தந்தை பெரியார்
இந்த 5,6 நாள்களில் தமிழ் நாட்டில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றிருக்கின்றன. இவைகளில் பெரும்பகுதி பண்டைய முறைப்படியே இருக்கலாம். அதாவது, பெற்றோர்களும் மற்றவர்களும் மாட்டுச் சந்தையில் மாடு வாங்கி ஜோடி சேர்ப்பதுபோல் ஜோடி சேர்க்கப்பட்டவைகளாயிருக்கும். இன்னும் சில பொறுப்பற்ற ஒருவனைக் கொண்டு ‘ஜோதிடம்’ என்ற பெயரால் ஜோடி சேர்க்கப்பட்டதாயிருக்கும்.
பெரும்பாலான, ஏன் 1000க்கு 999 திருமணங்கள் அவரவர் ஜாதிக்குள்ளாகவே நடைபெற்றிருக்கும். பாதியாவது, பார்ப்பனிய (ஆரிய) முறைகளின்படி நடந்தவைகளாயிருக்கும். கிட்டத்தட்ட எல்லாத் திருமணங்களும் முகூர்த்த நாளில் ‘நல்ல வேளையில்’ நடந்தவைகளாகவே இருக்கும்.
பல திருமணங்கள் பார்ப்பனியத்தை நீக்கியும் நடைபெற்றிருக்கும் என்பது உண்மையே; ஆனால், இதுமட்டும் போதாது. நம் இனம் (சமுதாயம்) ஒன்றாக வேண்டுமானால், நம்மிடையே நுழைக்கப்பட்ட ஜாதி ஒழிந்தே தீரவேண்டும். ஜாதி எப்படி ஒழியும்? அவரவர் தம் தம் அக்காள் மகளையும், அத்தை மகளையும் மணஞ்செய்து கொண்டேயிருந்தால், ஜாதி ஒழிந்துவிடுமா? நாடார் நாடாரையும், வன்னியர் வன்னியரையும், நாயுடு நாயுடுவையும், அய்யர் அய்யரையும், முதலியார் முதலியாரையும், ஆதிதிராவிடர் ஆதிதிராவிடரையுமே திருமணஞ் செய்துகொண்டிருந்தால், இன்னும் பத்து நூற்றாண்டுகள் ஆனாலும் ஜாதி ஒழியப்போவதில்லை. கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் ஜாதியில்லாமல் பிறக்கின்றனர். அவர்களை எந்த ஜாதியாருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆதலால், சமுதாயப் புரட்சியில் உண்மையான ஆர்வமும், துணிவும் கொண்டவர்கள் கலப்பு மணத்தையே செய்துகொள்ள வேண்டும்.
வெகு அருமையான ஜோடிகள் இன்று ஒன்று சேர முடியாமலிருப்பதற்கு இந்தப் பாழும் ஜாதியே குறுக்கு வேலியாக நிற்கிறது. ”நாங்கள் உயர்ஜாதி கிறிஸ்தவர்கள்; அவர்கள் நாடார் கிறிஸ்தவர்கள் ஆதலால் நாங்கள் இருவரும் எப்படி மணஞ்செய்து கொள்வது?” என்று கேட்கிறவர்கள் கிறிஸ்துவர்களிலேயே இருக்கிறார்களென்றால், ஆரிய (இந்து) மதத்திலுள்ளவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
”ஜாதித் தடை காரணமாகத் திருமணம் செய்துகொள்ள முடியாமலிருப்பவர்களுக்கு, சர்க்கார் தனிச் சலுகை காட்டி, பெற்றோர் சொத்திலும் உரிமை பெறும்படியாகச் செய்வோம்” என்று நாளைக்கு ஒரு சட்டம் வருமேயானால் ஒரே மாதத்தில் இந்நாட்டில் ஓர் இலட்சம் திருமணங்கள் நடைபெறுவதைக் காணலாம். ‘இன்று கலப்பு மணங்கள்’ இரண்டொன்று நடந்து வருவது போதாது. ஏராளமாக நடைபெற வேண்டும். கலப்பு மணத் தம்பதிகள் மாநாடு என்ற ஒன்றைக் கூட்டினால், தமிழ் நாட்டில் பத்தாயிரம் ஜோடிகளாவது வரவேண்டும். சென்ற வாரத்தில் சென்னை டாக்டர் சடகோப (முதலியார்) அவர்களின் மகன் (டாக்டர்) ஜாதி – மதம் – மொழி ஆகிய மூன்றிலும் மாறுபட்ட ஒரு பெண்ணைத் திருமணஞ் செய்துகொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு சென்னைப் பிரமுகர்களில் வராதவர்கள் நூறுபேர் கூட இருக்காது. இதுபோன்ற கலப்புத் திருமணங்கள் ஆயிரக்கணக்கில் நடைபெற வேண்டும். அப்போதுதான் நம் சமுதாயத்தில் நிரந்தர அய்க்கியம் ஏற்படும்.
இனி அடுத்தபடியாகத் திருமணஞ் செய்கின்ற முறை பற்றியும் ஒரு வார்த்தை. பார்ப்பனப் புரோகிதனை வைத்து நடத்துகின்ற திருமணங்கள் தமிழர்களிடையே மிகக் குறைந்து விட்டது. சட்டிப்பானை, குச்சிப்புகை, குத்துவிளக்கு ஆகிய பொருளற்ற கண்மூடிச் சடங்குகளும் விரைவாக மறைந்து கொண்டிருக்கின்றன. நமக்குத் தெரியாத ஓர் அந்நிய மொழியில், நம் வீட்டில் தண்ணீரும் அருந்த மறுக்கின்ற ஓர் அந்நியன் எதை எதையோ உளறுவதை மந்திரம் என்று நம்புகின்ற மூடர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
ஆனால், திருமண நாளும் நேரமும் மட்டும் மாறவில்லை. ‘நல்ல நாள்’ என்றுகூறி நம் வசதிக்குக் ‘கெட்ட நாளிலேயே’ திருமணங்கள் நடைபெறுகின்றன. விடுமுறை நாட்களில் திருமண நிகழ்ச்சியை வைத்துக்கொள்கிற அற்பத் துணிவு கூட நமக்கேற்படவில்லை. நேரமும் பஞ்சாங்கத்தில் கூறப்படும் ‘முகூர்த்த வேளை’யாகவே இருக்க வேண்டியிருக்கிறது.
சென்ற ஆண்டில் சென்னை அமைந்தகரையில் ‘இராகுகாலம்’ என்று கூறப்படுகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஒரு திருமணம் நடைபெற்றது. சென்ற வாரத்தில் டாக்டர் பி.வரதராஜூலு நாயுடு அவர்களின் திருமகனுக்கு மாலை நேரத்திலேயே திருமணம் நடந்தது.
எனவே, இந்த மாதிரியான மாறுதல்களும் நம் திருமணங்களில் அவசியமாகும். இல்லாத வரையில் நம் மனத்தில் படிந்துள்ள பழமைப்பாசி முற்றிலும் போகவில்லை என்றே கூறவேண்டும். துளியாவது துணிவும் உணர்வும் உடைய இளைஞர்கள் அனைவரும் மேற்கூறிய மாறுதல்களைச் செய்து பயங்காளிகளுக்கு வழிகாட்டிகளாக இருப்பார்களென்று எதிர்பார்க்கிறோம்.
– ‘விடுதலை’ தலையங்கம், 01.09.1950