கவிதை : தந்தை பெரியாரின் பகுத்தறிவு

ஏப்ரல் 01-15 2020

ஈரோடு தமிழன்பன்

எல்லா

ஊர்களின் பெயர்களையும்

எனது உதடுகளால் உச்சரிப்பேன்!

ஈரோட்டை

எனது

உயிரால் உச்சரிப்பேன்.

ஈரோட்டின்

பிராமணப் பெரிய

அக்ரஹாரமே அதிசயமானது!

அங்கு, என் இனிய

பிரியாணி முஸ்லிம்களே நல்ல

பிராமணர்கள்!

கடைகளில்தான்

மஞ்சள் வாணிகம்

கதைகளில் அல்ல! வேறு

கலைகளிலும் அல்ல….

ஈரோடு,

தோலையும் பதம் பார்க்கும்

ஆளையும் பதம் பார்க்கும்!

பகுத்தறிவுப் பறவைகளின்

சரணாலயம்….!

வேடந்தாங்கல் பொறாமையால்

வேர்ப்பது இதைக் கண்டுதான்!

இதன்

திண்ணைப் பள்ளிக்கூடத்தில்

பல்கலைக் கழகங்கள்

பாடம் கேட்டன!

எங்கள்

தமிழர் எல்லோரும்

முத்தமிடத் துடிக்கும்

தித்திப்புக் கன்னம்! அறிவின் சின்னம்!

தவறித்

தரையில் விழுந்தும்

உடையாது

வளர்ந்த வானவில்!

இதனிடமிருந்தே

கட்சிக் கொடிகள்

வர்ணங்களை

வாரிக் கொண்டன!

இதன்

மடி மீது

கல் விழுந்தால்

மணியாகும்….

முள் விழுந்தால்

மலராகும்!

புழுக்களும்

எலும்புபெறும்.

ஊர் என்பது

அஃறிணைப் பெயர்தான்!

ஈரோடு மட்டும்

உயர்திணை–அதிலும்

ஆண்பால் என்பேன்!

தந்தையே நீ

பிறந்ததால்!

நீ

நாத்திகம் பேசத்

தொடங்கிய நாள் முதலாகக்

கடவுளர்க்குத்

தூக்கம் கெட்டது.

உன்

விவாத வெளிச்சத்தில்

விக்கிரகங்கள் கறுத்தன.

உன்-சுய சிந்தனை விஸ்வரூபம்

எடுத்தபோது

கடவுள் அவதாரங்கள்

கண்ணீர் வடித்தன!

நீ வராது போயிருந்தால்

எங்கள்

விழிகளுக்கு

வெளிச்சத்தின் விலாசம் தெரிந்திருக்காது!

உன்

கைத்தடியையே

எங்களுக்கு

முதுகெலும்பாக்கிவிட்டுப் போனாய்….. இல்லாவிட்டால்

இதற்குள் பலர் இங்கே

வளைந்திருப்பார்கள்!

மேடைகளில்

அடிக்கடி நீ

வெங்காயம் உரிப்பாய்.

அப்போதெல்லாம் புராணத்தின் பொய்மைச் செதில்கள்

பூமியில் குவிந்தன!

விதி எல்லோரையும்

ஆட்டி வைக்கும்

என்பார்கள்-நீயோ

அந்த விதியையே பிடித்து

ஆட்டி வைத்தாய்!

ஈரோட்டில் நீ

பிறந்த நேரமே

சகுணத்திற்கு அபசகுணம் ஆயிற்று?

ராசிகள் எல்லாம்

உன் ஜாதகத்தை

வாசித்துப் பார்த்த பிறகே

புளுகின் வயிற்றில்-தாம்

பிறந்ததைப்

புரிந்து கொண்டன!

நீ

மட்டும் பிறக்காதிருந்தால்

பால சோதிடப்

பல்கலைக் கழகங்கள்

தோன்றியிருக்கும்?

கிளி சோதிடர்கள்

துணை வேந்தராயிருப்பர். 

உன்

கறுப்புச் சட்டை

துணியால் ஆனதா

அய்யப்படுகிறேன்…..

துணியாய் இருந்திருந்தால்

மடமை

தோல் இழந்தது எப்படி?

நீ

எழுதியபோது உன்

வாக்கிய வெள்ளத்தில்

சிந்தனைத் தோணிகள்

சிலிர்த்து நகர்ந்தன.

உன் பேனா முள்

தாளில் இறங்கியதும்

வைதீகத்தின்

முகத்தில் ரத்தக் கீறல்கள்

விழுந்தன.

மனுவை நீ

எடைபோட்டபோது

எழுத்து எடைக்கற்கள்

எரிமலையாய் வெடித்தன!

(திரும்பி வந்த தேர்வலம் கவிதைத் தொகுப்பிலிருந்து)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *