உணவே மருந்து : கரிசலாங்கண்ணியின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்!

பிப்ரவரி 01-15 2020

கீரை உணவுகளில் கரிசலாங்கண்ணி  குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளது. தலைமுடிக்கு நன்மை செய்யும் என்று பரவலாக நாம் அறிந்திருக்கிற இந்த மூலிகைச்செடி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்குமே உகந்தது.

பொதுவாகவே மஞ்சள் மற்றும் வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையானது தலைமுடிக்கு உகந்தது ஆகும். மேலும் உடலுக்கும் குளிர்ச்சியைத் தரக்கூடியது.

வெள்ளைக் கரிசலாங்கண்ணி உடலின் வெளிப்புற பராமரிப்புக்கு நல்லது. மஞ்சள் கரிசலாங்கண்ணி உணவுக்கு மிகவும் ஏற்றது. முக்கியமாக கல்லீரலுக்கு நல்லது.

கசப்பு மற்றும் காரத் தன்மை உடைய இலைகளைக் கொண்ட கரிசலாங்கண்ணி, தெளிவான பார்வையை அளிக்கும். சுவாச காச  நோய்களுக்கு ஏற்றது. சுவாசப் பிரச்சினைகளுக்காக இதன் சாறை மூக்கில் விடும் நடைமுறை நாட்டு வைத்தியத்தில் உண்டு.

கரிசலாங்கண்ணியில் இருந்து தயாரிக்கப்படும் பிருங்க ராஜாவசம் என்னும் மருந்து இருமல், சளி, கபக்கட்டு போன்ற பிரச்சினைகளைக் குணப்படுத்த வல்லது. அது மட்டுமில்லாமல், நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களைப் பலப்படுத்தும்.

கரிசலாங்கண்ணி இலையைச் சாறாக்கி, காதில் விட்டுவர, நாள்பட்ட வலி விரைவில் குணமாகும். கரிசலாங்கண்ணியின் 4 அல்லது 6 இலைகளை நன்றாக மென்று, அதில் வரும் பசையால் பற்களைத் தேய்க்க ஈறும், பற்களும் வலிமை அடையும்.

சுவையுணர்வை அதிகரிக்கும் இந்தக் கீரை, இதயத்தை எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக வைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

கரிசலாங்கண்ணிக் கீரையை மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தலாம். இதனுடைய 4 இலையை தினமும் சாப்பிட்டு வந்தால் காயகல்ப மருந்தாகச் செயல்படும்.

சர்க்கரை நோயாளிகள் இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படுத்தப்படும். கரிசலாங்கண்ணி பித்த உற்பத்தியைக் கட்டுக்குள் வைக்கும். மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது.

கரிசலாங்கண்ணியைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடல் பொன்னிறம் அடையும். கர்ப்பப்பை பலப்படும். பெண்களுக்கு வெள்ளைப்படுதலைத் தடுப்பது போல, ஆண்களுக்கு விந்தணுக்களையும் அதிகரிக்கும்.

பக்க விளைவுகள் இல்லை என்பதால் குழந்தைகளும் சாப்பிடலாம். அதே நேரத்தில், 100 கிராம், 200 கிராம் என அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. பொதுவாகவே கீரைகளில் நார்ச்சத்து அதிகம் என்பதால் இரவில் கரிசலாங்கண்ணி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *