முகப்புக் கட்டுரை : கல்வியில் கண்ணிவெடியில் எச்சரிக்கை! எச்சரிக்கை!

பிப்ரவரி 16-29 2020

கவிஞர் கலி.பூங்குன்றன்

புதிய கல்விக் கொள்கை: 1991இல் புதிய பொருளாதாரக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின் கல்வி, மருத்துவம் ஆகியவை தனியார்க்கு தாரை வார்க்கப்பட்டன. மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கையும் ஏழைகளுக்கு ஒரு கல்வியும், வசதி படைத்தவர்களுக்கு சிபிஎஸ்இ மெட்ரிக் பள்ளிகளையும் உருவாக்கின. 120 கோடிக்கு மேல் உள்ள இந்திய மக்களில் 40 சதவிகிதம் மக்கள் கல்வியற்றவர்களாக இருக்கிறார்கள். கல்வி உரிமைச் சட்டம் 2009இல் கொண்டு வரப்பட்டு 1.4.2010 முதல் அமலுக்கு வந்தது. ஆனால், தனியார் பள்ளிகளின் கொள்கை மாற்றப்படவில்லை. அதனால் மூன்று கல்விக் கொள்கைகளாலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி நிலை இன்னும் உயரவில்லை. இந்நிலையில் மத்திய பா.ஜ.க அரசு தேசிய கல்விக் கொள்கை வரைவை வெளியிட்டிருக்கிறது.

தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கை: அனைவருக்கும் உயர்தரக்கல்வி வழங்குவதன் மூலம் நமது தேசத்தை ஒருங்கிணைந்த மற்றும் துடிப்பான அறிவுமிக்க சமுதாயமாக மாற்றுவதற்கு நேரடியாகப் பங்களிக்கும் விதமாக இந்தியை மய்யமாகக் கொண்ட கல்வி முறையாக தேசியக் கல்விக்கொள்கை 2019 (வரைவு) கருதப்படுகிறது.

பள்ளிக்கல்வி அமைப்பு முறை: பள்ளிக்கான பாடத்திட்ட வரையறை (கலைத்திட்டம்) 1968இல் (10+2) பள்ளிக்கல்வி 12 ஆண்டுகளாக மாற்றப்பட்டு 1_5 வகுப்பு தொடக்கப்பள்ளி, 6_8 வகுப்பு நடுநிலைப்பள்ளி, 9_10 உயர்நிலைப்பள்ளி, 11_12 வகுப்பு மேல்நிலைப் பள்ளிகள் என உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மாநில அரசின் கல்விக் கொள்கைகள் எல்.கே.ஜி., யு.கே.ஜி. 1_5 வகுப்பு வரை நர்சரி பள்ளிகளை உருவாக்கியதால் _ அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. தேசியக் கல்விக் கொள்கை பாடத்திட்ட வரையறை (கலைத்திட்டம்) (5+3+3+4) 5 வருடம் அடிப்படை நிலை_பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி மற்றும் 1, 2 வகுப்புகளும், 3 வருடம் ஆயத்த நிலை _3, 4, 5 வகுப்புகளும், 3 வருடம் நடுநிலை _ 6, 7, 8 வகுப்புகளும், 4 வருடம் உயர்நிலை அல்லது இடைநிலை 9, 10, 11, 12 வகுப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. அரசு பால்வாடிப் பள்ளிகள் தொடக்கப் பள்ளியோடு இணைக்கப்படுவதால் பிரிகேஜி, எல்கேஜி, யுகேஜி மற்றும் 5ஆம் வகுப்பு வரை பாடச்சுமை அதிகரிக்கப்படுகிறது. அவர்களின் உடல்நலம், மனநலம் பாதிக்கக்கூடிய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள். கோத்தாரி கமிஷன் கல்வி முறையில் அருகமை தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்க வாய்ப்பு உருவாகும். தற்போதைய கல்விக் கொள்கையால் தொடக்க, நடுநிலைப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடும்.

தொழிற்கல்வி முறையா? குலக்கல்வி முறையா? வாழ்க்கைத்திறன் மேம்பாட்டுப் பயிற்சி: பல்வேறு தொழில்கள் 3, 4, 5 வகுப்புகளில் குழந்தைகளுக்கு தோட்டக்கலை, மண்பாண்டம் செய்தல், மரவேலை குறித்து அருகில் உள்ள பயிற்றுநர்கள் மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பார்கள். 6ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ஆண்டு முழுவதும் மரவேலை, மின்துறை சார்ந்த வேலை, தோட்டக்கலை, மண்பாண்ட வேலைகள், விவசாயம் கற்றுக்கொடுப்பது, கல்வி உரிமைச்சட்டம், 18 வயது குழந்தைகள் கல்வி கற்பது. இந்தக் கொள்கை அதை ஒழித்து தொழிற்கல்வி என்கிற பெயரில் வர்ணாசிரமக் கல்வி முறையை மீண்டும் உருவாக்குகிறது.

தேர்வுமுறைகள்: 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் நடைபெறும் பொதுத் தேர்வுடன் நிறுத்தாமல் 3, 5, 8 வகுப்புகளுக்கு மாநில அரசுகளால் மாநில அளவில் பொதுத்தேர்வு நடத்தப்படும். கல்வி உரிமைச் சட்டம் வழங்கியுள்ளபடி கல்வி வழங்குவதை உறுதிப்படுத்தாமல் தேர்வுகள் மூலம் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதோடு 8ஆம் வகுப்பிற்கு மேல் பள்ளிப் படிப்பை தொடரவிடாமல் செய்வதே இந்த தேசிய கல்விக் கொள்கையின் உள்நோக்கமாகும்.

தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புக் காரணமாக திராவிடர் கழகத்தின் சார்பில் நாகர்கோயில் முதல் சென்னை வரை (20.1.2020 முதல் 30.1.2020 வரை) திராவிடர் கழக தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரப் பெரும் பயணம் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை.

ஆசிரியர்களின் பணி நிலை: இந்தியாவில் 10 இலட்சம் ஆசிரியர் பணி இடங்கள் காலியாக உள்ளன என வரைவு அறிக்கை கூறுகிறது. பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்காமல் டெட்  (TET)   தேர்வு மூலம் பணி நியமனம் கட்டாயமாக்கப்படும். ஆசிரியர்களுக்கு ஊதியம், பதவி உயர்வு, தகுதி மற்றும் திறன் அடிப்படையில் வழங்கப்படாமல் வயது மூப்பு அடிப்படையில் வழங்கப்படுவது, தகுதி, திறன் என்னும் தேர்வு மூலம் ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கப்படுவது சமூகநீதிக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் எதிரானதாகும்.

இடைநிற்றல் மாணவர்கள் நிலை: 2030ஆம் ஆண்டிற்குள் 3 முதல் 18 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி வழங்க வேண்டும். U.DISE மூலம் மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தரத்தின் அடிப்படையில் 2016_2017ஆம் ஆண்டுக்கான தேர்ச்சி விகிதம் வரைவு அறிக்கை பகுதி 39ஆம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அய்ந்தாம் வகுப்பிற்கு பின் மாணவர்களின் இடைநிற்றல் அதிகமாக உள்ளது. 2015ஆம் ஆண்டு தேசிய அளவில் 6.2 கோடி குழந்தைகள் (வயது 6_18) பள்ளியைவிட்டு விலகியுள்ளனர்.

இடைநிற்றல் என்னும் அபாயம்

தமிழ்நாட்டில் 9, 10ஆம் வகுப்பு மாணவர்கள் இடைநிற்றல்  (Drop Outs) 100 விழுக்காடு அதிகரித்துள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். மேல்தட்டுச் சிந்தனையோடு கல்வியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு அறிவிப்புகளால் இந்த நிலை ஏற்படப் போவது _ ஏற்படப் போகிறது என்று தொடர்ந்து திராவிடர் கழகம் அறிவித்துக் கொண்டே வந்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இடைநிற்றலுக்கான காரணம் என்ன?

ஆனால், தமிழகத்தில் கற்றலின் அவசியத்தை எடுத்துக் கூறும் இடத்திலிருப்பவர்களே குழந்தைகளின் இடைநிறுத்தலுக்குக் காரணமாக இருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளி விவரம். அண்மையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு தகவல் அதிர்ச்சியானது. சுமார் 1 லட்சத்து 8,224 மாணவ_மாணவியர் இடைநிலைக் கல்வியிலிருந்து நின்றுள்ளதாக சொல்கிறது அந்தக் குறிப்பு.

‘தமிழகத்தில் 2013_2014 ஆண்டில் 11 லட்சத்து 69 ஆயிரம் 110 பேர் ஒன்பதாம் வகுப்பில் சேர்ந்துள்ளனர். இவர்களில், அடுத்தாண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்கள் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 பேர் மட்டுமே. மீதி 96 ஆயிரத்து 419 மாணவர்கள் என்ன ஆனார்கள்? எனக் கேள்வி எழுகிறது.

இது தவிர தேர்வு எழுத இருந்தவர்களில் 12 ஆயிரம் பேர் தேர்வெழுத வராமல் இருக்கின்றனர். இதனால், ஒரு லட்சம் மாணவர்கள் இடைநிற்றலில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்ட சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முடிந்ததும் டி.சி. கொடுக்கப்படும் குற்றச்சாட்டும் உறுதி செய்கிறது. சமீபத்தில் நெல்லையில் சில தனியார் பள்ளிகள் இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

தமிழகத்தில், சுமார் ஒரு கோடியே 30 லட்சம் மாணவ_மாணவிகள் பள்ளிக் கல்வி பயின்று வருகின்றனர். முன்பு மாணவர்களை தேர்ச்சி பெறாமல் செய்வது சாதாரண நிகழ்வாக இருந்தது. ‘அனைவருக்கும் கல்வி இயக்கம்’ அறிமுகமானபோது, பள்ளிப் படிப்பை முடிக்காமல் இடையிலேயே நிற்கும் மாணவர்களைப் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது.

தேர்ச்சி நிறுத்தம் (பெயில்) ஆக்குவதால்தான் இடைநிற்றல் அதிகரிக்கிறது என்பது இதில் தெரிய வந்தது. இதனால், எட்டாம் வகுப்பு வரை அனைவரையும் தேர்ச்சி செய்வதை உறுதி செய்தனர். பின்னர், இது ஒன்பதாம் வகுப்பு வரை நீடிக்கப்பட்டது. ஆனால், பத்தாம் வகுப்பில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்ட ஒன்பதாம் வகுப்பிலேயே சுமாராகப் படிக்கும் மாணவர்களுக்கு டி.சி. கொடுக்கப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, மாணவர்களின் பொருளாதார நிலை, குடும்பச் சூழல் போன்றவையும் இடைநிற்றலுக்குக் காரணமாக அமைந்தன. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் சராசரியாக ரூ.30 ஆயிரத்துக்கும் கூடுதலாக செலவழிக்கப்படுகிறது. இது மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர்களுக்கும் செலவழிக்கப்படும் ரூ.27,150அய்விட பத்து விழுக்காட்டுக்கும் அதிகம் ஆகும். அது மட்டுமின்றி, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு மடிக்கணினி உள்ளிட்ட 14 வகையான பொருள்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.1967.47 கோடி செலவிடப்படுகிறது. இது தவிர கல்வி உதவித் தொகை ஆயிரக்கணக்கில் வழங்கப்படுகிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக இடைநிற்றலைத் தடுப்பதற்காக ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் பத்தாம் வகுப்பில் ரூ.1500, 11ஆம் வகுப்பில் ரூ.1500, 12ஆம் வகுப்பில் ரூ.2000 என ஒவ்வொரு மாணவருக்கும் மொத்தம் ரூ.5,000 சிறப்பு உதவித் தொகையாக வழங்கப்பட்டது. மேலும் தமிழக அரசு, இடைநிற்றல் தவிர்ப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது. இத்திட்டத்தின்படி பத்தாம் வகுப்பு மற்றும் +1 தேர்ச்சி பெற்றால் தலா ரூ.1500ம், பிளஸ் 2 படித்தால் ரூ.2 ஆயிரமும் வங்கி வழங்கும் வட்டியோடு +2 தேர்ச்சி பெற்றதும் அந்த மாணவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இது உயர்கல்விக்குப் பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட்டது. ஆனால், இதன்பிறகும் இடைநிற்றல் நிகழ்கிறது என்கிறார்கள் கல்வியாளர்கள்.

தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக பள்ளிகளில் இடைநிற்றலே இல்லை என்றே இதுவரை கணக்குக் காட்டி வந்திருக்கிறது. அதற்கு முரணாக இப்போது மனிதவளத் துறை ஒரு கணக்கீட்டை வெளியிட்டுள்ளது. இது, சாதாரணமாக செய்யப்பட்ட ஆய்வாக இருக்கலாம். இன்னும் ஆழமாக ஒவ்வொரு கல்வி மாவட்ட வாரியாக ஆய்வு செய்தால் இடைநிற்றல் மாணவர்களின் சரியாக புள்ளி விவரம் கிடைக்கும். அது நிச்சயம் இதைவிட அதிக அளவில் இருக்கும்.

தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களின் நிலை என்ன? அய்யாயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள் ஈராசிரியர் பள்ளிகளாக உள்ளன. 59 மாணவர்கள் உள்ள பள்ளிகளில் 5 வகுப்புகள், 25 பாடங்கள். ஆனால், அங்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே பாடங்களை நடத்தி வருகின்றனர். இதன் விளைவு கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு இந்திய அளவில் ஏழாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டது.

இந்த இடைநிற்றலால் சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் கவனத்துக்குரியன. குறிப்பாக பெண்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட மாட்டார்கள்; அத்தோடு நின்றுவிடப் போவதில்லை. இளம் வயதிலேயே பெண்களுக்குக் கல்யாணத்தையும் கட்டி வைத்துவிடுவார்கள்.

ஒன்றில் தொடங்கும் தவறு எதில் போய் முடிகிறது என்பது பற்றியெல்லாம் ஆட்சியாளர்களுக்குக் கவலை இல்லை. மேல்தட்டு மக்கள் வசதி வாய்ப்புள்ளவர்கள் எப்படியும் படித்துவிடுவார்கள். பாதிக்கப்படுவதோ,

‘பஞ்சம’, ‘சூத்திர’ _ கிராமப்புற ஏழை எளிய மக்கள்தானே!

‘நீட்’ ஏன் வேண்டாம்?

இந்த வருட முடிவைக் கொண்டே தெரிந்து கொள்ளலாம். மருத்துவக் கவுன்சில்  (Medical Council of Inida (MCI))  கணக்குப்படி இந்தியாவில் மருத்துவக் கல்லூரி இடங்கள் 63835.

இந்தியா முழுவதும் கடை விரித்திருக்கும் Aakash Foundations  என்னும் தனியார் கோச்சிங் சென்டரில் மட்டும் பயிற்சி எடுத்து வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை: 61649.

அதாவது 63835 மருத்துவக் கல்லூரி இடங்களில் 96% இடங்களை இந்த ஒரு தனியார் நீட் கோச்சிங் சென்டரில் பயின்ற மாணவ மாணவிகள் கைப்பற்றியிருக்கின்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களிடம் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அவர்கள் மீது  எந்த விமர்சனமும் இல்லை.

இந்த Aakash Foundations என்னும் தனியார் கோச்சிங் சென்டரில் கட்டணம் என்ன என்பதுதான் முக்கியம்.

Aakash – One year Regular Course for NEET
INR 1,36,526
Aakash – Two Years Integrated Course for NEET
INR 3,33,350
Aakash – Crash Course for NEET
INR 32,804

நல்லா கண்ணை விரிய திறந்து பார்த்துக் கொள்ளுங்கள்.

+2 முடித்துவிட்டு விடுமுறையில் 1 மாதம் நடத்தக்கூடிய  Crash Course Fees மட்டுமே INR 32,804.

குறைந்தபட்சம் ரூ.32,804/_ இருந்தால் மட்டுமே நம் குழந்தைகள் ‘நீட்’ தேர்வு பயிற்சிக்கு போய், படிச்சு, ‘நீட்’ தேர்வு எழுதி டாக்டர் ஆக முடியும்.

இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் தமிழக அளவில் முதலிடமும், இந்திய அளவில் 12ஆம் இடமும் பெற்ற கீர்த்தனா படித்தது சென்னையில் பெரிய பள்ளிகளில் ஒன்றான  PSBB. பெற்றோர் இருவருமே மருத்துவர்கள். CBSE Syllabus தான். ஆனாலும், கீர்த்தனா இந்த ஆண்டு +2 முடித்துவிட்டு நேரடியாக ‘நீட்’ தேர்வு எழுதி இந்த வெற்றியை அடையவில்லை. அவள் +2 முடித்த ஆண்டு 2016.

அதாவது சென்னையில் பெரிய பள்ளிகளில் ஒன்றான  PSBBயில்,  CBSE Syllabus-ல் +2 முடித்த ஒருவர் 2 ஆண்டு தனியார் கோச்சிங் சென்டரில் லட்சக்கணக்கான பணம் செலவு செய்து இந்த வெற்றியை அடைந்திருக்கிறார். அவருடைய பேட்டி இணையத்தில் உள்ளது. பேட்டியின்போது அவரை சுற்றி கோச்சிங் சென்டர் ஆசிரியர்கள் குழுமியுள்ளனர். அவர்கள் கழுத்தில் தொங்கும் அடையாள அட்டைகளே அதற்கு சான்று.

தமிழ்நாட்டில் உள்ள 23 மருத்துவக் கல்லூரிகள் ஏதேனும் ஒன்றில்கூட எம்பிபிஎஸ் படிக்க ஆண்டுக் கட்டணம் ரூ.32,000 கிடையாது.

ஆனால், Aakash Crash Course for NEET  மட்டுமே ரு.32,804/_

அனிதாவும் பிரதீபாவும் இந்த 23 அரசு கல்லூரிகளில் இருந்த மருத்துவக் கல்லூரி இடங்களுக்குத்தான் போட்டியிட்டார்கள்.

அதற்கான தகுதியும் அவர்கள் இருவருக்கும் இருந்தது.

அனிதா _ 1175/1200,

பிரதீபா _ 1125/1200

ஆனால், ‘நீட்’ என்கிற ஒரு தடுப்பை வைத்து அவர்களின் உயிரைக் குடித்தாயிற்று.

நாங்களும் தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான இந்த 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் 2500 இடங்களுக்கு மட்டுமே ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கேட்கிறோம்.  தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அல்ல. தமிழ்நாடு அரசு சென்ற ஆண்டு நிறைவேற்றிய ‘நீட்’ விலக்கு சட்டமும் இதை தெளிவாகச் சொல்லியிருக்கிறது.

இதைத்தான் தரம் என்று நம் மீது திணித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பல தமிழக மாணவர்களின் கனவு பலியாக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நோக்கம் தரத்தைக் கொண்டு வருவதல்ல. மேல் ஜாதிக்காரர்கள் பணக்காரர்களைத் தவிர வேறு யாரும் மருத்துவர் ஆகக்கூடாது என்பதுதான்.

ஏதோ தமிழ்நாடு மட்டுமே ‘நீட்’ தேர்வை எதிர்ப்பதாக ஒரு பொய்யான பிம்பத்தை காவிப் பக்தர்கள் கூட்டம் கட்டமைக்கிறது. பி.ஜே.பி.யின் பிதாமகர் உத்தமசீலர் மோடியே குஜராத் முதல்வராக இருந்தபோது ‘நீட்’ தேர்வை எதிர்த்தவர்தான்.

முதல்வராக இருந்த காலத்தில் ஒன்றை எதிர்ப்பதும், பிரதமரான பின் அதை ஆதரிப்பதும் இந்த ‘உத்தமசீலருக்கு’ ஒன்றும் புதிதல்ல.

ஆதார் அட்டை

ஜிஎஸ்டி

நீட்

இது மூன்றுமே குஜராத் முதல்வராக இருந்த தாமோதர நரேந்திரதாஸ் மோடி எதிர்த்ததுதான்.

மனுதர்மத்தைத் தொடர்ந்து, திராவிடர் இயக்கம் தோன்றி, தந்தை பெரியார், காமராசர், திராவிட இயக்க ஆட்சிகளால் கல்வியில் ஒடுக்கப்பட்ட மக்கள் முதல் தலைமுறையாகக் கல்விக் கூடத்தில் நுழைந்த தமிழின மக்கள் தலைநிமிர்ந்து நடைபோடத் துவங்குகிற ஒரு காலகட்டத்தில் பல கண்ணிவெடிகளைப் புதைத்து, நம் மக்களின் எதிர்காலத்தை ஒழித்துக் கட்டும் திட்டங்கள் ஒவ்வொன்றாக அரங்கேறுகின்றன. எச்சரிக்கை! எச்சரிக்கை! ஆச்சாரியார் இருமுறை ஆட்சிக்கு வந்து கல்விக் கதவைச் சாத்தினார். அதில் தோல்வியே கண்டவர்கள் மத்தியிலிருந்து புதிய குலதர்மக் காவியாளர்கள் எழுந்துள்ளார்கள்! எச்சரிக்கை! எச்சரிக்கை!!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *