ஆசிரியர் பதில்கள் : அமைச்சர் பதவிக்கு ஆலவட்டமா?

ஜனவரி 01-15 2020

கே:       ஊராட்சி மன்றத் தலைவர் பதவி ஏலம் விடப்படுவது பற்றி?

                – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:           ஜனநாயகத்தின் ஊற்றுக் கண்ணிலேயே ஊழல் துவங்கினால், பிறகு ஜனநாயகம் எப்படி பணநாயகமாக, பதவிநாயகமாக மாறாமல் இருக்க முடியும்? மகா வெட்கக்கேடு!

 

கே:       வெங்காயம் விலை ஏற்றத்திற்குக் காரணம் மத்திய, மாநில அரசு என்று குறை கூறும்போது. நிர்மலா சீதாராமன் உள்பட சிலர், “நாங்கள் வெங்காயத்தை வீட்டில் பயன்படுத்துவதே இல்லை’’ என்கிறார்களே?

                – பழனிசாமி, உதயா சலூன் சென்டர், வாழப்பாடி

நிர்மலா சீதாராமன்

ப:           பொறுப்பற்ற பதில். ஆணவமும் தொனிக்கும் பதில் இது. இவர் என்ன சாப்பிடுகிறார் என்பதா முக்கியம்? மக்கள் உணவில் முக்கியத்துவம் வகிக்கும் பொருளின் விலையேற்றம் பற்றிக் கேட்டால் இப்படியா பதில் கூறுவது?

கே:       திராவிடர் கொள்கை விளக்க அறிக்கையில் சுற்றுச்சூழல் அணுமின் நிலையங்கள் பற்றிய நிலைப்பாடு சேர்க்கப்படுமா?

                – சோபன் பாபு,

ஆவடி உண்மை வாசகர் வட்டம்

ப:           நிச்சயமாக! சுற்றுச்சூழல் பட்டியலில் இது வரலாம். பொதுவான கொள்கை அறிக்கையில் எல்லாம் இடம்பெற வேண்டும் என்று எதிர்பார்க்கலாமா?

கே:       இந்தியாவிலே உள்ள பல மாநிலங்களின் அவல ஆட்சிகளுக்கு – மக்கள் விரோத ஆட்சிகளுக்கு – சாட்டையடியாக, சிம்ம சொப்பனமாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களின் ஆட்சி, மக்களின், அதிகாரிகளின் அன்புடன், ஆதரவுடன் வலுப்பெற்று வருவதைப் பற்றி தங்களின் கருத்து?

                – பன்னீர்செல்வம்,  வாழப்பாடி

ஜெகன் மோகன் ரெட்டி

ப:           நல்ல ஆலோசகர்களைக் கொண்டு நல்ல துவக்கத்துடன் உள்ளது. பழிவாங்கும் அரசியல் உணர்வைத் தவிர்ப்பது நல்லது.

கே:       நேர்மையான ஒரு சில அரசு அதிகாரிகளைக்கூட ‘அரசு’ அடிக்கடி இடமாற்றம் செய்கிறதே, அது ஏன்?

– தி.பொ.சண்முகசுந்தரம், திட்டக்குடி

ப:           நேர்மையான அரசு அதிகாரிகளைக் ‘கண்டுபிடிக்க’, இதுவே சரியான வழி  _ இப்போது!

ராமதாஸ்

கே:       மருத்துவர் இராமதாஸ் அவர்கள், கூட்டணி தர்மத்திற்காக குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்ததாகக் கூறுவது மோசடி அல்லவா?

                – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

ப:           கூட்டணி தர்மமா? _ கூத்தணி தர்மமா? அமைச்சர் பதவிக்கு ஆலவட்டமா? அடிமை முறிச்சீட்டுக்கு அச்சாரமா?

கே:       தெலங்கானாவில் பெண் வட்டாட்சியர் வருவாய் அலுவலகத்திலேயே வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை, கால்நடை பெண் மருத்துவர் பாலியல் கொடுமை செய்து கொலை என அங்கே பெண்களுக்கு எதிரான இதுபோன்ற போக்கு தொடர்கிறதே?

                – மன்னை சித்து, மன்னார்குடி-1

ப:           அதற்குரிய நேரடி நடவடிக்கைகளால் அரசு _ மக்கள் _ நீதித்துறையிடம் நம்பிக்கை இழந்து விட்டார்களோ?

கே:       ‘உண்மை’யின் அரை நூற்றாண்டு கால வாசகனான என்னைப் போன்றோர்க்கு தாங்கள் கூறும் ‘பொன்விழா’ சிறப்புச் செய்தி என்ன?

                – சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

ப:           மிக்க நன்றி! உங்கள் நண்பர்களை ‘உண்மை’ வாசகர்களாக்கி _ சந்தா திரட்டி எங்களை உற்சாகப்படுத்துங்கள் என்பதே! உங்களைப் போன்ற தொடர் வாசகர்களைப் பெறுவது “உண்மை’’யின் பேறுகால முக்கியம்!

கே:       திராவிடர் கழகப் பகுத்தறிவுப் பாடல்களைத் தொகுத்து, சிறுசிறு புத்தகங்களாக பதிப்புச் செய்து, மக்கள் மத்தியிலும் கழகப் பிரச்சாரக் கூட்டங்களிலும் விநியோகம் செய்யும் முயற்சி மேற்கொண்டால் நமக்கும், மக்களுக்கும் பயனுள்ளதாக அமையுமே, இதுபற்றி தங்களின் அன்பான பதில்…?

                – சி.வாஞ்சிநாதன்,  சிங்கிபுரம்-636115

ப:           நல்ல யோசனை! செய்வோம்! நன்றி!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *