குடிஅரசு வழங்கும் வரலாற்றுக் குறிப்புகள்

நவம்பர் 16-30

எம்.ஏ., எல்.டி உபாத்தியாயரின் கடவுள் பாடம்

– தகவல் : மு.நீ.சிவராசன்

(1925 மே மாதம் 2 ஆம் தேதி தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட குடிஅரசு எனும் வார இதழ் தமிழ்நாட்டிலேயும்,  தமிழர்கள் வாழும் பிறநாடுகளிலும் சுயமரியாதைப் புயலாய்ச் சுழன்று சுழன்று அடித்தது.

அதன் விளைவாக இளைஞர் முதல் முதியோர் வரை கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர் வாக்கு ஆகியவற்றைப் பற்றி வினா எழுப்பும் விழிப்புணர்வு ஏற்பட்டது.  அதனால் பள்ளி மாணவர்கள் கூட தங்கள் ஆசிரியர்களிடம் வினாக்களை எழுப்பி, வகுப்பில் சுயமரியாதைப் பிரசாரம் நடத்தப்பட்டது.

அதில் ஒரு நிகழ்ச்சி கற்பனை வளத்தோடு கீழே தரப்படுகிறது.

இந்நிகழ்ச்சியை அண்மைக்காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் ஒரு பள்ளியில் நடைபெறவிருந்த மதபோதனை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மூலம் நமது இயக்கத் தோழர்கள் தடுத்து நிறுத்தியமை ஒப்புநோக்கத்தக்கது.)

எம்.ஏ., எல்.டி உபாத்தியாயர்_ பெட்டியைத் தச்சன் செய்தான், வீட்டைக் கொத்தன் கட்டினான், சாப்பாட்டைச் சமையற்காரன் சமைத்தான், உலகத்தைக் கடவுள் உண்டாக்கினார் தெரியுமா?

மாணாக்கன் : – தெரிந்தது சார்.  ஆனால் ஒரு சந்தேகம் சார்,

உபா: என்ன சொல்?

மா: அப்படியானால், கடவுளை யார் உண்டாக்கினார் சார்?

உபா: முட்டாள்!  இந்தக் கேள்வியை உனக்கு யார் சொல்லிக் கொடுத்தது,  அவர் தானாகவே உண்டானார் இனிமேல் இப்படியெல்லாம் கேட்காதே.

மா: ஏன் சார்?  கேட்டால் என்ன சார்?

உபா: அது! நிரம்பவும் பாவம்.

மா: பாவம் என்றால் என்ன சார்?

உபா: மேற்படி வாயை மூடு.  நீ அயோக்கியன் குடிஅரசு படிக்கிறாயோ?  ஏறு பெஞ்சிமேல்.

– குடிஅரசு – 18.09.1931-பக்கம்: 9

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *