கே: ‘அண்ணாவின் அறிவுக் கொடை’ புத்தக வெளியீட்டு விழாவில் தாங்கள் ஆதாரத்துடன் பேசிய அண்ணாவின் கடைசிக் கடிதத்தில் வந்துள்ள கட்டுரையை ‘உண்மை’ இதழில் வெளியிடுவீர்களா?
– சி.வாஞ்சிநாதன், சிங்கிபுரம்
ப: நிச்சயம்! வரும் இதழ் ‘உண்மை’க்காகக் காத்திருங்கள் _ அக்கட்டுரையைப் படிப்பதற்கு!
கே: அண்ணா அறிவாலயம் உள் அரங்கில் கலைஞருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருள்கள், வாழ்த்துப் பாக்களைப் பாதுகாக்க கருவூலம் அமைத்துள்ளது போல், பெரியார் திடலிலும் ஓர் அரங்கம் அமைக்க திட்டமுள்ளதா?
– இரா.முல்லைக்கோ, பெங்களூரு-43
ப: பல திட்டங்கள் உண்டு. இடநெருக்கடி புதிய கட்டுமானங்களும் வரவேண்டும். இவை களையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
நெல்லை கண்ணன்
கே: நெல்லை கண்ணனுக்கு ஒரு நீதி; எச்.ராஜாவுக்கு ஒரு நீதி. சட்டப் பார்வையில் இது எப்படி சாத்தியப்படுகிறது?
– மகிழ், சைதை
எச்.ராஜா
ப: மனுநீதியாரின் மடியில் அமர்ந்து ‘லகானை’ அவாள் கையில் கொடுத்துவிட்டு, அ.தி.மு.க. ஆட்சி என்று பெயரளவில் ஆட்சி நடப்பதால் சாத்தியமாகிறது!
கே: சங்க இலக்கியத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கைகளைப் புகுத்த, மத்திய அரசு முயலுவதாகத் தகவல் வருகிறது. இதைத் தடுக்க தாங்கள் கூறுவது என்ன?
– செல்வகுமார், காட்பாடி
ப: நமது தன்மானப் பெரும்புலவர்கள் ஓர் அணியில் நின்று எதிர்ப்பர் என்பது உறுதி!
கே: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களில் பாஜகவின் தோல்வி எதனைக் காட்டுகிறது?
– நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
ப: பா.ஜ.க. -_ மோடி அரசின் செல்வாக்கு கீழ் இறக்கத்திற்குச் சென்று கொண்டுள்ளது என்பதைக் காட்டுகிறது!
சரத்பவார்
கே: தங்கள் திட்டங்களை நிறைவேற்றத் தடையாய் – எதிராய் போராடக் கூடாது என்கிற பா.ஜ.க. பாசிச செயல்பாட்டினை முறியடிக்க என்ன செய்ய வேண்டும்?
– சி.வாஞ்சிநாதன், சிங்கிபுரம்
ஹமந்த் சோரன்
ப: மக்கள் ஓரணியாய்த் திரள வேண்டும். ஆரம்பம் ஆகிவிட்டார்கள்.
ஜவஹர்லால் நேரு
கே: ஜவஹர்லால் நேருவின் இறுதிக் கால உள்நாட்டு, வெளியுறவு, நிதிக் கொள்கைகளுடன் தந்தை பெரியார் உடன்பட்டாரா? _ மாறுபட்டாரா?
– நா.பார்த்திபன், கொளத்தூர்
ப: பலவற்றில் உடன்பாடு; சிலவற்றில் மாறுபட்ட நிலை! இரண்டும் உண்டு!
நிர்மலா சீதாராமன்
கே: தற்போதைய இந்தியப் பொருளாதார நிலை என்பது ‘மந்த நிலை’ தானேயன்றி ‘தேக்க நிலை’ இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்துள்ளாரே… தங்களின் கருத்து என்னவோ?
– கிருபாகரன், பெருங்களத்தூர்
ப: இரண்டையும்விட கீழே “அதள பாதாளத்திற்கு’’ச் சென்று கொண்டுள்ள அபாயகரமான நிலை என்பதே சரியானதாகும்!
கே: குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றத்தில் ஓர் அங்குலம்கூட பின்வாங்க மாட்டோம் என்று அமித்ஷா கூறியுள்ள நிலையில், அதை முறியடிக்க நாம் செய்ய வேண்டியவை எவை?
– ஸ்டீபன், திருப்போரூர்
ப: மக்களை எழுச்சி பெறச் செய்து பெருந்திரளாக்கினால், எந்தச் சர்வாதிகாரமும் விடைபெற்றே தீர வேண்டியிருக்கும் என்பதே வரலாற்று உண்மை!