– மணிமகன்
வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்தபடியாக புத்தகங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்று தான் உதிர்த்த பொன்மொழியுடன் சிலையாக அமர்ந்திருக் கிறார் அண்ணா. பின்னே பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது அவர் பெயர் தாங்கிய நூலகம். உள்ளே நுழைய வாயிலில் வைக்கப்பட்டிருக்கும் பதிவேட்டில் தங்கள் வருகையைப் பதிவு செய்ய வரிசையாக நிற்கின்றனர் புத்தக ஆர்வலர்கள்.
கையெழுத்துப் போட்டுவிட்டு நுழைகையில் வரவேற்பறை. முதலில் பார்வையற்றோருக்கான பிரெய்லி நூல்கள் பிரிவு. அங்கு விழியிழந் தோருக்குப் படித்துக் காட்டும் பயிற்றுநர்கள் அமர்ந்திருக்கிறார்கள். பிரெய்லி நூல்கள் அடுக்கப்பட்டிருக்கின்றன.
அடுத்து சொந்த நூல்களைக் கொண்டு சென்று படிக்கும் பிரிவு. அப்பிரிவு முழுதும் எல்லா இருக்கைகளிலும் மாணவர்கள், ஆர்வலர்கள் அமைதியாகப் படித்துக் கொண்டி ருக்கின்றனர்.
எதிரில் போட்டித் தேர்வுகளுக்குப் படிப்போருக்கென தனிப்பிரிவு. அதிலும் ஆயிரக்கணக்கில் நூல்கள். அவற்றைப் படிக்கும் மாணவர்கள்.
முதல்தளம் சென்றால் குழந்தைகள் பிரிவு. ஏராளமான பிஞ்சுகள் தம் பெற்றோரின் துணையுடன் அழகழகான நூல்களைப் பார்த்து, படித்து, கற்கத் தொடங்குகின்றனர். அருகிலேயே விளையாட சிறுசிறு விளையாட்டுப் பொருள்கள். அதனையடுத்து நாளிதழ் மற்றும் பருவ இதழ்கள் பகுதி. அடுக்குகள் காலியாக இருக்கின்றன. அதில் இருந்த நாளிதழ்களையும் பருவ இதழ்களையும் கைகளில் தாங்கி ஏராளமானோர் படித்துக் கொண்டிருக் கின்றனர்.
இரண்டாவது தளம் முழுமையும் தமிழ் நூல்களின் சங்கமம். எல்லாப் பொருள் குறித்தும் நூல்கள் உள்ளன. கதை, கவிதை, கட்டுரை, வாழ்க்கை வரலாறு என்று நூல்கள் வரிசையாகப் பிரிக்கப்பட்டு அடுக்குகளில் அணிவகுக்கின்றன. இந்தத் தளத்திலும் இருக்கைகள் நிறைந்து வழிகின்றன.
மூன்றாம் தளம் தொடங்கி ஏழாம் தளம் வரை உலக வரலாற்றிலிருந்து நவீனத் தொழில்நுட்பம் வரை அனைத்துத் துறைகளை யும் விவரிக்கும் பல்லாயிரம் நூல்கள்; அத்தனையும் ஆங்கிலத்தில். ஒவ்வொரு நூலின் விலையும் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு வாங்கி வைக்கப்பட்டுள்ளன.
நூலக வளாகம் முழுதும் அமைதி தவழுகிறது. நாம் இதுவரை பார்த்த நூலகங் களைப் போல் இல்லாமல் அய்ந்து நட்சத்திர உணவகத்திற்கு இணையாகக் கட்டப்பட்டுள் ளது. சலவைக்கல் தரைகள், கண்ணாடிச் சுவர்கள், முற்றிலும் குளுமை, நவீன விளக்குகள் என தமிழ்நாட்டில்தான் இருக்கிறோமா என்ற அய்யத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வளவு சிறப்புகளையும் ஒருங்கே அமையப்பெற்ற அறிவுக் கருவூலமாம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத்தான் அம்மையார் ஜெயலலிதா இழுத்து மூட முடிவு செய்துள்ளார்.
ஒரு இனத்தை அழிக்க முதலில் அதன் மொழியை அழி என்ற யுக்தியைத்தான் ஆதிக்கவாதிகள் காலம் காலமாகச் செய்து வந்துள்ளார்கள். மொழி தனியே வாழ்ந்துவிட வில்லை. அது இலக்கிய நூல்களின் மூலம் மூச்சு வாங்கிக் கொண்டுள்ளது.
தெற்காசியாவிலேயே பெரிய நூலகம்
சென்னை கோட்டூர்புரத்தில் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3 லட்சத்து 33 ஆயிரத்து 140 சதுர அடிக் கட்டடமாக 8 தளங்களுடன் கண்ணைக் கவரும் பிரமாண்டமான வெளிப்புற உட்புறத் தோற்றங்களுடன் திகழ்வதே அண்ணா நூற்றாண்டு நூலகம்.
5 லட்சத்து 25 ஆயிரம் புத்தகங்களைத் தன்னகத்தே கொண்டது. தினமும் 1,000க்கும் மேற்பட்டோருக்கும், விடுமுறை நாள்களில் 3,000க்கும் மேற்பட்ட மக்களின் அறிவுப் பசிக்கு விருந்தளித்து மேலும் அறிவு தாகத்தை வளர்த்து வருகிறது.
குழந்தைகள் முதல் மாணவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனித் தளங்களில் படிப்பதற்கு வசதி செய்து கொடுத்திருப்பது இதன் தனிச்சிறப்பு எனலாம். கூட்ட அரங்கு, திரையரங்கு, கருத்தரங்கு அறைகள், கண்காட்சி அரங்குகளுடன் 417 கார்கள், 1026 இருசக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகக் கருதப்பட்டு நம் தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துத் தருகிறது.
ஈழத்தில் தமிழினத்தை அழிக்க முடிவு செய்த சிங்களப் பேரினவாதம் முதலில் யாழ்ப்பாணம் நூலகத்தை எரித்தது. தமிழர்களின் தொன்மையையும் உலக அறிவையும் ஏந்தி நின்ற நூல்கள் எரித்துச் சாம்பலாக்கப்பட்டன.
இப்போது இரண்டாவது தாக்குதல். அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடம் பெயர்த்திடும் முடிவாக வந்துள்ளது.
ஆட்சிக்கு வந்தவுடனேயே ஜெயலலிதா செய்த முதல் முடிவு சமச்சீர் கல்வியைச் சமாதிக்கு அனுப்புவதாக இருந்தது. அதுவும் அறிவைத் தடுக்கும் முடிவுதான்.
தமிழில் எஞ்சியுள்ள இலக்கியங்கள் குறைவே. ஆடிப்பெருக்கில் ஆற்றில் விடப்பட்ட ஏடுகளில் இருந்தவை ஏராளம். படிக்கக்கூடாத சமூகமாக மாற்றப்பட்டு ஓர் நூற்றாண்டுக்கு முன்புதான் படிக்கத் தூண்டப்பட்டவன் தமிழன்.
பெரியார் என்ற பேராற்றல் தமிழர்களைப் படிக்கத் தூண்டியது. காமராஜர் மூலமாக கல்வி கிடைத்தது. அண்ணா என்ற அறிவாளர் ஆங்கிலப் புலமை பெற்று ஆங்கில நூல்கள் பலவற்றைக் கற்று தமிழனுக்கு உலக வரலாற்றைச் சொல்லிக் கொடுத்தார்.
ஆயுள் முழுதும் படித்துக் கொண்டே இருந்தவர் அண்ணா.
அண்ணாவின் சிலைகள் பெரும்பாலும் அவர் கைகளில் புத்தகம் தாங்கியபடியே இருக்கும்.
படிப்பகங்களின் வாயிலாகவும் முடிதிருத்தும் கடைகளின் மூலமாகவும் அறிவை வளர்த்தது திராவிட இயக்கம்.
அந்த திராவிட இயக்கத்தில் ஊடுருவிய ஆரியமே இன்று அடிப்படையைத் தகர்க்கும் பணியைத் தொடங்கி இருக்கிறது.
எதற்கெடுத்தாலும் கருத்துச் சொல்லும் ஆரிய நச்சு சோ நான் இன்னும் அந்த நூலகத்தைப் பார்க்கவில்லை. எனவே கருத்துச் சொல்ல முடியாது என்கிறார். இதுவரை எல்லாக் கருத்துகளையும் இப்படித்தான் சொன்னாரோ? ஏன் கருத்துச் சொல்ல மறுக்கிறார் தெரியுமா? தமிழனின் அறிவை வளர்க்கும் நூலகம் ஒழிவதில் அவருக்கு மனம் குளிரத்தானே செய்யும் அதுதான்.
ஜெ-வுக்கு ஜால்ராபோடும் இனமலர் இந்த விசயத்தில் அடக்கி வாசிக்கிறது. மருத்துவமனை வந்தால் நல்லதுதானே என்று சப்பை கட்டுகிறது. இதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக் கொள்ளவில்லை. இனமணியோ பூசி மெழுகி தலையங்கம் தீட்டுகிறது. ஜெ அரசு சொல்வதுபோல டி.பி.அய். வளாகத்தில் நூலகம் கட்ட போதுமான இடவசதி இல்லவே இல்லை. அங்கிருக்கும் எல்லாக் கட்டடங்களையும் இடித்தாலும் இந்த அளவுக்கு நிச்சயம் கட்ட முடியாது. நூலகத்திற்கு என்றே வடிவமைக்கப்பட்ட கட்டடத்தை விட்டுவிட்டு ஏன் மீண்டும் வேறு ஒரு கட்டடம் கட்ட வேண்டும்?
அந்தப் புதிய இடத்தில் மருத்துவமனைக்கென்றே சிறப்பு வடிவமைப்பில் கட்டடம் கட்டிவிடலாமே! இதெல்லாம் தெரியாதா ஜெயலலிதாவுக்கு? தெரியும். இவர் நூலகத்தை மாற்றுவேன் என்பது இன்னொரு நூலகம் கட்ட அல்ல. இந்த நூல்களை மூட்டையாகக் கட்டி மூலையில் போட. ஏற்கெனவே பாவேந்தர் செம்மொழி நூலகத்தை மூடி அதில் உள்ள நூல்களை மூட்டை கட்டிப் போட்டுவிட்டார். இப்போது அண்ணா நூலகத்திற்கு வந்துள்ளார் அவ்வளவுதான்.
தமிழ்நாடு நூலக சட்டம், 1948 -இன் கீழ்தான் நூலகங்கள் உருவாக்கப்படுகின்றன. அப்படி உருவாக்கப்பட்ட நூலகத்தினை மாற்ற சட்டத்திருத்தம் தான் செய்யப்படவேண்டுமே தவிர, புதிய சட்டமோ, அமைச்சரவைத் தீர்மானமோ செல்லாது என்றும் சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். கடந்த முறை சமச்சீர் கல்விக்கு எதிரான நடவடிக்கைகளில் உச்சநீதிமன்றம் வரை சென்று குட்டு வாங்கி வந்திருந்தாலும் அவரது போக்கு மாறுவதாயில்லை.
அண்ணா நூற்றாண்டு நூலகம் மாற்றப்படுவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விடுத்ததோடு மட்டுமல்லாமல் 05.11.2011 அன்று சிறப்புக் கூட்டம் போட்டு, தமிழகத்திலேயே முதல் குரல் கொடுத்தவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்தான்.
கொட்டும் மழையிலும் பெரியார் திடலில் உணர்வுடன் குவிந்த தமிழர்கள் மத்தியில் உரையாற்றிய அவர் சமச்சீர் கல்வி குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எடுத்துக் காட்டி, சட்டரீதியான கருத்துகளை முன்வைத்தார். ஆட்சி என்பது ஒரு தொடர்ச்சி, குறிப்பாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
உயர்நீதிமன்றம் தடை!
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதைத் தடை செய்யக்கோரி வழக்குரைஞர்கள் பி.புகழேந்தி, ஆர்.பிரபாகரன், ஓய்வுபெற்ற ஆசிரியை மனோன்மணி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்
மனுக்களில், டி.பி.அய். அருகில் ஏற்கெனவே கன்னிமாரா நூலகம் உள்ளது. எனவே, அதன் அருகில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. நூலகத்தை இடமாற்றம் செய்வதுபற்றி பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட வில்லை. குறிப்பாக மாணவர்கள், ஆராய்ச்சி யாளர்களிடம் கருத்துக் கேட்கவில்லை. நூலகம் கட்டுவதற்கென்றே 172 கோடி ரூபாய் அரசு ஒப்புதல் அளித்தது. மேலும், சி.எம்.டி.ஏ., பொதுப் பணித்துறையும் திட்ட அனமதி மற்றும் கட்டட உறுதி சம்பந்தப்பட்ட சான்றிதழினை வழங்கியது.
எனவே, நூலகத்தை வேறு இடத்திற்கு மாற்றுவதைத் தடை செய்து அரசு எடுத்த முடிவு செல்லாது என்று உத்தரவிட்டு, நூலகம் அதே இடத்தில் செயல்பட ஆணையிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இம்மனுக்கள், தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் கொண்ட முதல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள் பதில் மனுவை அரசு தாக்கல் செய்ய வேண்டும். நூலக மாற்றம் நியாயமானதுதானா இல்லையா என்பதைப் பரிசீலிக்க வேண்டும். விசாரணை 6 வாரங்களுக்குத் தள்ளிவைத்து, மறு உத்தரவு வரும்வரை நூலகத்தை மாற்றும் அரசின் முடிவுக்குத் தடை விதித்துள்ளனர்.
இந்தத் தடை நீடிக்கும் என்பது மட்டுமல்ல. அ.தி.மு.க. அரசு உச்சநீதிமன்றம் சென்றால்கூட ஏற்கெனவே உச்சநீதிமன்றம் சமச்சீர் கல்வியில் கொடுத்த தீர்ப்பின்படி இந்திய அரசியல் சட்ட விதிகளின்படி நூலக இடமாற்ற அறிவிப்பு நடவடிக்கை சட்ட விரோதமான நடவடிக்கை நியாய விரோதமான நடவடிக்கை என்பதற்கு உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றன.
அதுவும் குறிப்பாக சமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பின் ஒரு பகுதியை நான் சுட்டிக்காட்டி தமிழக அரசுக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.
சமச்சீர் கல்வியில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு நூலக இடமாற்ற முடிவுக்கும் பொருந்தும். அத்தீர்ப்பினை அறிந்துதான் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் தடை வழங்கியிருக் கின்றார்கள்.
இன்னொன்றையும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் சொல்லியிருக்கின்றார்கள். அதை நேரடியாக மாற்றுவதற்கு போலித்தனமான காரணங் களைச் சொன்னால் அந்த காரணங்கள் கெட்ட எண்ணத்தோடு சொல்லப்படுகிறது (MALA FIDE) என்று பொருள்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?
The law must not permit change of policy because another political party with different political philosophy coming to power, as it is the decision of the government. The state is the authority under article 12 of the constitution, and not a particular person or party which is responsible for implementation of the policies.
முதலில் இருந்த ஒரு ஆட்சியினர் ஒரு காரியத்தை செய்தால் தனிப்பட்ட முறையில் செய்தார்கள் என்று யாரும் கருதிவிட முடியாது. இன்னொரு ஆட்சி வரும்பொழுது பழைய ஆட்சியினுடைய தொடர்ச்சி சென்ற ஆட்சியின் செயலை பின்பற்ற வேண்டியதுதான் வந்திருக்கின்ற ஆட்சியின் கடமையாக இருக்க வேண்டுமே தவிர அதை உடைப்பதற்கு புதிய அரசுக்கு அரசியல் சட்ட ரீதியாக உரிமை இல்லை.
ஏராளமான தீர்ப்புகளை இப்படி கொடுத்திருக்கிறார்கள். அத்தனையும் இந்த அரசுக்குப் பொருந்தும் வேறு புதிதாக சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது.
(சென்னை சிறப்புக் கூட்டத்தில் கி. வீரமணி, 5.11.2011)
இந்த போலி காரணத்தை ஏற்க வேண்டிய அவசியம் கிடையாது என்று உச்சநீதிமன்றம் ஓங்கி அடித்துச் சொல்லியிருக்கின்றது. எனவே அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றுவது என்பது சட்டரீதியான சிக்கல் உங்களுக்கு. சிக்கலில் நீங்கள் இன்னொரு முறை மாட்டி உச்சநீதிமன்றத்திற்குச் சென்று குட்டு வாங்காதீர்கள். நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? கலைஞர் 9தளம் கட்டியிருந்தால் நீங்கள் இன்னும் ஒரு நான்கு தளத்தை அதிகமாகக் கட்டியிருக்க வேண்டுமே! அல்லது அவர் செய்யாத வசதியை நான் செய்திருக்கிறேன் என்று காட்டியிருக்க வேண்டுமே! அதைவிட்டு விட்டு கலைஞர் எது செய்திருந்தாலும் மாற்றுவேன் என்பது ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்கு அழகல்ல! என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
ஆனால், முதல்வர் ஜெயலலிதாவுடைய போக்கில் மாற்றமில்லை என்பதையே 13,500 சாலைப் பணியாளர்களை பணிநீக்கம் செய்திருக்கும் அவரது ஆணை வெளிப்படுத்துகிறது,. தமிழர்களின் கல்வி, வேலைவாய்ப்பில் குறி வைத்திருக்கும் இந்தப் போக்கு சமூகநீதிக்கு எதிரானதல்லாமல் வேறென்னவாயிருக்க முடியும்?