சிகரம்
மைத்ரேயரே! சூரியன் சஞ்சாரஞ் செய்யும் தக்ஷிணாயண உத்தராயண எல்லைகளின் நடுவாகிய கிராந்தி விருத்தங்கள் நூற்றியெண்பத்துமூன்று, அம்மண்டலங்களிலேதான் சூரியன் உத்தராயணத்தில் ஏறுவதும் தக்ஷிணாயணத்தில் இறங்குவதுமான முந்நூற்று அறுபத்தாறு கதிகளினால் ஒரு வருஷத்தைக் கழிக்கிறான். சூரியனது தேரானது சூரியர்களாலும் ரிஷிகளாலும் கந்தர்வராலும் அப்சரசுகளாலும் இயக்கர்களாலும் சர்ப்பங்களாலும் ஏற்றப்பட்டிருப்பது. அந்த இரதத்தில் சித்திரை மாதத்தில் தாதா என்ற சூரியனும் கிரதஸ்தலை என்ற அப்சரசும், புலஸ்தியர் என்ற முனிவரும் வாசுகி என்ற சர்ப்பமும் ரதபிருத்து என்ற இயக்கனும் ஹேகி என்ற அரக்கனும் தும்புரு என்ற கந்தர்வனும் வசிப்பார்கள். வைகாசி மாதத்தில் அரியமா என்ற சூரியனும், புலகன் என்ற முனிவரும், புஞ்சிகஸ்தலை என்ற அப்சரசும், ரதௌஜா என்ற யக்ஷனும், கச்சவிரன் என்ற சர்ப்பமும், நாரதன் என்ற கந்தர்வனும், பிரஹேதி என்ற ராக்ஷஸனும் வசிப்பார்கள். ஆனி மாதத்தில் மித்திரன் என்ற சூரியனும் அத்திரி என்ற முனிவரும் தக்ஷகன் என்ற சர்ப்பமும் பவுருஷேயன் என்ற அரக்கனும், ஹாஹா என்ற கந்தர்வனும் ரதஸ்வனன் என்ற யக்ஷனும் இருப்பார்கள். ஆடி மாதத்தில் வருணன் என்ற சூரியனும் வசிஸ்டர் என்ற முனிவரும் சகஜதியை என்ற அப்சரசும் ஹூஹூ என்ற கந்தர்வனும் தாகம் என்ற சர்ப்பமும் ரதன் என்ற ராக்ஷசனும் சித்திரன் என்னும் யக்ஷனும் வசிப்பார்கள். ஆவணி மாதத்தில் இந்திரன் என்ற சூரியனும் விசுவாவசு என்ற கந்தர்வனும் சுரோதா என்ற யக்ஷனும் வசிப்பார்கள். சுரோதா என்ற யக்ஷனும் ஏலாபுத்திரன் என்ற சர்ப்பமும் அங்கிரசு என்ற ரிஷியும், பிரமலோசை என்ற அப்சரஸும், சர்ப்பி என்ற ராக்ஷசனும் இருப்பார்கள்.
புரட்டாசியில் விவசுவான் என்ற சூரியனும், பிருகு என்ற முனிவரும் அனுமலோசா என்ற அப்சரசும், சங்கபாலன் என்ற சர்ப்பமும் வியாக்கிரன் என்ற யக்ஷனும் இருப்பார்கள். அய்ப்பசியில் பூஷா என்ற சூரியனும் வசுருசி என்ற சர்ப்பமும் கவுதமர் என்ற முனிவரும் கிருதாசி என்ற அப்சரசும், சுஷேணன் என்ற யக்ஷனும் இருப்பார்கள். கார்த்திகையில் பர்ச்சனியன் என்ற சூரியனும், விசுவாவசு என்ற கந்தர்வனும் பரத்துவாஜர் என்ற முனிவரும், அய்ராவதம் என்ற சர்ப்பமும் விசுவாசி என்ற அப்சரஸும், சேனஜித்து என்ற யக்ஷனும் ஆப என்ற ராக்ஷசனும் வசிப்பார்கள். மார்கழியில் அம்சன் என்ற சூரியனும், காசியபர் என்ற முனிவரும் தார்க்ஷயன் என்ற யக்ஷனும், மகாபத்மன் என்ற சர்ப்பமும் வித்தியுத்து என்ற ராக்ஷசனும், சித்திரசேனன் என்ற கந்தர்வனும் ஊர்வசி என்ற தேவமங்கையும் இருப்பார்கள். தை மாதத்தில் பகல் சூரியனும் கிருது என்ற முனிவரும் கார்க்கோடகன் என்ற சர்ப்பமும் அரிஷ்டநேமி என்றா யஷனும் பூர்வசித்தி என்ற தேவமங்கையும் வசிப்பார்கள். மாசி மாதத்தில் துவஷ்டா என்ற சூரியனும் ஜமதக்னி என்றா முனிவரும், திலோத்தமை என்ற தேவதாசியும் கம்பளன் என்ற சர்ப்பமும் பிரம்மா பேதன் என்ற அரக்கனும் இருதசித்து என்ற யக்ஷனும், திருராஷ்டிரன் என்ற கந்தர்வனும் வசிப்பார்கள். பங்குனியில் விஷ்ணு என்ற சூரியனும் விசுவாமித்திரர் என்ற முனிவரும் ரம்பை என்ற தேவமங்கையும் சூரிய வர்ச்சக என்னும் கந்தர்வனும், சுத்தியசித்து என்னும் யக்ஷனும் அசுவதரவ என்ற சர்ப்பமும் யக்ஞாபேதன் என்ற அரக்கனும் வாசஞ் செய்வார்கள்.
மைத்ரேயரே! இவ்விதமாக ஒவ்வொரு மாதமும் இவர்கள் அனைவரும் ஸ்ரீ விஷ்ணு சக்தியினால் வியாபிக்கப்பட்டு, உலகத்தை ஒளிபெறச் செய்வதற்காக சூரிய ரதத்தில் இருப்பார்கள். இனி இவர்களுடைய செயல்களைக் கேளுங்கள்; சூரிய மண்டலத்தில் பிரகாசிக்கும் சூரியனுக்குத் தேஜஸ் விருத்தியாகும்படி ரிஷிகள் துதிக்கிறார்கள், கந்தவர்கள் கானமிசைக்கிறார்கள். தேவமங்கையர் நடனமாடுகிறார்கள். அரக்கர்கள் சூரியனுக்குப் பின் செல்கிறார்கள். சர்ப்பங்கள் சுமக்கின்றன. இயக்கர் கடிவான முதலானவற்றைத் தாங்கிப் பிடித்துக் கொள்கிறார்கள். இவர்களைத் தவிர வாலகிலியர்கள் என்ற முனிவர்கள் எப்பொழுதும் சூரியனைச் சூழ்ந்து உபாசனை செய்து கொண்டு இருக்கிறார்கள். இவ்விதமாகச் சூரிய மண்டலத்தில் வாசஞ் செய்கிற ஏழு கணங்களும் அந்தந்த சமயங்களிலே பனி, வெப்பம், தண்ணீர் ஆகியவற்றைப் பொழிவதற்குக் காரணமாக இருக்கின்றன.” ‘ என்கிறது இந்துமதம்.
சூரியன் என்பது ஓர் நெருப்புக் கோளம். அது பூமியிலிருந்து 9 கோடி மைல்களுக்கு அப்பால் உள்ளது. அதை எதுவும் நெருங்க முடியாது. அப்படிப்பட்ட சூரியன் தேரில் ஏறி வருகிறார். அந்தத் தேரில் பலர் தங்கியிருக்கிறார்கள். சூரியனுக்கே தேவர்கள்தான் ஒளி கொடுக்கிறார்கள் என்று முட்டாள்தனமாகக் கூறும் இந்துமதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா?
“சகல லோக கர்த்தராகிய ஸ்ரீமத் நாராயணனுடைய, நாபிக் கமலத்தில் உதித்த பிருமாவின் குமாரர்-அத்திரி என்ற முனிவர் அவருடைய மகன் சந்திரன், சகல தேவர்களுக்கும் குருவாகிய பிரகஸ்பதியின் மனைவியான தாரை என்பவளை அபகரித்துக் கொண்டான். இந்தச் செய்தியை பிருமா, பிருகஸ்பதிக்கு அறிவித்தார். அதனால் சந்திரனுக்கு பிரகஸ்பதி எவ்வளவோ புத்திமதிகள் சொல்லியும், தேவரிஷிகள் எல்லோரும் வேண்டிக் கொண்டதையும் சந்திரன் கேட்காமல், தன் குருபத்தினியான தாரையை விடவில்லை.
அதனால் போருக்கு இடமுண்டாயிற்று. பிருமாவானவர் சுக்கிரனையும் சிவனையும் அசுரனையும் தேவரையும் தடுத்து சந்திரனுக்குப் புத்தி சொல்லி தாரையைப் பிரகஸ்பதியிடம் திருப்பியனுப்பச் செய்தார் அத்துடன் சண்டை நின்றது.
பிறகு தம் மனைவி தாரை கருவுற்றிருந்ததை அறிந்த தேவகுருவான பிரகஸ்பதி அவளை நோக்கி, “அடிபெண்ணே! எனது ஷேத்திரத்தில் நீ மற்றவனுடைய கருவை ஏற்றிருக்கக்கூடாது. இதுவரையில் நீசெய்த சாகசம் போதும். இனி அந்தக் கருவை விட்டுவிடு!” என்றார். அதைக் கேட்ட தாரை மிகவும் பதிவிரதையாகையால் கணவனின் சொற்படி கருவை ஒரு நாணற்செத்தையின் மீது விட்டு விட்டாள். அந்தக் கருவினால் பிறந்த குழந்தை பிறந்தவுடனேயே சகல தேவரையும் தோற்கடிக்கும் படியான திவ்ய தேஜசோடு விளங்கியதைக் கண்டதும் பிரகஸ்பதி அந்தக் குழந்தை தனது பிந்துவுக்குப் பிறந்திருக்கலாம் என்று அந்தக் குழந்தையின்மீது விருப்பம் கொண்டிருந்தான். இருவருமே இவ்விதமாக அந்தக் குழந்தையின் மீது விருப்பம் கொண்டிருந்ததால் தேவர்கள் சந்தேகங் கொண்டு தாரையை நோக்கி, “பெண் அரசியே! இவன் சந்திரனுக்குப் பிறந்தவனாக உன் கணவரான தேவகுருவுக்குப் பிறந்தவனா? அதை எங்களுக்குச் சொல்வாயாக!” என்று பலமுறைகள் விடாமல் கேட்டார்கள். தாரை மிகவும் வெட்கத்தினால் தலை குனிந்து கொண்டு, இவன் சந்திரனுடைய மகன்தான் என்று சொல்லிவிட்டாள், பிறகு சந்திரன் மிகவும் மகிழ்ந்து தன் புத்திரனைக் கட்டியணைத்து முத்தமிட்டு, குழந்தாய்! நீ மிகவும் அறிவுடையவனாகையால் உனக்கு புதன் என்று பெயர் சூட்டுகிறேன்!” என்று அவனுக்குப் பெயரிட்டான்” என்று இந்து மதம் கூறுகிறது.
தொப்புள் பகுதியில் குழந்தை பிறந்தது என்றும்; நிலவுக்கு குழந்தை பிறந்தது என்றும்; வயிற்றிலுள்ள கருவை எடுத்து நாணற்புல்லில் போட்டதும் அது குழந்தையாக மாறியது என்றும், அந்தக் குழந்தை பிறந்தபோதே தேவர்களைத் தோற்கடிக்கும் வல்லமையோடு இருந்தது என்றும் இந்து மதம் கூறுகிறது. சந்திரன் ஒரு கோள். அது பூமியைப் போன்று மண்ணால் ஆன நிலம். அதற்கு மனைவி, பிள்ளை என்று மடத்தனமாக அறிவுக்கு எதிரான கருத்துகளைக் கூறும் இந்து மதம்தான் அறிவியலுக்கு அடிப்படையா? இப்படிக் கூறுவதைப் போன்ற ஓர் அறியாமை வேறு உண்டா? சிந்தியுங்கள்!
(நிறைவு)