- எத்தகைய குற்றத்தைச் செய்தவராக இருந்தாலும் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை விதிப்பதை நான் எதிர்க்கிறேன். ஏனெனில், அடிப்படையில் நான் ஒரு புத்த மதவாதி. எவ்வளவு தீயவராக இருந்தாலும் ஒரு மனிதனின் உயிரை அரசே பறிப்பது காட்டுமிராண்டித்தனத்தின் அடையாளம். இசுலாமியச் சட்டப்படி தூக்குத் தண்டனை அனுமதிக்கப்பட்ட ஒன்றுதான் என்ற போதிலும், அந்தச் சட்டமே குற்றம் செய்தவர்களைப் பாதிக்கப்பட்டவர்கள் மன்னிக்க வேண்டும் என்று கூறுகிறது. நாமெல்லாம் 21ஆம் நூற்றாண்டுக்கு வந்துவிட்ட நிலையில், சில விசயங்களில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக நடந்துகொள்ள வேண்டும்.
– வஜாகத் அபிபுல்லா, தலைவர்,
தேசிய சிறுபான்மையினர் ஆணையம்
- முதலில் நம்மை நமக்குள் மதிக்கும் மனோபாவம் வளர வேண்டும். முதல் மனிதன் பேசிய மூத்த மொழி என்ற பெருமை நம் வீட்டுக்குள் இருக்கிறது. ஆனால் வீட்டுக்கு வெளியே நிலைமை வேறாக இருக்கிறது.தமிழ்ப் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் பிற மொழியாளர்களின் முன்னிலையில் உலகமெங்கும் வெளியிடப்பட வேண்டும். உலகத் தமிழ்ப் படைப்பாளிகளை ஒன்றுகூட்ட உலகத் தமிழ்ப் படைப்பாளிகளின் மய்யம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
– வைரமுத்து, திரைப்படப் பாடலாசிரியர்
- அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே போர் ஏற்படக் கூடாது என்றுதான் நான் விரும்புகிறேன். அப்படிப் போர் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஆப்கானிஸ்தான் நிற்கும். அமெரிக்கா என்று இல்லை. இந்தியா உள்பட வேறு எந்த நாட்டோடும் பாகிஸ்தானுக்கு யுத்தம் ஏற்பட்டால் பாகிஸ்தானுக்குப் பக்க பலமாக இருப்போம்.
– கர்சாய், அதிபர், ஆப்கானிஸ்தான்
- விவசாயப் பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளன. கடன் வாங்கி விவசாயிகள் விவசாயம் செய்தாலும் அவர்களது விளைபொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை. விவசாயிகளின் நலனில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை. அவர்களுக்கு நியாயமான குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு வழங்கவில்லை. விவசாயிகளின் வாழ்க்கையோடு மத்திய அரசு விளையாடுவது கண்டிக்கத்தக்கது.
– பிரகாஷ் சிங் பாதல்,
முதல் அமைச்சர், பஞ்சாப்
- உலக நாடுகளுக்கு எல்லைக் கோடுகள் இருக்கக்கூடாது. கடவுச் சீட்டு இல்லாமல் எல்லா நாட்டிற்கும் சென்று வரும் நிலை வரவேண்டும். அய்.நா.அவை தோல்வியடைந்து விட்டது என அனைவரும் கருத்துத் தெரிவிக்கின்றனர். ஒரு அமைப்பு தோல்வியடைந்துவிட்டால் அதன் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுமே தவிர, அந்தக் குறைகளையே சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது.
– வெங்கட் ராவ், துணைவேந்தர், தேசிய சட்டப் பல்கலைக்கழகம்