Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 60 ) : தந்தை பெரியாரின் ஆரியர் ஆதிக்க எதிர்ப்பு – தவறா?

 நேயன்

ஆரியர் எதிர்ப்பைவிட கன்னடர், மலையாளி, தெலுங்கர் எதிர்ப்பையே எடுத்திருக்க வேண்டும். தமிழர் பகுதியை யார் பறித்தார்கள்? ஆரியர்களா பறித்தார்கள்? இவர்கள்தானே பறித்துக் கொண்டார்கள்? அப்படியிருக்க இவர்களை எதிர்க்காமல் ஆரியர்களை எதிர்த்த பெரியாரின் அணுகுமுறையாலே தமிழர் வீழ்ந்தனர் என்பது ‘குறுக்குசால்’ குதர்க்கப் பேர்வழிகளின் குற்றச்சாட்டு.

ஆரியப் பார்ப்பனர்களை எதிர்க்கும் அணுகுறையே தப்பாம்! பெரியார் மலையாளியை, கன்னடர்களை, தெலுங்கர்களை எதிர்த்திருக்க வேண்டுமாம்!

பெரியார் போட்ட பிச்சையில், சூடு சுரணை பெற்று நாமும் மனிதர்கள் என்கிற உணர்வு பெற்று, தீண்டத்தகாதவர்கள் என்கிற இழிவு நீங்கி, கல்வி கற்கக்கூடாது என்கிற தடையைத் தகர்த்து, இன்று கல்வி, வேலைவாய்ப்பில் வாய்ப்புகளைப் பெற்று, பார்ப்பனர்களைவிட மேலாய் வந்துள்ள நிலையில், அதற்கான 100 ஆண்டு காலப் போராட்டத்தையும் புறந்தள்ளி, கொச்சைப்படுத்தி, அத்தனை உழைப்பும் வீண், அவற்றால்தான் தமிழர் வீழ்ந்தனர் என்று கூறுவதைவிட தமிழர்க்கான பச்சைத்  துரோகம் வேறு இருக்க முடியுமா? தமிழர்கள் கடந்த 100 ஆண்டு கால நிலையைக் கருத்தில்கொண்டு சிந்திக்க வேண்டும்.

ஆரியப் பார்ப்பனர் மற்றும் உயர்ஜாதிக்காரர்களைத் தவிர, மற்றவர்கள் படிக்கும் வாய்ப்பு இல்லை. மத அடிப்படையில், சாத்திர விதிகளைச் சொல்லிக் கல்வி பல நூற்றாண்டுகளாய் மறுக்கப்பட்டது.

அவரவர் அவர் தகப்பன் தொழிலைச் செய்யவேண்டும். மாறாகக் கல்வி கற்கச் செல்லக்கூடாது.

கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழையக்கூடாது, மற்ற ஜாதியினர் கருவறைக்குள் செல்லக்கூடாது.

கோயில்களில் தமிழில் பாடல்கள் பாடக்கூடாது. பாடினால் கடவுள் தீட்டாகிவிடும். திருமணங்களில் ஆரியப் பார்ப்பனர் மந்திரமே சொல்லி திருமணம் நடந்தால் மட்டுமே அது செல்லும். மற்றபடி அத்திருமணம் செல்லாது.

மத்திய அரசின் அனைத்துத் துறை வேலை வாய்ப்புகளும் ஆரியப் பார்ப்பனர்களுக்கே! குறிப்பாக, வானொலி, இரயில்வே, அஞ்சல்துறை, வங்கித்துறை, காப்பீட்டுத்துறை, வருவாய் வரித்துறை, சுங்கத்துறை என்று எல்லா துறைகளிலும் பார்ப்பனர்களுக்கே வேலை. மக்கள் தொகையில் 3 சதவிகிதமே உள்ள பார்ப்பனர்கள் மத்திய அரசு வேலையில் 90 சதவிகிதத்துக்கு மேல் பணியாற்றினர்.

தெருக்களில் தாழ்த்தப்பட்டவன் செல்லக்கூடாது. கல்விக்கூடங்களில் பார்ப்பனர்களுக்குத் தனித் தண்ணீர் பானை. மற்றவர்களுக்குத் தனித் தண்ணீர் பானை.

உணவு விடுதியில் பார்ப்பனர்களுக்குத் தனிப் பந்தி; மற்றவர்களுக்குத் தனிப் பந்தி. பார்ப்பனர்களுக்கு உயர்வகை உணவு; மற்றவர்களுக்குச் சாதாரண உணவு.

இந்திய ஆட்சிப் பணியில் 90% பார்ப்பனர்கள்.

உயர் அதிகாரி, நீதிபதி இவர்களில் 75% பார்ப்பனர்கள். தாழ்த்தப்பட்டவன் நிழல்கூட பார்ப்பனர்மீது படக் கூடாது. எனவே, மாலையில் கிழக்குப்புறமாகவும், காலையில் மேற்குப்புறமாகவும் பார்ப்பானைக் கண்டால் தாழ்த்தப்பட்டவன் ஒதுங்கவேண்டும்.

கேரளத்தில் நாயடிகள் என்னும் ஜாதியினரைக் கண்டாலே தீட்டு என்றனர் _ ஆரியப் பார்ப்பனர்கள். எனவே, அவர்கள் ஆரியப் பார்ப்பனர் கண்ணில் படாமலே மறைந்து செல்ல வேண்டும்

தமிழன் எழுதிய உன்னத நூல்களை எரித்தும், நீரில் விட்டும், மண்ணில் புதைத்தும் அழித்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள்.

தமிழரிடையே ஜாதியை உண்டாக்கி ஒற்றுமையைக் கெடுத்து வீழ்த்தியவர்கள், தாழ்த்தி நசுக்கி ஒடுக்கினார்கள்.

ஆரியர் மட்டுமே கடவுள் முகத்தில் பிறந்தவர்கள்; மற்றவர்களெல்லாம் இழிமக்கள். எனவே, அவர்களுக்கு ஆரியப் பார்ப்பனர்களுக்கு அடிமை வேலை செய்வது மட்டுமே கடமை என்று 97% மக்களை கேவலப்படுத்தினர்.

ஆரியப் பார்ப்பானைக் கண்டாலே தமிழன் நெடுஞ்சாண் கிடையாகக் காலில் வீழ்ந்து வணங்கி ‘சுவாமி’ என்று கூறும்படிச் செய்தவர்கள்.

கூலி வேலை செய்யும் தமிழனுக்கு எச்சில் உணவும், கிழிந்த துணியும், தூற்றி ஒதுக்கப்பட்ட (பதர்) தானியங்களும் கூலியாகக் கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரம் எழுதி அதை 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை அமல்படுத்தியவர்கள். தாழ்த்தப்பட்ட தமிழன் நல்ல பெயர்களைக்கூட சூட்டிக் கொள்ளக்கூடாது. மண்ணாங்கட்டி, வவுத்தான், தொப்புளான், செடிசேம்பு, பாவாடை என்று கொச்சையான பெயர்களை இட்டுக் கொள்ள கட்டாயப்படுத்தியவர்கள் ஆரியப் பார்ப்பனர்கள். சென்ற தலைமுறை வரை இது நடப்பில் இருந்தது. ஆங்கில ஆட்சியின்போது நிலை என்ன?

ஆர்.எஸ்.எஸ். குருஜி கோல்வால்கரே கூறுகிறார் கேளுங்கள்:

“தென்னாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி இருந்தார். அவருக்கு உதவியாளராக அந்த மாநிலத்தைச் சார்ந்த ஒருவர் இருந்தார். அவர் நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர். அந்த ஆங்கில அதிகாரியின் பியூனாக இருந்தவர் ஒரு பிராமணர். ஒருநாள் அந்த ஆங்கில அதிகாரி தனது பிராமண பியூன் பின்தொடர வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது எதிரே அவரது உதவியாளராக இருந்த அந்த நாயுடு வந்தார். ஆங்கிலேய அதிகாரியைப் பார்த்துக் கைகுலுக்கினார். ஆனால், பிராமண பியூனைப் பார்த்தவுடன் காலைத் தொட்டு வணங்கினார். அதைப் பார்த்து வியப்படைந்த ஆங்கிலேய அதிகாரி, “நான் உன்னுடைய பெரிய அதிகாரி. என்னிடம் நீ கைதான் குலுக்கினாய். ஆனால்,  என்னுடைய பியூனைப் பார்த்தவுடன் காலைத் தொட்டுக் கும்பிடுகிறாயே?’’ என்று கேட்டார். அதற்கு அந்த உதவியாளர் பதில் சொல்கிறார்: “நீங்கள் என்னுடைய பெரிய அதிகாரியாய் இருக்கலாம்; ஆனால், நீங்கள் ஒரு மிலேச்சர். அவர் பியூனாக இருக்கலாம். ஆனால் நாங்கள் வணங்கக்கூடிய பிராமண சமூகத்தைச் சார்ந்தவர். அவரைத் தொழ வேண்டியது எனது கடமை’’ என்று பதில் சொன்னார். இதுதான் ஆரியப் பார்ப்பன தர்மம்.

(ஆதாரம் : சிந்தனைக் கொத்துகள்)

இதே கோல்வால்கர் ஆரியர்கள் பற்றி இன்னொரு கருத்தையும் அதே நூலில் கூறுகிறார்: “நாம் (ஆரியர்கள்) நல்லவர்கள்; அறிவுத்திறன் உள்ளவர்கள். ஆன்மாவின் விதிகளையெல்லாம் அறிந்தவர்கள் நாம் மட்டுமே! அப்பொழுது நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் இரண்டு கால் பிராணிகளாக, அறிவற்ற மக்களாய் வாழ்ந்து வந்தனர். எனவே, நம்மைத் தனிமைப்படுத்தி பெயர் எதையும் சூட்டிக் கொள்ளவில்லை. சில நேரங்களில் நமது மக்களை (ஆரியர்களை) மற்றவர்களிடமிருந்து பிரித்துக் காட்ட, நாம் ஆரியர்கள் அதாவது அறிவுத்திறன் மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டோம். நம்மைத் தவிர மற்றவர்கள் எல்லாம் மிலேச்சர்கள்’’ என்கிறார்.

ஆரியப் பார்ப்பனர்களைத் தவிர நாமெல்லாம் இரண்டு கால் விலங்குகள் என்று இன்றளவும் கூறி இந்தியாவையே ஆரிய நாடாகவும், ஆரிய கலாச்சாரமுடையதாகவும் ஆக்க நினைக்கின்றது ஆரிய கூட்டம். அது மட்டுமல்ல; இந்தியாவில் இந்துக்களைத் தவிர, அதாவது இராமனைக் கடவுளாக ஏற்காதவர்களைத் தவிர, மற்றவர்களை யெல்லாம் ஒழித்துக் கட்டி இராம ராஜ்யத்தை நிறுவ வேண்டும் என்றார். அதற்கு ஜெர்மனியையும், ஹிட்லரையும் உதாரணமாகக் காட்டுகிறார்.

இனம் மற்றும் கலாச்சாரத்தின் புனிதத் தன்மையைக் காத்திட, அரேபிய இனங்களுள் ஒன்றான யூத இன மக்களைப் படுகொலை செய்து நாட்டைச் சுத்தப்படுத்தியது ஜெர்மனி. இங்கே இனத்தின் பெருமையை அதன் உயர்ந்தபட்ச அளவுக்கு உயர்த்தி பிடித்தது. அடிப்படையில் வேறுபட்ட கலாச்சார மக்களை ஒருங்கிணைத்து ஒரு முழுமையை உருவாக்குவது இயலாது என்று ஜெர்மனி காட்டியுள்ளது. இதை இந்துஸ்தானத்திலும் நாம் கற்றுக் கொண்டு அதன் மூலம் பயனடைய வேண்டியது ஒரு நல்ல பாடமாகும்.

ஆக, இந்தியாவை இந்து நாடாக்க, கிறித்துவர்களையும், முஸ்லிம்களையும், மதத்தை ஏற்காதவர்களையும் அறவே ஒழித்துவிட வேண்டும் என்கிறார்.

                                                                     (தொடரும்…)