ஆசிரியர்: பாவலர்மணி புலவர் ஆ. பழநி, காரைக்குடி
நூல் விவரப் பட்டியல்
நூலின் பெயர் : பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா?
ஆசிரியர் : பாவலர் மணி புலவர் ஆ. பழநி
முதற் பதிப்பு : 1989, அக்டோபர்
இரண்டாம் பதிப்பு : 2007, டிசம்பர்
விலை : ரூ. 45.00
பாவலர் மணி புலவர் ஆ. பழநி அவர்கள் ஓர் ஒப்பற்ற இலக்கியச் சிந்தனையாளர். தனித்தன்மையுடன் சிந்தித்து எழுதும் ஆய்வுக் கண்ணோட்ட எழுத்தாளர். அவரது நூல் ‘பாரதிதாசன் பாரதிக்குத் தாசனா?’ என்னும் நூலில் ஒரு பகுதி இதோ:
தெய்வம் சார்த்திக் கூறல்
பாரதியார் எப்பொருள் பற்றி பாடினாலும் அதனைத் தெய்வம் சார்த்திக் கூறுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். தெய்வத்தை வழிபடுவது என்பது வேறு; எல்லாவற்றிற்கும் தெய்வத்தையே நம்பி இருப்பது என்பது வேறு. மனித முயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் முதலிடம் தராமல் உடல் நலம் வேண்டுதலில் இருந்து நாட்டுக்கு விடுதலை பெறுதல் வரை தெய்வத்தை வேண்டிக் கொள்ளும் இயல்பு உடையவராக இருக்கின்றார் பாரதியார்.
தன்னுடைய குறிக்கோள் இன்னது என்று பாடலில் வெளிப்படுத்துகின்றார். அப்பாடலிலும் தெய்வம் சார்த்தியே பேசப்படுகின்றது.
நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதும் சோரா திருத்தல்
– உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நம்குடியை
– வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்.
தன்னுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குக் கூடக் கணபதியிடம் வரம் கோருகின்றார்.
‘எனக்கு வேண்டும் வரங்களை
இசைப்பேன் கேளாய் கணபதி
மனத்தில் சலன மில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின்மௌன
நிலைவந் திடநீ செயல்வேண்டும்
கனக்கும் செல்வம் நூறுவய
திவையும் தரநீ கடவாயே’
என்று தன் சொந்தத் தேவைகளுக்கும் தெய்வத்தையே சார்ந்து நிற்கின்றார். இன்னும் காணி நிலம் வேண்டும் என்று பராசக்தியைப் பராவுகின்றார். தனக்கு வையத்தலைமை தரவேண்டும் என்பதனை,
உய்யக் கொண்டருள வேண்டும் – அடி
உன்னைக் கோடிமுறை தொழுதேன் – இனி
வையத் தலைமை எனக்கருள்வாய்: அன்னை
வாழி நின்னதருள் வாழி
ஓம் காளி வலியசா முண்டீ
ஓங்காரத் தலைவிஎன் இராணி
இவ்வாறு பாடுகிறார். தனக்கு வேண்டிய அறிவு, செல்வம், நூறுவயது, வையத் தலைமை வேண்டித் தெய்வங்களைச் சார்ந்து நிற்பது மட்டுமின்றிச் சமுதாயத்தின் தேவைகட்கும் அவர் தெய்வத்திடமே வேண்டுகோள் விடுக்கின்றார்.
‘பூமண் டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக; துன்பமும் மிடிமையும் நோயும்
சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரும்
இன்புற்று வாழ்க என்பேன்; இதனைநீ
திருச்செவி கொண்டு திருவுளம் இரங்கி
அங்ஙனே யாகுக என்பாய் ஐயனே!’
என்று பாடுவதன் வாயிலாக உலக உயிர் நலம் பேணும் இயல்பையும் அதனை இறைவனே வழங்குவான் என்ற நம்பிக்கையும் அவர் கொண்டிருந்தார் என அறிகிறோம். இவ்வாறாகத் தன்னலம், உலகநலம் இரண்டிற்கும் தெய்வத்தைச் சார்ந்து நிற்கும் பாரதியார் தெய்வம் சார்த்திச் சொல்ல வேண்டாத சில செய்திகளையும் தெய்வம் சார்த்தியே சொல்கின்றார். அவற்றையும் காண்போம்.
‘மாகாளி பராசக்தி உருசிய நாட்
டினிற்கடைக்கண் வைத்தாள் அங்கே
ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி’
‘செம்மையெலாம் பாழாகிக் கொடுமையே
அறமாகித் தீர்ந்த போதில்
அம்மைமனம் கனிந்திட்டாள் அடிபரவி
உண்மைசொல்லும் அடியார் தம்மை
மும்மையிலும் காத்திடுநல் விழியாலே
நோக்கினாள் முடிந்தான் காலன்’
என்று உருசிய நாட்டுப் புரட்சியையும் அதன் வெற்றியையும் மாகாளி பராசக்தியின் கருணை என்று பாடுகின்றார். இவ்வாறு பாடுவது சரியா இல்லையா என்று ஆராய்வது நம் வேலையன்று; இவருடைய தாசன் இதனை ஏற்றுக் கொள்கின்றாரா என்று ஆராய வேண்டியதுதான் நம்பணி.
எதனையும் தெய்வம் சார்த்திப் பாடுவதனைப் பாரதிதாசனார் விரும்புவதில்லை. 1930க்குப் பிறகு தெய்வத்தைப் பாடுவதையே அவர் விரும்பவில்லை. பாடுவதை விரும்பாதது மட்டுமன்று; எதிர்ப்பவராகவே மாறிவிட்டார்.
‘மனைமக்கள் தூங்கினார் நள்ளிரவில் விடைபெற்று
வழிநடைச் சிரமம் இன்றி
மாபெரிய சிந்தனா லோகத்தை அணுகினேன்
வந்தனரென் எதிரில் ஒருவர்
எனையவரும் நோக்கியே ‘நான் கடவுள்’ நான் கடவுள்’
என்று பலமுறை கூறினார்
இல்லைஎன் பார்கள்சிலர் உண்டென்று சிலர் சொல்வார்
எனக்கில்லை கடவுள் கவலை
எனஉரைத் தேனவர் எழுப்புசுவர் உண்டெனில்
எழுப்பியவன் ஒருவன் உண்டே
இவ்வுலகு கண்டுநீ நானுமுண் டெனஅறிக
என்றுரைத் தாரவரை நான்
கனமான கடவுளே உனைச்செய்த சிற்பிஎவன்
காட்டுவீர் என்ற உடனே
கடவுளைக் காண்கிலேன் அறிவியக் கப்புலமை
கண்ட பாரத தேசமே!
இப்பாடலில் கடவுள் இல்லை என்பதனைத் தருக்க நூல் அடிப்படையில் வாதிட்டுக் கூறுகின்றார். எழுப்பு சுவர் உண்டு என்றால் எழுப்பியவன் இருப்பானல்லவா? அது போலவே உலகம் உண்டு என்றால் உலகைப் படைத்தவன் இருப்பானல்லவா? என்ற வாதத்தை அப்படியே வாங்கிக் கொண்டு கடவுள் உண்டு என்றால் அவரையும் படைத்த ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா? என்று திருப்பிக் கேட்டுக் கடவுள் மறுப்புக் கோட்பாட்டினை வெளிப்படுத்துகிறார்.
(தொடரும்)