உலகப் பகுத்தறிவாளர் – எபிகூரஸ் – 2

நவம்பர் 16-30

நான் கூறிய உண்மைகள் என்றும் நிலைத்து நிற்கும்

– சு. அறிவுக்கரசு

“அறிவுள்ளவர்களுக்கு அதிர்ஷ்டம் அர்த்தம் இல்லாதது; அவர்கள் வீட்டுக் கதவை அது தட்டாது. அவர்களுடைய செயல்கள் எல்லாமே அவர்களின் வாழ்நாள் முழுவதுமே பகுத்தறிவின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன; அமைந்திருக்கும் என்று உறுதிபடக் கூறியவர் எபிகூரஸ்.

ஆசையை அறுத்துவிடு, அல்லால் ஆவியைப் போக்கிவிடு என்று எங்கோ விண்ணப்பம் போடும் போக்கு அவருடயதல்ல. நம் ஆசைகள் அனைத்தும் அவசியமானவை என்பதோடு இயற்கையானவையும் ஆகும். அவற்றை அடைந்துவிட்டால் வலி ஏதும் இல்லை, அடைந்துவிட்டால் மகிழ்ச்சியே! அவற்றை அடைந்து மகிழ்ச்சியில் திளைப்பதற்கு முக்கியமாகத் தேவைப்படுவது நட்பு. அதன்மூலம் மட்டுமே மகிழ்ச்சியைத் துய்க்க முடியும் என்றார் அவர். சிற்றின்பம் என்று இந்துமதம் கூறுவதைப் போலவே பிற மதங்களும் கூறுகின்றன.

பேரின்பம் என்று அவை கூறுவதோ இறப்புக்குப்பின் அடையப்போகும் வாழ்வில் ஏற்படும் இன்பங்களே! இறப்புக்குப்பின் வாழ்வு என்பது மதங்களின் புருடா. அப்படி ஏதும் இல்லை.

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்

சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்

பித்தமனிதர் அவர் சொலுஞ் சாத்திரம்

பேயுரையாமென்று இங்கு ஊதடா சங்கம்

என பார்ப்பனப் பாரதியேகூடப் பாடியிருக்கிறார் என்றாலும் பேரின்பம் பற்றியே சிந்தித்து உலக இன்பங்களை வெறுத்துப் பேசியவர்களே நிறைய, புத்தர் உள்பட! இந்நிலையில் எபிகூரஸ் தெளிவாக இருந்தார் – இறப்புக்குப் பின் எதுவும் இல்லை என்றார்! ஏற்காது அவரை வெறுத்தவர்கள் அன்றும் இருந்தனர். இன்றும் உள்ளனர். அவரது மறைவுக்குச் சுமார் 600 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட கிறித்துவ மதம், அரச மதமாக ஆக்கப்பட்டபின் எதிர்ப்பு கூடுதலாகியது.

இறப்பு இதுதான்

றப்பென்பது நம்மைப் பாதிக்கும் செயல் அல்ல. மூலங்களோடு (தனிமங்கள்) சேர்ந்து கொள்ளும். உடலின் தனிமங்கள் எவ்வித உணர்ச்சி வலியையும் நமக்கு உண்டாக்குவதில்லை. எனவே, வலியற்ற தன்மை நமக்கு ஒன்றுமே இல்லை எனச் சுலபமாகக் கூறி விளக்கினார். ஆனால், மதவாதிகளுக்கோ அதனை வைத்து நடத்தும் வியாபாரம் பாதிக்கப்படும் என்ற கவலையால் அவரைக் கரித்துக் கொட்டிக் கொண்டே இருக்கின்றனர். அவர் வாழ்ந்த காலத்திலேயே, அவருடைய கொள்கைகளுக்கு ஏற்பட்ட பெருமை, செல்வாக்கு ஆகியவற்றினால் மிரண்டுபோன மதப் பழைமைவாதிகள் அவரை நாத்திகன் என்று கூறி அவரது உயிருக்கே உலை வைக்கும் செயல்களில் ஈடுபட்டனர். அதனை அறிந்த எபிகூரஸ் தப்பி, கடல்வழியே பயணம் செய்து அயோனியா பகுதிக்குச் சென்றுவிட்டார். அங்கே புதிய பள்ளிக்கூடத்தை நிறுவி தம் கொள்கையைப் பயிற்றுவித்தார். நிறையப்பேர் அவருடன் இணைந்தனர். தலைவர் என்றே அவர் அறியப்படலானார். அரசியலிலிருந்தே ஒதுங்கி தம் கொள்கையைப் பரப்புவதை மட்டுமே கைக்கொண்டார். தந்தை பெரியார் நினைவுக்கு வருகிறார் அல்லவா?

ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட தொகுப்புகள் அளவுக்கு அவருடைய எழுத்துகள் அமைந்தன. அவர் காலத்திய தத்துவ அறிஞர் எவரும் செய்யாத அரிய சாதனை அது! கடும் வயிற்றுப்போக்கு நோயுடன் சிறுநீர்க்குழாயில் அடைப்பு போன்ற நோயும் சேர்ந்து இறுதிக் காலத்தில் அவதிப்பட்டார். உயிர் பிரியும் தருவாயில்கூட இடோமெனியஸ் எனும் நண்பருக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தார்.

அவருடனான நட்பு அளித்த சந்தோஷத்தையும் நோயின் கொடுமை தந்த கஷ்டத்தையும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். வெந்நீரில் குளித்துக்கொண்டே, குடிப்பதற்குக் கொஞ்சம் ஒயின் கேட்டு வாங்கிப் பருகிக் கொண்டே உயிரை விட்டார். பிரிகிறேன் நண்பர்களே! நான் கூறிய உண்மைகள் என்றும் நிலைத்து நிற்கும் என்பவை, அவர் கூறிய இறுதிச் சொற்கள்.

நாடு கடத்தப்பட்டார்

எபிகூரசின் பள்ளியில் பயின்ற அல்ஷியஸ், ஃபிலிஸ்கஸ் எனும் இருவர் ரோம் நகருக்கு எபிகூரஸ் மறைந்த மறு ஆண்டில் வந்து அவரின் தத்துவங்களைப் பயிற்றுவிக்கத் தொடங்கினர். மதப் பழைமைவாதிகளின் பிழைப்பைக் கெடுத்துவிடும் என்றஞ்சியவர்கள் அவர்கள் இருவரையும் ரோம் நகரைவிட்டுப் போகுமாறு செய்துவிட்டனர் என்றாலும் இத்தாலி நாட்டில் அவர் தத்துவங்கள் பரவியதைத் தடுக்க இயலவில்லை. நேப்பிள்ஸ் நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் அவரது தத்துவங்கள் பெரும் செல்வாக்கைப் பெற்றன. கல்பூர்னியா பிஸோ எனும் புகழ் பெற்ற குடும்பத்தினர் இந்தத் தத்துவங்களின் ஆதரவாளர்கள். அந்தக்  குடும்பத்துப் பெண்மணி ஒருவர்தான் ஜூலியஸ் சீசரின் மனைவி. சீசருக்கும் பிஸோ குடும்பத்துக்கும் வேண்டாதவர் மார்கஸ் சிசரோ. அவர் இந்தத் தத்துவங்களுக்கு எதிரானவர். இவர் எபிகூரசின் தத்துவங்களுக்கு எதிராக நூல்கள் சில எழுதினார். இக்கெட்டதிலும் ஏற்பட்ட நன்மை என்னவென்றால், எபிகூரசின் நூல்கள் அழிக்கப்பட்டுக் கிடைக்காமல் போன நிலையில், அவரின் தத்துவங்களைத் தெரிந்துகொள்ள இந்த நூல் உதவுகிறது. பரபக்கவாதம் எனும் முறையில் சிசரோவின் எழுத்துகளிலிருந்து எபிகூரசைப் புரிந்து கொள்ள முடிவது ஒருவகையில் விளைந்த நன்மையே!

நூல்கள் அழிந்தன

பொது ஆண்டு 79இல் வசுவியஸ் எரிமலை வெடித்து, அதனால் பிஸோக்களின் அரண்மனை, ஹெர்குலேனியம் எனும் அருங்காட்சியகம் போன்றவை அழிந்துபட்டன. எபிகூரசின் நூல்களும் அழிந்துபோயின. என்றாலும் கிரேக்க மொழி பேசும் பகுதிகளிலும் ஃபிரான்சு, ஸ்பெயின் நாடுகளிலும் அவரது கருத்துகள் பரவி செல்வாக்குப் பெற்றிருந்தன. இருந்தாலும், அவற்றிற்கு எதிரான கருத்துகளைப் பரப்பும் முயற்சியிலும் சிலர் இறங்கினர். செக்டஸ் எம்பிரிகஸ் என்பவரும் பிளேட்டோவின் மாணவர் புளுடார்க் என்பவரும் இவர்களில் முக்கியமானவர்கள்.

என்றாலும், துருக்கி நாட்டில் பல பகுதிகளிலும் அவை பரவுவதைத் தடுத்திட இவர்களால் இயலவில்லை. ஓயினோன்டா எனும் துருக்கிய நகரில் எபிகூரசின் தத்துவ வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவர் ஒன்று ஃபிளேவியஸ் டயோஜெனிஸ் என்பவரால் கட்டப்பட்டது.

அவரது தத்துவங்களின் சிறப்புக்கு இது பெரிய சான்றாகும். சுமார் 500 ஆண்டுகளுக்கு இத்தத்துவங்கள் நீடித்து நிலைபெற்றிருந்தன.

யூதர்களின் எதிர்ப்பு

யூதர்களின் டால்முடிக் மிஷனர் எனும் மத நூல் எபிகூரனிசம் பற்றிக் குறிப்பிடுகிறது. யூதர்களின் பெருமைகளைக் கூறிய பிறகு, மரித்தவர்கள் எழுப்பப்படுவர் என்பதையும் சொர்க்கத்திலிருந்து சொல்லப்பட்டது டோரா (யூத மறை நூல்) என்பதை ஏற்காதவர்களையும் எபிகூரனியர்கள் எனலாம் (APIKORSIM) என்று அதில் எழுதிக் கொண்டுள்ளனர். டால்முட் எனும் யூத மதச் சட்டங்களில் பொதுவாகக் கடவுள்பற்றிய நம்பிக்கையில்லாத வர்களைக் குறிக்க அபிகோரோஸ் (APIKOROS) எனும் சொல் தற்கால யூதர்களால் கையாளப்படுகிறது. யூதர்கள் நிரந்தரமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்கள் என்றும் கூறப்படும் நிலையில், அதனை ஏற்காதவர்களும் இறப்புக்குப் பிந்தைய வாழ்வு ஏதும் கிடையாது என்பவர்களுமான எபிகூரியர்கள் அவர்களுக்கு வேண்டாதவர்கள். மோசே மைமோனிடஸ் எனும் யூத மதகுரு 12ஆம் நூற்றாண்டில் எபிகூரியத் தத்துவங்களை நிராகரித்தவர் ஆவார்.

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *