பெண்ணால் முடியும் : நரிக்குறவர் சமுதாயத்தில் ஒரு நம்பிக்கைச் சுடரொளி!

ஜனவரி 16-31 2020

நரிக்குறவர் காலனியில் வசித்து வருகிறார் கௌசல்யா. அந்தப் பின்னணியில் இருந்துதான் தவ்வித் தவ்வி படித்து கல்வியில் உயர்ந்திருக்கிறார் விநாயகா மிஷன் நர்சிங் கல்லூரியில் படிக்கும் கவுசல்யா.

தந்தை ராஜேந்திரனுக்கு பாசிமணி, ஊசி மணி, பலூன் விற்பதும் ஊர் ஊராகச் சென்று திருவிழாக்களில் கடைபோடுவதும்தான் முழுநேரத் தொழில். “எங்களால படிக்கவைக்க முடியல. நாங்களும் படிக்கல, இப்படியே இருந்துட்டோம். அவங்களாவது படிச்சு நல்லா இருக்கட்டும் என ‘ஜாலி ஹோம்ல’ தங்க வைச்சு படிக்க வைக்கிறாங்க’’ என கூறுகிறார்.

தான் படிக்க வந்த சூழ்நிலையைக் கூறுகையில் தானே புயல் நேரத்தில் உதவி செய்ய வந்த புரூனோ சார்தான், எங்க பெற்றோர்கிட்ட உங்க குழந்தைங்கள படிக்கவைங்க” என்று கேட்டார்.

அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டப்படி நேரடியாக எட்டாம் வகுப்பில் சேர்ந்தார் கவுசல்யா. தமிழில் பேசுவதே புரியவில்லை . கூடுதல் நேரம் படித்தார். ஆசிரியர்களிடம் அய்யங்கள் கேட்டுத் தெரிந்து கொண்டார். புரூனோ சாவியோ சிறப்பு வகுப்புகள் மூலம் கற்றுக்கொண்டு எட்டாம் வகுப்பில் தேறினார். ‘’ரஃப் நோட்டு என்னானுகூட எனக்குத் தெரியல. பக்கத்துல இருந்த பொண்ணுக்கிட்ட கேட்டேன். சாதாரண நோட்டுதான். இதுக்கூட தெரியாதா என்றாள். என்னை எல்லோரும் வித்தியாசமா பார்த்தாங்க. பாடம் புரியாம பலமுறை அழுதிருக்கேன். ஒவ்வொன்றா கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன். என் பின்னணியை மிஸ்கிட்ட சொன்னேன். அவங்க புரிஞ்சுகிட்டு கத்துக்கொடுத்தாங்க. கஷ்டப்பட்டு படிச்சு பத்தாம் வகுப்பு வரைக்கும் வந்துட்டேன். வீட்டுல எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க ரகசியமாக திட்டம் போட்டாங்க போலீஸ்ல பொய்ப் புகார் கொடுத்து, அவங்களை கண்டிக்கச் சொன்னேன். நினைச்சுப் பார்த்த பிரமிப்பா இருக்கு. பிளஸ் டூ வரைக்கும் படிச்சதே சாதனையா தெரிஞ்சது. இன்னைக்கு நர்சிங் ஃபைனல் இயர் படிக்கிறேன். நான் முன்னேறினா என் சமூகமே முன்னேறின மாதிரி’’ என்று நெகிழ்ச்சியுடன் பேசுகிறார்.

ஜாலி ஹோம் நிறுவனர் புரூனோ சாவியோ, ‘’நரிக்குறவர் சமூகத்துல பெண் குழந்தைகளுக்கு வரதட்சணை கொடுத்து கல்யாணம் பண்ணிக்குவாங்க. வயசுக்கு வந்தாலே போதும். கல்யாணம் செஞ்சு வைச்சுடுவாங்க, நாங்க அந்தக் குழந்தைகளுக்காக மட்டுமே ஜாலி ஹோமை ஏற்படுத்தினோம். 250 குழந்தைகள் இங்கே தங்கிப் படித்து வருகிறார்கள். அப்படித்தான் 12 வயசில் கவுசல்யாவை கண்டுபிடித்து அழைத்து வந்தோம். படிப்பின் அருமையே தெரியாத சமூகத்தில் இருந்து வந்து இன்று நர்சிங் வரை படிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’.

பிளஸ் ஒன் வகுப்பில் உயிரியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்த கவுசல்யாவுக்கு பன்னிரண்டாம் வகுப்பில் மிகக் குறைவான மதிப்பெண்களே கிடைத்தன. இன்று அவரது முயற்சிக்கும் உழைப்புக்கும் விருதுகள் மூலம் அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. கடந்த 2018-ஆம் ஆண்டு பெண்கள் தினத்தன்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி இருவரும் “தன்னம்பிக்கைப் பெண்’’ என்னும் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளனர். விநாயகா மிஷன் நர்சிங் கல்லூரி ‘‘சைல்டு லீடர்’’ என்னும் விருதையும் வழங்கியது.

கவுசல்யா படிப்பதைப் பார்த்து படிக்க வந்த நரிக்குறவர் பெண்கள் ஊர்வசியும், துர்காவும் நர்சிங் படித்து விட்டு சென்னையில் பணியாற்றிவருகின்றனர்.

‘’எனக்கு நல்ல லைஃப் கிடைச்சா நாலு பேருக்கு உதவி செய்வேன். வேலை கிடைச்சதும் அந்த நிலைக்கு வந்துவிடுவேன். நான் படிப்பால் அடைந்திருக்கும் இந்த உணர்வை எங்க சமூகத்துக் குழந்தைகளுக்கும் கொடுக்கணும். எங்க பசங்கள முதல்ல மாத்தணும். எங்க மக்கள் நாகரிகத்தையும் சுத்தமா இருக்கிறதையும் கத்துக்குவாங்க. அவங்க இனத்துப் பொண்ணுங்கிறதால நான் சொன்னா கேட்பாங்க. குழந்தைங்கள பலூன் விற்க அனுப்ப மாட்டாங்க… என்று பேசி முடிக்கும்போது கவுசல்யாவின் கண்களில் நம்பிக்கை ஒளி தெறித்தது.

(தகவல் : சந்தோஷ்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *