“ஓ” – 12 – அருகே உள்ளவர்களுக்கு உதவுங்கள்

நவம்பர் 16-30

அருகே உள்ளவர்களுக்கு உதவுங்கள்

– சோம. இளங்கோவன்

“ஓ”வின் வகுப்பறை மிகவும் விறுவிறுப்புடன் உற்சாகமாகப் போய்க் கொண்டுள்ளது.வார நாட்களில் தினமும் ஒரு தலைப்பில் வகுப்பு நடக்கும். அதன் தலைப்பையும், கேள்விகளையும் கொடுத்துவிடுவார்.

அனைவரும் தங்கள் பதில்களை எழுதலாம். அது இணையத்தில் வெளியிடப்படும்.அவரது நிகழ்ச்சிகளிலிருந்து அந்தத் தலைப்பில் நடந்த, அதிலிருந்து அவரும் மற்றவர்களும் கற்றுக் கொண்ட பாடம் என்ன என்பது பற்றி வகுப்பு நடக்கும்.

 

இது வெறும் புத்தகத்தில் படிக்கும் வகுப்பல்ல. வாழ்வில் பட்டு உணர்ந்த பாடங்கள் பற்றிய வகுப்பு. சென்ற வாரத்தில் ஆணவம் பற்றிப் பார்த்தோம். அவரது இரண்டாவது வகுப்பு “கோபம்” பற்றியது. கோபம் அனைவருக்கும் வரக்கூடிய ஒரு மனநிலைதான். கோபப்படாதீர்கள் என்று யாரிடமும் சொன்னால் அது நடக்கக்கூடியதா? ஆனால், அந்தக் கோபத்தை எப்படி அடக்குவது, வந்த கோபத்தை எப்படி ஒதுக்கி மறந்துவிட்டுத் தொடர்வது என்பதுதான் முக்கியம். டெர்ரி மெக்மில்லன் என்ற அம்மையார் சிறந்த எழுத்தாளர். அவரது அடங்காத கோபத்தினால் அவரது வாழ்க்கையே எப்படிப் போய், அவரையே அழித்துவிடும் அளவிற்குச் சென்றுவிட்டது என்பதை உணர்ச்சியுடன் எடுத்துச் சொல்வார். நம்மில் பலரும் உணர்ந்ததுதான், பலரிடம் நாம் பார்த்துள்ளதுதான். இருந்தாலும் நமக்கு வரும் கோபம், எப்படி நம்மையும் நமக்கு மிகவும் வேண்டியவர்களையும் தாக்கியுள்ளது என்பதைக் குறித்து நாமே வெட்கமும் வேதனையும் பட்டிருக்கிறோமல்லவா? இதைப் பற்றி ஆயிரக்கணக்கானோர் பதில் எழுதி தங்கள் வாழ்க்கையின் முக்கிய கோப நிகழ்வுகளை இணையத்தில் பகிர்ந்து கொள்ளும்போது அனைவரும் முக்கியப் பாடத்தைக் கற்றுக் கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியை நேரிலே வகுப்பாகப் பார்த்தவர்கள் கட்டாயம் கோபப்படுவதைக் குறைத்தும், கோபத்தை அடக்கும் வழிகளைக் கடைப்பிடித்தும் வாழ முயற்சிப்பார்கள். அதற்கான வழிமுறைதான் அவர் ஒவ்வொருவரையும் எழுதச் சொல்லுவார். எழுதிப் படிப்பதன் விளைவு நன்றாகவே உணரக்கூடியதாக உள்ளது.

அடுத்த வகுப்பு “உங்கள் மீது உங்களுக்குள்ள நம்பிக்கையே உங்கள் எதிர்காலமாகும்” என்பதாகும். தன்னம்பிக்கையில்லாதவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது. எத்தகைய சோதனை, வேதனை வந்தாலும் தன்னம்பிக்கயுள்ளவர்கள் அதைக் கடந்து வெற்றி பெறுவார்கள். ஒரு சினிமா நடிகர் ஜிம் கேரி, ரால்ப்ஃலாரென் என்ற புகழ் பெற்ற தொழிலதிபர் இவர்களுடைய தோல்விகளும் அதைத் தாண்டி அவர்கள் அடைந்த மிகப் பெரிய வெற்றிகளையும் பாடமாகச் சொல்லுவார். ஓப்ராவை யாரும் பெரிய ஆளாக வருவார் என்று உற்சாகப்படுத்தவில்லை. தடைக்கற்கள் ஏராளம். அதையெல்லாம் தாண்டி வந்து திறமையைக் காண்பித்தது தன்னம்பிக்கையால்தான் என்பதைக் கண்களில் நீர் கசியும்படிச் சொல்லும் போது பார்க்கும் அனைவருக்கும் வரும் தன்னம்பிக்கை உணர்வு அளவிட முடியாதது.

அடுத்த வகுப்பிலே நடத்திய பாடம் .வாழ்விலே நாம் நாமாக வாழ வேண்டுமே தவிர வெளி உலகத்திற்காக வாழக் கூடாது என்பது. உண்மையான நாம் யார் என்று மற்றவரைப் பற்றிக் கவலைப்படாமல் வாழ வேண்டும். அவர்கள் என்ன நினைப்பார்களோ, இவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணம் நம்மை அடிமையாக்கிவிடக் கூடாது. இதை வெறும் எழுத்தில் படித்தால் சரியாகப் பதியாது. ஆகவே, இந்த மாதிரி பொய் வாழ்க்கை வாழ்ந்தவர்கள் எப்படி அதிலிருந்து விடுபட்டு பெரும் நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ மாற்றிக் கொண்டார்கள் என்பதை அவர்களே சொல்லும்போது நன்கு புரியும். ஏழையாக இருந்து ஏழை வாழ்க்கை வாழ்வது எளிது. அந்த ஏழை போலித்தனமான பணக்கார வாழ்க்கை வெளியுலகுக்காக வாழ வேண்டும் என்றால் ஏதாவது மகிழ்ச்சி இருக்க முடியுமா?

அவருடைய வாழ்க்கைப் பாடங்களிலே மிகவும் சிறப்பான சிலவற்றைச் சொல்லும் போது மற்றவர்களுக்கு உதவி செய்து அவர்கள் அடையும் மகிழ்ச்சியைப் பார்த்து மகிழ்வதுதான் உண்மையான மகிழ்ச்சி என்பது மிகவும் முக்கியம் என்கின்றார். முன்னரே சொல் லியது போல அவரது நிகழ்ச்சியின் பார்வையாளர்களில் தேர்ந்தெடுத்த 360 பேர் அவரது நிகழ்ச்சிக்கு அன்று அழைக்கப்பட் டிருக்கின்றார்கள். ஏன் அழைக்கப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது.

ஜிம் கேரி

அவர்கள் அனைவருக்கும் முக்கியத் தேவை கார். நிகழ்ச்சியின் முடிவில் என்னுடன் வெளியே வாருங்கள், உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு புது கார் காத்துக் கொண்டிருக்கிறது என்கின்றார். அந்த மகிழ்ச்சி வெள்ளத்திலே மூழ்கி அவரும் மகிழ் கின்றார். இது பணத் திமிர் அல்ல. அவர்களுக்கு வேண்டியது கார். இவரிடம் இருப்பது அளவுக்கு மேலே வேண்டிய செல்வம். தொடர்ந்து அவர் நிகழ்ச்சியைப் பார்க்கும் அவர்களுக்கு ஒரு நன்றி தெரிவித்த மாதிரியும் இருக்கும். பார்வையாளர்களும் ஏராளமாகப் புதிதாக வருவார்கள். நிகழ்ச்சிக்கு வேறு விளம்பரம் வேண்டுமா? ஆனால் அதை யெல்லாம்விட அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு விலை உண்டா?

டெர்ரி மெக்மில்லன்
அடுத்த பாடமாக அவர் சொன்னது, உங்கள் அருகே உள்ளவர்களுக்கு உதவுங்கள். உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள். உங்கள் உறவினரோ, நண்பரோ, அருகிலிருப்பவரோ அவர்களுக்கு உதவி செய்து பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி தன்னாலே வரும் என்பதுதான். இன்றைய அமெரிக்காவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் விளம்பரத்திற்காகச் செய்வார்களே தவிர மனது இளகி உதவுவது குறைந்து கொண்டுதானே வருகின்றது. மக்கள் மகிழ்வுடனாவது இருக்கின்றார்களா? இதைப் பலரை வைத்து, அவர்கள் வாழ்க்கையில் நிகழ்ச்சிகளாக நடந்ததை அவர்களை விட்டே எடுத்துச் சொல்லச் சொன்ன நிகழ்ச்சிகளைக் காண்பித்துப் பாடம் நடத்துவார். வெறும் பேச்சிலே அல்லாமல் செயலிலே செய்து காட்டியதைக் காண்பிக்கும்போது பாடம் படிப்பவர்களுக்கும் ஒரு உணர்ச்சி வருமல்லவா?

இன்றைய உலகிலே இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்படும் செலவு எக்கச்சக்கம். முகப் பூச்சிலிருந்து, அறுவை சிகிச்சை முகம், உடல் மாற்றம் வரை மக்கள் செய்யும் வீண் செலவைப் பார்த்தார். இதில் பொருளாதார வசதியில்லாத ஏழைகள், முக்கியமாக கருப்பின ஏழைகள் செய்யும் அளவுக்கு மீறிய செலவு நம்ப முடியாத அளவு ஆகும். அதை எப்படி எடுத்துச் சொல்ல முடியும்? இயற்கையாக எந்த ஆடம்பரச் செயற்கை இல்லாத நடிகைகளை, மற்றவர்களை நிகழ்ச்சியில் காட்டினார். வயதானாலும் எப்படி அழகாக இருக்க முடியும். என்ன செய்ய வேண்டும். மிகவும் எளிமையான வழிகளில் எப்படி வயது மூப்பையே ஒரு பெருமைக்குரிய தோற்றத்துடன் வாழ முடியும் என்று இந்தப் பிரபலங்கள் வாழ்ந்து காண்பிப்பதைக் காட்டி முதுமை மறைக்க வேண்டிய நோய் இல்லை. மகிழ்ச்சியுடன்  வாழ வேண்டிய நாட்கள் என்பதைப் புரிய வைக்கின்றார்.

அளவான, ஆனால் எளிமையான முறைகளுடன் மகிழ்ச்சியான முதுமை எப்படி மற்றவராலும் போற்றப்பட முடியும் என்பதை எடுத்துக்காட்டும்போது பெரிய நிம்மதிப் பெருமூச்சே வருகின்றது.

அவருடைய வாழ்வியல் ஆசிரியை மாயா ஆஞ்சலோ என்ற  புகழ்பெற்ற கருப்பினப் பெண் கவிஞர், எழுத்தாளர்.. அவரது வார்த்தைகளை ஒரு பாடமாகவே எடுக்கின்றார். “உனக்கு நல்ல அறிவாற்றல் வந்ததும் நீ நல்லவை செய்ய ஆரம்பித்துவிடுகின்றாய்”. தவறுகள் பாடங்களாகி விட்டால் நாம் செய்யும் தவறுகள் குறைந்துவிடுமல்லவா?  இதை அப்படியே வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை வைத்துச் சொல்லும்போது ஆழப் பதிய வைத்துவிடுகின்றார். ஒவ்வொரு வகுப்பிலும் அவரது பாடங்களைக் கேட்டவர்கள் ஆயிரக்கணக்கில் இணையத்தில் எழுதுவார்கள். அதைப் படிப்பதே ஒரு பெரிய வாழ்க்கைப் பாடமாக இருக்கின்றது. இதிலே மனந்திறந்து எழுதுபவர்களுக்கு – அவர்களது வாழ்க்கையின் முன்னேற்றத்திகு ஒரு படிக்கல்லாக இந்தப் பாடங்கள் அமைந்துவிடுகின்றன. அனைத்தையும் படிக்க முடியாது. ஒரு சிலவற்றைப் படித்தாலே ஒரு புத்துணர்ச்சி உண்டாகின்றது.

இந்த உலகின் மிகப் பெரிய படிப்பறை வார நாட்களில் தொடர்ந்து நடக்க இருக்கின்றது. அதில் முக்கியமானவற்றைப் பார்ப்போம்.

–  தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *