நிகழ்வுகள் : கரோனா பொது முடக்கத்திலும் முடங்காத கழகப்பணி

ஏப்ரல் 16 - மே 15 2020

உலகம் முழுதும் கரோனா வைரஸ் பரவலால் மக்களின் செயற்பாடுகள் முற்றிலுமாக வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருக்கும் இத்தருணத்திலும் திராவிடர் கழகத்தின் இயக்கச் செயற்பாடுகளில் சிறு தொய்வும் இல்லாமல் இல்லங்களில் அடைபட்டிருக்கும் இயக்கத் தோழர்களின் உள்ளங்களுக்கு உற்சாகச் சிறகளிக்க சிறப்பான ஏற்பாடாக அமையப்பெற்றது அறிவியல் கொடையளித்த காணொலிக் காட்சி தொழில்நுட்பம்.

தலைமைச் செயற்குழு உறுப்பினர்களுடன் கலந்துரை

இந்தியா முழுவதும் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு நிலை உள்ள நிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஏப்ரல் 10 அன்று மாலை திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக முக்கியத் தோழர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதன்முறையாக உரையாடினார்.

ஊரடங்கு காலகட்டத்தில் இயக்கத் தோழர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகளை 21 அம்சங்கள் கொண்ட பட்டியலாக ஆசிரியர் அவர்கள் மார்ச் 30 அன்று ‘விடுதலை’யில் அறிக்கையாக வெளியிட்டதையடுத்து; மிகக் குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயலாற்றவேண்டிய இக்கட்டான சூழலிலும் நான்கு பக்கங்கள் கொண்டதாக ‘விடுதலை’ நாளிதழ் எவ்வித தங்கு தடையுமின்றி மக்களுக்கு கிடைக்கப்பெற இணையத்தின் வாயிலாகவும் கட்செவி (Whatsapp) மூலமாகவும் முன்பைக்காட்டிலும் துரிதமாக கிடைக்கப்பெற்றுவருவதையும் இயக்கங்களைக் கடந்து இளைஞர்களின் கைகளுக்கும் சென்று வரவேற்பு பெற்றுவரும் இனிய செய்திதையும் கழகத் தோழர்கள் ஆசிரியர் அவர்களிடம் பகிர்ந்து மகிழ்ச்சியுற்றனர்.

பின்னர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,

செயலாக்கத்திற்கு முடக்கம் ஏற்பட்டிருக்கும் இத்தருணத்திலும் அறிவூக்கத்திற்கு முடுக்கம் தரும் வகையில் நூல்களை ஆய்ந்து படிப்பது, குறிப்பெடுப்பது, தான் சுவைத்த சிறந்த அரிய புதிய செய்திகளை ‘விடுதலை’ வாயிலாக மக்களுக்கும் பகிர்வது;

இயல்புநிலை முற்றிலும் அற்றுப் போயிருக்கும் நெருக்கடியான காலகட்டத்தில் சாமானிய – அன்றாடம் உழைத்து உணவருந்தும் நிலையில் உள்ள விளிம்புநிலை மக்களின் பொருளாதார நிலையை எவ்வாறு அரசுக்கு வலியுறுத்துவது;

தந்தை பெரியார் தன் வாழ்நாளெல்லாம் “சிக்கென பிடித்த” சிக்கன் வாழ்வு முறையின் அவசியத்தை அனைவரும் உணர்ந்து செயலாற்றுவது;

உடலும் உள்ளமும் உற்சாகமிழக்காமல் உடல்நலம் காக்க உடற்பயிற்சி – நடைப்பயிற்சி மேற்கொள்வதின் இன்றியமையாமையையும்;

உலகையே சூழ்ந்த பிணியாக கரோனா பீடித்திருந்தாலும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு வழி பயணிக்கும் கருஞ்சட்டையினருக்கு மன வலிமை குன்று குறையாமல் பெருக வேண்டிய அவசியத்தையும்;

கழகத் தோழர்களிடையே தொடர்ந்து தொடர்பில் இருப்பது; ‘விடுதலை’ நாளிதழை சீராக பரப்புவது; தோழர்கள் செயல்படுத்த வேண்டிய ஆசிரியரின் 21 அம்ச பணிகளை சீர்மையுடன் செயல்படுத்துவது என கழகம் – இலக்கியம் – பொருளாதாரம் -உடல்நலம் தொடர்பான அரிய செய்திகளை உள்ளடக்கிய கருத்துரையை கழகத்தவர்களிடையே காணொலி வாயிலாக வழங்கினார்.

பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களுடன்

முந்தைய காணொலி நிகழ்ச்சியின் (10.4.2020) தொடர்ச்சியாகவே – அன்று அறிவித்தபடியே பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களுடனான ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்துறவாடும் காணொலிக்காட்சி நிகழ்வு 12.4.2020 அன்று முற்பகல் தொடங்கியது.

உலகம் தன் மனித இயக்கத்திற்கு சற்றே தடை விதித்திருக்கும் நிலையிலும் ‘Time and Tide wait for none’ என்ற பழமொழிக்கேற்ப காலம் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் பயனுள்ள – பாதுகாப்பான முறையில் அறிவியல் துணை கொண்டு பயன்படுத்துவது எவ்வாறு என்பதை இக்காலகட்டம் உணர்த்தியுள்ள பாங்கை ஆசிரியர் அவர்கள் விளக்கினார்.

கொள்கை விளக்கப் பிரச்சாரங்களை  ஊர்தோறும் மேற்கொள்வதற்கான சூழல் தற்பொழுது சாத்தியமில்லாமல் போனாலும் தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பையில் உதித்த எதிர்வரும் உலகிற்கான கணிப்பை சாத்தியமாக்கும் வகையில் அறிவியல் தொழில்நுட்ப கூறுகளை பயன்படுத்தி பிரச்சாரங்களை – பயிற்சிப் பட்டறைகளை நடத்தவும்; அவற்றை செயல்படுத்த தீட்டப்படவேண்டிய திட்டங்கள், முன்னெடுப்புகள்; அமைக்கப்படவேண்டிய குழுக்கள், நிர்வாகிகள் ஆகியவற்றை குறித்து சிறப்புற விளக்கி தோழர்களிடையே புத்துயிரூட்டும் புதுப்புனலாக விளங்கினார்.

எழுத்து, பேச்சு ஆகிய ‘இயல்’வழி மட்டுமல்லாமல் கொள்கை பிரச்சாரங்களை ‘இசை’, ‘நாடகம்’ ஆகியவற்றின் ஊடாகவும் பரவச்செய்திட வேண்டிய செயற்திட்டங்களை வகுத்திடும் காலமாக பயன்படுத்திக்கொள்ளுமாறு மாநிலக் கலைத்துறை செயலாளர் தோழர் தெற்கு நத்தம் சித்தார்த்தன் – பெரியார் நேசன் குழுவினருக்கு அறிவுறுத்தினார்.

விருதுநகரில் வெகுசிறப்பாக நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகப் பொன்விழாவைப் போன்று நிறைவு விழாவையும் நடத்திட ஏற்பாடுகளையும், அதற்கு முன்னோட்டமாக மாவட்டங்களில் கருத்தரங்குகள் நடத்துவது குறித்தும்,

சமத்துவ சமுதாயம் படைக்க, அறிவியல் மனப்பாங்கை வளர்க்க தந்தை பெரியார் மேற்கொண்டு வந்த கடவுள் மறுப்புக் கொள்கையை இன்று கரோனா வைரஸ் செய்து வருவதாக அமைந்துள்ளதை இந்து – கிறிஸ்துவ – இஸ்லாமிய வழிபாட்டு தலங்களின் வாயில்கள் மூடப்பட்டுள்ளதிலும், ஆண்டாண்டு காலமாக செய்துவந்த பூஜை – புனஸ்காரங்கள், விழாக்கள் ஆகிய எவையும் இன்றைய நிலைக்கு தீர்வை காண தவறியுள்ள கையறு நிலையினை கடவுள் இருப்பில் நம்பிக்கை உள்ளோரும் அதிலும் குறிப்பாக இளைஞர்கள், மாணவர்கள் உணர்ந்திருக்கக்கூடிய நிலையினையும் விளக்கினார்.

இந்திய நாட்டின் உச்சநிலை வகிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளுள் மிக முக்கியமான 51கி(லீ) வலியுறுத்தும் அறிவியல் மனப்பான்மையை மக்களிடையே வளர்த்தெடுக்கும் பொறுப்பை மேற்கொள்ளும் விதமாக புதியக் கருத்துகளை, புதிய எழுத்துகளை, புத்துயிரூட்டும் சிந்தனைகளை உருவாக்க புதிய எழுத்தாளர்களை, பேச்சாளர்களை, களப்பணியார்களை அடையாளம் கண்டிட சிறுகதை, நாவல், கட்டுரை போட்டிகளை நடத்திடும் முயற்சியில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் ஈடுபடவும்;  அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றக்கூடியவர்களை அடையாளங்கண்டு அமைப்பிற்குள் கொண்டுவர பகுத்தறிவு எழுத்தாளர் – ஆசிரியரணியினர் ஆவன செய்யவும்; தோழர் நல்லதம்பி போன்ற ஓய்வு பெற்றவர்கள் கழகத்திற்கு முழுநேரத் தொண்டாற்றவும் வேண்டுகோள் விடுத்ததையடுத்து அவரும் உளமார உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டது தோழர்களிடையே மகிழ்வையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியது.

உடல் இயக்கத்திற்கு தடையாக தற்பொழுதைய சூழல் அமைந்திருந்தாலும் அறிவு இயக்கத்திற்கு சற்றும் தொய்வளிக்காமல் நூல்களை படிக்க நேரத்தை பயன்படுத்தாலும். அதிலும் இயக்க நூல்களை ஆய்ந்துணர்ந்து படித்து முக்கியப் பகுதிகளை குறிப்பெடுத்து எதிர்கால சமுதாயத்தினருக்கு அளிக்கலாம் என்பதை உறுதியாக வலியுறுத்திய ஆசிரியர் அவர்கள் அதற்கு எடுத்துக்காட்டாக “சுயமரியாதைத் திருமணம் – தத்துவமும் வரலாறும்” நூலில் தந்தை பெரியார் அவர்கள் எவ்வாறு சுயமரியாதை திருமண நிகழ்வை சட்டமே ஏற்காத நிலையிலும் மக்களிடையே படிப்படியாக வளர்த்தெடுத்து பின்னாளில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பேரறிஞர் அண்ணா அவர்கள் மூலமாக சட்டப்பூர்வமாக்கினார் என்பதையும் மேலும், ஆண் – பெண் இருவரிடையே இயற்கையாக நிகழவேண்டிய நிகழ்வில் தேவையற்ற சம்பிரதாயங்களை நீக்கி செம்மையுறச் செய்ததையும், தன் வாழ்நாளின் பிற்பகுதியில் “திருமணம் கிரிமினல் குற்றமாக்கப்பட வேண்டும்” என்ற கருத்தை தெரிவித்ததன் நோக்கத்தை இன்றைய சூழலில் நம் மனம் ஏற்கத் தவறினாலும் அதற்கு தந்தை பெரியார் அவர்கள் ஜெர்மனி சென்றிருந்தபோது அவர் தங்கியிருந்த வீட்டில் இருந்த ஆண் – பெண் ஆகியோரை விசாரித்தபோது ‘We are proposed husband and wife’ என் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதை பின்னாளில் பல முறை சுட்டிக்காட்டியதை குறிப்பிட்டு அத்தகைய “Living together” என்ற கலாச்சார சூழல் தற்பொழுது நடைமுறையில் இருப்பதை மறுக்கமுடியாது என்னும் நிதர்சன நிலையையும் விளக்கியதோடு இத்தகைய கருத்துக் களஞ்சியங்களை ஆய்ந்துணர்வதின் அவசியத்தையும் தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடிக்குள்ளாக உலக அரசுகளே அல்லாடிக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் தந்தை பெரியார் தம் வாழ்நாளெல்லாம் கடைபிடித்த, வலியுறுத்திய சிக்கன சுக வாழ்வை நாம் ஒவ்வொருவரும் தத்தமது இல்லங்களில் நடைமுறைப்படுத்தி வெற்றிகரமாக இந்நெருக்கடி காலகட்டத்தில் இருந்து மீள வேண்டும்.

உடல் உறுதியை தக்கவைத்துக் கொள்ள அவசியமான உடற்பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்வது போன்றே மன உறுதி சற்றும் குலையாமல் இருந்திட படிப்பறிவு – பட்டறிவு – பகுத்தறிவு ஆகியவற்றை கூர்தீட்ட வேண்டும் என்பதனையும்; விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் ஒவ்வொரு தனி மனிதனுக்குமான சுதந்திரம் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில் தங்கள் கருத்தை வெளிப்படுத்தும் தலையாய ஊடகமாக தற்பொழுது சமூக வலைதளங்கள்  பெரும் பங்காற்றிவரும் வேளையில் ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் எதிர்மறை விளைவுகளும் மறுக்கமுடியாது என்னும் அடிப்படையில் பொய்யான அவதூறான செய்திகளும் மலிந்துவிட்டது. அவ்வகையில் இயக்கத்தின்மீது வாரி இறைக்கப்படும் அவதூறுகளை – வரலாற்று திரிபு வாதங்களை முறியடிக்கத் தேவையான செயற்பாடுகளில் பகுத்தறிவாளர் கழகம் ஈடுபட வேண்டியதன் அவசர அவசியத்தையும் ஆசிரியர் அவர்கள் தெளிவுபடுத்தினார்கள்.

இவ்வாறு பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால திட்டப் பணிகளை புதிய பார்வையில் எடுத்துரைத்து  அனைவருக்கும் நன்றி கூறி விடைபெற்றார்.

மாவட்டப் பொறுப்பாளர்களுடன்

தமிழர் தலைவரின் காணொலி  கலந்துரையாடலைத் தொடர்ந்து மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டத்தை நடத்துவதில் முந்திக்கொண்டது விருதுநகர் மாவட்டம். கழகத்துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில், பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் முன்னிலையில் வெற்றிகரமாக நடத்தி அனைத்து மாவட்டங்களுக்கும் வழிகாடினார் விருதுநகர் மாவட்டத்தலைவர் இல.திருப்பதி தொடர்ந்து அனைத்து மண்டல, மாவட்டங்களிலும் மாவட்டங்களிலும் கூட்டங்கள் நடைபெற்றன. அன்று மாலை கழக சொற்பொழிவாளர்களுடனான காணொலிக் கலந்துறவாடலில் மூன்றாவது முறையாக ஆசிரியர் அவர்கள் பங்குபெற்றார்.

தொடக்கவுரையாக கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் வரவேற்று பேச பிறந்தநாள் காணும் இரா.பெரியார்செல்வனுக்கு வாழ்த்துகளைக் கூறி கலந்துறவாடலில் பங்குபெற்ற 22 தோழர்களிடையே கருத்துரை வழங்கிய ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,

புற உலக தொடர்புகள் முற்றிலும் அற்றுப் போய் அக உணர்வு இறுக்கமாக உள்ள நிலையை எடுத்துக்கூறிய வழக்கறிஞர் அருள்மொழி அவர்களுக்கு விடையளிக்கும் விதமாக ஆசிரியர், சிறைபட்டிருக்கும் காலமாக இதனைக் கொண்டு நீண்ட நாட்களாக ஆற்ற வேண்டிய பணியாக நாம் எண்ணியவற்றை மேற்கொள்ள ஏதுவான காலமாக உணர்ந்து ‘ஓய்வு என்பது ஒரு பணியிலிருந்து இன்னொரு பணிக்கு செல்வதுதான்’ என்ற தந்தை பெரியாரின் கூற்றுக்கேற்ப செம்மையாக பயன்படுத்திக்கொள்ள முற்படுவோம் என கூறினார்.

நமது இயக்கத்தில் சொற்பொழிவானது பேசாற்றலை பறைசாற்றுவதற்கோ பொருளுக்காகவோ புகழுக்காகவோ வெளிப்படுத்தக்கூடிய தொழிலாக கருதுவதற்கில்லை. அது மக்களின் அறியாமை இருளை விலக்க; பகுத்தறிவை புகட்ட; சுயமரியாதை உணர்வை வளர்க்க பயன்படும் பிரச்சார கருவியாகும் என்பதை உணர்த்த வந்த ஆசிரியர் நம் கழக செயற்பாடானது நிலைக் கடிகாரத்தின் ‘பெண்டுலம்’ அங்கும் இங்கும் அசைவதைப் போல பிரச்சாரம், போராட்டம் என்ற இரு புள்ளிகளில் பயணிக்கக்கூடியது என விளக்கினார். அத்தகைய அரும்பணியில் தங்களை உட்படுத்திக்கொண்டிருக்கும் கழக சொற்பொழிவாளர், பேச்சாளர்கள் தாங்கள் முன்வைக்கும் கொள்கை விளக்கக் கருத்துகளின் ஆழம் குறையாமல் தெளிவாக, உறுதியாக, உரக்க வெளிபடுத்த தந்தை பெரியார் மேற்கொண்ட உத்தியையே பின்பற்றவேண்டும். இயக்க நூல்களை நன்கு படித்து, குறிப்பெடுத்து ஆயத்தமாகியிருக்க வேண்டும். மேடையில் உரை நிகழ்த்துவதற்கு முன்னதாக தான் பேசவேண்டிய குறிப்புகளை அய்யா அவர்கள் ஆராய்வதை காணமுடியும். அத்துடன் பிரச்சாரக் கருத்துகளை மக்களுக்கு இனிக்கும் தேனாக வழங்க தேவையான உத்திகளை முறையாக கையாள வேண்டும். தந்தை பெரியார் அவர்கள் செய்யாறு அருகே வாழக்குடையில் திருமண நிகழ்வு ஒன்றில் அய்ந்தரை மணி நேரம் உரை நிகழ்த்தினார் எனில் அவர் பேச்சு மக்களை எவ்வாறு கட்டிப்போட்டிருந்தது என்பதை அறியமுடியும். தவத்திரு குன்றக்குடி அடிகளார் தன் தனித்தன்மையாக உரையாற்றிய பின்னர் தான் பேசியவற்றை தொகுத்து கூறுவதையும் பின்பற்றலாம்.

ஆக, பிரச்சாரம் என்பது வெறும் பேச்சு அன்று. அது ஆண்டாண்டு காலமாக மக்கள் ஆழ்ந்திருக்கும் அறியாமை சேற்றிலிருந்து மீட்டெடுக்கக்கூடிய அறிவாயுதம் என்பதனை அறிந்தால் பேச்சாளர்கள் அதன் இன்றியமையாத முக்கியத்துவத்தை அறியமுடியும்.

தந்தை பெரியாரின் கருத்துகளை மக்களிடையே, இளைய சமுதாயத்தினரிடையே வெகுவாக பரவலாக்க வேண்டிய காலக்கட்டத்தை இன்றைய அரசியல் – சமூக சூழல் நம் முன் நின்று நித்தமும் எடுத்துரைத்து வரும் நிலையில் கழக பேச்சாளர்களின் தலையாய சேவை அவசர அவசியமாகிறது. அத்தகைய பணியை தன் மேல் போட்டுக்கொண்டு செயலாற்ற இருக்கும் அவர்கள் இயக்க நூற்களை கசடற கற்றுணர்ந்து உரை வீச்சை மேற்கொள்ள வேண்டும். முன்பு படித்த நூற்களே ஆனாலும் மீண்டும் மீண்டும் படித்தோமானால் அதன் பொருள் ஆழத்தை நன்கு உணரக்கூடிய வாய்ப்பாக அமையும்.

திமுக மீது ஆரிய சனாதனிகளின் வன்மக் கணைகள் கட்டுக்கடங்காமல் பொழிந்தபோது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தன் கழகத் தோழர்களுக்கு ‘முரசொலி’யில் கூறியது ‘பெரியார் திடலில் கிடைக்கும் ‘ஞான சூரியன்’ நூலை வாங்கிப் படியுங்கள்’ என்பது தான்.

ஊடக விவாதங்கள், சமூக ஊடக பொய் புரளி வன்மப் பிரச்சாரங்களை வெற்றிகரமாக முறியடிக்க தேவையான மன உறுதியை பெறுவதற்கு; கொள்கை தெளிவை இயக்க வரலாற்றை தெளிவுற அறிவதற்கு தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை முழுவதுமாக படித்து அவர் வாழ்வில் கண்ட எதிர்ப்புகள், அவமானங்கள், தூற்றல்கள், துரோகங்கள், போராட்டங்கள், சாதனைகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துவதோடு  வரலாற்றில் இயக்கம் கண்ட வெற்றிகளை அதன் விளைவாக மக்கள் (பெண்கள், ஒடுக்கப்பட்டவர்கள்) தங்கள் வாழ்வில் அடைந்த மாற்றங்களை, ஏற்றங்களை; சமுதாய முன்னேற்றங்களை; சமூக நீதி சாதனைகளை; பகுத்தறிவு விதைப்புகளை இன்றைய இளைய சமுதாயத்தினரிடையை விளக்கும்போது இயக்கத்தின் அருமை, இன்றியமையாமை உணர்ந்து ஈர்க்கப்படுவர் என தெளிவாக விளக்கினார்.

சங்க இலக்கியங்களில் ஆரியர்களின் ஊடுருவல்கள் இடைச்செருகல்கள் ஆதிக்கங்கள் குறித்து தீர அறியும் ஒரு வாய்ப்பாக பேராசிரியர் காளிமுத்து, பேராசிரியர் நம்.சீனிவாசன், பேராசிரியர் மு.சு கண்மணி ஆகியோருக்கு ‘சங்க இலக்கியம் – ஆரியர் வருகைக்கு முன் ஆரியர் வருகைக்கு பின்’ என்னும் தலைப்பில் ஆய்வு செய்து நூலாக வெளிவர கேட்டுக்கொண்டார்.

தந்தை பெரியார் தனது பேச்சுகளில் கூறும்போது ‘நமது சேரனும் சோழனும் பாண்டியனும் முன்னோர்களும் பார்ப்பன அடிமைகளாக இருந்ததல்லாமல் வேறு என்ன செய்து கிழித்தார்கள்’ என்று கூறுவது எத்தகைய ஆதாரப்பூர்வமானது என்பதனை நாம் வரலாற்றுப் பக்கங்களில் தெளிவாக காணமுடியும் என மா.இளஞ்செழியன் எழுதிய ‘தமிழன் தொடுத்த போர்’ மற்றும் புலவர் கோ.இமயவரம்பன் எழுதிய ‘பார்ப்பனர் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும் என்ற நூலின் வாயிலாக அறியமுடியும் என்பதை எடுத்துக்கூறினார்.

வரலாற்றுத் திரிபுவாதங்களை முன்னெடுக்க பார்ப்பன சக்திகள் தீவிரமாக இறங்கியுள்ள இக்காலகட்டத்தில் ஆரிய பார்ப்பனர்கள் தமிழக வரலாற்றில் செலுத்திய ஆதிக்கத்தை எடுத்துக் கூறினார் ஆசிரியர்.

கே. கே பிள்ளை அவர்கள் எழுதிய ‘தமிழக வரலாறும் பண்பாடும்’ நூலிலிருந்து சுட்டிக்காட்டிய ஆசிரியர் சோழர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள் காலத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்க நிலையையும், இராஜேந்திர சோழன் ஆட்சிக் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் 400 தேவரடியார்களை இருத்தியிருந்த இழிநிலையினையும், உருவாக்கியிருந்த பள்ளிகளில் பெரும்பான்மையான அளவில் (300) பார்ப்பனர்களே படித்த நிலையினையும் எடுத்து விளக்கிய ஆசிரியர் இன்றைய காலத்திலும் சில தேசிய அரசியலாளர்கள் பார்ப்பனர்களும் தமிழர்கள் என வாதிடுபவர்களுக்கு தகுந்த பதிலாக அமையும் என கூறி முடித்தார்.

நிகழ்வின் தொடக்கத்தில் பேராசிரியர் பூ.சி இளங்கோவன் தந்தை பெரியார் அவர்கள் இயற்றிய  ‘இனிவரும் உலகம்’ நூலை கன்னடத்தில் மொழிபெயர்த்து வருவதாகவும், முனைவர் அதிரடி அன்பழகன் ‘சுயமரியாதை திருமணம்  – தத்துவமும் வரலாறும்’ நூல் குறித்து ஆய்வுக் கட்டுரை எழுதிவருவதாகவும் கூறினர்.

இறுதியாக ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் காவேரிப்பட்டணம் தா.திருப்பதிக்கு இரங்கல் தீர்மானம் தெரிவித்து கழக சொற்பொழிவாளர்களுக்கு நன்றி தெரிவித்து காணொலி காட்சியை நிறைவு செய்தார்.

கழக இளைஞரணி மாநில மண்டல பொறுப்பாளர்களுடன்

அதன் தொடர்ச்சியாக ஆசிரியர் அவர்கள் 26.4.2020 அன்று திராவிடர் கழக இளைஞரணி மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்களுடனான கலந்துறையாடலில் பங்கேற்றார்.

நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையும், கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் முன்னிலையும், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ இளந்திரையன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

நிகழ்வின் தொடக்கத்தில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்,

இன்றைய சூழலில் கரோனா வைரஸ் பரவல் 42 விழுக்காடு இளைஞர்களை தொற்றுகிறது என்னும் செய்தியை அறியக்கூடிய நிலையில் மிகவும் விழிப்புணர்வுடன் சமூக இடைவெளியை பின்பற்றி இளைஞர்கள் இல்லங்களிலேயே இருந்து இயக்க நூல்கள், ‘விடுதலை’ நாளிதழ் படிக்கவும் – சமூக வலைதளங்கள் வழியே பரப்பும் பணியை மேற்கொள்ளும் வாய்ப்பாக எண்ணி செயல்பட கூறிய ஆசிரியர் பொருளாதார நெருக்கடியான இக்காலத்தில் சிக்கன வாழ்க்கை முறையை கடைபிடித்து இக்கட்டான இந்நிலையை கடக்க அறிவுறுத்தினார்.

அடுத்து உரையாடிய திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள்,

கரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடவுள் மதம் போன்றவற்றின் செயல்பட முடியா தன்மையை கோயில் – தேவாலயம் – மசூதி போன்றவை மூடப்பட்டு மருத்துவமனைகள் மட்டுமே இயங்கும் நிலையை காணும்போது அறிவியல் ஒன்றே இதற்கான தீர்வு என்பதை நாம் நம் குழந்தைகளிடம் எடுத்துக்கூறி அவர்களிடையே அறிவியல் அறிவை – விருப்பத்தை விதைக்க வேண்டும் என கூறியதோடு கழகத் குழந்தைகளின் கல்வி தொடர்பான விவரங்களை சேகரிக்கவும் நிவாரணப் பணிகளில் ஈடுபடவும் அறிவுறுத்தினார்.

பின்னர் பேசிய கழகப் பொதுச்செயலாளர் ஜெயக்குமார், ஆசிரியர் அவர்களின் 21 அம்ச  அறிவுரைப்படி அனைத்து மாவட்டங்களிலும் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடல் நிகழ்ச்சி மேற்கொண்டதையும்; அனைத்து மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு வருவதையும் கூறினார். அத்துடன் நாள்தோறும் ‘விடுதலை’ நாளிதழை வாட்ஸ்அப் வழியாக 2000த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பகிர்ந்து வருவதாகவும் கூறினார்.

இன்றைய கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அரசே திருமண நிகழ்வில் 20க்கு மேற்பட்ட நபர் ஒன்றுகூட கூடாது என அறிவித்திருப்பது தந்தை பெரியார் அவர்கள் 50 நபர்களுக்கு மேல் கூடினால் கிரிமினல் குற்றம் என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும் என கூறியதன் தொலைநோக்கு சிந்தனையை மெய்பித்திருக்கிறது என பெருமிதம் கொண்டார். வரவேற்புரை நிகழ்த்திய த.சீ இளந்திரையன் தமிழர் தலைவர் அவர்கள் அறிவித்த 21 அம்ச செயற்பாடுகளில் தொடர்ந்து இளைஞரணியினர் ஈடுபட்டு வருவதாகவும்; மக்களிடையே கரோனா வைரஸ் பரவல் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த வட சென்னை, தென் சென்னை, தாம்பரம், கடலூர், விருத்தாசலம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட கழக மாவட்டங்களில் வழலைக் கட்டிகள் வழங்கியும் மேலும் வாய்ப்புள்ளவர்கள் ஏழை – எளிய மக்களுக்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார் மருத்துவர்கள் அறிவுறுத்தல்படி இளைஞரணி, மகளிரணி சார்பில் தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு வழலைக்கட்டிகள் வழங்கியும்; இளைஞரணி யினர் தஞ்சாவூர் நகர காவல்துறையினருக்கு மூன்றடுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டதையும் தெரிவித்தார்.

பெரியார் சமூகக்காப்பணி மாநில அமைப்பாளர் சோ.சுரேஷ்,

சமூக வலைதளங்களில் பெரியார் – இயக்கம் தொடர்பான பொய் புரட்டுகளை, எதிர்மறை கருத்துகளுக்கு தகுந்த பதிலடியை உடனுக்குடன் தருவதிலும்; கழகம் தொடர்பாக ‘விடுதலை’யில் வெளிவரும் செய்திகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து பகிரவும் தெரிவித்தார்.

சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் இர.சிவசாமி, வட சென்னை மாவட்டத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள 300 குடும்பங்களுக்கு உதவியதாக தெரிவித்தார்.

தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், கிராம ஊராட்சிகளும் இணைந்து கரோனா நோய் பரவல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும்; சமூக வலைதளங்களில் இயக்க கருத்துகளை பரப்புவதிலும் ஈடுபடுவதாகவும் மேலும், இவ்வாறான காணொலி கலந்துறவாடல் நிகழ்ச்சிகளை மாவட்ட, ஒன்றிய, கிளை கழகம் சார்பாகவும் நடத்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளையும் – வாய்ப்புள்ளவர்களை தொடர்புகொண்டு உதவிவேண்டுவோர் குறித்த தகவல்களை தெரிவித்து பூர்த்தி செய்வதிலும் ஈடுபடுவதாக கூறினர்.

(தொடரும்)

தொகுப்பு – அ.சி கிருபாகரராஜ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *