இயக்க வரலாறான தன் வரலாறு(244) : சி.பி.எஸ்.ஈ மதிப்பெண் ஊழல்!

பிப்ரவரி 16-29 2020

அய்யாவின் அடிச்சுவட்டில் …

கி.வீரமணி

 10.7.1992 அன்று திருவாரூர் மாவட்டம் சோழங்கநல்லூரில் நடைபெற்ற அன்னை மணியம்மையார் பெயரிலான மகப்பேறு இல்ல அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் மகப்பேறு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி உரை நிகழ்த்தினேன்.

அதே நாளில் எரவாஞ்சேரியில் தந்தை பெரியார் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு அய்யா சிலையைத் திறந்துவைத்து உரை நிகழ்த்தினேன். அப்போது, “தந்தை பெரியார் அவர்களுடைய முதல் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெறுகின்றது. பல சிலை திறப்பு விழாக்களில் அய்யா அவர்களே இருந்திருக்கின்றார்கள்.

அந்த முதல் சிலை திறப்பு விழாவிற்கு ஒருவர் வந்தார். அவர் மிக மிக முக்கியமானவர். அவர் அய்யா அவர்களிடத்திலே பேசிக் கொண்டிருந்தார். அப்படி பேசிக் கொண்டிருக்கும்போது அய்யா அவர்களைப் பார்த்துக் கேட்டார், “என்னங்க உங்களுடைய சிலை எனக்குப் பிடிக்கவில்லை அய்யா’’ என்று சொன்னார்.

அய்யா மிகுந்த அன்போடு கேட்டார், “என்னங்க! இப்படிச் சொல்லுகிறீர்கள்? நீங்கள் இப்படிச் சொல்லுவதற்கு என்ன காரணம்?’’ என்று அய்யா அவர்கள் திருப்பிக் கேட்டார்.

“அதிலே அய்யா மாதிரி உருவம் இல்லீங்க. கொஞ்சம் உருவம் மாறுதலாக இருக்கிறது. அய்யா சிலை வைத்தால் அய்யா மாதிரியே இருக்க வேண்டாமா?’’ என்று அய்யா அவர்கள் மீதிருந்த பற்றினாலே _ ஆசையினாலே அய்யா அவர்களிடத்திலே சொன்னார்.

அய்யா அவர்களுக்குப் பக்கத்திலே எங்களைப் போன்றவர்கள் நின்று கொண்டிருந்தோம். உடனே அய்யா அவர்கள் அதற்குப் பதில் சொன்னார்,

“எனக்கு அது முக்கியமே இல்லீங்க, மன்னிக்கணும். அந்தச் சிலையைவிட எது எனக்கு முக்கியம் என்றால்….. சிலைக்குக் கீழே பீடம் இருக்கிறது பாருங்கள்; அதிலே ‘கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை’ என்று என்னுடைய வாசகத்தைத்தானே எழுதப் போகிறான்! அதுதான் எனக்கு முக்கியம்.’’

இப்படி இந்தச் சிலையை வைத்து விட்டு கடவுள் இல்லை; கடவுள் இல்லை; இல்லவே இல்லை; கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி என எழுதி வைத்தாலே உலகம் பூராவும் இருக்கின்றவன் சொல்லுவான் _ அது என்னுடைய சிலைதான் என்று! எனக்கு உருவம் முக்கியமல்ல; என்னுடைய கொள்கைதான் முக்கியம்’’ என்று சொன்னார்கள். இன்னும் பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை அன்றைய கூட்டத்தில் எடுத்துரைத்தேன்.

ஈழ அகதிகள் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றும் ஆசிரியர்

13.7.1992 அன்று சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஈழ அகதிகள் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் திராவிடர் கழகத் தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் வரவேற்றுப் பேசினார். மாநாட்டை ஈழவேந்தன் திறந்து வைத்தார். மாநாட்டில்  சிறப்புரை ஆற்றினேன்.

16.7.1992 அன்று கடிதம் ஒன்று வந்தது. அதில் “சி.பி.எஸ்.ஈ மார்க் ஊழலை வெளிக்கொணர்ந்த சீரிய செயல்’’ என்று எனக்கு டாக்டர் ஆர்.எஸ்.சிறீதர் அவர்கள் கீழ்க்கண்ட கடிதம் எழுதியிருந்தார்கள்.

சி.பி.எஸ்.ஈ. மார்க் ஊழலை வெளிக்கொணர்ந்த சீரிய செயல்

பொதுச்செயலாளருக்கு ஒரு டாக்டரின் கடிதம்

Dr.R.S.Sridhar, M.B.B.S.,
General Physician and Film Maker,
P.42, 6th Avenue, Anna Nagar, Madras – 600 040
Telephone: 614409  Date: 9.7.1992

பெருமதிப்பிற்குரிய திரு.வீரமணி அவர்கட்கு, வணக்கம்.

தங்களுக்கு என்னைத் தெரிந்திருக்க நியாயமில்லை. எனினும் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். எனது தாய் வழிப் பாட்டனார் திரு.துரைசாமி (கவுண்டர்) தனது இன்வாழ்வை தந்தை பெரியாரின் கொள்கைகளுக்காக ஈந்தவர். வடஆர்க்காடு பெரியார் நூற்றாண்டு விழா செயற்குழு உறுப்பினராக இருந்தவர்.

அமெரிக்காவில் சில ஆண்டுகள் இருந்து விட்டுத் திரும்பியுள்ள எனக்கு சி.பி.எஸ்.ஈ. மார்க் ஊழலை வெளிக் கொணருவதில் தாங்கள் செய்துவரும் சிறப்பான பணி, என் மனதை பேருவகை கொள்ளச் செய்தது.

தங்களுக்கு ஒரு (முக்கியமான) வேண்டுகோள்:

ஜூலை 8 அன்று நடந்த வழக்கு மன்ற விவாதத்தில் சி.பி.எஸ்.ஈ. தேவையின்றி அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பெண்களை ஏற்றியதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

ஆனால், சி.பி.எஸ்.ஈ. வழக்குரைஞர்கள் சி.பி.எஸ்.ஈ. மதிப்பெண்களை ஏற்றியதால், கல்லூரி நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர்களைச் சேர்த்திட வேண்டும் என்று கூறியது. சி.பி.எஸ்.ஈ.யின் தவறுக்காக, தமிழ்நாடு மாநில கல்வி அமைப்பு மாணவர்களைப் பலிகடா ஆக்கும் செயலாகும் இது. சி.பி.எஸ்.ஈ.யின் தவறுக்கு சி.பி.எஸ்.ஈ. மட்டுமே பொறுப்பேற்றிட வேண்டும்! இதனால் சி.பி.எஸ்.ஈ. மாணவர்கள் பாதிக்கப்பட்டால் அதற்கு பொறுப்பு சி.பி.எஸ்.ஈ. தானே தவிர, தமிழ்நாடு மாணவர்களல்லர். பிளஸ் டூ.வில் தமிழ்நாட்டு அரசு கல்வி அமைப்பு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை அங்கீகரித்து அவர்களை அம்மதிப்பெண்கள் அடிப்படையில் கல்லூரியில் சேர்த்திட வேண்டும்! இதைத் தடுக்க முயலும் சி.பி.எஸ்.ஈ.யின் சூழ்ச்சியினைத் தாங்கள் உறுதியாகத் தடுக்க வேண்டும்!

மேலும் ஆந்திராவிலும், கர்நாடகாவிலும் அந்தந்த மாநில மொழியினை இரண்டாம் மொழியாக அனைத்துப் பள்ளிகளும் கற்பிக்க வேண்டும், அனைத்து மாணவர்களும் (சி.பி.எஸ்.ஈ., மெட்ரிகுலேசன் மாணவர்கள் உள்பட) கற்றாக வேண்டும் என்று சட்டம் இருப்பது போன்று தமிழ்நாடு அரசும், தமிழ் மொழியினை அனைத்து மாணவர்களும் தமிழ்நாட்டில் கற்றாக வேண்டும், தமிழ் மொழியினை குறைந்த பட்சம் இரண்டாம் மொழியாகப் பயின்றிருந்தால்தான் தமிழகக் கல்லூரிகளில் அனுமதி தரப்படும் என்று அறிவிக்க வேண்டும். இதை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். இதை அரசு செய்யாவிட்டால் இதற்காகத் திராவிடர் கழகம் போராட வேண்டும். ஆந்திரரும், கன்னடரும் ஏற்கெனவே சட்டமாக வைத்திருப்பதை தமிழ்நாடும் பின்பற்றுவதில் தடை என்ன?

தங்களது திராவிடப் பணிக்கும், செயல் மேன்மைக்கும் என் வாழ்த்து!

அன்பன்,

ஆர்.எஸ்.சிறீதர். 

18.7.1992 அன்று “சி.பி.எஸ்.ஈ. பள்ளிகளே கூடாது’’ என்கிற கிளர்ச்சி வெடிக்கும்! வெடிக்கும்! என்று முக்கிய அறிக்கை ஒன்று ‘விடுதலை’யில் வெளியிட்டிருந்தோம். அதில், பொய்யான தகவல்களைக் கூறியும், மிரட்டும் பாணியிலும் எழுதிய பார்ப்பன ஏடு, இன்று திடீரென்று ‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு’வான “இந்து’’ ஏட்டில் அண்ணா பல்கலைக்கழகம் நுழைவுத் தேர்வு முடிவுகளைத் தொகுத்து நீதிமன்றத்திற்கு அளித்ததில் ஏதோ மிகப் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக பெரிய புழுதிப் புரளியை பார்ப்பனர்களுக்கு உரிய மிரட்டல் தன்மையோடு உண்மைக்கு மாறாக அசல் புரட்டு வேலையைச் செய்துள்ளது.

 ஓய்வு பெற்ற குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமனுக்கு அரசு பங்களா வழங்குவதை எதிர்த்து

நடைபெற்ற கண்டன ஊர்வலத்தில் ஆசிரியர் மற்றும் கைதாகும் கழகத்தினர் 

முதலில் கூடுதல் மதிப்பெண்களே போடவில்லை என்று சி.பி.எஸ்.ஈ தரப்பில் கூறப்பட்டது. பிறகு நீதிமன்றத்தில், ஆம்! மதிப்பெண்கள் போடப்பட்டது உண்மைதான் என்பதை ஒப்புக் கொண்டு, அதற்குப் பல பெயர்களும் வியாக்கியானங்களும் அவர்கள் தரப்பில் கூறப்பட்டன.

‘மார்க் மாடரேஷன்’ (Mark Moderation), ‘ஸ்டாண்டர்டிசேஷன்’  (Standardisation) என்றெல்லாம் கூறப்பட்டது.

இதுபற்றி விசாரித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று திராவிடர் கழகத்தின் சார்பில் வழக்கு போடப்பட்டுள்ளது. அவர்களது உள்நோக்கம் வெளிப்பட்டுவிட்டது. இன்னொரு நுழைவுத் தேர்வு வேறு யாரோ தனியார் ஏஜென்சியால் நடத்தப்பட வேண்டுமாம். இப்படி பாதிக்கப்பட்டதாகக் கூறி வழக்குப் போட்ட ஒவ்வொருவரும் கேட்டால் நிலைமை என்னவாகும்? என்று ‘இந்து’ ஏட்டின் செய்தியை சுட்டிக்காட்டி அந்த அறிக்கையில் விளக்கியிருந்தோம்.

அப்படிப்பட்ட சி.பி.எஸ்.ஈ.தான் இன்று ‘நீட்’ தேர்வு நடத்துகிறது என்பதிலிருந்து ‘நீட்’ தேர்வு எப்படிப்பட்ட மோசடித் தேர்வு என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

பெரியார் அஞ்சல் வழிக் கல்லூரியின் முதல்வர் பெரியார் பேருரையாளர் பேராசிரியர் ந.இராமநாதன் அவர்களின் துணைவியார் 22.7.1992 அன்று சித்திரக்குடியில் (தஞ்சை மாவட்டம்) மறைவுற்றார் என்கிற செய்தியை அறிந்து மனம் வருந்தி அவர்களுக்கு இரங்கல் தந்தி அனுப்பினேன்.

24.7.1992 அன்று குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற திரு.ஆர்.வெங்கட்ராமன் அவர்களுக்கு அரசு புதிய பங்களா ஒன்று வழங்குவதை எதிர்த்து கழகத்தின் சார்பில் கண்டன ஊர்வலம் நடத்தப்படும் என்று 17.7.1992 அன்று ‘விடுதலை’யில் அறிவித்து இருந்தோம். இதனையொட்டி கழகத் தோழர்கள் தடையை மீறி ஊர்வலத்தை நடத்தியும் கைதானார்கள்.

ஆர்.வெங்கட்ராமன்

பின்பு, கழகத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு என் சார்பில் தாக்கல் செய்தேன். அந்த மனுவில், “முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஆர்.வெங்கட்ராமன் கடந்த 24.7.1992 அன்று பதவிக்காலம் முடிவடைந்து அவருக்கு சென்னையில் குடியிருக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு பெரிய பங்களா ஒதுக்கப்பட்டிருக்கிறது.

வெங்கட்ராமனுக்கு, குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதால், ஓய்வூதியம், சலுகைகள் கிடைக்கின்றன. கோட்டூர்புரத்தில் ஏற்கெனவே அவருக்குச் சொந்தமாக வீடு இக்கிறது. அருகில் மகள் பேரில் இன்னொரு பங்களா இருக்கிறது. தமிழக அரசு நிதி நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்ற போது அவருக்கு புதியதாக அவருக்கு குடியிருக்க அரசு பங்களாவை அனுமதிக்கக் கூடாது, பொதுமக்கள் பணத்தில் ஏற்கெனவே அவருக்கு செலவு செய்த பணத்தை திரும்பப் பெற ஆணையிட வேண்டும்’’ என்று என் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிட்டிருந்தோம். இந்த மனு மீதான விசாரணை 29.7.1992 அன்று விசாரணைக்கு வந்தது.

25.7.1992 முதல் 29.7.1992 வரை நெதர்லேண்ட்ஸ் நாட்டின் ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற பன்னாட்டு பகுத்தறிவாளர் மாநாட்டில் (International Humanists Conference)   கலந்துகொள்ள அவர்கள் விடுத்த அழைப்பினை ஏற்று 21.7.1992 அன்று லண்டன் வழியாகப் புறப்பட்டுச் சென்றேன்.

 நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற பன்னாட்டு பகுத்தறிவாளர் மாநாட்டில் கலந்து கொள்ளச் செல்லும் ஆசிரியரை வாழ்த்தி வழியனுப்பும் கழகத்தினர்.

வடமேற்கு அய்ரோப்பாவில் வடகடற்கரை ஓரமாக இருக்கும் நெதர்லாந்து நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஆம்ஸ்டர்டாமில் உலக நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் _ மனிதநேய அமைப்புகளின் மாநாடும் பெருமண்டபமான ராய் காங்கிரஸ் சென்டரில் கோலாகலமாகத் துவங்கி நடைபெற்றது.

இந்த மாநாட்டில் 48 நாடுகளில் உள்ள 96 அமைப்புகள் கூட்டாகச் சேர்ந்து நடத்திய சிறப்பு வாய்ந்த உலகம் தழுவிய இந்த மாநாட்டோடு சேர்ந்து, அதன் 40ஆம் ஆண்டு விழாவினையும் இணைத்துக் கொண்டாடினர்.

26.7.1992 முதல் 30.7.1992 வரை நடைபெற்ற இம்மாநாட்டில் பன்னாட்டு நாத்திகர்கள், பகுத்தறிவாளர்கள் _ மனிதநேய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் இணைந்து பல வகையிலும் விவாதங்கள் நடத்தி ஆய்வுகள் மேற்கொண்டு உலக முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

கழகத்தின் சார்பில் நான், நார்வே நாட்டு பகுத்தறிவாளர் லெவி ஃபிராகல் (Levy Fragull) தந்தை பெரியார் தொண்டு பற்றியும், அவருக்குப் பிறகு அது தொடரும் விதம் பற்றியும் கூறி என்னை அறிமுகப்படுத்தி விளக்கினார். பலரும் தனித்தனியே பல்வேறு வினாக்களை என்னிடம் கேட்டனர். அதற்கு சிறப்பான பதில் அளித்தும், அதே நேரத்தில் பகுத்தறிவாளர் இயக்கம் எப்படி பல லட்சக்கணக்கான உறுப்பினர்களைப் பெற்று ஒரு மக்கள் இயக்கமாக (Mass Movement) தமிழ்நாட்டில் இயங்குகிறது என்பதையும் எடுத்துக் கூறினேன். கனடா நாட்டு “ஹியூமனிஸ்ட்’’ ஏட்டின் ஆசிரியர் பேஜ், அமெரிக்கா நாட்டின் பிரபல அமைப்பின் சார்பில் பஃபாலோ (Buffalo) என்ற நகரில் உள்ள அமைப்பிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். பெரியார் தொண்டு, சுயமரியாதை இயக்கத்தின் சாதனை, சுயமரியாதைத் திருமணம் கடவுள் மறுப்பு என்பன பற்றியெல்லாம் விளக்கப்பட்டது. தந்தை பெரியாரின் பெண்ணுரிமைத் தத்துவங்கள் பற்றி மகிழ்ந்தனர்.

ஃபின்லாந்தைச் சார்ந்த தெவோடைக்னன் தந்தை பெரியார் பற்றி ஏற்கெனவே அறிந்தவராகவும் கூறினார். ஹெல்சிங்கி பகுதியைச் சார்ந்தவர் இவர். ‘Free Enquiry’ ஏட்டின் ஆசிரியர் டிமோதி மேடிகன் போன்ற பலரும் இயக்கச் சாதனை பற்றி உரையாடினார்கள்.

இரண்டாம் நாள் மாநாட்டில் இந்தியாவைச் சார்ந்த பாபு, பம்பாய் திருமதி. இந்துமதி பரீக்கி (ராய்கட்) பேசிய பிறகு நான் உரையாற்றினேன்.

வீ.அன்புராஜ்

அப்போது, கடவுள் மறுப்பு வாசகம், மனிதநேய தத்துவம், தந்தை பெரியார் கூறிய “சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு’’ என்பது பற்றி கூறி, இறுதி வரை பதவியேற்காமல் உழைத்தார் என்பதை சுமார் 15 நிமிடங்கள் விளக்கியவுடன் அதை வெகுவாகப் பாராட்டி வரவேற்றனர். கைகுலுக்கி வரவேற்றனர். மாநாட்டில், முக்கியத் தலைவர்களுக்கு தந்தை பெரியார் ஆங்கில நூல்களை அன்பளிப்பாக வழங்கினேன்.

என்னுடன் வீ.அன்புராஜ், பாரீஸ் சுசீலா, கெடிலீஸ் ஆகியோரும் மாநாட்டில் உடன் பங்கேற்றனர்.

லெவி ஃபிராகெல், தந்தை பெரியார் பேட்ஜை தனது சட்டைக்கு மேல் அணிந்திருந்தது குறிப்பிடத்தக்க செயலாக காணப்பட்டது. அவர் நமது இயக்கத்தை நன்கு அறிந்தவர்.

பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் உரையாற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர்.

 இங்கிலாந்து நாட்டு பகுத்தறிவாளர் மேரிஸ் டோப்ஸ் _ ரோவ் 1982இல் சென்னை பகுத்தறிவாளர் கழக மாநாட்டில் கலந்து கொண்டவர். நாம் அளித்த அந்தப் கைப்பெட்டியுடன் மாநாட்டிற்கு வந்திருந்தார். அதை என்னிடத்தில் காட்டி மகிழ்ந்தார்.

1994 அல்லது 1995இல் இந்தியாவில்தான் அடுத்த மாநாடு நடைபெறுவதாக உள்ளது என்று அவர்கள் கூறியவுடன், அதனை வரவேற்று சென்னையில் நடத்துமாறு அழைப்பு விடுத்தேன். அதனை அவர்கள் கைதட்டி வரவேற்றனர்.

மாநாட்டில் திருமதி. நெட்டிக்கிளின் அம்மையாருக்கும் அய்யா பற்றிய ஆங்கில வாழ்க்கை வரலாற்று நூலைத் தந்தேன். அதை அவர்கள் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார்.

20.8.1992 அன்று அமெரிக்காவின் செயின்ட்பீட்டஸ்பர்க்கிலிருந்து பேக்ஸ்  (Fax) மூலம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் மற்றும் கண்டனத்தைத் தெரிவித்து இருந்தேன்.

அந்த அறிக்கையில், கலைஞர் மீது தமிழக அரசு அமைத்துள்ள விசாரணைக் கமிஷனைக் கைவிட வேண்டும்; இது வேண்டாத விளைவுகளை உருவாக்கும் கண்டனத்துக்குரிய செயல் என்றும், கலைஞர் அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர் மீதும் ஒரு விசாரணைக் கமிஷன் போடப்பட்டுள்ள தாகவும் எனக்கு தெரிவிக்கப்பட்டது.

சர்க்காரியா கமிஷன் போட்ட இந்திராகாந்தி மீதே, ஷா கமிஷன் வரவில்லையா? அது விளைவித்த பலன் மீண்டும் அவர் பதவிக்கு வந்ததுதான்!

எனவே, இது கலைஞரின் பொதுவாழ்விற்கு இடப்பட்ட உரமாகுமே தவிர, அவரை வீழ்த்தப் பயன்படும் கருவி ஆகாது என்று தெரிவித்து இருந்தேன்.

12.9.1992 அன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட தமிழர் வாழ்வுரிமை மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சி கடற்கரை சீரணி அரங்கில் நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டிருந்த அந்த மாபெரும் கூட்டத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் திரு.வி.பி.சிங் அவர்கள் முன்னிலையில் நான் உரையாற்றினேன்.

அப்போது, இந்த நிகழ்ச்சி வரலாற்றுக் குறிப்பில் இடம் பெறத்தக்க சிறப்பு வாய்ந்ததாகும். மண்டல் பரிந்துரைக்கு செயல்வடிவம் கொடுத்து அதன் காரணமாக ஆட்சியை இழந்து _ ஆட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சமூகநீதிக் குரல் வளையை நெறிக்க மாட்டேன் என்று காட்டிய ஒப்பற்ற தலைவர், சமூகநீதிக் காவலர், ஒடுக்கப்பட்ட மக்களின் நெஞ்சில் நீங்கள் இடம் பெற்றுள்ள சரித்திர நாயகர் வி.பி.சிங் அவர்கள் என்று குறிப்பிட்டேன்.

18.9.1992 அன்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் இராமதாஸ் அவர்கள் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்திற்காக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதனைக் கண்டித்து 19.9.1992 அன்று ‘விடுதலை’யில் பா.ம.க. சட்டவிரோத தீர்மானம் எதையும் போடவில்லை. 356ஆவது பிரிவை ஏவ மத்திய அரசு துடிக்கும் நிலையில், தமிழக அரசு வீண் வம்பை விலைக்கு வாங்குவதா? என்றும், சமூகவிரோதச் செயலோ, சட்ட விரோத முடிவுகளோ எவையும் அவர்கள் நிறைவேற்றிய தீர்மானங்களில் இல்லை என்பது திட்டவட்டமான ஒன்று. மேலோட்டமாக சில ஏடுகளும், சில நபர்களும் போடும் கூப்பாடுகளையெல்லாம் அரசு பொருட்படுத்தினால், அவப்பெயர் அரசுக்குத் தான் வருமே தவிர, அவர்களுக்கு அல்ல என்பதையும் ஆட்சியாளர்கள் உணருவது நல்லது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.

(நினைவுகள் நீளும்…)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *