Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

‘உண்மை’ இதழைப் படிப்பதோடு பரப்பி வருகிறேன்!

ஜனவரி 16-31, 2020 ‘உண்மை’ இதழைப் படித்தேன். படிக்கப் படிக்க அந்த இதழ் எனக்கு ஆர்வத்தைத் தூண்டியது.

‘ஜாதி ஒழியும்வரை இடஒதுக்கீடு வேண்டும்’ என்னும் ‘உண்மை’ இதழ் தலையங்கம், ஆசிரியர் அய்யா அவர்கள் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில்… கட்டுரை, தமிழர் திருநாள் குறித்து பெரியார் பேசுகிறார் பகுதி, திராவிடர் திருநாளாம் பொங்கலைக் கொண்டாடி மகிழ்வதோடு, குறிக்கோளை எட்டவும் சூளுரைப்போம் என்கிற அய்யா மஞ்சை வசந்தன் அவர்களது கட்டுரை, பாவேந்தர் பாரதிதாசன் கவிதை, நமது மருத்துவர் இரா.கவுதமன் அவர்களது கட்டுரை, ஆசிரியர்  கேள்வி-பதில் பகுதி, மூடநம்பிக்கையால் வரும் கேடுகள் என்னும் கட்டுரை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன.

நான் ‘உண்மை’ இதழைப் படிப்பதோடு மட்டுமின்றி அதனைப் பரப்பியும் வருகிறேன். தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சுரங்கமாக வெளிவந்துள்ளது நமது ‘உண்மை’ இதழ்.

நன்றி!

– கோ.வெற்றிவேந்தன்,

கன்னியாகுமரி

மானமிகு ‘உண்மை’.  ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். தேசிய நல்லாசிரியர் விருது பெற்று ஓய்வு பெற்ற ஆசிரியர் நான்.  ஆசிரியரின் தலையங்கம், பெரியார் பற்றிய தொகுப்புகள், பெரியாரே எழுதிய கருத்துக் கருவூலங்கள், படிக்கப் படிக்க எங்களுக்குப் பயனளிக்கின்றன. மத்திய மாநில அரசுகளின் அவலப் போக்கினை அவ்வப்போது கண்டித்து,  மக்கள் நலன் காக்கும் திறன்.

87 வயதைக் கடந்தும் தமிழர் உடையோடு தேனீயைப் போல் தொய்வின்றி பெரியாரின் கொள்கைகளை மொழிபெயர்த்து விழிப்புணர்வை உலகெங்கும் உண்டாக்குவது தங்களின் தனித்துவம். எங்கள் குடும்பத்தில் படிக்க சலிப்பில்லாதது உண்மை. நண்பர்கள் உறவினர்கள் தேடிப் படிக்கும் ஆற்றல் பெற்றது ‘உண்மை’.

கேள்விகளுக்கு தெளிவான பதிலைத் தரும் நுட்பம் பாராட்டுக்குரியது. தங்களின் “வாழ்வியல் சிந்தனை’’ நூல் நாக்பூர் யுனிவர்சிட்டியில் பாடமாக வைக்கப்பட்டுள்ளதாக அறிந்தேன். நெதர்லாந்தில் பெரியாரின் கொள்கைகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளதையும் அறிந்தேன். மகிழ்ச்சி! பகவத் கீதைக்கு மறுப்பு நூலான ‘கீதையின் மறுபக்கம்’ சரியான பதிலடி. உங்கள் சிந்தனைக்கு என்றும் செவி சாய்ப்போம்! உள்வாங்குவோம்! உலகுக்கு எடுத்துரைப்போம்! ‘உண்மை’யைப் பரப்புவோம்!

– கோ.முருகேசன் எம்.ஏ.,

வாழப்பாடி, சேலம் – 636115.

  ________________

வெல்க பெரியாரின் புகழ்!

பிப்ரவரி 1-15, 2020 ‘உண்மை’ இதழில், உணர்வுபொங்க நடைபெற்ற உண்மை (இதழ்) பொன்விழாவின் அட்டைப்படம் பளிச்! பளிச்! அசத்தலோ அசத்தல். மஞ்சை வசந்தன் அவர்கள் முகப்புக் கட்டுரையாக தீட்டி இருப்பது இதழுக்கே முத்தாய்ப்பாக அமைந்திருந்தது.

“ஒரே செடியில் கத்தரிக்காயும் உருளைக்கிழங்கும்!’’ என்னும் துணுக்கைப் படித்தேன். வியந்தேன்! மகிழ்ந்தேன்!!

“எரிமலையில் ஓர் ஈரநீர் அருவி!’’ என்னும் தலைப்பில் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களின் கவிதை அருமை!

மருத்துவம் பகுதியில், ‘’தடுப்பு முறைகள்’ என்னும் துணுக்கினை படித்தேன். உடலில் நோய் வராமல் தடுக்க, ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் பதின்மூன்றையும் படித்து அதன்படி நடந்து கொண்டாலே போதும் என்பதை உணர்ந்தேன். உடல்நலம் பகுதியில், “இயர்போன் கருவியை அதிகம் பயன்படுத்தாதீர்! என்னும் தகவலைப் படித்தபோது, காது, மூளை, மனநலம் போன்றவை எந்த அளவுக்கு பாதிக்கும். அதனால் ஏற்படும் பின் விளைவுகள் இடர்ப்பாடுகள் என்னை வியக்க வைத்தது.

ஒருவரிச் செய்திகள் அய்ந்தும் படித்தேன். இதுவரை நான் படிக்காததையும் இன்று படித்தறிந்தேன். மகிழ்ந்தேன்.

ஆசிரியர் பதில்கள் பகுதியில், ராமனை தூக்கிப் பிடிப்பதைப் பார்த்தால், ரஜினிகாந்த் ராமராஜ்யம் நடத்தத்தான் துடிக்கிறாரா என ஈரோடு வாசகர் கேட்ட கேள்விக்கு நம் ஆசிரியர் கூறிய பதில், “நாசூக்காகவும் நச்’’ என்றும் அமைந்திருந்தது.

முகநூல் பகுதியில், பணக் கஷ்டமா இருக்குன்னு கோவிலுக்கு போனேன். அங்கே சிறப்பு தரிசனம் ரூ.100ன்னு சொன்னாங்க. நம்மை விட சாமி பணக் கஷ்டத்துல இருக்கிறார்னு திரும்பி வந்துட்டேன் என பக்தன் கூறுவதை படித்துவிட்டு விழுந்து விழுந்து சிரித்தேன். ரசித்தேன்.

அன்புடன், உங்கள் வாசகன்,

– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி