அய்யாவின் அடிச்சுவட்டில் …
கி.வீரமணி
21.10.1991 அன்று தஞ்சையில், திருவாரூர் தாஸ்_லீனா ஆகியோரின் செல்வி வெண்ணிலாவிற்கும் (பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக் பணியாளர்) தஞ்சையைச் சேர்ந்த நடராஜன்_சரோஜா ஆகியோரின் செல்வன் என்.ராஜசேகரனுக்கும் வாழ்க்கை ஒப்பந்த விழா சிறீநிவாஸ் திருமண மண்டபத்தில் என் தலைமையில் நடைபெற்றது.
மணவிழாவில், மணமக்களை வாழ்த்தி வாழ்க்கை ஒப்பந்த விழாவினை நடத்தி வைத்து உரை நிகழ்த்தினேன். அப்போது, வெண்ணிலா அவர்கள் நமது பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் பணி புரியக் கூடியவர்கள். பொறுப்பான பணியைப் பொருத்தமாகச் செய்யக்கூடியவர்கள்.
எந்த நிறுவனத்திலும் இப்படிப்பட்டவர்கள் பணியாற்றுவதன் மூலமாகத்தான் அந்த நிறுவனத்திற்கே பெருமை சேர்க்கக் கூடியதாக இருக்கும். எனவே, தந்தை பெரியாருடைய கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள் யாராக இருந்தாலும் நம்பிக்கைக்கும், நாணயத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குவார்கள் என்று வாழ்த்தி உரையாற்றினேன்.
மணவிழாவில், “விடுதலை’’ நிருவாகி சி.ஆளவந்தார், கழக தலைமை நிலையச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், மதுரை மாநகர் மாவட்ட தி.க. தலைவர் கல்வி வள்ளல் பே.தேவசகாயம், பெரியார்_மணியம்மை பொறியியற் கல்லூரி முதல்வர் பி.எஸ்.கோபால்சாமி, பேராசிரியர் என்.ராமச்சந்திரன், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தின் செயலாளர் புலவர் கோ.இமயவரம்பன், பெரியார் ஆசிரியர் பயிற்சி முதல்வர் பி.சுப்பிரமணியம், முன்னாள் தஞ்சை நகர தி.க. தலைவர் சாமி.நாகராஜன், அய்யனார், இரா.குணசேகரன் மற்றும் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
22.10.1991 அன்று தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அன்னை நாகம்மையார் விடுதி அடிக்கல் நாட்டு விழாவும், இந்தியன் வங்கிக் கிளை துவக்க விழா நிகழ்ச்சியும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்து வைத்து பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில் நுட்பக் கல்லூரி தாளாளர் _ திராவிடர் கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி உரையாற்றினார். பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகத்தின் தலைவர் என்கிற முறையில் அனைவரையும் வரவேற்றுப் பேசினேன். பெரியார் மணியம்மை மகளிர் பொறியியற் கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவரும், தமிழக மூதறிஞர் குழுத் தலைவருமான நீதிபதி பி.வேணுகோபால் அவர்கள் தலைமை வகித்தார்.
பெரியார் மணியம்மை பெண்கள் பொறியியல் கல்லூரியில் இந்தியன் வங்கி கிளை துவக்கி வைக்கும் பி.வேணுகோபால் உடன் ஆசிரியர் கி.வீரமணி மற்றும் கழகத்தினர்.
காவிரி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாட்டுக்குத் துரோகம், மண்டல் கமிஷன் பிரச்சினையில் மத்திய அரசின் துரோகம், குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன் ஆரம்பத்திலிருந்தே போட்டு வந்த முட்டுக்கட்டை, குடியரசுத் தலைவரை சந்திக்கச் சென்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்க மறுத்த அநீதி ஆகியவற்றைக் கண்டிக்கும் வகையில் திராவிடர் கழகத்தின் சார்பில் குடியரசுத் தலைவர் வெங்கட்ராமனுக்கு கருப்புக் கொடி காட்ட 9.11.1991 அன்று என் தலைமையில் அனைத்து மாவட்டங்களி லிருந்தும் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து ஆர்ப்பாட்டத்திற்கான காரணங்களை விளக்கிப் பேசினேன். கழகத் தோழர்களுடன் கைதாகி சிறை சென்றேன்.
காவிரி நீர்ப் பிரச்சனையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க மறுத்த குடியரசுத்தலைவருக்கு ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் கருப்புக் கொடி காட்டும் காட்சி.
கைதாகி மீனம்பாக்கம் முத்து திருமண மண்டபத்தில் இருந்த போது பெரியார் பேருரையாளர் பேராசிரியர் அ.இறையன் _ திருமகள் ஆகியோரின் செல்வன் இசையின்பன் மதுரை முனியசாமி _ பொன்னுத்தாய் ஆகியோரின் மகள் செந்தில்குமாரி(தற்போதைய பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர்) ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்தேன். உரிமைப் போரில் கைது செய்யப்பட்டிருந்த போது நடைபெற்ற இந்தத் திருமணம் ஏடுகளில் பரபரப்பானது.
இசையின்பனுக்கு செந்தில்குமாரி மோதிரம்
அணிவிக்கும் காட்சி
‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேட்டின் வேண்டுகோளை ஏற்று, அந்த ஏட்டுக்கு அளித்த சிறப்புப் பேட்டியை அந்த ஏடு 18.11.1991 அன்று வெளியிட்டுள்ளது. ‘எக்ஸ்பிரஸ்’ ஏடு வெளியிட்டுள்ள அந்தப் பேட்டி விவரம்:
அண்மையில் திருச்சியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெரியசாந்தன் _ போலீசாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார். போலீசார் தன்னைச் சுட்டவுடன், அவர் சயனைடு விஷமருந்திவிட்டார். திருச்சி _ ஆனந்தராஜ் இல்லத்தில் சம்பவம் நடந்தது. விடுதலைப்புலி சாந்தனுக்கு அடைக்கலம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு ஆனந்தராஜ், ஞான செபஸ்தியான் ஆகியோரை ‘கியூ’ பிரிவு போலீசார் கைது செய்தனர். “இவர்கள் இருவரும் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்கள்’’ என்று பத்திரிகைகளில் வந்த செய்திபற்றி செய்தியாளர் கேட்டபோது, “அவர்கள் திராவிடர் கழகத்தின் முன்னணி செயல்வீரர்களோ, பொறுப்பாளர்களோ அல்லர்; திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரை, அதற்கு கொள்கை அளவில் ஆதரவாக இருப்பவர்கள் இருக்கிறார்கள்; இயக்கத்திலே பொறுப்பேற்று; முன்னணியினராக செயல்படக் கூடியவர்களும் இருக்கிறார்கள்; ராஜீவ்காந்தி கொலை தொடர்பாக _ கைது செய்யப்பட்டவர்களில் திராவிடர் கழகத்தின் முன்னணியினரோ, பொறுப்பாளர்களோ, செயல்வீரர்களோ யாரும் கிடையாது; கொள்கை ரீதியாக ஆதரவாளர்களாக வேண்டுமானால் இருக்கலாம். ஒரு காலத்தில் எங்கள் இயக்கத்தில் இருந்தார்கள் என்பதற்காக, இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களை திராவிடர் கழகத்தினர் என்று கூறிவிட முடியாது. ஒரு காலத்தில் எங்களுடைய இயக்கத்தில் இருந்தவர்கள் இன்று பல்வேறு அமைப்புகளில் இருக்கிறார்கள். வாழப்பாடி ராமமூர்த்திகூட _ ஒரு காலத்தில் எங்கள் இயக்கத்தில் இருந்தவர்தான்.
திராவிடர் கழகம் என்பது மிகவும் கட்டுப்பாடான தொண்டர்களைக் கொண்ட ஒரு சமுதாயப் புரட்சி இயக்கம். எங்களுக்கு வன்முறையிலோ, ரகசிய நடவடிக்கைகளிலோ நம்பிக்கை கிடையாது; எங்கள் இயக்கம் வெளிப்படையான இயக்கம். எங்கள் இயக்கத்தைச் சார்ந்த எவரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ, சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை நாங்கள் ஆதரிக்கமாட்டோம்’’ என்று பதிலளித்தோம்.
கைது செய்யப்பட்ட ஞான செபஸ்தியான் _ திருச்சியில் உள்ள பெரியார் மருந்தியல் மகளிர் கல்லூரியின் தாளாளர். இதைச் சுட்டிக்காட்டி செய்தியாளர் எம்மிடம் கேட்டார்.
“ஆம்; கடந்த இரண்டு மாதங்களாக ஞான.செபஸ்தியான் அவர்கள், அந்தக் கல்லூரியின் தாளாளராக இருந்து வருகிறார். இது கவுரவப் பதவிதான். ஊதியம் பெறும் பதவி அல்ல. கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக அவர் இப்பதவியில் இல்லை; அதற்கு முன் சில ஆண்டுகள் இப்பதவியில் இருந்தார். எங்களது நிறுவனங்களில் பெரியார் கொள்கையின் ஆதரவாளர்களாக, அனுதாபிகளாக இருப்பவர்களை இந்தப் பதவிகளில் நாங்கள் நியமிப்பது வழக்கம். அவர்கள் பெரியார் கொள்கையின் ஆதரவாளர்கள்தானே தவிர, அவர்கள் அனைவரும் எங்கள் இயக்கத்தினரோ, இயக்கத்தின் செயல்வீரர்களோ அல்ல’’ என்று விளக்கினேன்.
“அதேபோல் _ புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட இரும்பொறை எனும் துரைசிங்கமும் எங்கள் இயக்கத்தில் இப்போது இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வேண்டுமானால், அவர் எங்கள் இயக்கத்தில் இருந்திருக்கலாம்’’ என்று மற்றொரு கேள்விக்குப் பதிலளித்தேன்.
“எங்கள் இயக்கத்துக்கு எதிராக உள்நோக்கத்துடன் பிரச்சாரம் செய்யப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்கள் _ தனி நீதிமன்றத்தில் ரகசியமாக விசாரிக்கப்படுகிறார்கள். அங்கே குற்றம் சாட்டப்பட்டவர்கள் கூறும் வாக்குமூலங்கள் எப்படி பத்திரிகைகளுக்கு அறிக்கைகளாகத் தரப்படுகின்றன? நடப்பதோ ரகசிய விசாரணை; ஆனால், வாக்கு மூலங்களோ பத்திரிகைகளுக்குத் தரப்படுகிறது. இதற்குப் பெயர்தான் ரகசிய விசாரணையா?’’ என்று கேட்டேன்.
“ஈழ விடுதலையை நாங்கள் கடந்த காலத்திலும் ஆதரித்தோம்; இப்போதும் ஆதரிக்கிறோம். நெல்சன் மண்டேலா தலைமையில் நடைபெறும் தென்னாப்பிரிக்க விடுதலைப் போராட்டத்தையும் _ யாசர் அராபத் தலைமையில் நடைபெறும் பாலஸ்தீன விடுதலைப் போராட்டத்தையும் இந்தியா ஆதரிக்கும்போது, அதைவிட நியாயமான காரணங்கள் அதிகமாக இருக்கும் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஏன் ஆதரிக்கக் கூடாது’’ என்று கூறினேன்.
மேலும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் ராஜீவ் காந்தியின் அணுகுமுறைபற்றி கேட்டதற்கு, “இந்திய _ இலங்கை ஒப்பந்தத்தில் ராஜீவ் கையெழுத்திட்டதன் மூலம் _ மோசமான தவறைச் செய்துவிட்டார். இந்த ஒப்பந்தத்தின் விளைவு என்ன? இலங்கை அரசும் இந்தியாவை நம்பவில்லை. ஈழத் தமிழர்களும் இந்தியாவை நம்பவில்லை. இரண்டு பேரின் நம்பிக்கையையும் இந்தியா பெற முடியாமல் போய்விட்டது. அண்மையில் கொழும்பில் நடக்க இருந்த ‘சார்க்’ மாநாடு திடீரென தள்ளிப் போடப்பட்டதற்கு என்ன காரணம்? இந்த ஒப்பந்தத்தால் ஏற்பட்ட கசப்பு உணர்வுகளின் தொடர்ச்சியான விளைவுகளில் இதுவும் ஒன்று’’ என்று விளக்கினேன்.
21.11.1991 அன்று சேலத்தின் ஒரு கொள்கை மாணிக்கமாம் ச.திரு.அழகரசன் மறைவுச் செய்தியை சேலம் தோழர் கந்தசாமி அவர்கள் மூலம் தொலைபேசியில் கேட்டபோது மிகவும் வேதனைப்பட்டேன்.
ச.திரு.அழகரசன்
நண்பர் ச.திரு.அழகரசன் அவர்கள் வாழ்நாள் முழுவதும் சீரிய சுயமரியாதை வீரர். பெரியார் பெருந்தொண்டர். தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் அவர்கள் இவ்வியக்கத்தின் தலைமையில் உள்ளபோதும் அதற்குப் பிறகும்கூட இம்மியளவுகூட கட்டுப்பாடு மாறாது, கடமையாற்றிய கண்ணியமும், பெருந்தன்மையும் மிளிரும் ஒரு பெருந்தகையாளர். தனிப்பட்ட முறையில் எனக்கு _ நமக்கு பெரும் இழப்பு இவரது பிரிவின் மூலம்.
பாரம்பரியமான நீதிக்கட்சி குடும்பத்தைச் சேர்ந்தவர் அவர். நம் இயக்கத்திற்கு கடந்த 40 ஆண்டுகளாய் உழைத்துவரும் அரும்பெரும் பெரியார் பெருந்தொண்டர் என்றும், இயக்க வீரர்களின் பட்டியலில் முன்னிலையில் உள்ளவர் என்றும் ‘விடுதலை’யில் முக்கிய இரங்கல் அறிக்கையை வெளியிட்டிருந்தேன். கழக தலைமை நிலைய செயலாளர் மற்றும் 1000த்திற்கும் மேற்பட்டோர் சேலம் அழகரசனின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
வீரசேகரன்
25.11.1991 அன்று கழக வழக்கறிஞர் வீரசேகரன் அவர்கள் ‘தடா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். பத்மநாபா கொலை வழக்கில் தேடப்பட்ட குண்டு சாந்தன் எனும் விடுதலைப் புலியை, தலைமறைவாகி விடும்படி வழக்கறிஞர் வீரசேகரன் கடிதம் எழுதினார் என்று குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து வழக்கறிஞர் வீரசேகரனை ஜாமீனில் விட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சித்திக் தள்ளுபடி செய்துவிட்டார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கே.எஸ்.பக்தவத்சலம், வழக்கறிஞர் வீரசேகரனை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டார். இந்த மனுவின் வழக்கறிஞர் நானே நேரடியாக வழக்கறிஞர் வீரசேகரன் சார்பில் ஆஜரானேன். என்னுடன் மூத்த வழக்கறிஞர் ந.கணபதி, சட்டத்துறை செயலாளர் துரைசாமி, வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் ஆஜரானார்கள். நீதிபதி அளித்துள்ள தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
26.11.1991 அன்று தென்சென்னை திராவிடர் கழக இளைஞர் அணியின் சார்பில் ராயப்பேட்டையில் நடந்த தமிழின எழுச்சி நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அப்போது, ஈழத்தமிழர்களாகிய எங்கள் இனத்துக்காரர்களுக்கு நாங்கள் மனிதாபிமானத்தோடு உதவுவது ‘தேசத் துரோகம்’ என்றால், எங்கள் மனிதநேயம் உங்களுக்கு ‘தேசத் துரோகம்’ என்றால்… அந்த “தேசத் துரோகத்தை’ நாங்கள் தொடர்ந்து செய்துகொண்டே இருப்போம்! என்று பிரகடனப்படுத்தினேன்.
தந்தை பெரியாருடைய தொண்டன் என்கிற காரணத்தாலே அந்த ஒரு தலைவனைத் தவிர அந்த ஒரு தலைவன் தந்த கொள்கையைத் தவிர என்னுடைய ரத்த நாளத்தினாலே வேறு எதையும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், ஒன்றைமட்டும் நினைத்தேன்; தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள், “ஒரு மனிதன் நோயினால் சாகக் கூடாது. அவன் லட்சியத்திற்காகச் சாக வேண்டும். அந்தச் சாவை யாசித்தாவது பெறவேண்டும்.’’ அந்த நிலைதான் எனக்கு வரவேண்டும். “நான் மருத்துவமனையில் செத்துப் போய் விடக்கூடாது. சிறைச்சாலையிலோ அல்லது சமுதாயத் தொண்டு புரியும்பொழுது வேறு இடத்திலோ செத்துப் போக வேண்டும் என்று நினைத்தேன். அதற்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று நினைக்கும்பொழுது நான் மகிழ்ச்சியுடன் அதை ஏற்கிறேன்’’ என்று.
என்னுடைய மக்கள் வீடிழந்து, வாசல் இழந்து, இழக்கக்கூடாத கற்பை இழக்கும்போது எங்கள் உயிர் என்ன வெல்லமா? என்று கடுமையான மனவேதனையுடன் கண்டித்து உரை நிகழ்த்தினேன்.
3.12.1991 அன்று காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக பிரதமரை தமிழ்நாடு முதலமைச்சருடன் ஒரு குழுவாக சந்தித்தது. தமிழ்நாடு அரசின் அழைப்பின் பேரில் நானும் பங்கேற்று நடுவர் மன்றத் தீர்ப்பினை கெசட்டில் வெளியிட வலியுறுத்தினேன்.
6.12.1991 அன்று மலேசிய மலையகப் பகுதிகளில் உழைத்துவிட்டு எந்தப் பலனும் இல்லாமல் தமிழகம் திரும்பியுள்ள தமிழர்களின் அவல நிலையை எடுத்துக்கூறும் வகையில், தாயகம் திரும்பியோர் மாநில மாநாடு சென்னை சாந்தோம் மெய்ப்பு பணி நிலையத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஜேக்கப் பென்னி வரவேற்றுப் பேசினார். அந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, தமிழக அரசுக்கும் குறிப்பாக முதல்வர் அவர்களுக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறேன்; இலங்கைக்கு இங்கிருந்து சென்று அங்கு மலைத் தோட்டங்களிலே வேலைசெய்து, பிறகு அகதிகளாக தாயகம் திரும்பியவர்கள் 5 லட்சம் பேர் இருக்கிறார்கள்.
உரிமை மறுக்கப்பட்டு வாழ்நாள் எல்லாம் கஷ்டப்பட்டு ரத்தத்தை வியர்வையாக்கி உழைத்துவிட்டு தாயகம் திரும்பியோர் அகதிகள் அல்லர் என்று தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
அகதிகளாக இருந்தாலும்கூட அவர்கள் மனிதாபிமானத்தோடு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தாயகம் திரும்பியவர்கள் கூட்டுறவு வங்கிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். வேலை வாய்ப்புகளிலும், தொழிற் பயிற்சிகளிலும் மேற்படிப்புகளிலும் முன்னுரிமை வழங்க வேண்டும். ரொம்பத் துயரத்திலே இருக்கின்ற உங்களுக்கு ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும் கூட உங்களுடைய துயரத்திலே நாங்கள் பங்கேற்கிறோம் என்று சொல்லுவதே ஓர் ஆறுதலாகும்.
உங்களுடைய நியாயமான குறைபாடுகளைச் சொல்லுங்கள். எங்களுடைய ‘விடுதலை’ ஏட்டின் மூலம் அரசாங்கத்திற்கோ, மற்றவர்களுக்கோ எந்த வகையில் எல்லாம் எடுத்துச் சொல்லி பரிகாரம் காண முடியுமோ அவற்றை நாங்கள் செய்கின்றோம் என்று எடுத்துரைத்தேன். மாநாட்டில் ஆர்.ஆர்.சிவலிங்கம் மாலையில் தலைமை உரை ஆற்றினார்.
8.12.1991 அன்று நெல்லை கட்டபொம்மன் மாவட்ட ப.க. அமைப்பாளர் பேராசிரியர் குமாரசாமி (எ) அறிவரசன், ஞானத்தாய் ஆகியோரின் செல்வியும் திருச்சியிலுள்ள பெரியார் நூற்றாண்டு மெட்ரிக்குலேசன் பள்ளி ஆசிரியையுமான முத்துச்செல்விக்கும், நாகர்கோயில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த சுப்பையனுக்கும் திருமணத்தை ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி திருமண மண்டபத்தில் நடத்தி வைத்தேன்.
24.12.1991 அன்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக தந்தை பெரியார் நினைவு நாளை ஒட்டி, சென்னை பெரியார் திடலில் பெரியார் நகர நலவாழ்வு நிலையக் கட்டடத் திறப்பு விழா நிகழ்வில் அனைவரையும் வரவேற்று உரையாற்றினேன். இந்த விழாவில், இந்திய மக்கள் தொகை இயக்கத்தின் தமிழக திட்ட இயக்குநர் வி.கே.சுப்புராஜ் விழாவுக்குத் தலைமை வகித்தார். கட்டடத்தை தமிழ்நாடு அறக்கட்டளை (அமெரிக்கா) இயக்குநர் மற்றும் கேன்ட்டன் டெக்னாலஜி இண்டர்நேஷனல் அமைப்பின் தலைவர் பொறியாளர் துக்காராம் அவர்கள் திறந்து வைத்துப் பேசினார்.
விழாவில், தமிழக மூதறிஞர் குழுத் தலைவர் நீதிபதி பெ.வேணுகோபால், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் அனந்தகிருஷ்ணன், ஆல்பர்ட் அய்ன்ஸ்டின், டாக்டர் பென்ஜமின்ராஜ், ஞான.அய்யாசாமி, டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழக துணைவேந்தர் லலிதா காமேஸ்வரன், கவிஞர் கலி.பூங்குன்றன், பொறியாளர் எஸ்.மணவாளன், ஜானகிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
25.12.1991 அன்று சென்னை மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் மானமிகு புலவர் காவிரிச்செல்வன் அவர்கள் ஒரு விபத்தில் நம்மைவிட்டு மறைந்தார் என்கிற பேரிடியான செய்தி கேட்டு நாம் திடுக்குற்றோம்.
பெரியார் திடலில் பெரியார் நகர நல வாழ்வு நிலையக் கட்டடத்தையும், கல்வெட்டையும்
திறக்கும் வீ.கே.சுப்புராஜ், ஆசிரியர் கி.வீரமணி மற்றும் கழகத்தினர்.
சீரிய எழுத்தாளர், சிறந்த செயல்வீரர், நேர்மையான பகுத்தறிவாளர், ஒரு நல்லாசிரியர். ஏராளமான பெரியார் பிஞ்சுகளை உருவாக்கிய பகுத்தறிவுப் பண்ணை அவர் என்றால் அது மிகையாகாது. அவர் நம் இயக்கத்திற்கு தோன்றாத் துணையாக இருந்தவர். ஆண்டு தவறாமல் அய்யா விழாவிலும், புரட்சிக்கவிஞர் விழாவிலும், மாணவர்களிடையே அவர்தம் தொண்டு பற்றியும், பகுத்தறிவுச் சுடர் கொளுத்தவும் அவர் முன்னின்று நடத்திய போட்டிகளும், பணிகளும் என்றென்றும் நம்மால் மறக்க இயலாத ஒன்றாகும்.
காவிரிச் செல்வன்
ஒரு சுயமரியாதை வீரனை இழப்பது அவர்கள் குடும்பத்திற்கும், இயக்கத்திற்கும் மாத்திரம் இழப்பு அல்ல; சமுதாயத்திற்கே பெரும் நட்டமாகும் என்று இரங்கல் அறிக்கையில் குறிப்பிட்டோம்.
30.12.1991 அன்று சென்னை, தியாகராயர் நகரில் பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலகளாவிய இரண்டாம் மாநாடு நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினேன். “காலஞ்சென்ற எல்.டி.சாமிக்கண்ணு (பிள்ளை) ஒரு நல்ல ஆய்வாளர். தமிழின உணர்வைப்பற்றி அந்தக் காலத்திலேயே சிந்தித்து ஆய்ந்தெழுதியவர். தமிழ்நாட்டில் தற்போது வழங்கும் நாள் பெயர்களும், மாதப் பெயர்களும் கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டிற்கு முன்பு தமிழ்நாட்டில் வழங்கப்பெறவில்லை என்று தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.
தமிழ்நாட்டு வரலாற்றில் முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவிராயர் ஆகியோர் இந்த மூன்று பேர்களும் அவர்களுக்கு முன்னோடிகள்; தமிழ்நாட்டிலே முதன்முதலில் கர்நாடக இசையை உருவாக்கியவர்கள் என்கிற வரலாறு மறைக்கப்பட்ட வரலாறு ஆக்கப்பட்டது. காரணம், தமிழனுக்கென்றொரு வரலாறு இல்லை. இதற்கு அடிப்படைக் காரணம் பண்பாட்டுப் படையெடுப்பு.
எது நம்மைப் பிரிக்கிறது என்பதைப் பார்ப்பதைவிட, எது நம்மை இணைக்கிறது என்பதைத்தான் நாங்கள் முதலில் பார்ப்போம். இது தந்தை பெரியாருடைய பால பாடம்‘‘ என்று குறிப்பிட்டு உரையை நிறைவு செய்தேன்.’
தந்தை பெரியார் அவர்களின் பெருந் தொண்டர் சுயமரியாதை வீரர் செய்யாறு பெரியவர் பெ.வே.நடேசன் (வயது 80) அவர்கள் கடந்த 9.1.1992 அன்று காலை இயற்கை எய்தினார் என்கிற செய்தி கேட்டு வேதனையடைந்தோம்.
செய்யாறு, வடமணப்பாக்கம் பகுதிகளில் சுற்றுப் பயணத்திற்குச் சென்றபோது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு 15.1.1992 அன்று நள்ளிரவு 12:20 மணிக்கு செய்யாறு பெ.வே.நடேசன் அவர்களது இல்லத்திற்குச் சென்று அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறினேன்.
(நினைவுகள் நீளும்…)