ஜாதியொழிப்பில் காதல் திருமணங்களின் பங்கு!
இயற்கையை நேசித்தல், ரசித்தல் எல்லாம் மனிதர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று! ஆனால், ஒரேயொரு விஷயத்தைத் தவிர! ஆம், காதல் என்னும் இயற்கை உணர்ச்சியை மட்டும் வெளிப்படுத்தக் கூடாது என்று தடை போடுகிறது இந்தச் சமூகம்!
காதல் அடைதல் உயிர் இயற்கை – அது
கட்டில் அகப்படும் தன்மையதோ? – அடி
சாதல் அடைவதும் காதலிலே – ஒரு
தடங்கல் அடைவதும் ஒன்று கண்டாய்!
என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
இன்றைக்கு, இயற்கை விவசாயம்! இயற்கை உணவு! இயற்கை மருந்து! என்றெல்லாம் பேசுகிறவர்கள் கூட, காதல் என்னும் இயற்கையை மறுதலிக்கிறார்கள்!
சுப்பிரமணிய பாரதியார் சொல்வதுபோல,
நாடகத்தில் காவியத்தில் காத லென்றால்
நாட்டினர்தாம் வியப்பெய்தி நன்றாம் என்பர்;
ஊடகத்தே வீட்டிலுள்ளே கிணற்றோ ரத்தே
ஊரினிலே காதலென்றால் உறுமுகின்றார்;
பாடைகட்டி அதைக்கொல்ல வழிசெய் கின்றார்;
பாரினிலே காதலென்னும் பயிரை மாய்க்க
மூடரெல்லாம் பொறாமையினால் விதிகள் செய்து
முறைதவறி இடரெய்திக் கெடுகின்றாரே!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், அரசர்களின் ஆதரவுடன் பார்ப்பன பண்பாட்டுத் திணிப்பால் சமூக அடுக்கதிகாரம் ஜாதி சார்ந்ததாக மாற்றப்பட்டுவிட்டது. பழங்கால இந்தியாவில் ஜாதி அதிகாரமும், ஜாதிப் பிரிவினையும், படுமோசமாக இருந்தன; இப்போதும் இருக்கின்றன! ஜாதி அடையாளங்களை மீறுவது பலமாகத் தடுக்கப்படுவது, தன் குடும்பச் சொத்து வேறு ஜாதிக்காரர்களிடம் போய்விடக்கூடாது என்பதற்காகவே. காதல் உணர்ச்சி உருவாகாத குழந்தை வயதில் கல்யாணம் என்பது நடைமுறையாகி, இரண்டாயிரம் வருடங்களாக காதல் என்றால் என்னவென்று தெரியாது வாழ்கின்றோம். இதனால் இதயங்கள் இணையாது வெறும் உடல்கள் மட்டும் இணைந்த உடலுறவு மட்டுமே காதல் என்றும், திருமணம் என்றும் சொல்லப்படுகிறது.
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தமக்குப் பிடித்த துணையை, தாமே தேடிக் கொள்வதுதான் உண்மையான காதல். வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் காதல் உறவைத் தேடிக்கொள்ள, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தடை போடப்பட்டுள்ளது.
களவொழுக்கம் – உடன்போக்கு – கற்பொழுக்கம் என்கிற முறையில் இருந்த தமிழர் வாழ்க்கையின் இடையில் ஜாதி புகுந்தது. கற்பொழுக்கம் என்னும் சொல்லுக்குப் புது விளக்கம் கொடுக்கப்பட்டது. இயற்கையாக உருவாகும் பாலுணர்ச்சிகூட ஜாதி பார்த்துத்தான் உண்டாக வேண்டும் என்று கட்டுப்படுத்தப்பட்டது. காதல் திருமணம் என்பது ஒழிக்கப்பட்டு, கட்டிவைக்கும்(?) ‘கட்டாயத் திருமணம்’ மட்டுமே அங்கீகரிக்கப்படுகிறது.
கல்யாணப் பொருத்தத்தில் ஜாதி, பணம், சொத்து, அழகு, கல்வியறிவு, பதவி என பலவற்றைப் பார்க்கும் சமூகம், கல்யாணம் செய்ய விரும்புபவர்கள் உண்மையாக ஒருவரை ஒருவர் விரும்புகிறார்களா என்று பார்ப்பது கிடையாது. ஒருவரை ஒருவர் விரும்புவதற்கு, ஒருவரோடு ஒருவர் பழகாமல் விருப்பம் வரவும் முடியாது. கட்டிவைக்கும் கால்கட்டு கல்யாணங்களில் கழுத்தில் தாலி ஏறிய பின்னர்தான் கணவன் மனைவியை ஒருவரோடு ஒருவர் பழக அனுமதிக்கப்படுகிறது. ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தமக்கிடையே அன்பை வெளிப்படுத்தி, இருவரும் நெருங்கிப் பழகும்போது, உள்ளத்தையும் உடலையும் பகிர்ந்து கொள்வதால் வளரும் ஓர் உறவுதான் உண்மையான காதல்.
பெற்றோர் உற்றார் உறவினர் யாரென்றே தெரியாமல் செம்மண்ணில் பெய்த மழையைப்போல அன்புநெஞ்சங்கள் இரண்டறக் கலந்து வாழ்ந்த தமிழர்கள் இப்படி ஜாதி ஜாதி என்று சாக்கடையாகவே மாறிவிட்டார்களே?
எண்ணங்களோடு ஒற்றுமை இல்லாத ஒருவரோடு, சில நிமிடங்களுக்குப் பின் எதையுமே பேசவே முடிவதில்லை. அப்படி இணக்கம் இல்லாத ஒருவருடனான திருமணம் எப்படி ஆண்டுக் கணக்கில் தொடர முடியும்? பிறகு வேறு யாருடனோ காதல் தோன்றுகிறது. அந்தக் காதலை ‘கள்ளக்காதல்’ என்கிறது இந்தச் சமூகம்! ஒரு வியப்பு என்னவென்றால், இந்தக் கள்ளக்காதலுக்கு ஜாதி தடையில்லை! அப்படியென்றால் இதுதானே உண்மைக் காதல்?
செயற்கையான – சதியான ஜாதியை ஒழிக்க காதல் ஓர் இயற்கையான வழியாக இருக்கிறது. உண்மையில், காதல் என்பது ஜாதி பார்த்தோ, அந்தஸ்து பார்த்தோ, வருவதில்லையே? கண்டவுடன் காதல் வருகிறது என்கிறார்கள். கண்டவுடன் காதல் வருகிறதென்றால் அதுதான் இயற்கை. ஜாதி என ஒன்று இயற்கையானதாக இருந்தால், மாற்று ஜாதிப் பெண்ணை அல்லது ஆணைப் பார்த்தால் காதல் வரக்கூடாதல்லவா? அப்படி இயற்கையாக வரும் காதலை ஏன் ஜாதி எனும் இல்லாத ஒரு கற்பனைக் காரணத்தை வைத்துத் தடுக்க வேண்டும்?
ஒரு 14,000 நபர்களைக் கொண்டு மேற்கொண்ட ஆய்வு ஒன்று சொல்லும் புள்ளிவிவரத்தில், 91% பெண்களுக்கு தன் துணைவனைத் தேர்ந்தெடுப்பதில் சுதந்திரம் கிடைப்பதில்லை எனவும், அவை அனைத்தும் பெற்றோர் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள்தாம் என்றும் தெரியவருகிறது. இந்த ஆய்வளிக்கும் புள்ளிவிவரத்தோடு, ஆங்காங்கே தெரிந்தும் தெரியாமலும் நடக்கும் கவுரவக் கொலைகள் பற்றிய புள்ளிவிவரங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், இந்தியாவில், பண்பாடு, கலாச்சாரம் போன்ற விடயங்கள் இன்றும் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானவையாகவே இருக்கின்றன என்பது புரிகிறது.
திருச்சியைச் சேர்ந்த `கராத்தே’ முத்துக்குமார். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக, தன் ‘காதலர் பாதுகாப்பு இயக்கம்’ மூலமாக 1,311 காதல் திருமணங்கள் நடத்திவைத்துள்ளார். இப்படிப்பட்ட பாதுகாப்பு இயக்கங்கள்தாம் காதல் மணங்களை அதிகப்படுத்தி ஜாதியை ஒழிக்க உதவும். எனவே, முத்துக்குமார்கள் நாட்டில் உருவாக வேண்டும்.
எந்த ஜாதியில் எல்லோருமே யோக்கியமானவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? எங்கள் ஜாதியில் பிறந்தவர்கள் குடிப்பதில்லை, மற்றவர் குடி கெடுப்பதில்லை என்று எந்த ஜாதியினராவது நெஞ்சு நிமிர்த்திச் சொல்ல முடியுமா? அப்படியிருக்க, எந்த ஜாதிப் பெண்ணை அல்லது ஆணை விரும்பினால் – திருமணம் செய்து கொண்டால் என்ன கெட்டுப் போய்விடும்?
ஒரே ஜாதியினர் வேறெந்தத் தகுதியையும் எதிர்பார்க்காமல் சம்பந்தம் வைத்துக் கொள்கிறார்களா? படிப்பு, பணம் அழகு என்று பல காரணிகளையும் பார்க்கிறார்கள் அல்லவா? அப்படியிருப்பின், மற்றெல்லா தகுதிகளும் கொண்ட வேற்று ஜாதிப் பெண்ணையோ ஆணையோ காதலிப்பதை ஏன் தடுக்க வேண்டும்?
உடுமலை கவுசல்யா – சங்கர் இணையை எல்லோருக்கும் தெரியும். கவுசல்யாவின் பெற்றோர் கூலிப்படையை ஏவி, கவுசல்யா – சங்கர் வெட்டப்படும்போது, அருகில் நின்ற காரில் அமர்ந்து அதனை கவுசல்யாவின் தந்தை வேடிக்கை பார்த்தார். ஜாதி எவ்வளவு கொடியது என்பதற்கு இதைவிட வேறு சாட்சி தேவையில்லை. கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும், நான் பிழைத்தால், சங்கர் வீட்டுக்குத்தான் போவேன், உங்களுடன் (பெற்றோருடன்) வரமாட்டேன் என்று கவுசல்யா உறுதியாகக் கூறினார். காதல் எவ்வளவு வலியது என்பதற்கு இதைவிட வேறு சாட்சி தேவையில்லை. மனசாட்சி உள்ளவர்கள் காதலை ஆதரிப்பார்களா? – ஜாதியை ஆதரிப்பார்களா?
சேர்ந்து பழகல், சேர்ந்து உண்ணுதல் போன்றவை தீண்டாமையை ஒழிக்கும். ஆனால், மணவுறவு மட்டுமே ஜாதியை ஒழிக்கும். வேறுபட்ட ஜாதியின் இரத்தங்கள் கலந்து பிள்ளை பிறப்பதால் அது எந்த ஜாதி என்கிற அடையாளத்தை இழந்து விடுகிறது. அந்தக் குழந்தை ஜாதியற்ற குழந்தையாகிறது.
ஜாதியற்ற பிள்ளைகள் மணவுறவு கொள்ளும்போது அறவே ஜாதியின் அடையாளம் அகன்றுவிடுகிறது. ஜாதி மறுப்பு மணங்களுக்கு பெரிதும் துணை நிற்பது காதல் மணங்களே! காரணம், இதற்குத்தான் ஜாதியைப் புறக்கணிக்கும் ஆற்றல் உண்டு.
பெற்றோர் பார்த்து, மரபுவழி மணங்களில் ஜாதிப் பொருத்தம் முதன்மையாகக் கொள்ளப்படுவதால் அத்தகு திருமணங்களில் ஜாதியை ஒழிக்க முடியாது. எனவே, ஜாதி ஒழிப்பில் காதல் மணங்களே முதன்மைப் பங்களிக்க முடியும்.
அதனால்தான் காதலை நாம் ஆதரிக்கிறோம். ஜாதி என்னும் மாயமலையை காதல் என்னும் உளியால்தான் உடைக்க முடியும். ‘கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்’ காதல் என்பது இயற்கை விதி! ஜாதி என்பது செயற்கைச் சதி! காதலை ஊக்குவிப்போம்! ஜாதியற்ற நலமிக்க சமூகத்தைப் படைப்போம்!
– க.அருள்மொழி