இரண்டாம் பரிசு பெறும் கட்டுரை! : மூட நம்பிக்கையால் வரும் கேடுகள்!

பிப்ரவரி 01-15 2020

– சீ.இலட்சுமிபதி

கடவுள், மதம், ஜாதி, ஜோதிடம், சாஸ்திரம், புராணங்கள் போன்ற எண்ணற்ற மூடநம்பிக்கை எனும் முடைநாற்றத்தில் மூழ்கிக் கிடக்கின்ற மக்கள், அதன் கேடுகளால் அனுபவிக்கின்ற இன்னல்கள் வேதனைகள் ஏராளம்! ஏராளம்!!

கடவுள் நம்பிக்கை

அறியாமையில் ஊறித் திளைக்கின்ற மக்களிடையே கற்பனைக் கதைகளால்  கற்பிக்கப்பட்ட கடவுள் பக்தி என்னும் போதையை நயமாக அவர்கள் மூளையில் ஊட்டி, மக்களின் மூளையை மழுங்கடிக்கச் செய்து, அவர்களை சிந்திக்க விடாமல் செய்துள்ளனர். கடவுள் பெயரால் உண்டாகும் பக்தி அறிவுக்கும் ஆற்றலுக்கும் கேடு விளைவிக்கின்றது. தன்னம்பிக்கையைக் குலைத்து, எல்லாம் கடவுள் செயல் என்று எண்ண வைக்கின்றது.

பேய் நம்பிக்கை

இளைஞர்களும் மாணவர்களும் பேய் – பிசாசு அண்டாது என்னும் மூடநம்பிக்கையால் தங்களது கைகளில்  மந்திரிக்கப்பட்ட தாயத்து மற்றும் பல்வேறு வண்ணங்களில் வகைவகையான கயிறுகளைக்  கட்டிக் கொள்கின்றனர். அக்கயிறுகளால் கண்களுக்குப் புலப்படாத பல்வேறு வகையான கிருமிகள் உருவாகி, அக்கிருமிகள் நோய்களை உற்பத்தி செய்து உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன என்பது அறிவியல் பூர்வமாக நிருபிக்கப்பட்ட உண்மை. பேய் நம்பிக்கையால் அச்சம், அதன்வழி கோழைத்தனம் உருவாகிறது. பல்வேறு இன்னல்களுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இத்தகைய விபரீதப் போக்கு இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தை, நலத்தை, வளர்ச்சியைக் கேள்விக்குறியாக்கிவிடும்?

மூடநம்பிக்கைகள் எல்லா மதங்களிலும் உள்ளன. ஆனால், இந்து மதத்தில் மட்டும் எண்ணற்ற மூடநம்பிக்கைகளும் அதனால் ஏனைய கேடுகளும் மக்களை அதிகம் பீடித்துள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மை.

ஜாதி நம்பிக்கை

கடவுள் நம்பிக்கையைப் போன்றே ஜாதி நம்பிக்கையும் மக்களை பெரிதும் பாதிக்கின்றது. பிறப்பால் மனிதருக்குள் வேறுபாடும், உயர்வு தாழ்வும் உருவாக்குவது இந்த ஜாதி முறை. பிறப்பால் சமமாகப் பிறக்கும் மனிதனைப் பிரித்து மோதவிட்டு, உயிர், பொருள் என்று பல அழிவுகளை உருவாக்குகிறது.

அலகு, தீச்சட்டி, தீமிதி

கிராமங்களில் மட்டுமில்லாமல் நகரங்களில்கூட ஆடிமாதம் வந்துவிட்டால் பக்தி போதையின் காரணமாக அலகுகுத்தி தேர் இழுத்தல், தீச்சட்டி ஏந்துதல், காவடி எடுத்தல் மற்றும் தீ மிதித்தல் ஆகியவை நடைபெறுகின்றன. தீமிதி விழாவிற்கு ஏராளமான மரக்கட்டைகளை எரித்து அந்நெருப்பை கோயில் முன்பு பரப்பி, அதன்மீது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஓடும்போது கால் இடறி நெருப்பில் விழுந்து உயிர் இழந்த நிகழ்வுகள் ஏராளம்.  இப்படிப்பட்ட மூடநம்பிக்கையால் பொருட்சேதம் மட்டுமன்றி மனித உயிர்களும் பலியாகின்றன.

அபிஷேகங்கள்

பசியின் கொடுமையால் வாடும் பிஞ்சுக் குழந்தைகளின் பசிப்பிணியைப் போக்க பால்கூட வாங்கிக் கொடுக்க முடியாமல் தத்தளிக்கும் தாய்மார்கள் உள்ள நமது நாட்டில், கடவுள் பெயரால் பக்தி போதையால் கர்பக்கிரகத்தில் உள்ள கல்லுக்கு பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், இளநீர் அபிஷேகம், நெய் அபிஷேகம், தயிர் அபிஷேகம், தேன் அபிஷேகம் என்று விலை உயர்ந்த உணவுப் பொருள்களை கல்லின்மீது கொட்டிப் பாழாக்குகின்றனர்.

தலையில் தேங்காய் உடைத்தல்

சாமிக்கு நேர்த்திக் கடன் என்கிற மூடநம்பிக்கையால் கோயில் முன்பு ஆண்களும் பெண்களும் தலையில் தேங்காய் உடைத்துக் கொள்வதால் மண்டையில் காயம் ஏற்பட்டு மூளைக்குச் செல்லும் நரம்பு மண்டலமும், உடல் நலனும் பாதிக்கப்படுவதோடு மனநிலையும் பாதிக்கப்படுகிறது என்று  மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, இதுபோன்ற நேர்த்திக் கடன் என்கிற மூடநம்பிக்கையால் ஏராளமான இழப்புகள் ஏற்படுகின்றன.

சக்தியுள்ள சாமி நம்பிக்கை

இங்குள்ள கோயில்கள் போதாதென்று  ஒவ்வொரு வருடமும் பக்தர்கள் கேரள அய்யப்பன் கோயிலுக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் பொருளையும் நேரத்தையும் வீணடித்துச் செல்கின்றனர்.

சடங்குகள், மூடவிழாக்கள்

பூணூல் மாற்றும் பண்டிகை ஆவணி அவிட்டம், தீபாவளிப் பண்டிகை மற்றும் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, கிருத்திகை, பவுர்ணமி மேலும் கார்த்திகை தீபம் என்கிற பெயரில் ‘’டன் கணக்கில்’’ நெய் ஊற்றி வீணாக்குவதோடு, மக்கள் வரிப்பணத்தையும், பொருளாதாரத்தையும் நாசமாக்குவது கிரிமினல் குற்றமல்லவா?

மாசு

அறிவுக்கும் கதைக்கும் சம்பந்தமில்லாத தீபாவளிப் பண்டிகை அன்று வாணவேடிக்கை என்கிற பெயரில் கோடிக்கணக்கான பணத்தை பட்டாசுகளுக்காகச் செலவிட்டு காசைக் கரியாக்கி அதனால் வானம் புகைமண்டலமாகி அப்புகையில் இருந்து வெளிவரும் நச்சுக் காற்றால் காற்று மாசு ஏற்பட்டு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு நோய்களுக்கு ஆட்படுவதால் ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் இழக்கின்ற அவலநிலை ஆண்டுதோறும் நிகழ்கின்ற இழிநிலையாகும். அதேபோல் போகிப் பண்டிகையின்போது பழைய பொருள்களை எரித்து புகையுண்டாக்கி காற்றை மாசடையச் செய்கின்றனர்.

நல்ல நேரம், கெட்ட நேரம்:

நாள் நட்சத்திரம், நல்லநாள், கெட்டநாள், ராசிபலன், பில்லி-சூனியம், நரபலி, பாவம்-புண்ணியம், விதிப்பயன் என்று கூறி மக்களின் மூளையை மழுங்கடிக்கச் செய்கின்ற, கேடு விளைவிக்கின்ற அறிவியலுக்கும் – பகுத்தறிவுக்கும் முரணான செயலைச் செய்கின்றனர். இராகுகாலம், எமகண்டம், அஷ்டமி, நவமி என்று கெட்ட நேரம் கெட்ட நாள் கணக்கிட்டு பல மணி நேரங்களைப் பாழாக்குகின்றனர்.

ஜோதிட நம்பிக்கை

ஆண்_பெண் இரு பாலருக்கும் மனப்பொருத்தம் பார்க்காமல் ஜாதகம் மூலம் பத்து பொருத்தம் பார்க்கும் நிலையில், சிலருக்கு செவ்வாய் தோஷம், நாக தோஷம் போன்ற குருட்டு நம்பிக்கை குறுக்கிடுவதால் திருமணமே நின்றுபோகக் கூடிய அவலம் சிற்சில நேரங்களில் ஏற்படுகின்றது. இதனால் இரு வீட்டாரும் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆட்படுவதோடு மணப் பெண்ணின் வாழ்க்கையும் சூனியமாக்கப்படுகின்றது.

சகுன நம்பிக்கை

ஆறறிவு படைத்த மனிதன் அய்ந்தறிவுள்ள பூனை குறுக்கே வந்தால் சகுனம் சரியில்லை என்று மூலையில் முடங்கிக் கிடப்பதும்,    பல்லி கத்தினாலோ அல்லது தவறி உடலின்மீது விழுந்தாலோ அதை வைத்து கெட்டது நடக்கும் என்று நம்பி மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். விதவை எதிரில் வந்தால் கேடு, விறகு, எண்ணெய் எதிரில் எடுத்து வந்தால் கேடு என்று பல சகுன நம்பிக்கைகளால் அஞ்சி அஞ்சி வாழ்கின்றனர்.

கிரகணம்

சூரிய-சந்திர கிரகணம் இயற்கையால் வரும் நிகழ்வாகும். ஆனால், கிரகணத்தின்போது உணவு உண்டால் செரிமானம் ஆகாது என்றும், கருவுற்ற பெண்கள் வெளியில் வந்தால் பிறக்கும் குழந்தைகள் ஊமையாய்ப் பிறக்கும் என்பன போன்ற மூடநம்பிக்கைகளால் தங்கள் உடல் நலத்தை, உள்ள நலத்தைக் கெடுத்துக் கொள்கின்றனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *