்திற்கான அடிப்படைகளை அமைப்பர்.
அப்படி கடந்த இரண்டு மாத கொரானா ஊரடங்கில் அவர்கள் பல செயல் திட்டங்களை நிறைவேற்றியுள்ளனர்.
அவர்கள் சித்தாந்தமே சமுதாய மக்களை உயர்தட்டு, இடைத்தட்டு, கீழ்த்தட்டு என்று கட்டமைப்பது தான். அப்போதுதான் அவர்கள் உயர்நிலையில் ஆதிக்க சக்திகளாக இருக்க முடியும்!
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்றோரின் அரிய முயற்சியால் அடித்தட்டு மக்கள், இடஒதுக்கீடு, வங்கிக் கடன், மானியம், இலவசம் என்று பல்வேறு உரிமைகளைப் பெற்று கல்வி, வேலைவாய்ப்பு உற்பத்தி, பொருளாதாரம், மருத்துவம், தொழில்நுட்பம், என்று ஒவ்வொன்றிலும் மேலெழுந்து, ஆரிய பார்ப்பன ஆதிக்கத்தை சிறுகச் சிறுக அகற்றினர். ஒவ்வொரு துறையிலும் தங்கள் உரிமைகளை ஓரளவு பெற்று மேலெழுந்து வந்தனர்.
இதைக்கண்டு பொறுக்க இயலாத ஆரிய ஆர்.எஸ்.எஸ். கூட்டம், மக்களின் மேலெழுச்சிக்கு காரணமான கடன் உதவி, மானியம், இலவசம் இவற்றை நிறுத்திவிட்டது. இடஒதுக்கீட்டைச் சட்டப்படி ஒழிக்கமுடியாததால், குறுக்கு வழியில் மறைமுகமாக தனியார்மயமாக்கலின் வழி அதைத் தற்போது செய்யத் தொடங்கி விட்டனர்.
கொரானா காலத்தில் குறிப்பாக ஊரடங்கு காலத்தில் இவர்கள் ஒவ்வொரு நாளும் செயல்படுத்திடும் திட்டங்களை கூர்ந்து நோக்கினால் இந்த உண்மையை உணரலாம்.
பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துக் கட்டும் பா.ஜ.க. அரசு
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலை தடுக்க நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் நாடு முழுவதும் மக்கள் வேலை, வருமானமின்றி, உணவின்றி பெரும் அவதிப் பட்டு வருகின்றனர். ஆனால் இதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலைப்படாத மத்திய அரசு, ஊரடங்கை பயன்படுத்திக்கொண்டு சுயசார்பு திட்ட நான்காம் கட்ட அறிவிப்புகளை தில்லியில் மே 16 சனிக்கிழமையன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணையமைச்சர் அனுராக்தாக்குர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டனர் அதில்,
நிர்மலா சீதாராமன்
நிலக்கரி இறக்குமதியை குறைத்து உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வணிக ரீதியிலாக நிலக்கரி எடுப்பதற்கு முதல்கட்டமாக 50 சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளன. ஏராளமான நிலக்கரி சுரங்கங்கள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதால் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. 500 கனிமச்சுரங்கங்கள் வெளிப்படையாக ஏலம் விடப்படும். நிலக்கரி படுகை மீத்தேன் ஏலம் விடப்படும். புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் மின்விநியோகம் தனியார்மயப்படுத்தப்படும்.
மருத்துவமனை, பள்ளிகளைக் கட்டமைப்பதில் தனியார் முதலீடுகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும்.
சமூகக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு சுமார் ரூ.8,100 கோடி ஒதுக்கப்படும்.
விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்புக்கும் முக்கியத்துவம்.
செயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் பங்களிப்பை
ஊக்குவிக்கத் திட்டம்.
இஸ்ரோவின் கட்டமைப்பு வசதிகளைத் தனியாரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதி.
மருத்துவத்துறையில் பயன்படும் கதிரியக்கத் தனிமங்களைத் தயாரிப்பதில் தனியார் பங்களிப்புக்கு அனுமதி.
புற்றுநோய் உள்ளிட்ட நோய்களைக் குணப்படுத்துவதில் கதிரியக்கத் தனிமங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
உணவுப் பதப்படுத்தும் துறையில் பயன்படுத்தப்படும் கதிரியக்க அய்சோடோப்பு களை உருவாக்க தனியார் பங்களிப்புக்கு அனுமதி. இவ்வாறு நிதி அமைச்சர் கூறினார்.
தனியார்மயமும் சுயசார்பும்
விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்பு என்பது, ஒட்டுமொத்த தேசத்தின் விண்வெளி குறித்த ஆய்வுகள் தனியாரை நம்பியிருக்கும் சூழல்கள் ஏற்பட வழிவகுக்கும். அதேபோல கனிம வளங்களில் ஒன்றான நிலக்கரி சுரங்கத் துறையை தனியார்மயமாக்குதல் என்பது தற்போதைக்கு வேண்டுமானால் அதன் மூலம் வருமானத்தை தேசம் பெறலாம். ஆனால் கடந்த கால அனுபவம் என்பது நிலக்கரியை வெட்டி எடுக்க உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் சில குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலக்கரி சுரங்கத்தை ஆழப்படுத்துவதில்லை என்கிற அடிப்படை ஒப்பந்தத்தை மீறி அதிக அளவில் நிலக்கரியை எடுத்ததன் மூலம் 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முறைகேடான வழியில் லாபம் சம்பாதித்த தகவல்கள் எல்லாம் வெளியாகின.
தற்போது மீண்டும் நிலக்கரி சுரங்கங்களை அதிக அளவுக்கு தனியார்மயமாக்குவது என்பது, தெரிந்தே செய்கின்ற தவறாகத்தான் இருக்கிறது. கனிமவளங்களை தனியார்மயமாக்கிய தேசம், சுயசார்புடன் இயங்கும் என்பது ஒருபோதும் நடக்காத செயலாகும். பொதுச் சுகாதாரத்தை முழுவதுமாக தனியார்வசம் ஒப்படைத்த அமெரிக்கா தற்போதைய கொரோனா பேரிடரை சமாளிக்க இயலாமல் தடுமாறியது. அங்கு தனியார் மருத்துவமனைகளில், கொரோனா பரிசோதனைக்கு மட்டுமே நான்கு லட்சம் பணம் செலவாகிறது என அமெரிக்க மக்களே இப்போது கண்ணீர் விடுகிறார்கள். ஆனால் பொதுச் சுகாதாரம் மேலோங்கி இருக்கும் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மட்டுமல்ல தினம் தோறும் ஆயிரக்கணக்கான மக்களை கொரோனா நோய்க்கான சிகிச்சையளித்து இலவசமாகவே மக்களைப் பாதுகாக்கிறது.
அதேபோல பொதுப் போக்குவரத்துகளில், அரசுப் போக்குவரத்து மட்டும்தான் பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவிகள் செய்யும். கடந்த காலங்களில் சென்னையை வெள்ளநீர் சூழ்ந்தபோது அரசுப் போக்குவரத்து ஓட்டுநர்கள் இடுப்பளவு தண்ணீரிலும் மக்களின் பயணத்திற்கு துணை நின்றார்கள். தொலைதொடர்பில் பி.எஸ்.என்.எல். மட்டுமே தனித்து செயல்பட்டது. இவைகள் எல்லாமே நமக்கு சமீபத்தில் கிடைத்த அனுபவங்களாகும். கடந்த காலங்களில் வணிகம் செய்யத்தான் வெள்ளையர்கள் இங்கு வந்தனர். பிறகு இந்த தேசத்தையே ஒட்டுமொத்தமாக கொள்முதல் செய்து இந்திய மக்களை அடிமைப்படுத்தினார்கள்.
அடிமைத்தளத்தில் இருந்து மீள, இந்திய மக்கள் 200 ஆண்டுகளுக்கு மேல் போராடித்தான் சுதந்திரம் பெற்றனர். சரித்திரம் மீண்டும் திரும்புவது போல இப்போதைய நிலை இருக்கிறது. செல்வம் கொழிக்கும் துறைகளை தனியார் வசமாக்குவது மூலம் பன்நாட்டு தொழில் அதிபர்களின் வணிகத்திற்கு நாம் சிவப்புக் கம்பளத்தை விரிக்கிறோம்.
மனிதவளம் மிக்க இந்தியாவில் வேளாண்மைக்கான நிலங்கள் அதிக அளவில் இருப்பதும், உழைப்பதற்கு விவசாயிகள் தயாராக இருப்பதும், வேறு எந்த நாட்டிற்கும் கிடைக்காத வாய்ப்பாகும். எனவே விவசாயிகளின் நலன்களைச் சிந்தித்து அதற்கேற்ற வகையில் திட்டங்கள் தீட்டுவதுதான் உண்மையான சுயசார்பு கொண்ட இந்தியாவாக மலர்வதற்கான வழிகளாகும்.
எம்.பி. நிதி மறுப்பு
கொரோனா நெருக்கடியை பயன்படுத்தி மோடி அரசு தன்னுடைய பல்வேறு நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றி வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு வருடங்களுக்கு (2020—21, 2021- – 22) நிறுத்தி வைப்பதாக தன்னிச்சையாக அறிவித்தது மோடி அரசு. மக்களவை உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களது மாநிலங்களில் மேம்பாட்டு பணிகளுக்குத்தான் தங்களது
தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்துகின்றனர்.
கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுப்பினர்கள் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியை மருத்துவமனை மற்றும் சுகாதார திட்டங்களுக்கு ஒதுக்கினர். இதனால் மாநிலஅரசுகளின் சுமை ஓரளவு பகிர்ந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது.
இந்நிலையில் ஏற்கனவே இரண்டு ஆண்டு களுக்கான நிதியை நிறுத்தி வைத்த மோடி அரசு தற்போது 2019- – 20 ஆம் ஆண்டுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியிலும் கை வைத்துள்ளது. இதற் கான நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கப்பட்ட நிலையில் இந்த நிதியும் ஒதுக்கப்படுவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. இது முற்றிலும் அநீதியான ஒன்றாகும். கொரோனா நோய்த் தொற்று மற்றும் ஊரடங்கினால் ஏற்பட்டுள்ள பொருளாதார முடக்கத்தைச் சமாளிக்க மாநில அரசுகள் கேட்கும் நிதியை ஒதுக்க மத்திய பாஜக கூட்டணி அரசு மறுக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை மோடிஅரசு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது. மத்திய ஆட்சியாளர்களின் தயவில் நாட்களை நகர்த்தி வரும் எடப்பாடி பழனிசாமி அரசு இதை தட்டிக் கேட்க திராணியின்றி திகைத்து நிற்கிறது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு வர வேண்டிய ஜிஎஸ்டி பாக்கி 12 ஆயிரம் கோடி, திட்டமானியம் ரூ.10 ஆயிரம் கோடி போன்றவற்றை தர மத்திய அரசு மறுக்கிறது.
இதை மக்களிடம் எடுத்துச் சொல்லக்கூட தைரியமின்றி தமிழக அதிமுக அரசு, ஒட்டுமொத்த சுமையையும் மாநில மக்கள் மீது மடைமாற்றம் செய்கிறது.
ஊரடங்கால் முடங்கிக்கிடக்கும் தொழில் துறையை ஊக்கப்படுத்துவது என்ற பெயரில், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தும் நடவடிக்கைகளில் மாநில அரசுகள் இறங்கியிருப்பது மிக மோசமான நடவடிக்கை.
தொழிலாளர் நலச் சட்டங்களைச் செயலிழக்கச்செய்தல் என்பது சுத்தமான பணியிடம், கழிவுகளைப் பாதுகாப்பான முறையில் வெளியேற்றுதல், காற்றோட்ட வசதி, கழிப்பறை வசதிகள் என்று மிக அடிப்படையான தொழிலாளர் உரிமைகளுக்கும்கூட முடிவுகட்ட முனைவதுதான். தற்போதைய மோசமான பொருளாதார நிலையால், ஏற்கனவே தொழிலாளர்கள் பாதுகாப்பின்மையை உணரும் நேரத்தில், தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்துவது அவர்களுக்குக் கிடைத்துவரும் குறைந்தபட்சப் பாதுகாப்புகளையும் இல்லாமலாக்கிவிடும்.
காவேரி மேலாண்மை ஆணையம்
கரோனாவால் தேசமே உறைந்துகிடக்கும் நேரத்தில், தமிழகத்தின் ஜீவாதாரமான காவிரிப் பிரச்சினையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திடீர் முடிவை மத்திய அரசு எடுத்திருக்கிறது. தமிழ்நாட்டின் நீண்ட சட்டப் போராட்டத்தின் முடிவில் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம் ‘ஜல்சக்தி’ எனப்படும் மத்திய நீர்வளத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ‘இது சாதாரண அலுவல் நடைமுறைதான்’ என்று தமிழக அரசும் அவசர அவசரமாக வழிமொழிந்திருக்கிறது.
காவிரிப் பிரச்சினை என்பது 31 மாவட்டம் சார்ந்த விவசாயம் மற்றும் 5 கோடி மக்களின் குடிநீர் பிரச்சினை ஆகும். அதில், தண்ணீர் ஓடாவிட்டால் ஏற்கெனவே கீழே போய்க்கொண்டிருக்கும் நிலத்தடி அற்றுப்போகும்.
ஏனைய மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்ப் பிரச்சினைகளில் மத்திய அரசு இப்படிப் பாரபட்சத்துடன் நடந்துகொண்டதாகத் தெரியவில்லை. அதனால்தான், காவிரி மேலாண்மை ஆணையமானது, மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பது நமக்கு அச்சத்தையும், கவலையையும் அளிக்கிறது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மீறி, மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு, மீண்டும் ஒரு சட்டப் போராட்டத்தை நோக்கி நம்மைத் தள்ளியிருக்கிறது.
அதிர்ச்சியளிக்கும் மின் திருத்தச் சட்டம்
மின்சார (திருத்த) சட்டம் 2020 வரைவை ஏப்ரல் 17-ஆம் தேதி, தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது மத்திய மின்சார அமைச்சகம். இதில் உள்ள பிரச்சினை என்னவென்றால்,
ஏற்கெனவே, மத்தியிலும், மாநிலங்களிலும் மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் இருக்கின்றன. இந்தநிலையில், மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில், மின்சார ஒப்பந்த அமலாக்க ஆணையம் என்ற புதிய அமைப்பை ஏற்படுத்துவதற்கு இந்த வரைவு வழிவகை செய்கிறது. இதுதான் மிக ஆபத்து. இது நிறைவேற்றப்பட்டால், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு மின்சாரம் விற்பனை செய்யலாம். இங்கே பசுமை மின்சாரத்தை உற்பத்தி செய்வதால் ஏற்படுகிற தண்ணீர் பற்றாக்குறையையும் நிலக்கரி பயன்படுத்துவதால் ஏற்படும் காற்று மாசையும் நாம் அனுபவிக்க வேண்டிவரும்.
மின்சாதனங்களை வெளிநாடுகளிலிருந்து வாங்கலாம் என்கிறது இந்த வரைவு. அப்படியொரு நிலை வந்தால், மின்உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான சாதனங்களைத் தற்போது தயாரித்துக்கொண்டிருக்கும் பெல் (பாரத மிகுமின் நிறுவனம்) உள்ளிட்ட நிறுவனங்களின் நிலை கேள்விக்குறியாகும்.
மின் உற்பத்திக்கு ஆகிற செலவு மின்கட்டணமாக மாறும்போது, அந்த முழுக்கட்டணத்தையும் ஏழை மக்களால் கொடுக்க முடியாது. ‘ஏழை மக்கள் பயன்படுத்தும் மின்சாரத்துக்கான கட்டணத்தின் ஒரு பகுதியை தொழிற்சாலைகள் ஏற்க வேண்டும்’ என்ற நியதி பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் பெயர்தான் குறுக்கு மானியம். சமூகநீதி மற்றும் சமூக மேம்பாட்டின் அடிப்படையில் இது கொண்டுவரப்பட்டது. இதை நீக்க வேண்டும் என்பது பெருமுதலாளிகள் நீண்டகால கோரிக்கை. அவர்களின் கோரிக்கை இந்த வரைவில் இடம்பெற்றுள்ளது. இது நிறைவேற்றப்பட்டால், வீடுகளுக்கான மின்கட்டணம் உயரும். அதேபோல, ‘விவசாயத்துக்கு வழங்கப்பட்டுவரும் இலவச மின்சாரம் ரத்தாகும்’ என்று விவசாய சங்கங்கள் கொந்தளிக்கின்றன.
இராமர் கோவில்:
இந்திய பொருளாதாரம் படுபாதாளத்தில் வீழ்ந்துள்ள சூழலில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காவி அரசு, கோயில் கட்டுவதில் வேகமாக இறங்கியுள்ளது. அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதற்கு பங்களிக்கும் நன்கொடையாளர்களுக்கு மத்திய அரசு வரி விலக்கு அளித்துள்ளது. மே 8- ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், கட்டி எழுப்பப்பட உள்ள, ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த சேத்திரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவும், புகழ்பெற்ற பொது வழிபாட்டுக்கான இடமாகவும் உள்ளதாக குறிப்பிட்டு, மத்திய நேரடி வரி வாரியம் வகைப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 ஜி இன் துணைப்பிரிவு (2)ன் படி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது 2020-21 நிதியாண்டில் இருந்து அறக்கட்டளைக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு 50% அளவிற்கு வரி விலக்கு அளிக்க அனுமதிக்கும். வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 80 ஜி குறிப்பிட்ட நிவாரண நிதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகளை, வரிவிதிப்பு வருமானத்திற்கு தகுதி பெறுவதற்கு முன்பு அவர்களின் மொத்த வருமானத்திலிருந்து விலக்குகளாகக் கருத அனுமதிக்கிறது. இந்த சலுகை அனைத்து மதத்திற்கும் விதிக்கப்படவில்லை.
தமிழர் தலைவர் அறிக்கை
இந்த இக்கட்டான சூழலில் உரிமைகளைப் பறிக்கப்படுவது குறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், ‘‘ஊரடங்கு சூழலை பயன்படுத்தி ஹிந்துத்துவாவை மறைமுகமாகத் திணிக்கும் சன்னமான வேலையும் நடை பெற்று வருகிறது. இராமாயணத் தொடரை தூர்தர்ஷன் என்ற மத்திய அரசு தொலைக் காட்சியில் ஒளிபரப்பி, வரிசையாக புராணங்களைப் பரப்பி, பக்திப் போதையை உருவாக்கிடும் இம்முயற்சி – அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பற்ற கோட்பாட்டிற்கு முரணானதல்லவா? ‘‘இதன்மூலம் மக்களுக்கு மயக்கம் – போதை தருகிறார்கள்’’ என்று பிரபல உச்சநீதிமன்ற வழக்குரைஞரும், மனித உரிமைப் போராளியுமான பிரசாந்த் பூஷன் பேசியதற்கு எதிராக, அவர்மீது குஜராத் அரசு வழக்குப் போட்டு, உச்சநீதிமன்றம் அவரைக் கைது செய்வதிலிருந்து தடுத்து, பாதுகாப்பு தந்துள்ள செய்தி இன்றைய ஏடுகளில் வெளி வந்துள்ளதே, இது அரசுகளுக்குப் பெருமை தருவதா?
மேலும் மத்திய அரசு சார்பாக கரோனா தடுப்புக்கு ‘கங்கா ஜலம்’ தரலாம் – புனித கங்கை நீர் – அதனைக் குணப்படுத்த உதவுமா என்று ஜலசக்தி- நீர் மேலாண்மை அமைச்சகத்தின் ஓர் அங்கமான கங்கையைத் தூய்மைப்படுத்தும் தேசிய மிஷன் (IVMCG) ICMR என்ற இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திற்கு ஒரு Clinical Trial செய்து, கரோனா தொற்றைக் குணப்படுத்த உதவுமா என்று ஆய்வு செய்யுங்கள் என்று கேட்டுள்ளது. இச்செய்தி அன்று (1.5.2020) ‘ஹிந்து’ ஆங்கில நாளேட்டின் 11 ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ளது, வேடிக்கையானதும்கூட. கங்கையைச் சுத்தப்படுத்த இதுவரை 2000 கோடி ரூபாய்க்குமேல் செலவழித்த நிலையில், உச்சநீதிமன்றமே, முன்பு மத்திய அரசுத் துறையைப் பார்த்து கடுமையான கேள்வி எழுப்பிய நிலையில், இந்த சூழ்நிலையில் இப்படி ஒரு முயற்சி தேவையா?
மாநில உரிமைகள் பறிப்பு
இந்த வேதனைமிக்க சூழ்நிலையில், அரசமைப்புச் சட்டப்படி, மாநில அரசுகளுக்குரிய அதிகாரங்களும் – உரிமைகளும் பறிக்கப்படும் கொடுமையும், கரோனா கோரத் தாண்டவத்தில் மற்றொரு புறம் மத்திய அரசால் அரங்கேறிக் கொண்டுள்ளது.
பொது சுகாதாரம் என்பது மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் உள்ளது என்பதே மறந்து போகும் நிலையில், இந்த கரோனா காலத்தில் மத்திய அரசே எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு ஆணை போடுவது ஒருபுறம்; மறுபுறத்தில் மாநிலங்களுக்குரிய நிதி உதவிகளைக் கூட போதிய அளவில்கூட தராமல், ஏன், ஜி.எஸ்.டி. பாக்கி நிலுவைத் தொகைகளைக் கூடத் தராமல், மாநில அரசுகள் மத்திய அரசை நோக்கி கை பிசைந்து, வாய் பிளந்து நிற்கும் அவல நிலைதான் உள்ளது!
தட்டிக் கேட்க தமிழக முதல்வர் தயங்குவது ஏன்?
தெலங்கானா முதல்வர், ‘‘எங்களுக்குப் போதிய நிதி உதவி செய்யுங்கள்; இல்லையேல் எங்களுக்குத் தனியே நிதி உருவாக்கும் வாய்ப்பை – அதிகாரத்தையாவது அளியுங்கள்’’ என்று கேட்டுள்ளார். ‘‘மத்திய உள்துறை அமைச்சர், மேற்கு வங்காள அரசின் கரோனா தடுப்பு நடவடிக்கையில் சாட்டிய குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமுமில்லை; நிரூபிக்க முடியுமா?’’ என்றெல்லாம் அங்குள்ள ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக எழுந்து நின்று உரத்து பதில் அளிக்கிறார்கள்!
சட்டீஸ்கர் முதல்வர், எங்களுக்குப் போதிய நிதியைத் தாருங்கள் என்று நேற்று முன்தினம் கூட கூறுகிறார்.
புதுவையில் ஒரு துணை நிலை ஆளுநர்மூலம், அங்குள்ள மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக ஆளும் முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் தலைமையில் உள்ள அரசுக்கு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இடைஞ்சல் செய்வதை முதல்வர் கண்டித் துள்ளார். நோய்த் தொற்றை அறிவது, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை போன்ற வண்ணங்களை அடையாளப்படுத்துவது போன்றவற்றை மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு விட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்!
மாநில அரசுகளின் உரிமையை அப்பட்டமாகப் பறித்து, மின்சாரத் துறையையே தனியார் மயமாக்கி, ஏழை விவசாயிகள் பெறும் இலவச மின்சாரத்தையும் பறிக்கும் நோக்கில், புதிய மின்சாரத் திருத்தச் சட்ட மசோதாவை இந்த கரோனா நெருக்கடியிலும் கொணர்ந்திருப்பதை, தமிழ் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் எதிர்த்து அறிக்கை விட்ட பிறகுதான், ஏதோ மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசின் முதல்வர் டில்லிக்குக் கடிதம் எழுதி, தள்ளி வைக்கச் சொல்லுகிறார்; கைவிடுங்கள் என்று வற்புறுத்திச் சொல்லும் துணிவு ஏனோ அங்கு வரவில்லை!
மத்திய அரசின் தந்திரம்!
காவிரி நதிநீர் ஆணையத்தினை மத்திய ஜல்சந்தி அமைச்சகத்தின் ஆளுமையின்கீழ் கொண்டு சென்று, மத்திய கெசட் அறிவிப்பு வந்த பின்புதான் ஊரடங்கில், ‘வாயடங்கும்’ என்ற தந்திரத்தை மத்திய அரசு கையாளுவதுபோல அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா விவசாயிகளின் நலனைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, மத்திய அரசின் இந்தச் செயலுக்கு அது நிர்வாக ஒழுங்குமுறைதான் என்று சப்பைக் கட்டுக் கட்டி, வியாக்கியானம் செய்கிறது.
மாநில உரிமைகள் பலி பீடத்தில் உள்ளன!
மாநில உரிமைகள் – அரசமைப்புச் சட்டப்படி உள்ள உரிமைகள் – இந்தியா ஏக ஒற்றை ஆட்சிபோல – ஒரு கூட்டு ஆட்சி – ‘‘யூனியன் ஆஃப் ஸ்டேட்ஸ்’’ என்பதையே அகற்றி விடுவதாகவே ஒவ்வொரு நாளும் இத்தகைய புதிய புதிய நடவடிக்கைகள் மூலம் மாநில உரிமைகள் பலி பீடத்தில் உள்ளன! அந்தந்த மாநில முதல்வர்கள் உள்பட பலரும் தொழிலாளர்களை அந்தந்த மாநிலத்திற்கு அனுப்பும் செலவு – ரயில்வே கட்டணத்தை மத்திய அரசே, பிரதமர் துவக்கி சேகரிக்கும் புதிய ‘‘பிரதமர் கேர்ஸ்’’ என்ற நிதியிலிருந்துகூட தராமல், மாநிலங்களே தர வேண்டும் என்பது எவ்வகையில் கருணையாகும் என்று கேட்கிறார்கள்?
தமிழ்நாடு அரசு தங்களுக்குள்ள உரிமைகளை கூட வலியுறுத்தி கேட்க வேண்டாமா”, என்று கூறியுள்ளார்.
கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி தனது செயல் திட்டங்களை நிறைவேற்ற ஆர்.எஸ்.எஸ் முயலுவது, மக்கள் போராட்டத்திற்கு வழிவகுக்கும் எனவே, மக்கள் விரோத அறிவிப்புகளை உடனே திரும்பப்பெற வேண்டும். மானியம், இலவசம் இவற்றை நீக்குவது எளிய மக்கள் விரோத செயலாகும். தனியாரிடம் எல்லாவற்றையும் ஒப்படைப்பது சமூகநீதி, இடஒதுக்கீடுக்கு எதிரானதாகும், இவற்றை அரசு திரும்பப் பெறாவிட்டால், எதிர்க்கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகளின் தலைவர்கள் ஒன்றுகூடி அடுத்தக்கட்ட நடவடிக்கையில் உடனே ஈடுபட வேண்டியது கட்டாயம்!