Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கொரானோ வைரஸ்

கொரானோ வைரஸ் இன்றைய மருத்துவ உலகில் அதிகம் பேசப்படும் நிலையில் உள்ளது. சீனாவின் ஹீபே மாகாணத்தில் தோன்றிய இந்நோய் இன்று உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல ஆயிரம் பேர் சீனாவில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்-பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கில் மரணமடைந்துள்ளனர். சீனாவில் இதன் பாதிப்பு அதிகமிருந்தாலும், உலகில் வேறு எங்கும் இது பரவவில்லை. சீனாவின் ‘ஹீபே’ மாகாணத்தில் “வூஹான் நகரில் இவ்வைரஸ் பாதிப்பு அதிகம். பாம்பு உண்பதால் இந்நோய் வந்ததாக ஆரம்ப மருத்துவ அறிக்கைகள் கூறுகின்றன. நோயுண்ட ஒரு வவ்வாலை விழுங்கிய பாம்பை உண்ட மனிதர்களுக்கு இந்நோய் பரவியதாகவும் ஒரு கருத்து உலவுகிறது. சிலர் சீனாவின் பொருளாதார மேலாண்மையும், வளர்ச்சியும் விரும்பாத ஏதோ ஒரு நாட்டின் “உயிரியல் போர்’’ (Biological War) ஆகவும் இருக்கலாம் என்கிற கருத்தும் சொல்கின்றனர்.

அறிகுறிகள்: தொடர் காய்ச்சல், இருமல், சளி, உடல் சோர்வு, மூச்சுத் திணறல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள். இந்நோயுள்ளவர்கள் தும்மும்போதும், இருமும்போதும் வெளிப்படும் நீர்த்திவலைகள் (Droplet Infection) மூலம் மற்றவர்களுக்கு நோய் நேரடியாகப் பரவுகிறது. நோய் தொற்றுள்ளவர்களின் கைகளில் (மூக்கு, முகம் போன்றவற்றை தொடுவதால்) கூட இவ்வைரஸ் இருக்கும். அதனால் மிகுந்த பாதுகாப்போடு எச்சரிக்கை தேவை. கை குலுக்குவதைத் தவிர்த்தல் நலம். நம்முடைய வாயும் தொண்டையும் காய்ந்தால் இந்நோய் வேகமாகப் பரவும்.

நோய் தடுப்பு:

*  கை குலுக்கலைத் தவிர்க்கவும்.

*  தினமும் 10 முதல் 15 தடவை கைகளை சோப்பு போட்டுக் கழுவ வேண்டும்.

* இருமும்போதும், தும்மும்போதும் கைக்குட்டையால் மூக்கையும், வாயையும் மூடிக்கொள்ள வேண்டும்.

*  மருத்துவமனைகளை கிருமி நாசினி மூலம் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும்.

* சளி, காய்ச்சல், உடல் சோர்வு போன்றவை ஏற்பட்டால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

*  இளநீர், கஞ்சி, ஓ.ஆர்.எஸ்., பழச்சாறு போன்றவை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

*  தொண்டை காய்ந்து போகாமல் இருக்க அடிக்கடி ஈரப்படுத்த நீர் பருகிட வேண்டும்.

*  சீனாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்கலாம்.

* இருமல், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களையும், விழாக்களையும் தவிர்க்கவும்.

* அண்மைக்காலத்தில் சீனாவுக்கு சென்று வந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று ஆலோசனை பெற வேண்டும்.

* நோயைப் பற்றி மேலும் அறியவோ, சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவோ கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். +91-11-23978046