நாடகம் : புது விசாரணை(3)

பிப்ரவரி 16-29 2020

(ஒரு நாடகக் தொடர்)

இந்த நீதிமன்றம் எத்தனையோ வழக்குகளை சந்தித்திருக்கிறது. ஆனால், இந்த வழக்கு புது விசாரணைக்காக இந்த நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டு குறுக்கு விசாரணை எல்லாம் நடைபெறுகிறது. பழைய புராண பாத்திரங்களின் தன்மை – மனுநீதி அடிப்படையில் அப்போது சாஸ்திர, புராண, இதிகாசங்களில் அளிக்கப்பட்ட தீர்ப்புகளுக்கான மறு விசாரணைக்கான மனு, வழக்குரைஞர் புத்தியானந்தாவினால் தாக்கல் செய்யப்பட்டு, மாண்பமை நீதிபதி நெடுஞ்செழிய பாண்டியன் அவர்களால் விசாரிக்கப்படுகிறது.

ஏற்கெனவே இந்த நீதிமன்றத்தில் இப்படிப்பட்ட பழைய அநீதிகளுக்குப் புதிய நீதி வழங்க வேண்டி போடப்பட்டு, அனுமதிக்கப்பட்டு விசாரிக்கப்படும் வழக்குகள் ஏராளம் குவிந்திருக்கின்றன; காரணம், தந்தை பெரியார் என்னும் புரட்சியாளரின் அறிவுப் புரட்சியினால், புத்தாக்க சிந்தனைகளுக்கு ஆளான பல, பழைய (மனு) அநீதிகள் – சட்டக் கொடுங்கோன்மைகள் மீது ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியாக வேண்டும் என்கிற உத்வேகம் பலரை மக்கள் மன்றத்திலிருந்து மனிதநேய நீதிமன்றத்திற்கு அழைத்து வந்துள்ளது; அவர்களுக்குப் புதிய நம்பிக்கை பிறந்துள்ளதால், பிறந்தன பல புதிய மனு விசாரணை வழக்குகள்: அதற்காகத் தான் திறந்தன நீதிமன்றக் கதவுகள்.

காட்சி 3 – நீதிமன்றம்

நீதிமன்றத்தில் அனைவரும் அமர்ந்திருக்கின்றனர். நீதிபதி நெடுஞ்செழிய பாண்டியன் வருகிறார்.

உதவியாளர்: அமைதி! அமைதி!

நீதிபதி கும்பிட்டுவிட்டு தனது இருக்கையில் அமர்ந்து வழக்கை விசாரிக்க ஆயத்தமாக, “மண்டல், மண்டல்’’ என்று அழைக்கப்படுகிறார்.

B.P. மண்டல் வந்து தனது இருக்கையிலிருந்து எழுந்து கூண்டுக்குள் ஏறிட முயலும்போது,

நீதிபதி: முன்பே தங்களிடம் நான் சொன்னபடி, இருக்கையில் அமர்ந்தவாறே இந்த நீதிமன்றத்தில் நீங்கள்-இரு தரப்பினரின் கேள்விகளுக்கும் எனது அய்யங்களுக்கும் பதில் அளியுங்கள். பழைய முறை நிற்க வைப்பது; அது மனித தர்மத்திற்கு எதிரானதல்லவா? அதனால்தான்!

மண்டல்: என்றாலும் இந்த நீதிமன்றத்தை நாங்கள் வெகுவாக மதிக்கிறோம். எனவே,  தங்களுக்குரிய மரியாதையைக் கனிவுடன் தர, கண்ணியம் காக்க நான் நின்றவாறே பதில் அளிப்பதே சரி என்று எனக்குத் தோன்றுகிறது! நீதிபதி காட்டிய அன்பினை மறுக்கவில்லை. என்றாலும் நின்றுகொண்டே பதில் அளிக்க விரும்புகிறேன்.

வழக்குரைஞர் புத்தியானந்தர்: இராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்களில் ஏகலைவன், சம்பூகன் இருவரும் வெகுவாக பாதிக்கப்பட்டதோடு, வர்ணாஸ்ரம தர்மம் காரணமாக வாழ்நாள் முழுவதும் அநீதி என்ற நெருப்புக் குண்டத்தில் தள்ளப்பட்டு வெந்து நொந்தவர்கள்!

வழக்குரைஞர் குல்லூகபட்டர்: எனது கற்றறிந்த நண்பர் புத்தியானந்தர் ஜோடனைகளை எல்லாம் கூறி இந்த நீதிமன்றத்தினை தன்வயப்படுத்த முயலுகிறார்.

புத்தியானந்தர்: ஏனோ பதறுகிறார் எனது கற்றறிந்த நண்பர் குல்லூகபட்டர்! விஷயத்திற்கே இன்னும் வரவில்லை. அதற்கு முன்னரே ஏன் இப்படி?

நீதிபதி: சரி, நீங்கள் உங்கள் வாதங்களை எடுத்து வையுங்கள். “Please Proceed.”

மஹாபாரதத்தில் இது நடந்ததாக எழுதப்பட்டுள்ளது. அதை முதலில்,

அதாவது, பஞ்ச பாண்டவர்களை சூதாட்டத்தில் தோற்றதால் 14 ஆண்டுகள் வனவாசம் தண்டனை தந்து அனுப்பிய நிலையில், ஒரு நாள் காட்டில் -அர்ச்சுனன் மற்றவர்களுடன் குரு துரோணாச்சாரியார் உணவுக்காக காய்கனிகளைப் பறிக்கவும், விலங்குகளை வேட்டையாடவும் நடந்து சென்றனர்.

அப்போது ஒரு நாய்க்குட்டி குரைத்தது. அடுத்த சில மணித்துளிகளில் ஓர் அம்பு அதன் வாயைத் துளைத்துக் கொன்றது.

குறி தப்பாமல் சென்று நாய்க்குட்டியைக் கொன்ற அந்த அம்பு துரோணருக்கு  அதிர்ச்சியைத் தந்தது. “யார் அம்பை ஏவியது?’’ உரக்க கேட்டார் துரோணாச்சாரியார்!

கட்டுமஸ்தான தேகம் படைத்த ஒரு வாலிப வேடன் ஓடோடி வந்து துரோணரின் காலில் விழுந்து ‘அடியேன்தான் குருதேவ்’ அம்பு எய்தவன்.

“உன் பெயர் என்ன?’’ என்று துரோணர் கேட்க,

“ஏகலைவன்’’ என்றான் வேடன்.

“நீ என்ன குலம்?’’ வேட்டுவ குலமா?

“ஆம் ஸ்வாமி!’’

அதிர்ச்சியுடன் கண்களைச் சுழற்றி – (விழி பிதுங்கியபடி) – “அப்படியா? உன் வித்தைக்கு யார் குரு? – யாரிடம் நீ இந்த வில் வித்தையைக் கற்றாய்?’’ – துரோணர் கேட்கிறார்.

“அடியேன் கற்றது தங்களிடம்தான் குருதேவா’’ என்கிறான் ஏகலைவன்.

“என்ன! என்ன! என்னிடமா நான் உன்னைப் பார்ப்பதே இதுதான் முதல் தடவை. பின் எப்படி என்னிடம் கற்றிருக்க முடியும்? ஏன் இப்படி கதை விடுகிறாய்?’’ சுட்டெரிக்கும் பார்வையுடன் கேட்டார் துரோணர்.

சாந்தமுடன் ஓர் அடிமையின் ஈனக்குரலில்  ஏகலைவன்,

“குருதேவா நீங்கள் ஒருவேளை மறந்திருக்கக் கூடும். நான் தங்களை ஒரு நாள் சரண் அடைந்து வில் வித்தை பயிற்சியில் சேர விருப்பம் தெரிவித்தேன். தாங்கள் நீ என்ன ஜாதி – வர்ணம் என்று கேட்டீர்கள். நான் – வேட்டுவகுலம், வர்ணம் – சூத்திரன்’’ என்றேன்.

“அப்படியா? சூத்திரர்களுக்கு ‘தனுர்வித்யா’ சொல்லிக் கொடுக்க வர்ணதர்மம் இடந்தராது. இந்த இடத்தைவிட்டு ஓடிப்போ! அந்த நினைப்பை உன் மனதிலிருந்து அழித்துவிடு’’ என்று கோபாக்கினியோடு கூறினீர்கள்.

நான் தங்கள் காலைப் பிடித்துக் கொண்டு கதறிக் கதறிக் கெஞ்சி அழுதேன். சட்டென்று உதறிவிட்டு திரும்பி நடந்து போய்விட்டீர்கள்!

என்றாலும், தங்களை நான் என் மானசீக குருவாக – இஷ்ட குரு தெய்வமாக – வரித்துக் கொண்டேன்; தங்கள் உருவத்தை ஒரு சிலை செய்து, அதனை அனுதினமும் வணங்கி, அதன்முன் வில்வித்தையைப் பயின்றேன். இப்படித்தான் எனது விற்கலை வளர்ந்தது குருதேவ்’’ என்றான்.

துரோணருக்கு உள்ளூர வஞ்சக நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தும்கூட, அதை காட்டிக் கொள்ளாமல் ஒரு சூழ்ச்சித் திட்டத்தை உருவாக்கினார்.

நீதிபதி நெடுஞ்செழிய பாண்டியன்: என்ன? என்ன? மிகவும் அதிர்ச்சி தரும் கொடுமையாக இருக்கிறதே! வேடுவர்கள்தானே வில்வித்தையில்  வல்லவர்கள். வில்வித்தையைக் கற்றுக் கொள்வதில் அவர்கள்தானே முன்னுரிமை உடையவர்கள்? அப்படியிருக்க, அவர்களுக்கு இப்படி ஒரு தடையா? அதுவும் வர்ண தர்மத்தாலா?

வழக்குரைஞர் குல்லூகபட்டர்: கனம் நீதிபதி அவர்களே! கர்மானுஷ்டானம், தர்மானுஷ்டானம் இவை இரண்டும் நம் சாஸ்திர சம்பிரதாயப்படி நடக்க அந்தப் பிரமனே அவாஅவா தலையில் எழுதிவிட்டானே அதை எப்படி மாற்ற முடியும்? துரோணன் மீற முடியுமோ! – அதனால்தான்!

வழக்குரைஞர் புத்தியானந்தர்: எனது கற்றறிந்த எதிர் அணி வழக்குரைஞர் நண்பரின் கர்மானுஷ்டானம் – தர்மானுஷ்டானம் எல்லாம் மஹபாரதக் கதைப்படி மேலும் எப்படி நடந்துள்ளது என்பது அடுத்த கட்டம். அது ரொம்ப சுவாரஸ்யமானது. சற்று விளக்கமாகக் கூற கோர்ட்டாரின் நேரத்தை சற்று கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்!  தொடரலாமா?…

நீதிபதி: அப்படியா? மற்ற வழக்காடிகளும் தொலைதூரத்திலிருந்து வந்து காத்திருக்கிறார்கள். அவர்களை ஏமாற்றம் அடையச் செய்ய விரும்பவில்லை. அடுத்த 15 நாள் தள்ளி வைக்கிறேன்.

மற்ற வழக்கு விசாரணை தொடர்கிறது…

(தொடரும்…)

– சிந்தனைச் சித்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *