வாசகர் மடல்

பிப்ரவரி 01-15 2020

வணக்கம். நான் ‘உண்மை’ சனவரி 16-31, 2020 படித்தேன்.

அதில் 35ஆம் பக்கத்தில் இருப்பது:

“ஈ.வெ.ரா என்றுமே ஒரு மாபெரும் மக்கள் தலைவராக இருக்கவில்லை”.

இதற்கு நான் கீழ்க்கண்டதை எழுதுகிறேன். இது ‘உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு’ – கி.வீரமணி, தொகுதி 7, பக்கம் 117இல் இருப்பது:

இந்தப் பயணங்களில் இக்கால வேளைகளில் பயணித்திட கலந்து கொண்ட யான் பெற்ற வாய்ப்பு தனிப் பெரும் பேறு! அப்பப்பா! எப்படிப்பட்ட வரவேற்பு, எத்தகு ஊர்வலங்கள். மக்களின் எவ்வளவு சிறப்பான ஆர்வப் பெருக்கு, கற்பனை செய்தாலும் கூடக் காண இயலாது.

தள்ளாத வயது என்று சொல்லும் இந்த வயதில் இம்முது பெரும் தொண்டு கிழவரின் பவனி! அழகு செய்யப்பட்ட ஊர்திகள், இரதங்கள், கொடித் தோரணங்கள், பதாகைகள், வரவேற்பு வளையங்கள், வளைவுகள், வாழ்த்து முழக்கங்கள், பண்டைய தமிழரின் அழகுக் கலை நடனங்கள் எத்தனை வகையுண்டோ அத்தனையும்!

கரகாட்டம், மயிலாட்டம், மானாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், காளையாட்டம், கரடியாட்டம், சிலம்பாட்டம், வில்வித்தை, வீரவிளையாட்டு இப்படி விவரித்துக் கொண்டே போகலாம். ஓர் ஊரில் மட்டும் என்று இல்லாமல் ஊர்கள் தோறும் அப்படி – அதுவும் கசப்புக் கொள்கைகளைப் பரப்பும் தலைவருக்கு! அத்தகைய ஊர்வலச் சிறப்புகள்!

ஒவ்வோர் ஊர் நிகழ்வும் சொல்லி வைத்தாற்போல் இப்படியே அமைந்திருந்தன. பேருந்து செல்லாத சிற்றூரிலும் தந்தை பெரியாரின் பகுத்தறிவு ஊர்தி சென்றது. பாதை இல்லாத ஊர்களுக்குக்கூட ஈரோட்டுப் பாதை அமைத்தார்! சென்றதும் ஊர் எல்லையில் வரவேற்பு. வரவேற்பு எனில் ஊரே கூடி நிற்கும். சில ஊர் எல்லைகளில் சிறிய ஊர் என்றாலும் 2000 முதல் 5000 பேர் வரை கழகத் தோழர்கள் மட்டுமல்லாமல், ஊர்ப் பொதுமக்கள், தாய்மார்கள் என்று கூடிச் சும்மா நிற்பதில்லை. விண்ணைப் பிளக்கும் வகை, வகையான வாழ்த்தொலிகள், ஆங்காங்கே ஏழை எளிய மக்களும் தேநீர்க் கடை வைத்திருப்பவரும் தேநீர் விருந்து, சிற்றுண்டி விருந்து, தங்கள் கையில் உள்ள சிறிய தொகையைப் போட்டி போட்டுக் கொடுப்பது, அன்பளிப்புகள், மலர் மாலைகள், மாலைக்குப் பதில் அன்பளிப்பு, கருப்புத் துண்டுகள், வேட்டிகள் இப்படி கணக்கிலடங்காதவை.

ஊராண்மைக் கழக வரவேற்பு, வரவேற்பிதழ் வாசிப்பு, விருந்து, வரவேற்புக்கு நன்றி தெரிவித்து உரை, பிறகு ஊர்வலம். ஊர்வலம் 6:00 மணிக்குப் புறப்பட்டால் மேடைக்குச் செல்வதற்குள் 7, 8, 10:00 மணி என்று கூட ஆகிவிடும். அதன் பின் அவர் சில ஊர்களில் 10:00 மணிக்குத் தொடங்கிய கூட்டம், நள்ளிரவு ஒன்றரை மணியைத் தொட்ட போதும் அசையாமல், கலைந்து செல்லாமல் கேட்ட பாங்கு, 8:00 மணிக்குத் தொடங்கிய கூட்டம் பெரும்பாலும் 10:30 மணியளவில் முடிந்து அதன்பின் உணவுண்டு தங்கி, மறுநாள் காலையில் புறப்பட்டால் வழியெங்கும் வரவேற்பு, குழந்தைகளுக்குப் பெயர் சூட்டல், ஊராண்மைக் கழக வரவேற்பு, சலிப்போ, உடல் அசதியையோ பொருட்படுத்தாமல் பயணம் பயணம்தான்.

– க.பழநிசாமி,

 தெ.புதுப்பட்டி,திண்டுக்கல் – 624705

******

2020 ஜனவரி 1-15 ‘உண்மை’ இதழைப் படித்தேன். மிக மிக அருமையாக இருந்தது. அய்யாவின் அடிச்சுவட்டில்… என்ற ஆசிரியர் அவர்கள் வரலாற்றுக் கட்டுரை என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது.

‘ஆர்.எஸ்.எஸ் அஜெண்டாக்கள் அரங்கேறும் தொடக்கமே’, குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றிய மஞ்சை வசந்தன் அவர்களின் கட்டுரை, ‘ஆணைவிட பெண்ணே சிறந்தவள்’ என்னும் நம்முடைய டாக்டர் சரோஜா இளங்கோவன் அவர்களின் கட்டுரை, ‘விதி நம்பிக்கையை விலக்கிய அதிநவீன மருத்துவங்கள்’ என்பது பற்றிய மருத்துவர் இரா.கவுதமன் அவர்களின் கட்டுரை, நம்முடைய ஆசிரியரின் ‘கேள்வி – பதில்’ பகுதி இவை யாவும் மிகவும் சிறப்பாக இருந்தன. தலையங்கம் தமிழர்களைச் சிந்திக்கத் தூண்டும் வகையிலும், எழுச்சி உணர்வை ஊட்டும் விதத்திலும் இருந்தது. நான் “உண்மை’’ இதழைப் படிப்பதோடு மட்டுமின்றி நம் தோழர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி வருகிறேன். அதிகமான சந்தாக்களும் சேர்த்து வழங்கி வருகிறேன். மொத்தத்தில் ‘உண்மை’ இதழ் பகுத்தறிவுச் சுரங்கம், இனநலப் பெட்டகம்.

நன்றி அய்யா.

நன்றியுடன்,

– கோ.வெற்றிவேந்தன், கன்னியாகுமரி

 ******

மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.

‘உண்மை’ விரைவில் வார இதழாக வெளிவர இருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை ‘உண்மை’ 50ஆம் ஆண்டு பொன்விழாவில் (18.1.2020) தாங்கள் அறிவித்திருப்பதற்கு நன்றி! மகிழ்ச்சி!

ஊடக இதழியல் வரலாற்றில் ‘உண்மை’க்கு ஒரு தனியிடமுன்டு என்பது, ஒரு மறுக்க முடியாத உண்மை. இதனை மெய்ப்பிக்கின்ற வகையில் ஜனவரி 16-31 இதழ் வெளிவந்திருக்கிறது.

‘உழுது வந்த மாட்டுக்கும் நன்றி சொன்ன உலகத்து முதல் மனிதன் தமிழன்தான்’ என்பதை விளக்கும் அழகான அட்டைப்படம்! ‘ஜாதி’ ஒழியும் வரை, இடஒதுக்கீடும் தேவை என்பதைத் தங்களின் தலையங்கத்தின் வாயிலாக தெளிவுபடுத்திவிட்டீர்கள். ‘புது விசாரணை’ நாடகத் தொடர், புது முயற்சி, சிந்தனைக்கும் புது விருந்து. திராவிடர் திருநாள் பொங்கல் பற்றிய அய்யாவின் கருத்துகளையும், மஞ்சை வசந்தனாரின் ஆய்வுக் கட்டுரையையும் படிப்போர், நிச்சயம் மூடநம்பிக்கையை ஒழித்து பகுத்தறிவு வழி ஏற்பர்.

‘நரிக்குறவர் சமுதாயத்திலேயே ஒரு பெண் கவுசல்யாவின எழுச்சி, பெண்கள் சமுதாயத்திற்கே அய்யாவின் பணி எத்தகைய ஒரு விழிப்புணர்வை உருவாக்கி இருக்கிறது என்பதற்கு தக்க சான்று!

பேறிஞர் அண்ணாவின் ‘அறுவடை’ சிறுகதை முன்பு சிற்றூர்களையே ஆட்டிப்படைத்த பண்ணையார்கள் பற்றிய பதிவு. அவருக்கே உரித்தான அழகுநடையில் அரிய கருத்தை எளிமையாக விளக்கி இருக்கிறார். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் கேள்வி – பதில்கள் இதழுக்கே சிறப்பு! அதில் சிறப்பானவற்றைத் தொகுத்து வெளியிட்டால் இளைய சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்!

வரலாற்றில் திரிபு வேலை, புராணங்களை உண்மையான நிகழ்ச்சிபோல் சித்தரிக்க முனையும் சிறுமைப் பண்பு அவாளுக்கு மட்டுமே உரிய தனிச்சிறப்பு!

‘கட்டுரைகளுக்குப் பரிசு’ புதிய பகுதி மிகவும் பயனுள்ளது. புதுமை படைக்கும் முயற்சி வாசகர்களிடையே புதிய எழுச்சியை ஊட்டும் என்பதில் சிறிதும் அய்யமில்லை. முதல் பரிசு பெற்ற மானமிகு நெ.முகிலன் அவர்களுக்கு வாழ்த்துகள்!

‘உண்மை’ வார இதழாக வர இருக்கிறது என்று ‘உண்மை’ 50ஆம் ஆண்டு பொன்விழாவில் (18.1.2020) அறிவித்திருப்பது ‘உண்மை’ இதழியல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பம்! பொறுப்புகள் அதிகம்! பணிகள் மிகுதி! உடல் நலமும் காத்திட வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன். வணக்கம்.

– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் 

 ******

37ஆண்டுகால

‘உண்மை’ வாசகர்

‘உண்மை’ எனக்கு அறிமுகமானது என்னுடைய 7 (அ) 8 வயதிலேயே இருக்கும். அப்பொழுது என் தந்தை சு.நடராசன் விழுப்புரம் அருகே கெடார் கிராமத்தில் ஆசிரியராக இருந்தவர். குடும்பத்தில் உள்ளோர் அனைவருமே ‘விடுதலை’, ‘உண்மை’ ஆகிய இதழ்களைப் படிப்போம். என் சந்தேகங்களை என் தந்தையும் தாய் சவுந்தரியும் தீர்த்து வைப்பார்கள். மேலும், சந்தேகங்களை நானும், என் உடன்பிறப்புகளும் ‘உண்மை’க்கு ‘ஆசிரியர் பதில்கள்’ பகுதிக்குக் கேள்விகள் அனுப்பி, பதில் மூலம் விளக்கம் பெறுவோம்.

சிறுகதைகள் பகுத்தறிவைத் தூண்டியும், மூடநம்பிக்கையைத் தோலுரித்துக் காட்டியும், தன்னம்பிக்கை, சுயமரியாதை ஊட்டுவதாயும் வந்து கொண்டே இருக்கும்.

தந்தை பெரியாரின் கட்டுரைகள், ஆசிரியர் அவர்களின் “அய்யாவின் அடிச்சுவட்டில்’’ ஆகியன அரிய கருவூலங்கள்.

சட்டக் கல்லூரிக்கு பயில்வதற்குப் போகும் முன்பே, ரூசோ, பெர்னாட்ஷா, சாக்ரடீஸ், இங்கர்சால், அரிஸ்டாட்டில் போன்றோரின் அரசியல் தத்துவங்களை ‘உண்மை’ எங்களுக்குப் போதித்து வருகிறது. எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்களின் அறிவுபூர்வ – அறிவியல்பூர்வமான கட்டுரைகள் விழிப்பூட்டி அறிவு வளர்ப்பவை.

வழக்கறிஞராகப் பணிபுரியும் நான், கடந்த 37 ஆண்டு காலமாக ‘உண்மை’யின் தொடர்ந்த வாசகனாக உள்ளேன் என்பதில் பெருமை கொள்கிறேன்.

வாழ்க பெரியார்!

வளர்க அவர்தம் தொண்டு!

–  சு.ந.விவேகானந்தன்

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *