நாடகம் : புது விசாரணை

ஜனவரி 16-31 2020

(ஒரு நாடகத் தொடர்)

சிந்தனைச் சித்ரா

வாசக நேயர்களே!

வழக்குகள் ஏராளம் வந்து கொண்டுள்ள நிலையில், பழைய நீதிமன்றங்களில் _ அல்லது தேவசபைகளில் தீர்ப்பெல்லாம் தேவர்களுக்கு ஆதரவாகவும், (சூத்திரர்களுக்கு) அசுரர்களுக்குப் பாதகமாகவே, ஒரு சார்பு நிலையிலேயே தீர்ப்புகளும், தண்டனைகளும் அளிக்கப்பட்டு வந்துள்ளதாக இதிகாச, புராண (அ) நீதி நூல்கள் சொல்லுகின்றன!

நீதி வழங்கல் பற்றிய பார்வையே பிற்காலத்தில் மாறி, மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை போன்ற தமிழறிஞர்கள் காலத்தில், ஒரு புதிய தெளிவையும், துணிவையும், ஓர்ந்து கண்ணோடாத தேர்ந்த நீதியை வலியுறுத்தினர்.

ஒரு புது திருப்பம் ஏற்பட்டது. ஓர் மீள் பார்வை ஏற்பட்டது. புதிய நோக்கும், போக்கும் தென்பட்டது!

பழைய ‘தர்மங்களை’ _ அதன் உண்மை உருவத்தை வைத்துப் பகுத்தறிவாளர்கள் ‘ஸ்கேன்’ செய்து பார்க்கத் தொடங்கினர்.

அது ஏற்கெனவே வழங்கப்பட்ட ஒருசார்பு நிலைத் தீர்ப்பை  மாற்றியமைக்க _ உண்மையாக, நடுநிலையாக நேர்மைத் துலாக்கோல் சரியான நிலையில் நிற்க வேண்டின், மறுவிசாரணை (Review)  புது விசாரணையாக அமைய வேண்டும் என்கிற சிந்தனை ஓட்டம் கடந்த  சில நூற்றாண்டாக சிறகடித்துப் பறக்கத் துவங்கியது.

மனுவே, மறுவிசாரணைக்கு மட்டுமல்ல, மாற்றத்திற்கு_கிரிமினல் நீதிமுறைக்கு  உட்படுத்தப்பட்டது. அதில் மதவாத, ஜாதிவாதக் கண்ணோட்டத்தோடு இருந்த சட்டங்கள் பிரிட்டிஷாரின் ஆட்சிக் காலத்தில் வெகுவாக மாற்றப்பட்டன. ஒரு சார்புப் பார்வை ஒருபோதும் ஏற்படக் கூடாது. “சட்டத்தின் முன்னே அனைவரும் சமம்’’, “நீதி தேவதைக்குக் கண்கள் கட்டப்பட்டே இருக்கும்’’ என்னும் தத்துவம் நடைமுறைக்கு வரத் துவங்கி, புதிய வெளிச்சம் பழைய அநீதி இருட்டை விரட்டி ஒளி பாய்ச்சியது.

எடுத்துக்காட்டாக, முந்தைய தவறுகளை – மற்ற மதவாதிகளே – போப் போன்ற மதத் தலைவர்களே, கலிலியோவைச் சிறையிலிட்டது (பூமி உருண்டை, தட்டை அல்ல என்று கூறியதற்காக), பரிணாம வளர்ச்சியைச் சொன்ன டார்வினை குற்றம் சுமத்தியதற்காகவும், பகுத்தறிவுச் சிந்தனையாளர் புரூனோவை எரித்தமைக்காகவும், வருத்தம் – மன்னிப்புக் கேட்கும் அளவுக்கு அவர்கள் மாறும்போது, மனுதர்ம சாஸ்திரத்திலேயே, மறுவிசாரணை நடத்துவதற்கு இடம் இருப்பதால், கிறித்துவத்தைவிட மூத்தவர்கள் என்று முதுகைத் தட்டும் ஹிந்து  தேவர்கள் ஜாதி அடிப்படையில் நீதி வழங்கிய மனுநீதியாளர்கள் தங்களை மாற்றிக்கொண்டு மனுநீதிகால அநீதிகளுக்கு மன்னிப்புக் கோரவேண்டும்.

எடுத்துக்காட்டாக, கொலைக் குற்றவாளியாக வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டவனுக்கு தண்டனை கொடுக்கும்முன் அவன் பிராமணனா, சூத்திரனா என்பதை அறிந்து உறுதி செய்து அதன் பிறகே    தண்டனை வழங்க வேண்டுமென்கிறது மனுஸ்மிருதி.

மனுஸ்மிருதி எட்டாவது அத்தியாயம் 379ஆம் சுலோகத்தில் கூறுவதாவது:

“பிராமணனுக்குத் தலையை முண்டனஞ் செய்தல் (மொட்டை அடித்தல்) கொலைத் தண்டமாகும். மற்ற வருணத்தாருக்கு கொலைத் தண்டமுண்டு.”

380: “பிராமணன் எல்லாப் பாவஞ் செய்தாலும் அவனைக் கொல்லாமல், காயமின்றி அவன் பொருள்களுடன் ஊரைவிட்டுத் துரத்த வேண்டியது”

இந்த நடைமுறை திருவிதாங்கூர் (ஹிந்து) ராஜ்யத்தில் மன்னராட்சி நடந்த வரையில் _ பிரிட்டிஷ் சட்டங்கள் குற்றம் புரிந்த அனைவருக்கும் தண்டனை ஒரே மாதிரி _ ஜாதி வர்ணம் பாராததாக இருக்க வேண்டும் என்ற  I.P.C. (Indian Penal Code) வருகிற வரை செயலில் அப்படியே கடைப்பிடிக்கப்பட்டது. கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட “பிராமணன்” மொட்டை  அடிக்கப்பட்டு, காயம்படாமல், சகல பொருள் சவுகரியத்துடன் அந்த ராஜ்யத்தினைத் தாண்டி எல்லை தள்ளி  ஆரல்வாய்மொழி பகுதிக்குக் கொண்டு வந்து விடும் பழக்கம் நடைமுறையில் இருந்து வந்துள்ளது கல் எழுத்துகளாலான பழைய நிகழ்வு. இவை மறு விசாரணை செய்யப்பட வேண்டியது கட்டாயம்.

எனவே, இந்தப் புதிய மனித தர்ம நீதிமன்றம் _ மனுதர்மத்தை _ ஏற்காத பொது நிலை நடுநிலை நியாயமன்றம் _ மறுவிசாரணை மனுக்களை ஏற்கிறது.

மாண்பமை வழக்குரைஞர் புத்தியானந்தர், மனிதநேயமும், நீதி வழுவா நெடுஞ்செழியப் பாண்டியன் என்னும் பழைய பாண்டியன் நெடுஞ்செழியன் பரம்பரையில் வந்து, வெளி நாடுகளிலும் சென்று, சட்டங்கள் பயின்று, சட்ட ஞானத்தில் பழுத்தவரான அவர் முன் வழக்கைத் தாக்கல் செய்து, மறு விசாரணைக்கு  உட்படுத்தப்படுகிறது. மறுவிசாரணை புது விசாரணையாக, நோய் நாடி நோய் முதல் நாடுவதாகவும், அறிவியல் அடிப்படையில் நீதியியல் அமைய வேண்டும் என்கிற நிலையில், ஆசாபாசங்கள் _ ஒரு சார்பு நிலையில்லா இந்த நீதிமன்றம் முன் தாக்கலான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதோ ஒரு வழக்கு விசாரணை தொடங்குகிறது…

இடம்: நீதிமன்றம் _ திருவள்ளுவர் மன்ற வளாகம்

மாண்பமை நீதிபதி நெடுஞ்செழியப் பாண்டியன் வருகிறார்.

அமைதி! அமைதி!! அமைதி1!!

எல்லோரும் எழுந்து நின்று நீதிபதிக்கு வணக்கம் கூறுகின்றனர். நீதிபதி அவர்கள் தலை தாழ்ந்து ‘வணக்கம்’ கூறித் தனது இருக்கையில் அமர்கிறார்:

விசாரணை துவங்குகிறது! நீதிமன்றப் பணியாளர் உரத்த குரலில்,

“பி.பி. மண்டல், பி.பி. மண்டல்” என அழைக்க,  பி.பி. மண்டல் நீதிமன்றத்திற்குள் வந்து, நீதிபதி முன் நிற்கிறார்.

நீதிபதி, அவரைப் பார்த்து, “நீங்கள் குற்றவாளியோ, குற்றம் புரிந்தவரோ அல்ல. சாட்சியம் _ விளக்கம் கூறுவதற்காக எங்களின் நீதிமன்றத்தின் சிறப்பு அழைப்பின்படி இங்கு வந்துள்ளீர்கள். எனவே, இருக்கையில் அமர்ந்து, வழக்குரைஞர்கள் கேட்கும் கேள்விகளுக்கு விளக்கமான பதில் அளியுங்கள். அச்சமோ, ஆசாபாசமோ துளியுமின்றி, உண்மைகளை நீங்கள் அறிந்தவாறு _ உணர்ந்தவாறு  உரைக்கலாம். இந்த சாட்சியம் ஏதும் பிற்காலத்தில் உங்களுக்கு எதிராக எந்த நிலையிலும் பயன்படுத்த மாட்டாது என்று இந்த  நீதிமன்றம் உங்களுக்கு உறுதியளிக்கிறது!” என்கிறார்.

வழக்குரைஞர் புத்தியானந்தர்: அய்யா தாங்கள் ஓர் வழக்குரைஞர் இல்லையா?

பதில்: ஆம்.

புத்தியானந்தர்: நீங்கள் இந்தியாவின் பெரிய மாநிலங்களில் ஒன்றான பீகாரில் முதல் அமைச்சராகவும் இருந்துள்ளீர்கள்.

நீங்கள் பிற்படுத்தப்பட்ட ஜாதியில் பிறந்தவர் _ வாழ்பவர் _ அந்நிலையிலேயே மடியவும் வேண்டியவர்கூட _ காரணம், ஜாதி  மாற்றப்பட முடியாத ஒன்று. ஹிந்து மத வர்ணாஸ்ரம  தத்துவத்தின்படி ஒடுக்கப்பட்டவர். நீங்கள் படித்தது, வழக்குரைஞரானது எல்லாம் மனுஸ்மிருதி _ ஜாதி தர்மத்திற்கு எதிரானதுதானே?

உடனே எதிர் அணி வழக்குரைஞர் குல்லூகப் பட்டர் குறுக்கிட்டு, “ஆட்சேபிக்கிறேன், மாண்பமை நீதிபதி அவர்களே! அவர் பிற்பட்ட சூத்திர ஜாதி என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் மதத்தை ஏன் இழுக்கிறார் _- எனது கற்றறிந்தவாதி, அறிவுமணியின் வழக்குரைஞர், புத்தியானந்தர்?’’

புத்தியானந்தர்: “பின்னால் அவரிடம் கேட்கப்படும் பல கேள்விகளுக்கு இந்த அடிப்படைக் கருத்தோட்ட ஒப்புதல் மிகவும் இன்றியாமையாததாகும் _ மாண்பமை கோர்ட்டார் அவர்களே!’’

நீதிபதி: “ஆட்சேபத்தை தள்ளுபடி செய்கிறேன், நீங்கள் மேலே சொல்லுங்கள்.’’

வழக்குரைஞர் புத்தியானந்தர்: “ஹிந்து மத வர்ணாஸ்ரமத்தில் ஜாதி _ பிற்படுத்தப்பட்டவர்களாக எப்படி வந்தனர் என்கின்ற வரலாறு முக்கியம்.

படிப்பையும், அதன் காரணமாய் வரும் அறிவையும் ஏகபோகமாக பிராமணர்கள் ஆக்கிக் கொண்டதாலும், சூத்திரர்களுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைத் தரக் கூடாது என்பது மனுவின் கட்டளை (Injunction) ஆனதாலும், படிப்பு வாசனையே அறியாதவர்களாய் கோடானு கோடி மக்கள் ஆனதோடு, வெறும் உடல் உழைப்புச் சமூகமாகவும் ஆக்கப்பட்டனர். அதன் காரணமாக கல்வி, சமூக அந்தஸ்தில் உயர் ஜாதிக்காரர்கள் முன்னேறிய ஜாதியினராகவும், மற்ற பல கோடி மக்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும், தாழ்த்தப்பட்ட மலைவாழ் பழங்குடியினராகவும் ஆக்கப்பட்டதோடு, அதை படிநிலை பேதமாக ஒருவருக்கு மேல் ஒருவர்  என்று ஏணிப் படிக்கட்டுப் போல பேத நிலை _ சமத்துவமின்மையை உருவாக்கியது மட்டுமல்ல; அதனால் படிக்கட்டு ஜாதிய சமத்துவமின்மை  (Graded Inequality)  ஏற்பட்டது.’’

நீதிபதி: “இன்றைய வாதம் நிறைவுறுகிறது. பாதியில் நிறுத்தப்பட்ட மற்ற வழக்கு விசாரணைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இந்த வழக்கு விசாரணை 2 நாள்களுக்குத் தள்ளி வைக்கப்படுகிறது!’’

கோர்ட் கலைகிறது!

(வளரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *