தந்தை பெரியார்
கடவுள் என்கிறார்களே, என்ன கடவுள்? இந்த ஆரியர்களுக்கு வேதத்தில் கடவுள் உண்டா? ஒரு கடவுள் இருந்ததாகச் சொல்லட்டும், ஒத்துக் கொள்கிறேன். வேதத்தில் கடவுள் இல்லை. நான் ஒன்றும் புளுகுபவனல்ல. அதில் எங்கேயிருக்கிறது என்று எடுத்துக் காட்டட்டும், ஒத்துக் கொள்கிறேன். வேதத்தில் கடவுள் இல்லை. அதுவும் தமிழனை (திராவிடனை)ப் பொறுத்தவரையில் கடவுளே கிடையாது. இன்று இருப்பது ஏதாவது கடவுள் ஆகுமா?
கடவுள் உண்டு, கடவுள் இல்லை என்று சொல்வதற்கு தமிழில் என்ன வார்த்தையிருக்கிறது?
கடவுள் உண்டு என்பதற்கு தமிழில் என்ன சொல்? கடவுள் இல்லை என்பதற்கு என்ன வார்த்தை?
வடமொழியில் பிச்சை கேட்காமல் தமிழில் வார்த்தை என்ன இருக்கிறது என்று சொல்ல முடியுமா? எல்லாவற்றிற்கும் வார்த்தைக்குப் பஞ்சமில்லாத தமிழில் இதற்கு வார்த்தை இல்லாமலா இருக்கும்? தமிழில் அந்தப் பேச்சுக்கே இடமில்லை. இன்று தமிழன் கும்பிடும் எந்தக் கடவுளுக்குத்தான் தமிழ்ப் பெயர் இருக்கிறது? அல்லது தமிழனைப் போல் இருக்கிறது? வேதத்தில்தான் ஏது கடவுள்? இன்னதைக் கடவுள் என்று சொல்லப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா?
இங்கு இருப்பதில் முக்கியமான கடவுள்கள் மூவர். பிரம்மா, விஷ்ணு, சிவன். இவர்கள் கடவுள்களா? விஷ்ணு கடவுளா? வேதத்தில் உள்ளவர்கள் தேவர்கள். தேவர்கள் என்றால் மேலே இருப்பவர்கள். அவர்கள் சூரியன், சந்திரன், வருணன் இப்படி 7-8 உருப்படிகள். தேவர்களில் சில பேர்கள் பூதேவர்கள்! சில பேர்கள் வானதேவர்கள்! இதைத் தவிர கடவுள் என்று எதைச் சொல்ல முடியும்? இப்படி பெரிய புளுகுகளைத் தூக்கிப் போட்டுவிட்டு என்னடா புளுகுகிறாய் என்றால், நாஸ்திகன் என்று தூற்றினால் என்ன நியாயம்?
வேதத்தில் கடவுள் என்பதாக ஒன்றையும் கடவுள் தன்மையோடு கற்பிக்கவேயில்லை. கடவுளாகக் கற்பிக்கப்பட்டிருப்பதெல்லாம் மனிதர்கள்தான். மனிதனுக்குள்ள குணங்கள்தான் அவைகளுக்கும்! திருடுதல், பெண்டாட்டி கட்டிக் கொள்ளுதல், கொலை, விபசாரம் இன்னும் மற்ற மற்ற காரியங்கள் செய்தல் எல்லாம்! இன்னும் சாதாரண மனிதத் தன்மையைவிட ஒழுக்கக் கேடாக தேவர்கள் என்பனவற்றை கற்பித்திருக்கிறார்கள்! சிவன், பிரம்மா, விஷ்ணு இந்த மூவரும் முக்கியமான தேவர்கள்கூட அல்ல. இந்த மூன்று பேரும் எந்த இடத்தில் ஒழுக்கத்தோடு இருந்திருக்கிறார்கள்? கடவுளென்று கற்பித்தவனையே கேட்கிறேன்; ஒழுக்கங்கெட்ட தன்மைக்கும் ஓர் அளவு வேண்டாமா? தாயைக் கட்டிக் கொண்டவன், தங்கையைக் கட்டிக் கொண்டவன் ஆணும், ஆணும் கூடிப் பிறந்தவன், நினைத்தபோது அவர்களே ஆண் பெண்ணாக மாறி கூடிப் பிறந்தவன் இப்படியா ஒவ்வொன்றும்? இன்னும் (இயற்கைக்கு விரோதமாக) மீனுக்குப் பிறந்தவன்; மிருகத்திற்குப் பிறந்தவன்; இப்படி ஏதோதோ சொல்லுகிறான். யாருக்கு இந்த இழி குணங்களை, கற்பிக்கிறோம் என்று கூட சிந்திக்க வேண்டாமா? இதைச் சொல்லி பிழைக்கிறவனைப் பற்றிக் கூடச் சொல்லவில்லை. அரசாங்கத்திலும் பொது நல வேஷம் போட்டுச் செல்வாக்குப் பெற்றவர்களே இதைப் பிரச்சாரம் செய்து கொண்டு புத்தர் விழாவிலும் வந்து பேசினால் என்ன அர்த்தம்?
நம்மில் பெரிய அறிவாளி என்பவர்களிடம் தான் பெரிய அழுக்கு, பெரிய நாற்றம் இருக்கிறது. புத்தர் எதற்கு வேண்டும்? எந்தக் காரியத்தையும் அறிவைக் கொண்டு ஆராய்ந்து அனுபவத்திற்கு ஒத்து வந்தால்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதற்குத் தான் புத்தர் வேண்டும்; சில பேர் அணுகுண்டு செய்து உலகத்தை அழிக்கிறார்கள் என்று விஞ்ஞானிகள் மீது கோபப்படுகிறார்கள். அவர்கள் இந்த நாட்டுக்கு வரக் கூடாதா? மனிதனைக் கொல்கிறான்; மனிதன் சாகட்டுமே என்ன நஷ்டம்? என்றைக்கு இருந்தாலும் சாகிறவன் நான்கு நாளைக்கு முன் சாகட்டும். நட்டமில்லை. இங்கு உயிரோடு இருப்பவனை நடைப் பிணமாக இருக்க விடுகிறார்களே? அறிவையே கொல்கிறார்களே? ஒரு மனிதன் தர்மவான் ஆக வேண்டுமானால், கோவில் கட்டினால்தான் அவன் தர்மவான்! ஒருவன் பக்தனாக இருக்க வேண்டுமென்றால் கல்லில் முட்டிக் கொண்டால்தான் பக்தன்! இதுபோன்ற அறியாமையைப் புகுத்தி மக்களைக் காட்டுமிராண்டித் தன்மையில் வைத்து விட்டார்கள். இதை வெறுத்துக் கண்டித்து எழுத வேண்டாமா?
‘வியாசர் விருந்து’ என்று புத்தகம் போட்டு இப்போது எதற்குப் பரப்ப வேண்டும்? அதில் என்ன உப்பா – சப்பா? ஒரு லட்சம் காப்பி விற்றிருப்பார்கள்! நம் நாட்டில் இத்தனை மடையர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுக்க ‘கேஜ்’ (அளவு கருவி) ஆகத்தானே அந்த விற்பனை பயன்பட்டது? மக்களுக்கு உண்மையான அறிவு வந்துவிட்டால், இராமாயணத்தையும், பாரதத்தையும் விட்டு வைப்பார்களா? என்ன இருக்கிறது அவற்றில்? எடுத்ததுமே விபசாரம்! அடடா! அந்தப் பாரதத்தில் (வியாசர் விருந்தில்) ஒருவனாவது தகப்பனுக்குப் பிறந்தவனே இல்லையே? இன்னும் சொல்லப் போனால் மனிதனுக்குப் பிறந்தவனே கொஞ்சம் தான். மீனுக்குப் பிறந்தவன் ஒருவன்! பாம்புக்குப் பிறந்தவன்! குதிரைக்குப் பிறந்தவன். இப்படித்தான் பாரத புத்திரர்கள் அய்ந்து பேர் அந்த அய்ந்து பேருமே சொந்த அப்பனுக்குப் பிறக்கவில்லை. இராமாயணத்தில்தான் என்ன? ஓர் இடத்திலாவது ஒழுக்கம் என்பதில்லை. துரோகம், சூது, மடமைக் களஞ்சியம்!
“உத்தமபுத்திரன் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஓர் ஆள் வேண்டும்; அவன்தான் இராமன்’’ என்கிறார்கள். ஒரே ஒரு இடத்திலாவது இராமன் ஒழுக்கமாக இருக்கிறான் என்று காட்ட முடியுமா? என்ன உத்தமபுத்திரனுக்கு உதாரணம்? மக்களை வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் அறிவைக் காட்டி மேலே தள்ளிவிட வேண்டிய சந்தர்ப்பத்தில் காட்டுமிராண்டித்தனத்திற்கு காலைப் பிடித்து இழுத்துத் தள்ளினால் என்ன அர்த்தம்?
எதுவானாலும் அறிவைக் கொண்டு ஆராய்ந்து, பயமில்லாமல் தர்க்க ரீதியாக விவாதிக்க வேண்டும். அவன்தான் புத்தன். அதுதான் பவுத்தம்.
ஏதோ காட்டுமிராண்டிக் காலத்தில் அவர்கள் தகுதிக்கு, அறிவுக்கு ஏற்ற வகையில் ஏற்பாடு செய்ததாக இருக்கலாம். அவை இப்போது நடப்புக் காலத்திற்கு ஒவ்வாதவை. அறிவுத் துறையில் இன்று மக்களுக்குள்ள நிலை வேறு பக்கம் திருப்பிப் பார்க்கும்படி செய்து விட்டது.
சமுதாயத்தில் இப்போது உயர்ந்த ஜாதி என்றால் ஒரேயடியாக உயர்ந்த ஜாதி, கீழ் ஜாதியென்றால் ஒரேடியாக கீழ் ஜாதி உள்ளதேன்? ஜாதியால் மக்கள் கொடுமையும், துன்பமும் அடைகிறார்கள். காட்டில் பலவற்றை அடித்துத் தின்னும் சிங்கம் இருந்தால் அதை ஜீவகாருண்யத்தை முன்னிட்டு கொல்வதில்லையா?
சமுதாயத்தில் நலம் ஏற்பட வேண்டுமானால் ஜாதி ஒழிக்கப்பட வேண்டும். ஜாதியை ஒழிக்கக் கூடிய ஆட்சி வர வேண்டும். இன்றைய ஆட்சி, ஜாதிகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று சொல்ல தைரியமுள்ள ஆட்சியே தவிர, ஜாதியை ஒழிக்க தைரியமுள்ள ஆட்சி அல்ல. டாக்டர் இராதாகிருஷ்ணன்கூடப் பேசியிருக்கிறார்,
“ராஜாக்களை ஒழித்துவிட்டோம்; ஜமீன்தார்களை ஒழித்து விட்டோம். இருப்பினும் ஜாதி ஒழிந்தால்தான் பயன் உண்டு. ஆதலால், ஜாதியை ஒழிக்க இரும்பு உள்ளம் படைத்த தைரியமான தலைவர் வேண்டும்“ என்று பேசியிருக்கிறார். எல்லா பத்திரிகைகளிலும் இந்தச் செய்தி வந்துள்ளது. அரசாங்கத்திற்கு ஜாதியை ஒழிக்க வேண்டும் என்கிற உணர்ச்சி இருக்கிறது. அது காரியத்திற்கு வரவேண்டும். ஜாதி ஒழிய வேண்டுமென்றால், இராமனுக்கும், கிருஷ்ணனுக்கும் வேலையில்லை. புராணங்களும், இதிகாசங்களும் ஒழிய வேண்டும். அப்போதுதான் ஜாதி இல்லாத சமுதாயம் ஆக முடியும்.
கடவுள் இல்லாத சமுதாயம் உண்டாக வேண்டும் என்று இங்கு சொல்ல வரவில்லை. ஆனால், அறிவுள்ள சமுதாயம் உண்டாக வேண்டும் என்பதையே வற்புறுத்துகிறேன்.
(15.5.1957 அன்று எழும்பூர் மகாபோதி சங்கத்தில் நடைபெற்ற புத்தர் விழாவில் மூன்றாம் நாள் பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரையிலிருந்து)
– விடுதலை 17.5.1957