தலையங்கம் : இடஒதுக்கீடு

ஜனவரி 16-31 2020

மராட்டிய மாநிலம் போல் தமிழ்நாடு அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்!

ஜாதி ஒழியும் வரை இடஒதுக்கீடு வேண்டும்!

 

மகாராட்டிர மாநில சட்டமன்றத்தில், கடந்த புதன்கிழமையன்று (8.1.2020) சபாநாயகரே, தாமே முன்வந்து ஒரு முக்கிய தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.

அதை ஒருமனதாக அனைவரும் வழிமொழிந்து நிறைவேற்றியுள்ளனர்.

வருகின்ற மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதி வாரியாக மக்கள் தொகையும் இணைத்து எடுக்கப்படல் வேண்டும்; அப்போதுதான் இதர பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள்  (Other Backward Classes) தொகை எவ்வளவு என்பது துல்லியமாகக் கண்டறியும் வாய்ப்பு ஏற்படும் என்றும் தனது முன்மொழிவின் விளக்கத்தில் கூறியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு அரசு தெரிந்துகொள்ளட்டும்!

புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 இல் தொடங்கி நடைபெறவிருக்கிறது.

இதற்குப் பா.ஜ.க.வின் முன்னாள் முதல்வரும், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான தேவேந்திர பட்னாவிசும் தனது கட்சியின் ஆதரவினைத் தெரிவித்துள்ளார்.

இதைத் தமிழ்நாடு அரசும், மற்ற அனைத்து மாநிலங்களின் அரசும் வற்புறுத்தவேண்டும்.

இக்கோரிக்கை நம்மால் பல ஆண்டுகளுக்கு முன்பே வற்புறுத்தப்பட்ட ஒன்றாகும்.

‘‘ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பா? மக்களை இப்படிப் பிரித்துக் கணக்கெடுப்பது நியாயமா? அதிலும் ஜாதி ஒழிப்புக்கான இயக்கம் போன்ற திராவிடர் கழகம் இதனை வற்புறுத்தலாமா? அது முரண்பாடு அல்லவா?’’ என்று மேலெழுந்தவாரியாக இப்பிரச்சினையை நோக்கும் சிலர் கேட்கக்கூடும்.

ஏன் இட ஒதுக்கீடு?

நமது லட்சியம் ஜாதியற்ற சமூகம் காண்பதுதான்; ஆனால், அதே ஜாதி தர்மம் (குலதர்மம் – மனுதர்மம்) காரணமாக பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி, உத்தியோக வாய்ப்புகள் மறுக்கப்பட்ட பல கோடி மக்கள் மற்ற முன்னேறிய ஜாதி – வகுப்பினருக்குச் சமமாக ஆகும் நிலை வரும்வரை, அவர்களுக்கு இட ஒதுக்கீடு தரவேண்டியது அவசியம் என்பதால்தான், இந்திய அரசமைப்புச் சட்டமே சமூகநீதிக் கண்ணோட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களான (மலைவாழ்) பழங்குடியினர், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தருவது அவசியம் என்று வரையறுத்து, மூன்று  முக்கிய அரசமைப்புச் சட்டத் திருத்தங்களையும் உள்ளடக்கி, நிலைநாட்டியுள்ளது.

உச்சநீதிமன்றமும் தனது 9 நீதிபதிகள் அமர்வுமூலம் மண்டல் வழக்குமூலம் இதை (இந்திரா சகானி வழக்கு) ஏற்றுள்ளது.

ஜாதிக் கணக்கெடுப்புமூலம்தான் ஜாதி புகுத்தப்படுகிறதா?

சட்டத்தில் ஜாதி!

இருக்கின்ற யதார்த்த நிலை என்ன?

1. இந்திய அரசமைப்புச் சட்டத்திலே ‘‘தீண்டாமை’’தான் ஒழிக்கப்பட்டுள்ளது – சட்டபூர்வமாக (நடைமுறை சங்கதியோ வேறு – மகா வெட்கக்கேடு!)

இன்னமும் ‘‘ஜாதி’’ ஒழிக்கப்படவில்லை; ‘ஜாதி’  (Caste)   என்னும் சொல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 18 இடங்களில் இடம்பெற்றுள்ளது என்பதை எவரே அறிவர்!

2. ‘ஜாதி’ பார்த்துத்தானே இன்னமும் திருமணங்கள் (இந்து மத முறையில்) நடைபெறுகின்றன.  Matrimonial   என்கிற ‘மணமக்கள் தேவை’ விளம்பரங்களில் – எங்கோ ஒன்றில்தான்  ‘Caste No Bar’ – ‘ஜாதி’ ஒரு பிரச்சினை இல்லை’ என்ற சொற்றொடர் உண்டு.

3. தேர்தல்களில் வேட்பாளர்கள் தேர்வு முதல் வெற்றி வரை ஜாதி அம்சங்கள் படமெடுத்தாடவில்லையா?

பார்ப்பனர்களின் இரட்டை வேடம்

4. ஏதோ முற்போக்காளர்களைப்போல சில பார்ப்பனத் திருமேனிகளே, இரட்டைக் குரல் – இரட்டை வேடம் போடுவார்கள்; அந்த ‘பிரகஸ்பதிகளை’க் கேட்கிறோம்.

‘‘உங்கள் முதுகில் ஜாதிச் சின்னமான பூணூல் தொங்காமல் உள்ளதா?’’

உங்கள் வீட்டில் – குடும்பத்தில் எத்தனை ஜாதி மறுப்புத் திருமணங்கள்? அவர்களைப் பார்த்துக் கெட்டுப்போன ‘‘சூத்திரர்களோ’’, ஜாதி ஜாதியென்று மாய்ந்து விடுகிறார்களே!

‘பிராமணர் சங்கம்’ , ‘பிராமண் சம்மேஜம்’, ‘பிராமணா தொழில் முனையம்’ மாநாடுகளை நாட்டில் நடத்திடவில்லையா?

எனவே, இட ஒதுக்கீடு – சமூகநீதி நிலைநாட்டப்படுவதை எதிர்ப்பதற்கு மட்டும்தான் உங்களுக்கு ‘‘ஜாதி ஒழிப்பு – முற்போக்கு’’ப் பார்வையா?

எனவே, தமிழ்நாடு அரசும் தனது நிலைப்பாட்டில், மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி வாரியான அளவீடு முக்கியம் என்பதை வற்புறுத்திடவேண்டும்.

ஜாதியை ஒழிக்க சட்டம் கொண்டு வரட்டுமே – பார்க்கலாம்!

மத்திய அரசு நாளைக்கு ஜாதியை ஒழிக்க ஒரு அவசரச் சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினால் பிறகு இதை வற்புறுத்தமாட்டோம் என்று கூற நாங்கள் தயார், மற்றவர்கள் தயாரா?

கி.வீரமணி

ஆசிரியர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *