மரு.இரா. கவுதமன்
இதயத் துடிப்பு சீரின்மை (Arrhythmia) நோய்கள்:
இதயம் தன்னிச்சையாக செயல்படக் கூடியது. கண், கை, கால்கள் போல் இதயத்தை நமது விருப்பத்திற்கு இயக்க முடியாது. இதயத்தின் இயக்கத்தை கட்டுப்படுத்த தனிப்பட்ட நரம்பு மண்டலம் உள்ளது. இதற்கு “தன்னியக்க நரம்பு மண்டலம்’’ (Autonomous Nervous System) என்று பெயர். இந்நரம்பு மண்டலம் தவிர “உயிரி சுரப்பு நீர்’’களும் (Cardiac Enzymes) இதயத்தின் செயல்பாட்டை கட்டுப்படுத்துகின்றன. இதயத்தை கட்டுப்படுத்தும் நரம்புகளில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒரு பிரிவு (Sympathetic Nervous System) இதயத் துடிப்பை அதிகமாக்கும். மற்றொரு பிரிவு இதயத் துடிப்பை குறைக்கும் ( Para Sympathetic Nervous System). “அட்ரினல்’’ (Adrenaline) சுரப்பும், தைராக்சின் சுரப்பும், இதயத் துடிப்பை அதிகமாக்கும். சிரைகளின் வழியே இதயத்திற்கு வரும் இரத்தம் அதிகமானாலும் இதயத் துடிப்பு அதிகமாகும்.
இதயத் துடிப்பு ஏற்படும் விதம்:
இதயத்திற்கு வரும் நரம்புகள் மூளையிலிருந்தும், தண்டு வடத்திலிருந்தும் (Spinal Cord) வருகின்றன. இவை இதயத்தின் முழு பகுதிகளிலும் பரவியுள்ளன. இவை இதயத்தின் வலது மேல் அறையில் உள்ள “மின் குமிழில்’’ (Sino Auricular Node) குவியும். இதிலிருந்து தொடர் மின்னோட்டம் ஏற்படும். இம்மின்னோட்டம் “மேலறை, கீழறை மின் குமிழு’’க்கு (Auriculo- Ventricular Node) பரவும். அங்கிருந்து பிரியும் நரம்பிழைகள் மூலம் வலது, இடது கீழறைகளுக்கு மின்னோட்டம் பரவும். இந்த மின்னோட்டமே இதயத் துடிப்பை உண்டாக்குகிறது. இதயச் சதைகள் சுருங்கி விரியவும், அடைப்பிதழ்கள் மூடி, திறக்கவும் இம்மின்னோட்டமே காரணமாகிறது. மின்னோட்டம் சீராக செயல்பட்டால், மேலறைகள் சுருங்கி, ஈரிதழ், மூவிதழ் அடைப்பிதழ்கள் திறந்து, இரத்தம் கீழறைக்குச் செல்லும். அப்பொழுது கீழறைகள் விரியும். கீழறை மீண்டும் சுருங்கும்பொழுது அங்குள்ள இரத்தம் நுரையீரல் தமனி வழியேயும், பெருந்தமனி (Aorta) வழியேயும் வெளியேறும். மேலறைகளும், கீழறைகளும் இப்படி மாறி, மாறி சுருங்கி, விரிதலை இம்மின்னோட்டமே முழுமையாகக் கட்டுப்படுத்துகிறது. இயல்பான நிலையில் மேலறை மின் குழியில் (Sino-Auricular Node) 72 முறை மின்னோட்டம் ஏற்படும். இந்த சுருங்கி, விரியும் செயல்பாட்டில் ஏற்படும் அடைப்பிதழ்கள் திறந்து, மூடும் வேளையில் ஏற்படும் ஒலியையே நாம் “இதய ஒலி’’ (Heart Sound) என்கிறோம்.
நன்றாக வேலை செய்யும் ஒரு நிமிடத்திற்கு 72 முறை துடிக்கும். இதையே “சீரான இதயத் துடிப்பு’’ (Rhytham) என்கிறோம். இதயத் துடிப்பு உடற்பயிற்சியின்போதும், கருத்தறித்த பெண்களுக்கும், கோபம், பயம், அதிர்ச்சி போன்ற உணர்ச்சிகளுக்கு ஆளாகும்போதும், உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்போதும் அதிகரிக்கும். சற்று நேரத்தில் இயல்பான நிலைக்கு (72 முறை) திரும்பி விடும். தூங்கும்பொழுதும், நீண்ட நேரம் ஓய்வெடுக்கும்பொழுதும் இதயத் துடிப்பு குறையும். சில நேரங்களில் இதயத் துடிப்பு 90 முறைக்கும் அதிகமாக இருக்கும். இதை “மிகை இதயத் துடிப்பு’’ (Tachycardia) என்றும், 60ற்கும் கீழாக போனால் “குறை இதயத் துடிப்பு’’ (Bradycardia) என்றும் மருத்துவர்கள் சொல்வார்கள். இந்த மின்னோட்டத்தில் ஏதாவது குறைபாடு ஏற்பட்டால், “இதயத் துடிப்பு சீரின்மை’’ (Arrhythmias) நோய்கள் ஏற்படும்.
இதயத் துடிப்பை பொதுவாக 4 வகையாகப் பிரிக்கலாம். சீரான இதயத் துடிப்பு (Normal Heart Beat Regular), சீரற்ற இதயத் துடிப்பு (Irregular Beat Regular), சீரான, சீரற்ற இதயத் துடிப்பு (Regularly Irregular Beat Regular), சீரற்ற, சீரற்ற இதயத் துடிப்பு (Irregularly, Irregular Beat Regular) என மருத்துவர்கள் வகைப்படுத்துவர். இதில் சீரான இதயத் துடிப்பை பற்றி ஏற்கெனவே பார்த்தோம். மற்ற மூன்ற வகை இதயத் துடிப்பையும் “இதயத் துடிப்பு சீரின்மை நோய்’’ (Cardiac Arrhythmia) என மருத்துவர்கள் வகைப்படுத்துவர். இந்த நிலை மிகவும் ஆபத்தானது. ஆனால், மருந்துகள் மூலம் பெரும்பாலும் குணப்படுத்தலாம். இதயத்தில் செயல்படுகிற மின்னோட்டத்தில் குறைபாடு உண்டானால் இந்த நிலை ஏற்படும். மின் குமிழ்களில் மின்னோட்டம் உற்பத்தியாவதிலும், சீராக கடத்தப்படாததாலும், மேலறை, கீழறைகளின் சுருங்கி விரியும் தன்மையில் ஒழுங்கற்ற நிலை ஏற்படும்.
காரணிகள்:
நீண்ட நாள் மிகு இரத்த அழுத்தம் (Hypertension), புகை பிடிப்பது, குடிப்பழக்கம், இதய இரத்தக் குழாய் நோய்கள், இதய அடைப்பிதழ் நோய்கள், இதயத் தசை நோய்கள் போன்ற காரணங்களால் இதயத் துடிப்பு சீரின்மை நோய்கள் ஏற்படலாம்.
அறிகுறிகள்:
படபடப்பு, நாடித்துடிப்பில் ஒழுங்கின்மை, தலைபாரம், தலைச்சுற்றல், தளர்ச்சி, களைப்பு, மூச்சு வாங்குதல், மயக்கம் வருவது போன்ற நிலை, மயக்கம் போன்றவை ஏற்படும். கைக்குழந்தைகள் உடல்நிறம் நீலநிறமாக (Blue Baby) மாறும்.
தொடர் நிகழ்வுகள்:
பலநேரங்களில் இந்நோயின் அறிகுறிகள் வெளியே தெரியாமலே இருக்கும். நோய்க்கான அறிகுறிகள் ஏதும் தெரியாமலேயே பலர் வாழ்ந்து வருகின்றனர். மேற்குறிப்பிட்ட நோய்க்கான காரணிகள் மூலம் பலருக்கு இந்நோய் வெளிப்படும். நீண்ட நாட்கள் இருந்துவரும் இந்நோய் சில நேரங்களில் ஆபத்தை உண்டாக்கக் கூடும். முறையான இதய இயக்கம் (துடிப்பு) இல்லாத போது இதயத் தசைகளே பாதிப்படையும். மூளை, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு போதுமான அளவு இரத்தம் செல்லாத நிலை ஏற்படும். இதனால் அந்த உறுப்புக்களும் பாதிப்படையும். இதனால் “பக்கவாதம்” (Hemiplegia) சிறுநீரக செயலிழப்பு, செரிமானக் கோளாறுகள், முகம், கணுக் கால்களில் வீக்கம், மூச்சு திணறல், சோர்வு, செயல் பாடின்மை போன்ற கோளாறுகள் ஏற்படும். இரத்த சோகை போன்ற குறைபாடுகளும் ஏற்பட்டு மேலும் உடல் நிலையை மோசமாக்கும்
நோயறிதல்:
இதயத் துடிப்பு சீரின்மையை மருத்துவர்கள் நாடித் துடிப்பை கவனித்தே அறிவர். இதய “மின்னலைப் பதிவு” (Electro -Cardio-gram- ECG) மூலம், இதயத்துடிப்பு சீரின்மையை எளிதில் அறியலாம். சில நேரங்களில் மருத்துவரிடம், நோயாளிகள் “நெஞ்சு படபடப்பு அதிகம்” என்ற குறையோடு வருவர். மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதற்குள் இதயத் துடிப்பு இயல்பான நிலைக்கு வந்து விடலாம். அது போன்ற நேரங்களில் இதய மின்னலை பதிவு சரியாக இருக்கும். அவ்வகை நோயாளிகளுக்கு, 24 மணி நேர மின்னலை பதிவின் மூலம் நோயறிய முடியும். இது தவிர, எதிரொலி மின்னலைப் பதிவு (Echo Cardiogram) மூலமும் கோளாறை கண்டு பிடிக்க முடியும். இதயத் தசைகளில் ஏற்படும் மாற்றத்தை துல்லியமாக இச்சோதனை மூலம் அறியலாம். துடிப்பு குறைபாட்டையும், காரணத்தையும் கண்டறிய மார்பு ஊடுகதிர் நிழற்படம் (X-Ray), ‘டிரெட்மில் சோதனை’ (TMT), “ஹோல்டர் மானிட்டர் பரிசோதனை” (Holter Monitor Test), சாய்வு மேசை சோதனை (Tilt Table Test) என பல சோதனைகளை இதய நோய் நிபுணர்கள் செய்வர். இதன் மூலம் மிகு துல்லியமாக நோய் ஏற்படும் பகுதியை கண்டுபிடித்து விடுவர். நோயின் காரணங்களையும், அதன் விளைவுகளின் அடிப்படையிலும் மருத்துவ முறைகள் முடிவு செய்யப்படும்.
மருத்துவம்:
பொதுவாக எந்த வகை துடிப்புக் கோளாறு உள்ளதோ, அதற்கு ஏற்ப மருத்துவமுறை மாறுபடும். அதனால் நோயின் தன்மையிருந்த மருத்துவம் மேற்கொள்ளப்படும். மருந்துகள், ஊசி, இதயமின் அதிர்ச்சி மருத்துவம், உயிர்க்காற்று (Oxygen), சிரை வழி நீர்மங்களையும், மருந்துகளையும் செலுத்துதல், வடிகுழாய் ஆய்வு (Angiogram), மின்னோட்ட தடையை உண்டாக்கும் தேவையற்ற வளர்ச்சியை வடிகுழாய் மருத்துவம் மூலம் (Cardiac Ablation) சீராக்குதல், (பேஸ் மேக்கர்) இதயத் துடிப்பை சீர்மைக் கருவி (Pace-Maker) பொருத்துதல் போன்ற பல வகை மருத்துவங்கள், நோயின் தன்மைக்கேற்ப செய்யப்படுகின்றன. இவ்வகை மருத்துவமுறைகள் மிகச் சிறந்த பலனை தருகின்றன. கோடிக்கணக்கான நோயாளிகள் இதனால் பயனடைந்து நீண்ட வாழ்வு வாழ்கின்றனர்.
(தொடரும்)