மஞ்சை வசந்தன்
இலக்கியவாதிகள் எல்லோரும் புரட்சியாளர்களாய் மக்களின் ஏற்றத்தாழ்வுளை எதிர்த்து சமத்துவம் காண முயல்பவர்களாய் இருப்பதில்லை. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஒரு சிலர் அப்படி சாதனைப் படைத்துள்ளனர்.
திருவள்ளுவர், கபிலர், சித்தர்கள் போன்றோர் தங்கள் இலக்கிய படைப்புகள் மூலம் மேற்கண்ட சாதனையைச் செய்துள்ளனர்.
20ஆம் நூற்றாண்டில் அப்படியொரு சாதனையை நிகழ்த்தியவர் பாவேந்தர் அவர்கள். பாரதிக்குத் தாசன் என்று தன்னை அழைத்துக் கொண்டார்கள். பாரதியை விட புரட்சிச் சிந்தனைகளை, எழுச்சிக் கருத்துகளை இலக்கிய வழி பரப்பியவர் பாவேந்தர் அவர்கள்.
கனக சுப்புரத்தினம் என்ற பெயருடைய பாவேந்தர், தமிழாசிரியராய் பணியாற்றிய நிலையில், தொடக்கக் காலத்தில் கடவுள் நம்பிக்கையுடையவராய், கடவுளை வாழ்த்தி பாடக் கூடியவராய் இருந்தார்.
ஆனால், தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று உள்வாங்கியபின் பகுத்தறிவு, இன எழுச்சி, தமிழ் உணர்ச்சிப் பாடல்களை பெரிதும் பாடினார்.
பாவேந்தரின் சிந்தனைகளில் ஒரு பரிணாம வளர்ச்சி உண்டு. அவர் விழிப்புப் பெறப் பெற, அவரின் சிந்தனைகள் தெளிவு பெற்று, கூர்மை பெற்று செழுமை பெற்றன.
ஆனால், பாரதியார் சிந்தனைகள் முன்னுக்குப் பின் முரணானவை; சந்தர்ப்பத்திற்கு ஏற்ப எழுதப்பட்டவை. மொழிக் கொள்கையானாலும், இனக் கொள்கையானாலும், ஜாதியொழிப்பு ஆனாலும், பெண்ணுரிமையானாலும் அவரிடம் ஓர் உறுதியான கொள்கையில்லை. அவ்வப்போது மாறி மாறி முரண்பட்டு நின்றன.
தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு இலக்கிய வடிவம் தந்தவர் புரட்சிக் கவிஞர். மற்றைய தமிழ்ப் புலவர்களைப் போல தமிழின் பெருமை மட்டுமே பேசி, தமிழிலுள்ள பக்தி இலக்கியங்களை நெக்குருகப் பேசி காலம் தள்ளியவர் அல்ல புரட்சிக் கவிஞர்.
இனப்பற்று
புரட்சிக்கவிஞருக்குத் தமிழ்ப்பற்று இருந்த அளவிற்கு, இனப்பற்று இருந்தது; மனிதநேயப் பற்று இருந்தது, பகுத்தறிவுத் தெளிவு இருந்தது. அதன் விளைவாய் ஜாதியொழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு இவற்றில் தீவிரங் காட்டினார். அனைவருக்கும் கல்வி, பெண்ணுரிமை மண்ணுரிமை இவற்றில் உறுதியாய் நின்றார்.
அவரின் இனப்பற்று திராவிட இனப்பற்று என்பதோடு நில்லாமல், திராவிட இனம் திட்டமிட்டு நசுக்கப்படக் காரணமான ஆரிய இனத்துக்கு எதிரானதாகவும் இருந்தது. அவரது “தமிழியக்கம்“ அதற்குச் சிறந்த சான்று.
ஆரிய பார்ப்பனர்களின் சூழ்ச்சி, சதி, பித்தலாட்டம், ஆதிக்கம் போன்றவற்றை பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி எடுத்துரைத்தார். திராவிட இனம், குறிப்பாகத் தமிழர்கள் விழிப்போடிருந்து, ஆரிய ஆதிக்கத்தை முறியடித்து முன்னேறத்தூண்டினார்.
மொழிப்பற்று
தமிழ் மொழியின்மீது அளவற்ற பற்று கொண்டு, தன் உணர்ச்சிகளை கவிதைகளாக வடித்தார். தமிழ் மொழியின் சிறப்புகளை ஆய்வு செய்து வெளியிட்டார். தமிழைக் களவாடியே சமஸ்கிருதம் உருவாக்கப்பட்டது என்பதைத் தன் சொல்லாய்வு மூலம் விளக்கி, உறுதி செய்தார். தமிழ் வளர்ச்சிக்கு அவர் காட்டிய முனைப்பைப் போலவே, இந்தி திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பிலும் தீவிரம் காட்டினார். தமிழர்களிடையே தமிழ் உணர்ச்சியும், தமிழில் பற்றும் ஏற்பட்டதற்கு புரட்சிக் கவிஞரின் எழுச்சி எழுத்துகள் முதன்மையான காரணமாகும்.
பெண்ணுரிமை
மனித இனத்தின் சரிபாதியான பெண்களை சமையலறையில் முடக்கி, அவர்களின் உரிமைகளைப் பறித்த கொடுமையை, ஆதிக்கத்தைக் கடுமையாக எதிர்த்தார். பெண்களின் சமத்துவத்திற்கும், கல்விக்கும், உரிமைக்கும் கடுமையாக உழைத்தார்.
பாவேந்தரின் உரைத்திறன்
பாவேந்தரின் திருக்குறள் உரை அவரின் ஆய்வு நுட்பத்திற்கும் அறிவு நுட்பத்திற்கும் சான்றாகும். பரிமேலழகர் போன்ற பார்ப்பன உரையாசிரியர்களின் சூழ்ச்சியை முறியடித்தும், திருவள்ளுவரின் உண்மையான நோக்கை உலகறியச் செய்தார்.
பெரியாரின் மாணவர்
தந்தை பெரியாரை அப்படியே பின்பற்றி தன்வாழ்வையும், தன் எழுத்தையும் அமைத்துக் கொண்டார். பெரியாரின் தலைமாணாக்கனாய் விளங்கியதோடு, பெரியாரின் பெருந் தொண்டராயும் பணியாற்றினார். பெரியார் மீது அளவற்ற அன்பும், மரியாதையும் செலுத்தினார்.
புரட்சிக்கவிஞரின்,
“தொண்டு செய்து பழுத்தபழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்!
மனக்குகையில் சிறுத்தை எழும்!”
என்ற வைர வரிகள் தந்தை பெரியாரின் சிறப்பை என்றென்றும் தரணிக்கு பறைசாற்றும்.
புரட்சிக் கவிஞரும் ஆசிரியரும்
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மாணவர் பருவம் முதற்கொண்டே புரட்சிக் கவிஞருடன் நல்ல தொடர்பிலும், இணைந்து பணியாற்றும் நிலையிலும் இருந்தார். இருவருக்கும் இடையேயான தொடர்பு பற்றி இருவருமே தெரிவித்துள்ளனர்.
21.12.1947 அன்று கடலூருக்கு ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டார் புரட்சிக்கவிஞர். அவ்விருந்தில் கவிஞர் பேசுகையில்,
“நான் கடலூருக்கு வர இசைந்தது விருந்திற்காக அல்ல. மாதத்திற்கு முன் ஒரு முக்கியமான மாகாண மாநாட்டைக் கூட்டிய இந்த இடத்தில் இயக்கம் எந்த நிலையில் எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறது என்பதைப் பார்க்கவே வந்தேன். இங்குப் பார்க்கின்ற நேரத்திலே இவ்வளவு அதிகமான கூட்டம் வந்திருப்பதைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். மீண்டும் வாலிப உள்ளங்களை இயக்கத்தில் சேரும்படி கேட்டுக்கொள்கிறேன்.’’ என்று குறிப்பிட்டார்.
அவரது ஈடுபாடு பற்றி கி.வீரமணியவர்கள், “திராவிட நாடு பிரிவினை மாநாட்டை பிரமாண்டமான முறையில் 1947இல் நடத்திய ஊரல்லவா கடலூர்! அதில் இளைஞர்கள் எப்படியெல்லாம் பம்பரம்போல் சுழன்று செயல்பட்டனர் என்பதைப் படித்து அறிந்த நிலையில், அதன் மீது அவருக்கு ஏற்பட்ட பற்று! எப்போது கடலூர் வழியே கவிஞர் செல்வதானாலும் எங்களில் பலரைச் சந்திக்காமல் செல்லவே மாட்டார்! பல மணி நேரம் அவருடன் தங்கி உரையாடுகையில் கிடைக்கும் இன்பமே அலாதியானது!’’ என்று கூறிப்பிட்டார்.
ஆக படிக்கின்ற காலத்திலே பாரதிதாசன் அவர்களோடு ஆசிரியருக்கு நல்ல நட்பு இருந்து அது கடைசி வரை வளர்ந்து செழித்தது.
ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் திருமண நிகழ்வின்போது கவிஞர் ஆசிரியர் எற்றி எழுதிய கவிதை புரட்சிக்கவிஞர் ஆசிரியர் மீது கொண்ட மதிப்பீட்டை என்றென்றும் நிலைநிறுத்தும் வரலாற்றுப் பதிவாகும்!
“இளமை வளமையை விரும்பும் என்பர்
இளமை எளிமையை விரும்பிய புதுமையை
வீர மணியிடம் நேரில் கண்டேன்
பாடிக் கைவீசிய பலருடன் உலவி
வேடிக்கை வேண்டும் வாடிக்கைதனை
அவன்பாற் காண்கிலேன் அன்றும் இன்றும்!
என்பது அப்பாடலின் ஒரு பகுதி. இதில் ஆசிரியரைப் பற்றிய கவிஞரின் கணிப்பு தெற்றென தெரிவதோடு “அவன் இவன்” என்று விளிக்கும் பாங்கிலே குடும்பப் பாசமும் வெளிப்பட்டு நிற்கிறது.
புரட்சிக் கவிஞர் பற்றி பெரியார்
“நமது நாட்டில் தமிழ் படித்த புலவர்கள் எல்லாம் சாமியார்களாகத்தான் போவது வழக்கமாக இருக்கின்றது. கடவுளைப் பற்றி பாடுவதும், புராணங்கள், ஸ்தல புராணங்கள் பாடுவதும், புலமைக்கு அழகு என்று எண்ணி வந்தார்கள். ஆழ்வார்கள், நாயன்மார்கள், பட்டினத்தார், தாயுமானவர், ராமலிங்கர் இவர்கள் எல்லாம் தமிழ்ப் படித்த புலமையினால் சாமியார் ஆனவர்களே. ராமனுடைய கதையைப் பாடியதற்காக கம்ப நாட்டாழ்வார் ஆனான்.
நான் போட்ட போட்டில் தப்பினார்
அதிகம் போவோனேன்! என் கண்ணெதிரே வாழ்ந்த பிரபலமான தமிழ்ப் புலவர் வேதாச்சலம். சாமி வேதாச்சலம் ஆகி, மறைமலையடிகள் ஆகவில்லையா?
நாடகங்களுக்குப் பாட்டு, கதை முதலியன எழுதிவந்த சங்கரன் என்பவர் சங்கரதாஸ் சுவாமிகள் ஆகவில்லையா?
முத்துசாமி கவிராயர் அவர்கள் முத்துசாமி சாமிகள் ஆகவில்லையா? இவர்களையெல்லாம் எனக்கு நன்றாகத் தெரியும். நன்கு பழக்கமானவர்கள். நமது திரு.வி.கல்யாணசுந்தர முதலியார் சாமியாராகத்தான் போக முற்பட்டார். நான் போட்ட போட்டிலே அவர் தப்பித்தார்.
முதன்முதலாகப் புரட்சி!
நமது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்தாம் முதன்முதலாக புரட்சிகரமான கருத்துகளை, பகுத்தறிவுக் கருத்துகளை வைத்துப் பாடியவர் ஆவார். அவரே என்னிடத்தில் கூறினார், “அய்யா, நமது சுயமரியாதை இயக்கத்திற்கு நான் வருவதற்கு முன்பு மற்ற புலவர்களைப் போலத்தான் நானும் இருந்தேன். ‘சுப்பிரமணிய துதியமுது’ போன்ற பாடல்களைத்தாம் பாடினேன்.’’ என்று கூறி இசையுடன் பாடியும் காண்பித்தார்.
பீரங்கி வைத்துப் பிளப்பது என்னாள்?
கவிஞர் பாரதிதாசன் அவர்கள் எல்லாத் துறைகளிலும் பகுத்தறிவுக் கருத்துகளை, சீர்திருத்தக் கருத்துகளை அமைத்து ஆணித்தரமாகப் பாடியுள்ளவர் ஆவார். புரட்சிக்கவிஞர் என்பதற்கு ஏற்ப அவரது பாட்டுகள் இருப்பதைக் காணலாம். “சிறீரங்கநாதனையும், தில்லை நடராசனையும் பீரங்கி வைத்துப் பிளப்பதுவும் என்னாளோ?’’ என்று பாடியிருக்கின்றவர் ஆவார் அவர்.
வள்ளுவனை வென்றவன்
வள்ளுவனைவிட புதுமையான, புரட்சியான கருத்துகளை _ மக்களை பகுத்தறிவுவாதிகளாக்கக்கூடிய கவிதைகளை எழுதியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவரது கவிதைகள் மனிதனை சிந்திக்கத் தூண்டு-கின்றன; முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வதாகவும், முற்போக்கு சமுதாயத்திற்கு ஏற்றதாகவும், அவரது கவிதைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு துறையிலும் சிறந்த கருத்துகளை நம்முடைய இயக்க முறையைவிட தீவிரமாகக் கூட எடுத்து விளக்கி இருக்கிறார்.
கடுகளவு அறிவுள்ளவன்கூட அவர் கவிதையைப் படித்தால் முழு பகுத்தறிவு-வாதியாகி விடுவான்.
வண்டி வண்டியாக தமிழர் பிணம் போனாலும் பார்ப்பனருக்கு எந்த குணம் இருக்கும் என்றால், இதில் எத்தனைப் பேருக்கு திவசம் செய்வார்கள் என்று கணக்குப் போடுவதாகத்தான் இருக்குமே தவிர அதுபற்றி வருத்தப்படுவதாக இருக்காது என்றும் தனக்கு எந்தெந்த வகையில் வரும்படி நிறையக் கிடைக்கும் என்றும் இப்படிப் புரட்சிகரமாக கவிதைகளை எழுதிய பாரதிதாசன் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்.’’ என்று தந்தை பெரியார் புரட்சிக் கவிஞரே பாராட்டிவுள்ளார்.
— ‘விடுதலை’ – 29.04.1971
புரட்சிக் கவிஞர் பற்றிய ஆசிரியர்
கவிஞர்கள் என்றால் அவர்கள் கடவுளைப் பற்றித்தான் பாடிட வேண்டும்; தெய்வீகத்தைத்தான் துதித்திட வேண்டும்; பழமையைத்தான் பாய்ச்சிட வேண்டும் என்ற இருட்டில் சிக்கி தடுமாறிக் கிடந்த தமிழுலகத்தில் பகுத்தறிவு ஒளிபாய்ச்சி, புதுமையை வரவேற்று பழமையைச் சாகடித்து, தனித்ததோர் பாதை வகுத்து, சமுதாயப் புரட்சிக்கு விதைகளைத் தூவி, கருத்துப் புரட்சிக்குக் காரணமாக இருந்த புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் வாராது வந்த மாமணியாவார்.
பகுத்தறிவு வால் நட்சத்திரம்
காளி நாக்கிலே எழுதியவுடன் கவி பாடத் தொடங்கியோர், கடவுள் அடியெடுத்துக் கொடுக்க கவி பாடி அதனைத் தொகுத்து முடித்தவர் என்றெல்லாம் கதைகள் அளந்த நாட்டில், மக்களின் சிந்தனைக் கூட்டுக்கு இரும்புப் பூட்டு போட்டு பூட்டிவைத்து, அவர்களை கடவுள், மத, ஜாதிப் புரட்டுகளில் மெய்மறக்கச் செய்யும் வண்ணம் பாடி, ‘ஆவுரித்துத் தின்று உழலும் புலையரேனும்‘, ‘கங்கைவார் சடைக் கரந்தார்க்கு அன்பராகில் புண்ணியம் எய்துவர்’ என்று, பழமைக்கு ஆணி அடித்தே பழக்கப்பட்ட புலவர்கள் உலகில், தனித்ததோர் பகுத்தறிவு வால் நட்சத்திரமாக புரட்சிக்கவிஞர் வந்தார்.
தனக்கென ஒரு புதுப்பரம்பரை
எவருக்கும் அஞ்சாத சிங்கமாய் பாடினார்; எழுதினார். சமுதாய இழிவுகளைச் சாடினார், ‘இவர் மனம் புண்படுமே; அவர் தயவு நமக்குக் கிட்டாதே; என்று கிஞ்சித்தும் எண்ணாமல் எழுதினார்! அவரால் தான் காலத்தை வென்றவராக அறிவின் கவிஞராக இருக்க முடியும்! அவரது புரட்சி – திருத்தூதுவராக அவர் தமிழ் இலக்கியத்தில் தனித்ததோர் புதுமை சகாப்தத்தைப் படைத்தார்; தனக்கென ஒரு பரம்பரையை உருவாக்கினார்! குவிக்கும் கவிதைக்குயிலான அவர் பழமையைச் சுட்டெரிக்கும் அனல் பிழம்பாகப் பேனாவை பயன்படுத்தினார்!
இருட்டறையில் உள்ள உலகம்
“இருட்டறையில் உள்ளதடா உலகம், சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே!” என்று மக்களை நோக்கிக் கேட்டார்; “இன்னமும் சாதி இருக்கிற தென்பானை விட்டு வைத்திருக்கிறீர்களே!” உங்களுக்கு வெட்கமில்லையா? என்று ஓங்கி அறைந்து சொன்னார்!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பான அவரது கவிதைகள் விசை ஒடிந்த தேசத்தில் வன்மை சேர்த்தன; வீழ்ச்சியுற்ற தமிழகத்தில் எழுச்சியூட்டின!!
தந்தை பெரியார்தம் ஆயுதச்சாலை “நெஞ்சில் நினைப்பதைச் செயலில் நாட்டுதல் நீசமன்று மறக்குல மாட்சியாம்’’ என்று கூறிய அவர்தந்தை பெரியார் தம் சமுதாயப் புரட்சிச் கருத்துகளை கவிதைகளாக வார்த்தெடுத்து, கருத்துப் போருக்கு வற்றாத ஆயுதங்களைத் தரும் தொழிற்சாலையானார் அவர்!
கூனன் நிமிர்வான்; குருடன் விழி பெறுவான்
அவரது கவிதை வரிகளைப் படித்தால் கூனன் நிமிருவான்; அறிவுக்குருடன் விழிபெறுவான். அத்தகையவரே புரட்சிக் கவிஞராக இருக்க முடியும்! அவரது புரட்சி வரிகளை புதுமைக் கருத்துகளை, புகழ் மணக்கும் நெறிகளை ஏடெல்லாம் எழுதினாலும் அடங்காது; அடங்கவே அடங்காது. என்று ஆசிரியர் புரட்சிக் கவிஞரை பாராட்டியுள்ளார்.
– ‘விடுதலை’ 21.04.1970
(புரட்சிக்கவிஞர் பிறந்தநாள் ஏப்ரல் 29)