எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை ( 54 ) : வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியவர் டி.கே.மாதவன்!

பிப்ரவரி 16-29 2020

எந்த வரலாறும் முழுமையாகத் தெரியாமல் மேம்புல் மேய்ந்து, பல இடங்களிலும் பீராய்ந்து பெற்ற செய்திகளை வைத்து பெரிய மேதாவியைப் போல பேனாவைச் சுழற்றியிருக்கிறார்.

கேரள மக்களின் ஜாதி இழிவுக் கொடுமை நீங்க ஆதிகாலம் தொட்டு பெரியார்தான் போராடினார் என்று யார் இவரிடம் சொன்னார்கள்? பசிப்பவன் சாப்பிடுவான், தாகமெடுத்தவன் தண்ணீர் குடிப்பான். இது இயல்பூக்க நிகழ்வு; அதுதான் கேரளாவிலும் நடந்தது.

உயர்ஜாதிக்காரர்களின் கொடுமை அளவுக்கதிகமாய் இருந்ததால், நாயினும் பன்றியினும் கீழாய் தாங்கள் நடத்தப்பட்டமையால், ஈழவ, தாழ்த்தப்பட்ட மக்கள் அவ்வப்போது தங்கள் எதிர்ப்புகளைக் காட்டியும் போராட்டங்களை நடத்தவுமே  வந்தனர்.

சட்டம்பி சாமி

சட்டம்பி சாமிகள் என்றழைக்கப்பட்ட குஞ்சன்பிள்ளை அவர்கள் மக்கள் மத்தியில் ஜாதிக் கொடுமைகளைக் கொண்டுவந்த ஆரியப் பார்ப்பனர்களைக் கடுமையாகச் சாடினார். ஆரியர்கள் சுயநலத்திற்காகச் சமுதாயத்தையே பாழ்படுத்திவிட்டார்கள்; பொருளாதாரத்தைச் சீரழித்துவிட்டார்கள் என்று குற்றஞ்சாட்டினார். இக்கருத்துகளை விளக்கி ‘வேதாதிகார நிரூபணம்’ என்னும் நூலை எழுதி வெளியிட்டார். இவரது கருத்துகளை ஏற்று நடந்தவர் நாராயணகுரு ஆவார்.

நாராயணகுரு

போராட்டக்காரர்களை ஒருங்கிணைத்து, இழிவு நீக்க – கொடுமை நீக்க – கல்வியும் உயர்வும் பெற, நாராயணகுரு பெரிதும் முயன்றார். இவரது மென்மையான அணுகுமுறைகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. உலகமே ஒரு குடும்பம் என்னும் பொருளில் வசுவதை குடும்பம் என்று முழங்கினார்.

இசுலாமியர்களுடன் ஒரேதட்டில் அவர்கள் உணவைப் பல நாள்கள் உண்டிருக்கிறேன். மீனும் இறைச்சியும் சாப்பிட்டிருக்கிறேன். பசியால் அழும் அவர்கள் குழந்தைகளுக்கு உணவூட்டியிருக்கிறேன் என்று நாராயண குருவே கூறியுள்ளார்.

கிறித்துவர்களிடமும் அன்பு கொண்டு பழகினார். ஜாதி, மதம், இனம், மொழி கடந்து மக்களை நேசித்தார். அவர் ஒரு மனிதநேயத் தொண்டர். அடித்தட்டு மக்களின் வழிகாட்டி. ஜாதி ஒழிப்பு முயற்சிகள் செய்தது போலவே, ஈழவ மக்கள் கல்வி பெற பெரிதும் பாடுபட்டார். தன் மாணவரான நடராஜ குருவை அய்ரோப்பா சென்று கற்றுவரச் செய்தார். கல்வி கற்றால் மட்டுமே ஒரு சமூகம் முன்னேற முடியும் என்று வலியுறுத்தினார். பொதுமக்களை ஒன்றிணைத்து மக்கள் முன்னணி உருவாக்கினா£.¢

கேரளம் கல்வியிலும், தொழில் வளர்ச்சியிலும் மேலெழுந்ததற்கு அடித்தளமிட்டவர் நாராயணகுரு ஆவார். காந்தியார் நாராயணகுருவைப் பெரிதும் மதித்தார்.

சி.வி.குஞ்சுராமன், டி.கே.மாதவன், கேசவ ஆசான், குமரன் ஆசான், அய்யப்பன், அய்யன்காளி, நடராஜகுரு, சத்தியவிரதன் ஆகியோர் இவரது கொள்கைகளைப் பரப்பினர். சி.கிருஷ்ணன், மூர்க்கொத்து குமரன், ஆனந்த நீத்தார் போன்றோர் துணைநின்றனர்.

நாராயணகுருவால் விழிப்புற்ற அவரது சீடர்கள் தங்கள் போராட்டங்களையும் கோரிக்கைகளையும் ஒருமுகப்படுத்தி வென்றெடுக்க, 1903ஆம் ஆண்டு ஸ்ரீநாராயணகுரு தர்ம பரிபாலன் யோகம் (எஸ்.என்.டி.பி.யோகம்) என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. கோயில் சபையாக இயங்கிவந்த அமைப்பு இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டது. கேரளாவில் நிகழ்ந்த எல்லா மாற்றங்களுக்கும் இந்த அமைப்பே காரணம். இந்த அமைப்பின் அடிப்படை நாராயணகுரு ஆவார்.

டாக்டர் பல்பு

டாக்டர் பல்பு என்று அழைக்கப்பட்ட பத்மநாபனும், மகாகவி குமரன் ஆசானும் இந்த அமைப்பை முன்னின்று செயல்படுத்தினர். டாக்டர் பல்பு ஜாதிக் கொடுமைகளால் மிகவும்  பாதிக்கப்பட்டவர். எனவே, அதிகத் தீவிரத்தோடு செயல்பட்டார். அவர் தீட்டும் திட்டங்களைச் செயல்படுத்தும் தீரராகக் குமரன் ஆசான் செயல்பட்டார். எனவே, இந்த அமைப்பின் செயலர் பொறுப்பை ஆசான் ஏற்றுக் கொண்டார்.

நாராயணகுருவின் நோக்கங்களை நிறைவேற்ற ஸ்ரீநாராயண குருகுலம் என்னும் அமைப்பை நடராஜ குரு உருவாக்கி நடத்தி இப்போராட்டத்திற்குத் துணை நின்றார்.

எஸ்.என்.டி.பி.யோகம் அமைப்பு ஒரு பங்கு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டது. ஈழவ மக்களின் இழிவை நீக்கி அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கச் செய்தல், அனைவருக்கும் கல்வி கிடைக்கச் செய்தல், கைத்தொழில், சிறு தொழில் என்று ஏராளமாய் உருவாக்கி தொழில் வளத்தைப் பெருக்கி, அதன் மூலம் வருவாய் கிடைக்கச் செய்தல் போன்ற உயரிய அரசியல் பங்கைப் பெறுவதன் மூலம் அனைத்தையும் சாதிக்கலாம் என்று அவர் முடிவு செய்து செயல்பட்டார்.

டாக்டர் பல்புவின் முதன்மை நோக்கம் ஈழவ மக்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதாக இருந்தது. ஈழவ மக்களுக்கு உரிய அரசியல் பங்கைப் பெறுவதன் மூலம் அனைத்தையும் சாதிக்கலாம் என்று அவர் முடிவு செய்து செயல்பட்டார்.

அய்யன்காளி என்பவர் 1905இல் புலைய மகாசபையை உருவாக்கி அடித்தட்டு மக்களின் மேம்பாட்டுக்குப் பெரிதும் பாடுபட்டார்.

குமரன் ஆசான்

டாக்டர் பல்புவின் பேச்சுகள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன. ஜாதி இழிவை நீக்குதல், சமஉரிமை பெறல், உயர் கல்வி வாய்ப்புப் பெறல், அரசில் பங்கு பெறல், தொழில்வளம் பெற்று வருவாய் கிடைக்கச் செய்தல் குறித்தே இவரது பேச்சும், போராட்டமும் அமைந்தன. இவர்களின் முயற்சியால் படிப்படியாக வெற்றியும் பெற்றனர். அரசிடம் போராடி, குமரன் ஆசான் உள்பட சிலர் சட்டமன்ற நியமன உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றனர்.

எஸ்.என்.டி.பி யோக அமைப்பின் கொள்கை விளக்க ஏடாக “விவேக உதயம்’’ என்னும் பத்திரிகை வெளியிடப்பட்டது. இதன் ஆசிரியராக குமரன் ஆசான் செயல்பட்டார். இந்த அமைப்பின் அசைக்க முடியாத சக்தியாக 15 ஆண்டுகள் குமரன் ஆசான் விளங்கினார்.

டி.கே.மாதவன்

குமரன் ஆசானைத் தொடர்ந்து அவர் பணியை மேற்கொண்டவர்தான் ஜெயமோகன் குறிப்பிடும் டி.கே.மாதவன். இவர் “தேசாபிமானி’’ என்னும் பத்திரிகை மூலம் மக்கள் உரிமைகளுக்காக ஆவேசக்குரல் எழுப்பினார். தம் வாழ்நாள் முழுவதும் ஜாதி, மதம், இன்னும்பிற வேறுபாடுகளற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டினார்.

குமரன் ஆசானைப் போல டி.கே.மாதவன் அரசியல் நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பவர் அல்லர்; போராடும் குணம் உடையவர். அதே நேரத்தில் தேசியவாதியாகவும் செயல்பட்டார். பின்னாளில் தீவிரமான காந்தியவாதியாகவும் மாறினர். எஸ்.என்.டி.பி யோக அமைப்பை மக்களிடம் கொண்டுசென்ற பெருமை இவரைச் சேரும். ஏராளமான உறுப்பினர்களை இந்த அமைப்புக்குச் சேர்த்தார்.

சகோதரர் அய்யப்பன் – சி.பி.குஞ்சுராமன்

இவரைப் போலவே, மக்கள் உரிமைக்காகப் போராடிய மாபெரும் தலைவர் சகோதரன் அய்யப்பன் அவர்கள், எஸ்.என்.டி.பி யோக அமைப்பின் மூளையாகச் செயல்பட்டார். சி.வி.குஞ்சுராமன் சிறந்த எழுத்தாளர்; பத்திரிகையாளர்; இந்த அமைப்புக்கான அரிய சிந்தனைகளை வழங்கியவர். டி.கே.மாதவன் யோக அமைப்பின் கொள்கைகளை வகுத்து, திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தும் பெரும் பொறுப்பை எடுத்துக்கொண்டு செயல்பட்டார்.

காகிநாடா காங்கிரஸ் மாநாட்டின், தீண்டாமைக் கொடுமையையும், வீதியில் கோயிலில் நுழையத் தடையிருப்பதையும் கண்டித்து தீர்மானம் கொண்டு வந்தார். இதற்காகப் போராடப் போவதாகவும் அறிவித்தார். காந்தியார் திருநெல்வேலிக்கு வந்தபோது அதற்கான அனுமதியையும் பெற்றார்.

இதன்மூலம் வைக்கம் போராட்டத்துக்கான ஒரு தொடக்கத்தை டி.கே.மாதவன் உருவாக்கினார். ஜாதி இந்துக்களில் பலரும் இதற்கு ஆதரவு அளித்தனர். குருர் நம்பூதிரிபாடு, கே.பி.கேசவமேனன், சங்கனாச்சேரி பரமேசுவரன் பிள்ளை, மன்னத்து பத்மநாபன் பிள்ளை ஆகியோர் ஆதரவு தந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

(தொடரும்…)

– நேயன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *