தலையங்கம் : அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் அணிக்கும் அதைத் தகர்க்கும் பாசிச அணிக்கும் நடக்கும் போராட்டம்!

மார்ச் 1-15, 2020

மத்தியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். _ பா.ஜ.க. அரசு சரியான ‘வித்தைகளின் வித்தகத்தைச்’ செய்து, மக்களின் அன்றாட வாழ்வாதார, பொருளாதாரப் பிரச்சினைகள் மிகவும் கீழிறக்கத்திற்குச் சென்று கொண்டிருப்பதை, திசை திருப்பும் கருவியாக _ எதிர்க்கட்சிகளே அதிகமான அளவு இத்தகைய பிரச்சினைகளைப் பேசி மக்களிடம் கொண்டு செல்ல இயலாத வண்ணம் _ குடியுரிமைத் திருத்தச் சட்டம் Citizenship Amendment Act, தேசிய மக்கள் தொகை பதிவு ஆவணம் National Population Register (என்.பி.ஆர்.), தேசிய குடிமக்கள் பதிவு ஆவணம் National Register of Citizens (என்.ஆர்.சி.) என்று மூன்று வகைகளை இறக்கிவிட்டு,

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தின் முதன்மையான மதச்சார்பின்மை (Secular) என்பதையே வெட்டியெறிந்துவிடத் துணிந்துவிட்டனர்!

அதனைப் புரிந்துகொள்ளாமலேயே டில்லி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்த கருப்பு மசோதாக்கள் சட்டமாகிட தமிழ்நாட்டின் ஆளும் கட்சியாகிய அ.தி.மு.க.வும், அதன் கூட்டணிக் கட்சியாகிய பா.ம.க.வும் வாக்களித்து அதனை நிறைவேற்றிவிட்டு, இங்கே வந்து இரட்டை வேடம் போடுகிறார்கள்!

இந்த மூன்றையும்பற்றி முழுமையாகப் புரிந்துதான் நமது தமிழ்நாட்டு அமைச்சர்களும், அவர்களின் கூட்டணியில் இடம் பெற்ற சிலரும் பேசுகிறார்களா? என்கிற அய்யம் நாட்டுக்கே எழுகிறது.

முதலில் அவர்கள் இந்த மூன்று குடியுரிமைத் திருத்தச் சட்டம், என்.பி.ஆர். என்னும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (ரிஜிஸ்டர்) கணக்கெடுப்பு, தேசிய குடி மக்கள் பதிவு ஆவணம் National Register of Citizens என்பதுபற்றிய சரியான தெளிவு இருக்கிறதா?

அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரை கூறுவது என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பீடிகை (Preamble), அத்துடன் குடிமக்களாகும் உரிமைபற்றிய இரண்டாம் பகுதி  (Part II), Citizenship என்பது 5 ஆம் பிரிவு, 6 ஆவது பிரிவு என்று தொடர்ந்து 10 பிரிவு வரையிலும், அதன் பின் அடிப்படை ஜீவாதார உரிமைகள் என்பதில் 13 ஆவது, 14 ஆவது பிரிவுகளையும் படித்து, பிறகு அவர்கள் மற்ற விமர்சனங்களுக்குப் பதில் சொல்லத் தொடங்கினால், அவர்களைப்பற்றிய மதிப்பீடு கீழே போகாமலாவது இருந்திருக்கும்.

‘கீறல் விழுந்த கிராமபோன் பிளேட் வரி’களைப்போல, இங்குள்ள இஸ்லாமியர் களுக்கு எந்த பாதிப்பும் இதனால் ஏற்படாது என்று எதை வைத்துச் சொல்லுகிறார்கள்?

இந்த மூன்றில் உள்ள சட்டப் பிரிவுகளும், கேள்விகளும் மதச்சார்பின்மை, சமத்துவம், சமவாய்ப்பு என்னும் அரசியல் உரிமைகளைப் பறிக்கவில்லையா?

இந்துவுக்குக் குடியுரிமை – முஸ்லிம்களுக்குக் கிடையாதா?

தி.மு.க., தி.க., இடதுசாரிகள், கூட்டணி எதிர்க்கட்சியினரின் கேள்விக்குக்கூட பதில் கூறவேண்டாம்.

பா.ஜ.க.வின் பல திட்டங்களை ஆதரித்தும், மென்மையாக சில நேரங்களில் விமர்சித்தும் தொலைக்காட்சிகளில் பேசும் ஒருவர், ஒரு கேள்வி கேட்டார். அவரது கேள்விக்காவது பதில் கூறவேண்டாமா?

அவர் கேட்கிறார்,

“குடியுரிமைச் சட்டத் திருத்தப்படி ஓர் இந்து, ஒரு முஸ்லிம் இரண்டு பேருக்கும் ஆவணங்கள் இல்லை என்று என்.ஆர்.சி.யில் கண்டுபிடித்துவிட்டீர்கள்.

இந்துவுக்குக் குடியுரிமை கொடுக்கப் போறீங்க – முஸ்லிமை என்ன பண்ணப் போறீங்க?”

இந்த ஒரு கேள்விக்கு மட்டும் அரசு பதில் சொல்லட்டும்!

அதோடு “எல்லோரும் தவறான செய்தி களைப் பரப்புறாங்க _ மக்கள் நம்பக்கூடாது. இந்தியப் பிரஜைக்கு எந்த ஆபத்தும் வராது இதனால்! அப்படின்னு சொல்றாங்க!

ஆனால், இந்தியப் பிரஜைன்னு நீங்கள், உங்களை நிரூபித்துக் கொண்ட பிறகு _ அசாமில் என்ன பிரச்சினை என்றால், 42 லட்சத்திலிருந்து 19 லட்சமாக ஆனது இல்லையா? எப்படி ஆச்சு? அப்போ வித்தியாசம் 22 _ 23 லட்சம் பேர்.

அவர்களுடைய மனநிலை என்னவாக இருந்திருக்கும்?

4, 5 மாதம் ஆகியிருக்கும்; அப்புறம் இது மாதிரி தவறுகள் நடந்தால்?

உதாரணத்திற்கு ஆவணங்களில் அப்பா பெயர் வேறு மாதிரியாக இருக்கிறது, எழுத்துகள் மாறி இருக்கின்றன. அப்படி யானால் இவர்கள் நிலை என்னவாக இருக்கும்?

ஆதார் கார்டு இருக்கு _ அப்புறம் இது எதுக்கு?”

புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய அம்சம்!

குடியுரிமைத் திருத்தச் சட்டம் அரசமைப்புச் சட்ட அடிக்கட்டுமானத்தின் மதச்சார்பின்மையை அகற்றிவிட்டு, மத ஆதாரம் உள்ளே நுழைக்கப்படும் ஆபத்தான சட்டம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இரண்டாவது பிரிவு _ குடியுரிமைப் பிரிவில் உள்ள எந்த ஓர் அரசமைப்புச் சட்ட வாசகங்களிலாவது மத அடிப்படை என்று இருக்கிறதா? “Any Person”  _  “எந்த நபராக இருந்தாலும்….’’ எனும் வாசகம்தானே அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்று, மதச்சார்பின்மை என்கிற கட்டுமானத்தைப் பலப்படுத்துகிறது.

அதையே அடியோடு இந்த மூன்றும் இடிக்கின்றனவே _ நியாயமா?

அட, அரசமைப்புச் சட்ட மாமேதைகளே!”

“இங்கிருக்கிறவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்” என்று வாய்ச்சவடால், வக்கணை பேசும் அரசமைப்புச் சட்ட மாமேதைகளே,

பாம்பைக் கண்டவுடன் ஏன் தடியைத் தூக்குகிறார்கள் மனிதர்கள்?

தேளைக் கண்டால் ஏன் நடுங்குகிறார்கள் மக்கள்?

எங்கோ சீனத்தில் உள்ள கொரோனா வைரசுக்குத் தடுப்பு முறைகளை ஏன் ஒவ்வொரு நாடும் எடுக்கின்றன?

“பாதிப்பு வந்தால் பார்த்துக் கொள்ளலாம், அதுவரை நீங்கள் தாராளமாக சீனாவுக்குப் போய் வாருங்கள்” என்று கூறுவது புத்திசாலித்தனமா?

அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் அணிக்கும், அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டுமானமான மதச் சார்பின்மை, சமூகநீதி, ஜீவாதார மனித உரிமை, மாநில உரிமைகளைக் காக்கும்  அணிக்கும் நடக்கும் அறப்போராட்டம்!

அரசமைப்புச் சட்டம் 4-ஏ கூறுவது என்ன?

1. யாரும், எந்த முஸ்லிமும் பாதிக்கப் படமாட்டார்கள் என்று தவறான பதில் கூறுவோர், ஏன் மத்திய அரசுக்கு என்.பி.ஆர். சம்பந்தமாக சில புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள கேள்விகள்பற்றி விளக்கம் கேட்டு எழுதியுள்ளனர்?

2. அசாமில், முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமத் குடும்பத்தாருக்கே சிக்கல் ஏற்பட்டது ஏன்? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு”  இது பதம் அல்லவா?

3. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (National Population Census) வழமைபோல் எடுக்கலாம்; அதில் ஜாதிபற்றிய விவரங்களை அவசியம் கேட்டு அறிந்து தொகுத்தால், சமூகநீதி என்கிற இட ஒதுக்கீட்டுக்கு ஆதாரப்பூர்வ புள்ளி விவரங்கள் கிடைக்கும்.

‘சமூகநீதி’ எனும் சொல் இடம்பெற்ற ஒரே அரசமைப்புச் சட்டம் இந்திய அரசமைப்புச் சட்டமே; அத்துடன் சமூக அநீதியின் சுரண்டலிலிருந்து ஒடுக்கப்பட்டோர் _ குறிப்பாக தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் _ காப்பாற்றப்பட்டு, சமூகநீதி அளிக்கப்பட வேண்டும் என்பதை அரசு நெறிமுறைக்கு வழிகாட்டும் ஆணை பிறப்பித்திருப்பதும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 46 ஆவது பிரிவு ஆகும் என்பதை மத்திய அரசு மறந்துவிட்டு, அவற்றைப் பறிக்கும் முயற்சிக்கு ஒருபோதும் துணை போகக்கூடாது.

அரசமைப்புச் சட்டத்தின் இந்த முக்கியக் கூறுகள் வெறும் காகிதங்கள்தானா?

ஜனநாயகத்துக்கும் – பாசிசத்துக்கும் போர்!

சுருக்கமாகச் சொன்னால், இது மதப் போர் அல்ல;

ஜனநாயகத்திற்கும், பாசிசத்திற்கும் நடக்கும் தத்துவப் போர் என்பதை உணராது, மக்களின் எழுச்சியை குறைத்து மதிப்பிட்டு, உலா வந்தால், வரலாறு உங்களுக்காக குப்பைத் தொட்டிகளைத் தயாரித்து வைத்துள்ளது, மறவாதீர்!

37 சதவிகித வாக்கு வாங்கியோர் 63 சதவிகித மக்களுக்கு கருப்புச் சட்டங்களை வழங்குவது நீதியா? இதுதான் உங்கள் ஜனநாயகமா??

– கி.வீரமணி,

ஆசிரியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *