– அஷ்ரப் அலி
ஜாதியம் என்பது ஜாதி அடிப்படையில் பாகுபாடு காட்டும் போக்கு. ஒரு ஜாதி உயர்ந்தது மற்ற ஜாதிகள் தாழ்ந்தது என்று நம்பும் ஒரு அறிவற்ற குருட்டு நம்பிக்கை. ஜாதியம் என்பது நம் அய்ம்புலன்களால் உணரக்கூடிய பொருளல்ல. அது இந்தச் சமூகத்தின் கூட்டு மனப் பிறழ்வு. ஆங்கிலத்தில் Figment of Imagination என்று சொல்லப்படும் பட்டியலில் ஜாதியமும் ஒன்று. ஜாதி, ஜாதியம் என்பவை எல்லாம் ஒரு கற்பிதம். மனிதர்களின் இயல்பான உணர்வுகளில் இவையெல்லாம் கிடையாது. சொல்லப்போனால் இந்தச் சமூக ஆதிக்க வர்க்கம் இவற்றைக் கற்பிக்காதவரை அவை என்ன என்பது நமக்குத் தெரிய வாய்ப்பில்லை.
ஆனால், காதல் என்பதோ ஓர் இயல்பான மனித உணர்வு. பிறரோ சமூகமோ கற்பித்து வருவதல்ல. இயல்பாக ஒருவர் மேல் ஏற்படும் உணர்வை இருவரும் ஏற்கும் நிலையில் தங்கள் வாழ்க்கைத் துணையாக இவர் நமக்கு தகுதியானவர் என்ற நம்பிக்கை வரும்போது, அன்பு பாராட்டி ஒருவரை ஒருவர் இணையராக ஏற்கும் நிகழ்வே திருமணமாகும். உலகெங்கும் பெருமளவில் இப்படியே நிகழ்கின்றது.
இந்தியாவில் மட்டுமே இது காதல் திருமணம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில், இங்குதான் காதலற்ற கட்டி வைக்கும் மணம் என்கிற ஒன்றும் இருக்கிறதே! உலகெங்கிலும் இயல்பாகவும் இந்தியாவில் மட்டும் இயல்புக்கு மாறாக நடைபெறும் காதல் திருமணங்கள் நம் சமூகத்தின் கூட்டு மனப் பிறழ்வான ஜாதியத்தை ஒழிப்பதில் என்ன பங்கு வகிக்கிறது என்பதை இனி பார்ப்போம்.
காதல் திருமணம் செய்த தம்பதிகள் யாரேனும் தங்களிடம், “நீங்கள் ஜாதியை, ஜாதியத்தை ஒழிக்க காதல் திருமணம் செய்தீர்களா?’’ என்று கேட்டால், “நிச்சயமாக இல்லை, காதலித்தோம், திருமணம் செய்தோம்’’ என்பதே பதிலாக இருக்கும்.
இதுவே ஆணவக் கொலை செய்தவர்களிடம், “நீங்கள் காதலை எதிர்ப்பதால் ஆணவக் கொலை செய்தீர்களா?’’ என்று கேட்டால் “இல்லை. நாங்கள் ஜாதியை காப்பாற்றவே செய்தோம்’’ என்பர். இது என்ன எழவு டிசைன் என்று நமக்குத் தோன்றும். ஆனால் இதுவே யதார்த்தம்.
நீ இந்த ஜாதி, அதனால் உன்னை பிடித்திருக்கு எனச் சொல்லி யாரேனும் காதலித்து பின் திருமணம் செய்ததாகக் கேட்டதுண்டா? இல்லை. அப்படி இருக்கவும் முடியாது. ஒருவரை பிடிக்க பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஜாதி ஒரு பொருட்டாகவே இருக்காது என்பதே உண்மை. எனினும் ஜாதியைக் காப்பாற்ற காதல் திருமணம் எப்படி தடையாக இருக்கிறது என்பதை அறிய ஜாதி எவ்வாறு காப்பாற்றப்பட்டு அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
நான்கு வருணங்களாக இருந்து இன்று நான்காயிரம் ஜாதிகளாக மாறியது எவ்வாறு என்று பார்த்தால் நிச்சயம் அது வர்ணக் கலப்பின் மூலமே என்று தெளிவாகும். அவ்வாறு பல ஜாதிகளாகப் பிரிந்த பின்னர் ஒவ்வொரு ஜாதியும் கணிசமான ஜனத்தொகையை அடைந்ததும் தங்கள் இருப்பையும் ஆதிக்கத்தையும் தங்களின் தனித்தன்மை என்று தாங்களே கருதிக் கொள்வதையும் காப்பாற்ற வேண்டியது தங்களின் தலையாய கடமை எனவும், அதில்தான் தங்களின் எல்லாம் அடங்கியுள்ளது என நம்பவும் வைக்கப்பட்டும் உள்ளனர். அதற்கான ஒரே வழி மற்றும் எளிமையான வழி சுயஜாதி திருமணங்கள் மட்டுமே.
மக்கள் தங்களின் தொழிலின் அடிப்படையில்தான் பிரிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும் தொழிலை மாற்றிக் கொள்வதால் அவர் ஜாதி மாறிப் போவதில்லை. இதன் மூலம் ஜாதி பிறப்பின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பது தெரிகிறது.
பெற்றோரின் ஜாதியே குழந்தைகளின் ஜாதி என அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது. அதனால், ஜாதியும், ஜாதிய மனநிலையும் இன்றும் உயிரோட்டமாக இருப்பதை அறிகிறோம். இந்தப் போக்கிற்குத் தடையாக இருப்பது காதல் திருமணங்கள் மட்டுமே என்பதை அவ்வப்போது நடக்கும் ஆணவக் கொலைகள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
தாங்கள் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்யும் அளவுக்குப் போவதிலிருந்தே காதல் திருமணங்களை இவர்கள் தங்கள் ஜாதிய மனப்பான்மைக்கு எவ்வளவு அச்சுறுத்தலாகப் பார்க்கின்றனர் என்பதை உணர முடிவதோடு காதல் மணங்களே ஜாதியை ஒழிக்க சரியான வழி என்பதையும் அது உறுதி செய்கிறது.
காதல் மணங்களில் நான் மேல், நீ கீழ் என நினைக்கும் ஜாதிய மனப்பான்மைக்கு இடமில்லை. காரணம் காதல் ஜாதி பார்த்து வருவதில்லை. இப்படி அந்த முதல் ஈர்ப்பு தொடங்கி திருமணம் வரை ஒவ்வொரு நிகழ்விலும் இருவரின் மனப்போக்கும் பக்குவப்பட்டு சம உரிமையுள்ள இருவர் இனி வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம் என்கிற நிலைக்கு வரும்போதே இவர்களது ஜாதியமும், பாலினப் பாகுபாடும் சல்லி சல்லியாக நொறுங்கி விடுகிறது.
தங்கள் ஜாதியிலே துணையைத் தேடி நடத்தப்படும் கட்டாயமாகக் கட்டி வைத்திடும் மணங்களில்தான் ஜாதி நிலைநிறுத்தப்படுகிறது. மாறாக, சம உரிமையை அடிப்படையாகக் கொண்டு அன்பினாலும், நம்பிக்கையாலும் நிகழ்த்தப்படும் காதல் திருமணங்கள் இதற்கு நேர் எதிராக அமைகிறது. இவர்களின் பிள்ளைகள் ஜாதியற்றவர்களாகவும் ஜாதிய மனப்பான்மையற்ற, பாலினப் பாகுபாடற்ற சூழலில் வளரும் வாய்ப்பையும் பெறுகின்றனர். பின்னாளில் அவர்களது தலைமுறையும் ஜாதியற்ற மனிதர்களாகத் தொடர்கின்றனர். இவை அனைத்தும் காதல் திருமணத்தினால் நிகழ்பவை. பின்வரும் பல தலைமுறைகளை ஜாதிய சிந்தனையற்ற மனிதர்களாய் மாற்ற காதல் திருமணத்தின் பங்கு எவ்வளவு பெரியது என்பது நாம் அறிந்துகொள்ள முடியும்.
சேர்ந்து பழகல், உண்ணுதல் போன்றவை தீண்டாமையை ஒழிக்கும். ஆனால், மணவுறவு மட்டுமே ஜாதியை ஒழிக்கும். வேறுபட்ட ஜாதியின் இரத்தங்கள் கலந்து பிள்ளை பிறப்பதால் அது எந்த ஜாதி என்னும் அடையாளத்தை இழந்துவிடுகிறது. அந்தக் குழந்தை ஜாதியற்ற குழந்தையாகிறது.
ஜாதியற்ற பிள்ளைகள் மணவுறவு கொள்ளும்போது அறவே ஜாதியின் அடையாளம் அகன்றுவிடுகிறது. ஜாதி மறுப்பு மணங்களுக்கு பெரிதும் துணைநிற்பது காதல் மணங்களே! காரணம், காதலுக்குத்தான் ஜாதியைப் புறக்கணிக்கும் ஆற்றல் உண்டு.
பெற்றோர் பார்த்து நடத்தும் மரபுவழி மணங்களில் ஜாதிப் பொருத்தம் முதன்மையாகக் கொள்ளப்படுவதால் அத்தகு திருமணங்களால் ஜாதியை ஒழிக்க முடியாது.
எனவே, ஜாதி ஒழிப்பில் காதல் மணங்களே முதன்மைப் பங்களிக்க முடியும்.
“ஜாதியத்தை ஒழிக்க காதல் திருமணம் செய்வீர்’’ என்று பரப்புரை செய்வதோடு, தற்போது நடக்கும் காதல் திருமணங்களை இந்த ஜாதியக் கூட்டத்திடமிருந்து பாதுகாத்தாலே ஜாதிய ஒழிப்பில் பல அடிகள் முன்னோக்கி நகரலாம்.
இவ்வாறு பல நூற்றாண்டுகளாகக் கற்பிக்கப்பட்டும், பல அடக்குமுறைகளாலும் நிலைநிறுத்தப்பட்ட ஜாதியத்தை ஓர் இயற்கையான, இயல்பான மனித உணர்வு (காதல்) தனக்குத் தெரியாமலே, எந்தக் கற்பிதமுமின்றி போகிற போக்கில் அடித்துத் தகர்க்கிறது.
அந்தக் காதலை, அந்த திருமணத்தை நாம் போற்றி வளர்க்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
Leave a Reply