மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.
டிச. 1-15, 2019 உண்மை இதழ் சுயமரியாதை நாள் – ஆசிரியரின் 87ஆம் ஆண்டு மலராக சிறப்பாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது. ஈழத்தமிழர் வாழ்வுரிமை காக்கப்பட ஆசிரியரின் வேண்டுகோள் மனிதநேய உணர்வை ஊட்டுகிறது. ஆசிரியருடன் நெருங்கிப் பழகிய மருத்துவர்கள், பேராசிரியர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், இயக்க முன்னோடிகள், தி.மு.க. முன்னணியினர் ஆகியோர் தொகுத்தளித்துள்ள ஆசிரியரின் சமுதாய, சமூகநீதி, அரசியல் தொடர்பான தொலைநோக்குப் பார்வைகள், இந்தியாவே எதிர்நோக்கும் இணையிலா வழிகாட்டி ஆசிரியர் என்பதை பத்திரிகை உலகில் நிலைநாட்டுகிறது. சிறப்பாகத் தொகுத்து வெளியிட்ட “உண்மை’’ இதழ் பணியாளர்களுக்குப் பாராட்டுகள்!
டிச. 16-31, 2019 இதழ் உலகுக்கே ஒளிதரும் சுயமரியாதைச் சூரியன் தந்தை பெரியார் பற்றிய திரு.மஞ்சை வசந்தன் அவர்களின் குறிப்புகள் பெரியாரின் தொலைநோக்குச் சிந்தனைகளை எமக்குத் தந்து மகிழ்விக்கிறது. 21.8.1968 ‘குடிஅரசு’ கட்டுரை, பெரியார் அவர்களின் சமுதாய உழைப்பை, தியாகத்தை பார்ப்பனரல்லாத சமுதாய மக்களுக்காகப் போராடியதை, உரிமையோடும் நியாயத்தோடும் பதிவு செய்கிறது.
ஆசிரியரின் தலையங்கம் பொருளாதாரப் புள்ளி விவரங்களுடன் “விதை நெல்லைச் சமைத்து விருந்து’’ உண்ணும் மோடி – அமித்ஷா விந்தையை மக்களுக்குப் புரியவைக்கிறது. வாழ்த்துகள்!
‘வழி’ சிறுகதை புதுமைப்பித்தனின் சிந்தனையில் விதவைப் பெண்மையின் மனவலி என்னவென்பதை வாசிப்போருக்கு வலிமையாக உணர்த்துகிறது. பெண்ணால் முடியும், மருத்துவம், எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை(50), அய்யாவின் அடிச்சுவட்டில் (240), சிந்தனை தமிழ் ஆகிய ஒவ்வொரு பகுதியின் சிந்தனைச் சொற்களும் படிக்கும் வாசகர்க்கு பண்புகளை, சமூக எண்ணங்களை பக்குவமாகப் போதிக்கின்றன. பாராட்டுகள்! வாழ்த்துகள்!
– ஆ.வேல்சாமி,
மேற்பனைக்காடு கிழக்கு
டிசம்பர் 1-15, 2019 “உண்மை’’ இதழ் வெகு சிறப்பாக இருந்தது. நமது ஆசிரியர் அவர்களின் படம் புரட்சிகரமாக இருந்தது. நான் “உண்மை’’ இதழுக்கு சந்தாக்கள் பல சேர்த்து வழங்கினேன். தற்போது நமது இயக்கப் பற்றாளர்கள், பொதுமக்கள் இல்லத்திற்குச் சென்றபோது அவர்கள் இல்ல மேசையில் நமது ஆசிரியர் படம் இருந்த “உண்மை’’ இதழைப் பார்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நமது ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் சிறப்பிதழாக வெளிவந்த பல்வேறு தகவல்கள் இருந்தன. படிக்கப் படிக்க ஆர்வத்தைத் தூண்டியது அந்த இதழ்.
அதுபோலவே டிசம்பர் 16-31, 2019 “உண்மை’’ இதழ் அருமையாக இருந்தது. நமது ஆசிரியர் அவர்களின் கேள்வி-பதில் பகுதி, ஆசிரியர் “அய்யாவின் அடிச்சுவட்டில்” என்னும் தன்வரலாறு கட்டுரை, நான் யார்? என்று பெரியார் அய்யா எழுதிய கட்டுரை, உலகத்திற்கே ஒளி தரும் சுயமரியாதைச் சூரியன் பெரியார் என்று அய்யா மஞ்சை வசந்தன் அவர்களின் முகப்புக் கட்டுரை ஆகியவை எல்லாமே என்னைக் கவர்ந்தன. நான் படிப்பதோடு மட்டுமன்றி, எனது நண்பர்களுக்கும் அந்த நூலைப் படிக்கச் செய்வேன். சந்தாக்களும் சேர்த்துக் கொடுக்கிறேன். படிப்பதோடு மட்டுமன்றி பாதுகாத்தும் வருகிறேன்.
– கோ.வெற்றிவேந்தன்,
கன்னியாகுமரி